மீண்டும் மந்தநிலை

 மனித கடத்தல் ஏஜெண்டுகளின் பிரதான மையமாக குஜராத் மாநிலம் உருவெடுத்துள்ளதாக அமலாக்கத்துறை நடத்திய புலனாய்வு விசாரணனையில் தெரியவந்துள்ளது  

இந்தியாவில் உள்ள 4,500 வரையிலான மனித கடத்தல் ஏஜெண்டுகளின் வலையமைப்பை அமலாக்கத்துறை வெளிப்படுத்தியுள்ளது

அவர்களில் 2,000 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்று அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் Telegraph நாளிதழிடம் தெரிவித்துள்ளார்  

அந்த ஏஜெண்டுகள், குறைந்தது 150 கனேடிய கல்லூரிகளுடன் இணைந்து, இந்தியர்களை கனடா வழியாக அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக நுழைய உதவி செய்கின்றனர்

Telegraph நாளிதழின் செய்தியின்படி, ஏஜெண்டுகள் தங்கள் வாடிக்கையாளர்களை கனேடிய கல்லூரிகளுக்கு மாணவர் விசா மூலம் அனுப்பி, அங்கிருந்து சட்டவிரோதமாக அமெரிக்க எல்லையை கடந்து செல்ல உதவுகின்றனர்

ஒரு நபருக்கு ரூ.55-60 லட்சம் வரை ஏஜெண்டுகள் வசூலிப்பதாகவும், இது தொடர்பாக பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை அதிகாரி கூறியுள்ளார்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களில் குஜராத்திகளே அதிகம்; 2023-ம் ஆண்டில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 67,391 இந்தியரகளில், குஜராத்திகள் மட்டும் 41,330 பேர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரிமானவரித் துறைக்கு கட்டற்ற அதிகாரம்?

வருமான வரித்துறை அதிகாரிகள், தனிநபர்களின் இ-மெயில் மற்றும் சமூக வலைதள கணக்குகளை அணுக முடியும் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வருமான வரித்துறையின் புதிய விதிகள் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.


இந்திய குடிமக்கள் தங்கள் வருமானத்தை வெளிப்படையாக அறிவித்து, உரிய வரியை செலுத்துகின்றனரா? என்பதை கண்காணிக்கும் பணியை வருமான வரித்துறை முன்னெடுத்து வருகிறது.

 அதேநேரம், ஆளுங்கட்சிக்கு சாதகாமாக அந்த அமைப்பு செயல்படுவதாகவும் அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுகின்றனர். இந்நிலையில் தான், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய விதி ஒன்று, வருமான வரித்துறையில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 அதன்படி, வரி ஏய்ப்பு செய்ததாக சந்தேகிக்கப்படும் தனிநபரின் சமூக ஊடகக் கணக்குகள் அல்லது மின்னஞ்சல்களை அணுக வருமான வரித்துறைக்கு அதிகாரங்களை வழங்கக்கூடும் என கூறப்படுகிறது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரி மசோதா, 2025, வருமான வரி அதிகாரிகள் டிஜிட்டல் ஸ்பேசஸ் எனப்படும் பரந்த அளவிலான தனிப்பட்ட மற்றும் நிதி டிஜிட்டல் தளங்களை சட்டப்பூர்வமாக அணுகவும் ஆய்வு செய்யவும் அனுமதிக்கும் . 

இதன் பொருள், 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின்படி, நீங்கள் பொருந்தக்கூடிய வருமான வரி செலுத்தாத எந்தவொரு வெளியிடப்படாத வருமானம், பணம், தங்கம், நகைகள் அல்லது மதிப்புமிக்க பொருள் அல்லது சொத்து உங்களிடம் இருப்பதாக நம்புவதற்கு ஏதேனும் காரணம் இருந்தால், சமூக ஊடகக் கணக்குகள், தனிப்பட்ட மின்னஞ்சல்கள், வங்கிக் கணக்குகள், ஆன்லைன் முதலீட்டு கணக்குகள், வர்த்தகக் கணக்குகள் மற்றும் பலவற்றை ஆய்வு செய்ய வருமான வரித் துறைக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இருக்கும்.


தற்போது, ​​1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 132, ஒரு நபர் வெளியிடப்படாத வருமானம் அல்லது சொத்துக்களை வைத்திருப்பதாக நம்புவதற்கு போதுமான காரணங்கள் இருந்தால், தேடல் நடவடிக்கைகளின் போது சொத்துக்கள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்ய வருமான வரி அதிகாரிகளுக்கு அனுமதிக்கிறது.

புதிய மசோதா நிறைவேற்றப்பட்டதும், அந்த திறனை டிஜிட்டல் துறைக்கும் விரிவுபடுத்தும், இதனால் அதிகாரிகள் கணினி அமைப்புகள் மற்றும் டிஜிட்டல் ஸ்பேஸ்களில் மறைத்து வைக்கப்படுவதை தவிர்க்க முடியும்.

மசோதாவின் படி, மெய்நிகர் டிஜிட்டல் ஸ்பேஸ் என்பது மின்னஞ்சல் சேவையகங்கள், சமூக ஊடக கணக்குகள், ஆன்லைன் முதலீட்டு கணக்குகள், வர்த்தக கணக்குகள், வங்கி கணக்குகள் மற்றும் எந்தவொரு சொத்தின் உரிமையின் விவரங்களையும் சேமிக்கப் பயன்படுத்தப்படும் எந்தவொரு வலைத்தளத்தையும் உள்ளடக்கியது. 

இவற்றை ஆய்வு செய்யும் அதிகாரமானது இணை இயக்குநர்கள், கூடுதல் இயக்குநர்கள், இணை ஆணையர்கள், கூடுதல் ஆணையர்கள், உதவி அல்லது துணை இயக்குநர்கள், உதவியாளர் அல்லது துணை ஆணையர்கள், வருமான வரி அதிகாரிகள் மற்றும் வரி வசூல் அதிகாரிகள் ஆகியோருக்கு வழங்க புதிய விதி வழிவகை செய்கிறது.

வருமான வரி மசோதாவின் பிரிவு 247 இந்த விரிவாக்கப்பட்ட அதிகாரத்தை கோடிட்டுக் காட்டுகிறது. அதிகாரிகள் "எந்தவொரு கதவு, பெட்டி, லாக்கர், பாதுகாப்புப் பெட்டகம், அலமாரி அல்லது பிற கொள்கலனின் பூட்டை உடைத்து திறக்கலாம்" அல்லது அணுகல் கிடைக்காதபோது கணினி அமைப்புகள் அல்லது மெய்நிகர் டிஜிட்டல் ஸ்பேஸ்களுக்கு "அணுகல் குறியீட்டை மீறுவதன் மூலம் அணுகலைப் பெறலாம்" என்று கூறுகிறது.


 ஒரு தனிநபர் வெளியிடப்படாத வருமானம் அல்லது சட்டத்தின் கீழ் வரி விதிக்கக்கூடிய சொத்துக்களை வைத்திருப்பதாக அவர்கள் நம்பினால் இது பொருந்தும். அதேநேரம், தனிநபர் மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதள கணக்குகளை அணுகுவது, தனிநபர் உரிமை மீறல் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

மேலும், அதிகாரிகள் ஒருசார்பாக செயல்பட்டு முக்கிய தரவுகளை திருடக்கூடும் என்றும் மற்றொரு தரப்பினர் அச்சம் தெரிவிக்கின்றனர். வரி அமலாக்கத்திற்கும் தனிநபர் உரிமைகளுக்கும் இடையிலான சமநிலை பற்றிய கேள்விகளையும் புதிய விதி எழுப்புகிறது.

உலக மந்தநிலை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிற உலக நாடுகள் மீது அதிக இறக்குமதி வரிகளை விதிக்கும் திட்டங்களிலிருந்து பின்வாங்கவில்லை என்றால், 1930-களில் ஏற்பட்ட பெரும் மந்தநிலையைப் போல உலகப் பொருளாதாரம் சரிந்துவிடும் என்று சர்வதேச வர்த்தக சபை (International Chamber of Commerce) எச்சரித்துள்ளது.

டிரம்பின் திட்டங்கள் 1930-களின் வர்த்தகப் போர் சகாப்தத்தை போன்றதொரு நிலைக்கு நம்மைத் தள்ளும் என்றும், ஒரு கீழ்நோக்கிய சுழற்சியின் தொடக்கமாக இருக்கலாம் என்றும் சர்வதேச வர்த்தக சபையின் துணைப் பொதுச் செயலாளர் ஆண்ட்ரூ வில்சன் கவலை தெரிவித்துள்ளார்.

1930-களின் காலகட்டத்தில் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டுப் பொருட்களின் மீது அதிக வரிகள் விதிக்கப்பட்டதன் எதிரொலியல், அப்போது நிலவிய பேரழிவுகரமான உலகளாவிய மந்தநிலையை மேலும் மோசமாக்கியது.

அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற சக்திவாய்ந்த தொழில்துறை நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை உலகளவில் 50 சதவீதம் வரை உற்பத்தியைக் குறைத்தது மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்க உலக தொழிலாளர் வர்க்கத்தினரை வேலையின்மையில் தள்ளியது என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) கண்டறிந்துள்ளது.

1930 காலகட்டத்தில், தற்போது அமெரிக்காவில் ஆட்சியை பிடித்துள்ள டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி தான் அப்போதும் ஆட்சியில் இருந்தது. அமெரிக்காவின் செல்வத்தை பெருக்க வெளிநாடுகள் மீது அப்போதைய அதிபர் ஹெர்பர்ட் ஹூவர் தலைமையிலான குடியரசுக் கட்சியின் ஆட்சியில் அதிக வரிகள் விதிக்கப்பட்டது. அந்த தாக்கத்தின் காரணமாக, அப்போது உலக வர்த்தகத்தில் சுமார் 65% சரிவுக்கு பங்களித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கனடா, சீனா மற்றும் மெக்சிகோ மீதான புதிய வரி விதிப்பு நடவடிக்கை மூலம் டிரம்ப் முதற்கட்ட வர்த்தகப் போரை தூண்டியுள்ளார். சீனப் பொருட்கள் மீது ஏற்கனவே 10% வரிகளை அமெரிக்கா விதித்திருந்த நிலையில், தற்போது கூடுதலாக 10% வரிகளை டிரம்ப் விதித்துள்ளார்.

மேலும், கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரிகளை விதித்ததன் மூலம் டிரம்ப் அமெரிக்காவின் முதல் 3 முக்கிய வர்த்தக பங்காளிகளுடன் புதிய வர்த்தக மோதல்களைத் தூண்டியுள்ளார்.

இந்த முதற்கட்ட வரி விதிப்புகள் அமெரிக்கா மற்றும் அந்த நாடுகள் இடையேயான இருவழி வருடாந்திர வர்த்தகத்தில் கிட்டத்தட்ட $2.2 டிரில்லியன் மதிப்பிலான வர்த்தகத்தை சீர்குலைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன என கணிக்கப்படுகிறது.

கனடா மற்றும் மெக்சிகோ பொருட்களின் மீதான வரிகளின் தாக்கம், விவசாயப் பொருட்களை பதப்படுத்துவதற்கும், கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பதற்கும், ஆட்டோமொபைல்கள் மற்றும் இயந்திரங்களை தயாரிப்பதற்கும் எல்லை தாண்டிய ஏற்றுமதிகளை நம்பியிருக்கும் வட அமெரிக்க பொருளாதாரத்திற்கு மிகவும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

“டிரம்ப் நிர்வாகத்தின் இன்றைய பொறுப்பற்ற முடிவு கனடாவையும் அமெரிக்காவையும் மந்தநிலைக்கும், வேலை இழப்புகள் மற்றும் பொருளாதார பேரழிவை நோக்கியும் தள்ளுகிறது” என்று கனேடிய வர்த்தக சபையின் தலைமை நிர்வாக அதிகாரி கேண்டஸ் லாயிங் தெரிவித்துள்ளார்.

அவரது கூற்றுப்படி, அமெரிக்க வரிகளின் விளைவாக விநியோக வலையமைப்புகள் சீர்குலைந்து, நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர் செலவுகள் அதிகரிக்கும் என்றும், ‘பிற நாடுகள் மீது விதிக்கப்படும் வரி என்பது அமெரிக்க மக்கள் மீது விதிக்கப்படும் வரியே’ என்றும் கேண்டஸ் லாயிங் கூறியுள்ளார்

கடந்த திங்களன்று வெளியிடப்பட்ட அமெரிக்க அரசின் தரவு, டிரம்பின் வரி விதிப்பு அறிவிப்புக்கு முன்பே தொழிற்சாலை வாயில் செலவுகள் (Factory Gate Cost) கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன என்பதைக் காட்டுகிறது. மேலும், புதிய வரி விதிப்பு அறிவிப்புகள் அமல்படுத்தப்பட்டால், விரைவில் உற்பத்தியைத் தடுக்கக்கூடும் சாத்தியம் இருக்கிறது என்பதை இது குறிக்கிறது.

இந்தியா, பிரேசில், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட வெளிநாடுகள் மீது பரஸ்பர வரிகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தது முதல், உலகளாவிய பங்குச் சந்தைகளையும் நாணயங்களையும் சரிவுக்கு கொண்டுவந்துள்ளன.

டிரம்பின் நடவடிக்கைகள் மீது பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருவதற்கு மத்தியில், ‘Great Depression’ குறித்து X தளத்தில் பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. #TrumpIsUnfitForOffice என்ற டாக்கும் டிரெண்ட் செய்யப்படுகிறது.

“அமெரிக்கா கடைசியாக 1930 ஆம் ஆண்டு இதுபோன்ற ஒரு வரி விதிப்பை செய்து பெரும் மந்தநிலையைத் தூண்டியது,” என்று பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

“உலகின் அடுத்த பெரும் மந்தநிலையை வடிவமைக்க முயற்சிக்கும் பல பில்லியனர்கள் வெள்ளை மாளிகையில் சுற்றி அமர்ந்திருக்கிறார்கள்” என்று மற்றொருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

‘Great Depression’ குறித்து 1986-ம் ஆண்டு வெளியான ‘ஃபெர்ரிஸ் புல்லர்ஸ் டே ஆஃப்’ என்ற அமெரிக்க திரைப்படத்தில் பேசப்பட்டுள்ள காட்சியும் X தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?