மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதும்
கொடும் குற்றமே....,!
தனக்கு பதிலாக ஒரு சாவி பொம்மையை சசிகலா ஆளுநரிடம் அனுப்பி வைத்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி என்பது அவர் பெயராக அறியப்பட்டாலும்.அவர் பெயர் அவசியம் இல்லை.
கொத்தடிமைகளை அதன் முதலாளிகள் பெயர் சொல்லி அடிமை முருகனடிமை என்பது போல் சொல்லி அழைப்பதுதான் வழமை.
சொத்துக்குவிப்பு வழக்கின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை மக்களை விட நன்கு தெரிந்தவர் சசிகலா.
அதானால்தான் இந்த இடைவெளியிலாவது முதல்வர் நாற்காலியில் இருந்து தான் செய்ய வேண்டிய சொத்துக்கள் மாற்றத்தை செய்து கொள்வதுடன் முன்னாள் முதல்வர் என்ற பெயரை ஜானகி அம்மையார் போல வாங்கிக்கொள்ளலாம் என்று எண்ணியதற்கு அவரால் வேறு வழியின்றி மோடி அறிவுறுத்தலில் முதல்வர் ஆக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் அடங்காததால் இயலாமல் போய்விட்டது.
ஜெயலலிதா அன்னான் மகள் தனது முடிவை இன்னும் சில நாட்களில் கூறுவதாக வழக்கமான பல்லவியை எடுத்து விட்டுள்ளார்.
ஆனால் அதை ரசிக்கும் மனப்பக்குவம் அவரை இதுவரை நாடிய தொண்டர்களிடம் குறைந்து விட்டது.ஒரே பாட்டை எவ்வளவு நாள்தான் ரசிக்க முடியும்.அதுவும் அதிரடி கும்மாங்குத்து பாடலை ஓ.ப.வும் -சசிகலாவும் பாடும் போது ..
முதல்வர் பன்னீர் செல்வம் முதலில் தீபாவுக்கு ஆதரவு இணைந்து செயல் படுவோம் என்றவுடன் அவரை தீபா சந்தித்து நாங்கள் இரட்டை குழல் துப்பாக்கிகள் என்று பேட்டி கொடுத்திருந்தால் இன்று தீபா செல்வாக்கு உயர்ந்திக்கும்.
அரசியல் அவர் கணக்கு அமுலுக்கு வந்திருக்கும்.ஆனால் அவரின் நடவடிக்கைகள் ஆமையை போட்டிக்கு அழைக்கும் படிதான் உள்ளது.
முதலில் ஜெயலலிதா மரணம் பற்றி சந்தேகங்களை அவரின் ரத்த உறவுகள்தான் வழக்காக தொடர முடியும் என்று நீதிமன்றம் கூறியபோது எனது அத்தை ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை என்று கூறி சசிகலா தரப்புக்கு ஆதரவாக கருத்தை தெரிவித்தபோதே இவர் வேலைக்கு ஆக மாட்டார் என்று பல அடிமட்டத்தொண்டர்கள் ஒதுங்கிவிட்டனர்.
ஆனால் அதே தீபா இப்போது முதல்வர் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றவுடன் எனக்கும் பல ஐயங்கள் உண்டு என்று திருவாய் மலர்கிறார்.
அரசியலில் அடி எடுத்து வைக்கும் போதே இவ்வளவு தீர்க்கமான எண்ணங்கள்,கொள்கைகள் இல்லாத இவரை பின் பற்றி செல்வோர்கள் பாவம்தான்.
அதனால்தான் தீபா பேரவையில் இணைய எண்ணிய அடிமட்டத்தொண்டர்கள் பலர் தற்போது பன்னீர் செல்வம் வீட்டை நோக்கி படை எடுக்கிறார்கள்.
சசிகலா வுக்கு தண்டனையையை உச்ச நீதிமன்றம் உறுதியாக்கியவுடன் வழக்கு போட்ட திமுகவினரை விட அதிமுக தொண்டர்கள்அதுவும் சசி எதிர்ப்பாளர்கள் மிக உற்சாகமாக வெடி போடுவதும்,லட்டு வழங்குவதுமாக தூள் கிளப்பி விட்டார்கள்.
அப்படியான ஒரு தொண்டரிடம் நான் கேட்ட ஒரே கேள்வி இதுதான்.
"நீதிபதி மைக்கேல் டி குன்கா கொடுத்த தீர்ப்பு செல்லும் என்றுதான் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது,
நீதிபதி குன்கா தீர்ப்புப்படி முதல் குற்றவாளி ஜெயலலிதாவுக்கு ரூ 100 கோடிகள் அபராதம்.மற்ற குற்றவாளிகள் சசிகலா,இளவரசி,சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ 10 கோடிகள் அபராதம் .
அதைத்தான் இப்போது செல்லுபடியாக்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.அதை கொண்டாடி லட்டு தரும் நீங்கள் இதற்கு முன் தீக்குளிர்த்தீர்கள் ,பேருந்துகளை அடித்து நொறுக்கினீர்கள் ,சினிமாக்காரர்கள் முதல் பள்ளி சிறுவர்கள் வரை உண்ணாவிரதம் இருக்க சொல்லி குன்கா கொடும்பாவியை எரித்தீர்கள் .
ஆனால் இப்போது ஜெயலலிதா ஊழல் செய்தார் அவர் இறந்து விட்டதால்தான் அவரை விட்டு விட்டு மற்ற மூவருக்கும் தண்டனை என்றுதான் வந்துள்ள இத் தீர்ப்பை ஆதரித்து லட்டு கொடுக்கிறீர்களே ?"
அவர் என்னை முறைத்து பார்த்து முனங்கி கொண்டே சென்றார் என்பதை உங்களுக்கு சொல்லவேண்டுமா என்ன?
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
“பொதுவாக சிறை தண்டனை பெற்றவர்களுக்கும் சில சலுகைகள் உண்டு.
மாதத்துக்கு இரு நாட்கள் விடுமுறை என்பது இதில் அடக்கம். மொத்த தண்டனை காலத்தில் மாதம் இரு நாட்கள் என்று கணக்கிடப்படும்.
அதாவது தண்டனை நான்கு வருடம் என்றால் மாதம் இரு நாட்கள் கழிக்கப்பட்டு முன்னதாக விடுதலை ஆவார்கள்.
தவிர,காந்தி ஜெயந்தி, தீபாவளி போன்ற நாட்களும் இதில் போனஸாக சேர்க்கப்படும்.
ஆனால் கஞ்சா போன்ற போதைப் பொருள் கடத்தல், பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களில் தண்டனை பெற்றவர்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படாது.
அதே போல ஒரு வழக்கில் தண்டனை பெற்ற கைதி, வருமானவரி செலுத்துபவர் என்றால் சிறையில் முதல்வகுப்பு கோரி விண்ணப்பிக்கலாம்.
இந்த சலுகையும் கஞ்சா, பலாத்கார குற்றவாளிகளுக்கு கிடையாது.
இதே போலத்தான், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சலுகைகள் கிடையாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆகவே இவர்கள் மூவரும் முதல்வகுப்பு கோர முடியாது என்பதோடு, நான்கு (முழு) வருடங்களும் சிறையில் கழிக்க வேண்டியிருக்கும்.
மேலும் இவர்கள், “போதப்பொருள் கடத்தில், பாலியல் பலாத்காரம் மட்டுமல்ல.. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதும் கொடும் குற்றமே என்பதை உணர்ந்தே இத்தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது” என்று சட்டம் தெரிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்..
=======================================================================================
இன்று,
பிப்ரவரி-14.
- உலக காதலர் தினம்
- ஈ.என்.ஐ.ஏ.சி., என்ற முதல் தலைமுறை கணினி அறிமுகமானது(1946)
- 103வது தனிமமான லோரென்சியம் கண்டுபிடிக்கப்பட்டது(1961)
- ஆஸ்திரேலிய பவுண்டிற்கு பதிலாக ஆஸ்திரேலிய டாலர் அறிமுகப்படுத்தப்பட்டது(1966)
========================================================================================