புதன், 15 பிப்ரவரி, 2017

ஜெயலலிதா - சசிகலா கூட்டுச்சதி!’

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், ஜெயலலிதா, வி.கே. சசிகலா உள்ளிட்ட நால்வரையும் குற்றவாளிகள் என்று அறிவித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள், இவர்கள், சட்ட விரோதமாக சொத்துகளை குவிக்கவும், அவற்றை சட்டப்பூர்வமாக மாற்றவும் போயஸ் தோட்ட இல்லத்தில் கூட்டுச்சதியில் ஈடுபட்டார்கள் என்று கடுமையான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.
மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த வகையில், சொத்துக்குவிப்புக்கு பின்னணியில் “ஆழமான சதித்திட்டம்” இருப்பதை தாங்கள் உணர்ந்ததாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மேலும் பல்வேறு வகையில் கடுமையான வார்த்தைகளை அவர்கள் தங்களின் தீர்ப்பில் முன்வைத்துள்ளனர். 
அவை வருமாறு:“ஜெயலலிதா ‘மனிதர்களை நேசிக்கும் கொடைப்பண்பு’ காரணமாக, சசிகலாவுக்கு போயஸ் தோட்ட இல்லத்தில் இடம் கொடுக்கவில்லை; மாறாக குற்ற நடவடிக்கைகளிலிருந்து காத்துக் கொள்ளவே சசிகலாவை போயஸ் தோட்ட இல்லத்தில் இடம்கொடுத்து ஜெயலலிதா வைத்திருந்தார்; சாட்சியங்களை ஆராய்ந்து பார்த்ததில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சதியில் ஈடுபட்டார்கள் என்ற முடிவுக்கே நாங்கள் வருகிறோம்;
 சம்பந்தப்பட்ட இந்த காலக்கட்டத்தில் முதல்குற்றவாளி (ஏ1), அதாவது ஜெயலலிதா ஆட்சியில் இருந்துள்ளார்; அப்போது தன் வருவாய் ஆதாரங்களையும் மீறி அளவுக்கதிகமாக சொத்து சேர்த்தார் (1991-96); இது சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் சில நிறுவனங்களுக்கும் மாற்றுப் பெயர்களில் அளிக்கப்பட்டுள்ளது” “1991-ல் குற்றம்சாட்டப்பட்டோரின் சொத்துகள் மதிப்பு ரூ.2.01 கோடி. அதே நபர்களின் 1996-ஆம் ஆண்டைய சொத்து மதிப்பு ரூ. 66.44 கோடியாக பல்கிப் பெருகியுள்ளது; இதனையொட்டிய உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள் நமக்கு அறிவுறுத்துவதெல்லாம், பெரிய அளவில் சொத்துகளைக் குவித்து அவற்றை செயல்படாத பல நிறுவனங்கள் மூலம் மறைத்து சட்ட விரோத சொத்துக் குவிப்பை சட்டத்தின் கண்களில் மண்ணைத்தூவி மேற்கொண்டுள்ளனர்”
 “ஜெயா பப்ளிகேஷன் சார்பில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு பவர் ஆஃப் அட்டார்னி வழங்கியுள்ளார்;
சொத்துகள் குவிப்புக்கு பயன்படும் பணப்புழக்கம் மற்றும் பணம் கையாளுதலிலிருந்து ஜெயலலிதா தன்னை தொலைவுபடுத்திக் கொள்ள இவ்வாறு அவர் சசிகலாவுக்குக் பவர் ஆஃப் அட்டார்னி வழங்கினார்; ஜெயா பப்ளிகேஷன் கணக்குகளில் செலுத்தப்படும் தொகைகளை சசிகலாவே நிர்வகிப்பார் என்று ஜெயலலிதாவுக்கு முழுதாக, நன்றாகவே தெரியும்”.
“ இரண்டாவதாக செயல்படாத நிறுவனங்களை அவ்வளவு வேகமாக உருவாக்கிய விதம் என்பது சதி நடைபெற்றதற்கான அடுத்த சாட்சியமாகும்; ஒரே நாளில் 10 நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று சாட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது; சசிகலா, இளவரசி ஆகியோர் சொத்துகளை வாங்குவதோடு தனியாக நிறுவனங்களைத் தொடங்கினர்; 
இதைத்தவிர எந்த ஒரு வர்த்தக நடவடிக்கைகளையும் இவர்கள் கவனிக்கவில்லை”.“இந்த செயல்படா நிறுவனங்கள் நமது எம்ஜிஆர், ஜெயா பப்ளிகேஷன் ஆகியவற்றின் நீட்சிகளே; 
இவர்கள் செய்த ஒரே வர்த்தகம் சொத்துகளை வாங்கிக் குவிப்பதே; ஆனால், போயஸ் தோட்டத்தில் அனைவரும் இருந்து கொண்டிருக்கும் போது சசிகலா உள்ளிட்டோர் செய்த வேலைகள் தனக்கு தெரியாது என்று ஜெயலலிதா கூறுவதால் ஒரு பயனுமில்லை;
 எந்தவித ரத்த உறவுமில்லாமல் ஜெயலலிதா இவர்களுடன் போயஸ் தோட்ட இல்லத்தில் வசித்து வந்தார் என்பதை மறைத்து விட முடியாது”.இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
=======================================================================================
ன்று,
பிப்ரவரி-15.
  • செர்பியா தேசிய தினம்
  • அமெரிக்காவில் செயின்ட் லூயிஸ் நகரம் அமைக்கப்பட்டது(1764)
  • ரஷ்யாவில் அதிபர் பதவி ஏற்படுத்தப்பட்டது(1994)
  • யூட்யூப் சேவை அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது(2005)
  • =======================================================================================