ஜெயலலிதா பெயரை,படங்களை நீக்கவேண்டும்.
அதிமுக சொத்துக்களைப் பறிமுதல் செய்!
சொத்துக் குவிப்புக் கிரிமினல் குற்ற வழக்கில் இறந்துபோன ஜெயலலிதா உட்பட நால்வரும் குற்றவாளிகள் என அறிவித்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்குமான சிறைத் தண்டனையை உறுதி செய்திருக்கிறது, உச்சநீதிமன்றம்.
சிலர் வாதிடுவதைப்போல “வரலாற்றுச் சிறப்புமிக்கதோ, அரசியல்வாதிகளுக்கு ஒர் எச்சரிக்கையோ, பாடமோ, காலதாமதமானாலும் இறுதியில் நீதி வென்றதாகக் கருதி வரவேற்கத்தக்கதோ” அல்ல.
அவர்கள் நால்வரும் தண்டிக்கப்பட வேண்டிய கிரிமினல் குற்றவாளிகள்தாம் என்பது ஊரறிந்த உண்மை. வேறுவழியின்றி நாட்டு மக்களிடையே ஏற்கெனவே நீதிமன்றங்களின் மீது வேகமாகச் சரிந்து விழும் நம்பிக்கையை மீட்பதற்கான இறுதி முயற்சியின் ஒரு பகுதிதான் இந்தத் தீர்ப்பு.
தன் முன்னால் வைக்கப்பட்டிருக்கும் இலஞ்ச-ஊழல் குற்றச்சாட்டுக்களை வரம்புக்குட்பட்ட முறையில் மட்டுமே விசாரணை நடத்தி, குறைந்தபட்ச தண்டனை மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. கணவன், மனைவி இணையாமல் குழந்தை பிறக்காது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., நீதிபதிகள் கூட்டு இல்லாமல் ஊழல் முறைகேடுகள் செய்திருக்க முடியாது.
ஜெய-சசி கும்பலுக்கு மட்டுமே தண்டனை; ராம் மோகனராவ், குமாரசாமி, தத்துக்களுக்கு என்ன தண்டனை? இது என்ன நீதி? இவர்கள் போட்ட சட்டத்திட்டங்கள் எடுத்த நடவடிக்கைகள் செல்லுமா? நியாயமானவையா?
மிகப்பெரிய ஊழல், முறைகேடு புரிந்த ஒரு கிரிமினல் குற்றவாளி தண்டனையின்றி 21 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தையும், உல்லாச ஊதாரி சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து, நாட்டையே கொள்ளையிட்டு, மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாங்கிக் குவித்துள்ளார். அதனால்தான், சாதாரண கிரிமினல் குற்றவாளிகளே சிறைச்சாலைகளை ஐந்து நட்சத்திர விடுதிகளாக மாற்றிக்கொண்டு, அங்கிருந்தவாறே குற்றக்கும்பல் தலைவர்களாகி ஆதிக்கம் புரியும் இந்த அமைப்பில், சிறை செல்லும்போதுகூட ஜெயா-சசி கும்பல் நெஞ்சை நிமிர்த்துகொண்டு, தனது பரிவாரப்படைகள் புடைசூழ சிறைத் தண்டனைகளுக்கு அஞ்சமாட்டோம் என்று சவால்விட்டுப் போகிறது.
ஆனால் இந்த தீர்பைத்தான் ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை, பாடம் என்றெல்லாம் நம்பச் சொல்லுகிறார்கள். பொதுச்சொத்துகளை மட்டுமல்ல, தான் ஆசைப்படும் தனியார் கட்டுமானங்கள், வியாபாரங்கள், தொழில்கள், நிலங்கள் எல்லாவற்றையும் உருட்டி மிரட்டி அபகரித்துக் கொண்டார்கள். ஜெயா-சசி கும்பலின் குரூரமான ஆட்சியதிகாரத்தால் போலி மோதல்களால் பலர் கொல்லப்பட்டனர்; பலர் தற்கொலைக்குத் தள்ளப்பட்டனர். பலரது வாழ்வும் சிதைக்கப்பட்டன. உடலும் மனித உரிமைகள் காலில்போட்டு மிதிக்கப்பட்டன. இந்த தேசத்தின் ஆறுகள், மலைகள், கடற்கரைகள், குடிநீர் உட்பட அனைத்து இயற்கை வளங்களும் சூறையாடப்பட்டு, இந்த சமூகத்தையே போதையில் தள்ளி, இதன் பகுத்தறிவும் பண்பாடும் சீரழிக்கப்பட்டன.
இத்தகைய பகற்கொள்ளை வேட்டைக்காகவே அரசிலும், வெளியிலும், கட்சியிலும் திட்டமிட்டு ஒரு தொழில் முறைக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த ஊழல்-கிரிமினல் கொள்ளைக் கும்பல் அரசுக் கட்டமைப்போடு கலந்து அதற்கு இணையாகத் தம்மை எதிர்ப்போரும் கேட்போரும் அஞ்சும் நிலையை உருவாக்கிவிட்டனர். அந்தக் கும்பலிடம் காலில் விழுந்து நத்திப் பிழைப்பது மட்டுமே முடியும். எந்த உரிமையும் போராடிப் பெறமுடியாது என்ற பயபீதியை, அவநம்பிக்கையை அடிவரை பரப்பி விட்டார்கள்.
ஓட்டுக்கட்சி வரம்புக்குள், சட்டவரம்புக்குள், இந்த அரசமைப்புக்குள் தீர்வு கிடைத்துவிடும் என்று நம்பி மக்கள் சிந்திப்பதும், காத்திருப்பதும், ஏமாந்து போவதும் தான் பிரச்சனை. இனி, ஒரு அநீதி நடக்கும்போது, இன்னொரு கும்பலிடம் போய்த்தான் நியாயத்தை முறையிட வேண்டும் என்ற நிலையை மாற்றி, மக்களே நேரடியாகத் தலையிட்டுத் தட்டிக்கேட்கும் துணிவையும், நீதியையும் நிலைநாட்ட முடியும் என்ற நம்பிக்கையையும் சமூகத்துக்கு ஏற்படுத்த வேண்டும்.
இனி ஒரு முறை இதுபோல கிரிமினல் குற்றங்கள் செய்துவிட்டு யாரும் தப்பித்துகொள்ள முடியாது என்று பயபீதி கொள்ளும் வகையிலான தண்டனையை மக்களே நேரடியாக வழங்க வேண்டும். அத்தகைய அதிகார முறையைக் கொண்டுவரவேண்டும்.
மாணவர்களே, இளைஞர்களே வாருங்கள்! தமிழகத்தை மெரினாவாக்குவோம்!
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் போராட வேண்டும்.
ஜெயாவின் சின்னத்தை வைத்து போற்றுவது எதிர்கால சமூகத்திற்கு தவறான சமிக்ஞை ஆகிவிடும்.
- மெரினாவில் அரசு மரியாதையுடன் உள்ள ஜெயா சமாதியை உடனே அகற்ற வேண்டும்.
- அரசு அலுவலகங்களில் உள்ள ஜெயா புகைப்படத்தை நீக்க உத்தரவிட வேண்டும்.
- மாணவர்கள் தங்கள் பாட நூல்களில் உள்ள கிரிமினல் ஊழல் குற்றவாளி ஜெயாவின் படத்தை திருவள்ளுவர் படத்தை ஒட்டி மறைக்க வேண்டும்.
- விலையில்லாப் பொருட்களில் உள்ள ஜெயா படத்தை மக்கள் அழிக்க வேண்டும்.
- ஜெயா சசியின் அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
- அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகளின் சொத்துக்கள், மற்றயம் ஜெயா காலத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளின் சொத்துக்கள் இவை அனைத்தும் பொது தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்.இது தனிநபர் மீதான வெறுப்பு அல்ல. தமிழகத்தை கொள்ளையடித்த, சீரழித்த ஒரு கொள்ளை கும்பலின் தலைமை ! ஜெயா-சசி கும்பலை தமிழகத்தின் தீய சக்தியாக கருத வேண்டும். ஊழல் செய்பவர்களுக்கு மக்களின் இந்த செயல்தான் பாடமாக அமையும். நீதிமன்றத் தீர்ப்புக்களை கண்டு எந்த ஊழல்வாதியும் பயப்பட போவதில்லை.
-வழக்குரைஞர் சி.ராஜூ