இனி என்னவும் நடக்கலாம்.
அடுத்த நடவடிக்கையாக, இந்தச் சட்டத்திருத்தத்தை எதிர்த்தவர்க ளெல்லாம் தேசத் துரோகிகள். ஆகவே இவர்கள் அனைவருக்கும் குடியுரிமை இல்லை என்று சட்டத் திருத்தம் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதுதான் இந்துத்துவா பாசிசம்தான்.
“நமது கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தால் தற்போதுள்ள பார்லிமென்டரி காபினெட் ஆட்சிமுறைக்கு பதிலாக அதிபர் ஆட்சியை முறையைக் கொண்டு வருவோம்.”
- வாஜ்பாய் 14.01.1998 அன்று மத்திய பிரதேசத்தில் பேசியது.
“பாரத் அமைப்பை பலப்படுத்துவோம். எப்படிப்பட்ட நாடாக பலப்படுத்துவோம் என்றால், இந்து தர்மத்தை மையமாக வைத்து பலப்படுத்துவோம். சமஸ்கிருதத்தின் மூலம் பலப்படுத்துவோம். இந்து என்ற பெரும்பாலான வர்கள் எதைச் சொல்லுகிறார்களோ அதை அப்படியே பாரதத்தில் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.”
கே.ஆர்.மல்கானி எழுதிய ஆர்எஸ்எஸ் கதை
பாரதத் தாய் இந்தியாவின் மகள். மகள் எந்த மொழியைப் பேசுகிறார், எந்த மதத்தைப் பின்பற்று கிறார் எனப் பார்ப்பது இல்லை. எவ்வாறாயினும் அவர் இந்து என்று மட்டும் பார்க்கிறார்.
- ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
மேற்குறிப்பிட்ட இந்திய நாட்டிற்கு, அரசியல் சாசனத்திற்கு எள்ளளவும் ஒத்துவராத கொள்கையின் அடிப்படையில்தான் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு அகந்தையோடு ஆட்சி நடத்தி வருகிறது. மாநில அரசுகளைக் கொஞ்சம்கூட மதிப்பதே இல்லை. அவைகளை முனிசிபாலிடி நிறுவனங்கள் போல் நடத்தி வருகிறது. நாடாளுமன்றதைக் கூட அவர்களின் கட்சி அலுவலகம் போலத்தான் நடத்தி வருகிறது. மாற்றுக் கட்சியினரின் கருத்துக்களை மருந்துக்குக் கூட மதிப்பதே இல்லை. தாங்கள் என்ன நினைக்கி றார்களோ அதையே விடாப் பிடியாய் நிலை நிறுத்து கிறார்கள். நிறைவேற்றுகிறார்கள்.
பசப்பல் பேச்சும் பாசிச நடப்பும்
காரணம், இவர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தை சேர்ந்தவர்கள். நாடாளுமன்றத்தில், ஜன நாயகத்தில் நம்பிக்கையே இல்லாதவர்கள். அதோடு, அவர்கள் “பெரும்பான்மைவாதம்” எனும் நோய்க்கு ஆளாகி உள்ளவர்கள். அந்த நோய் பிடித்தவர்கள் எந்த நீதி, நியாயத்துக்கும் ஒத்துப்போகாதவர்கள். அதோடு இப்போது நாடாளுமன்றத்திலேயும் பெரும் பான்மை பெற்றுள்ளதால் இந்துத்துவா வாதத்திமிர் கொடி கட்டிப் பறக்கிறது. மத அடிப்படை வாதமும், பெரும்பான்மை வாதமும் சேர்ந்து விட்ட பிறகு சிறு பான்மையோர் மட்டுமல்ல, அவர்களின் சித்தாந்தத்து க்கு எதிராகக் கருத்துக் கொண்டோர் அனைவருமே பாரதத்திற்கு எதிரிகள்தான். அவர்களின் தேசிய வாதம் இயற்கையாகவே பலாத்காரம் கொண்டது. பிறர் மீது குற்றங்கள் சொல்லுவது மட்டுமல்ல. குறிவைத்து குண்டு வைக்கவும் தயங்காது. ஆனால் பரம சாதுக்கள் போல நடிப்பதிலும், பொய்களை அப்பட்ட மாக பேசுவதிலும் மகா வல்லவர்கள். உதாரணமாக மோடி, இந்த நாட்டின் பிரதம மந்திரி யான 2014ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று பசப்பிப் பேசிய வார்த்தைகளை நினைவு கூர்வது நன்று. “மதமோதல்களை, சாதிப் பூசல்களை ஒரு 10 ஆண்டுகள் தள்ளி வைப்போம். என் ஆட்சி அனை வரின் உடன்பாட்டுடன் செயல்படுவோமேயன்றி, வெறும் நாடாளுமன்ற பெரும்பான்மை என்ற அடிப்ப டையில் செயல்படாது” என்று கூறினார்.
உள்ளொன்று வைத்து வெளி ஒன்று பேசிய கபட நாடகமிது. இவரின் நடைமுறைக்கும், பேச்சுக்கும் ஏதேனும் சம்பந்தமுண்டா? இது தானே இட்லர் பாணி. பொது மக்களின் அபிப்பிராயம் என்பது வேறு ஒன்றுமல்ல, தொடர்ந்து பிரச்சாரத்தின் மூலமும், விளம்பரத்தின் மூலமும் பொது மக்களின் அபிப்ராயம் என்பதை நாம் உருவாக்கிட முடியும் என்றான் அவன். அதேமுறையில்தான் இந்தியாவிலேயும் தந்திரங்களை உருவாக்கி வெறும் பிரச்சாரத்தின் மூலம், விளம்பரத்தின் மூலம் மோடியை இந்திரன், சந்தி ரன், செயல் வீரன், ஆபத்பாந்தவன், அனாதரட்சகன் என்றெல்லாம் பலமான, வளமான பிரச்சாரங்கள் செய்யப்பட்டு அவர் பிரதம மந்திரியாக ஆக்கப்பட்டார். இதற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் கோடி கோடியாக பணத்தை வாரியிறைத்தன. இட்லருக்குக் கூட ஜெர்மானிய தொழில் அதிபர்கள் கோடி கோடியாக பணத்தைக் கொட்டினார்கள். இட்லருக்கு அவ்வளவு பணத்தை யார் கொடுக்கிறார்கள் என்று அன்று மர்ம மாகவே இருந்தது. இன்று இந்தியாவில் தேர்தல் நன்கொடை பத்திர மர்மம்போல. எந்த கார்ப்பரேட்டு கள் எவ்வளவு கொடுத்தார்கள் என்று யாருக்குத் தெரியும்? பண பலம், விளம்பர பலம் மட்டுமல்ல, 16ஆவது நாடாளுமன்ற தேர்தலில் புல்வாமா பயங்கர வாதமும் புகுந்து கொண்டது. நாட்டின் பாதுகாப்பு மோடியின் கையில்தான் உள்ளது எனப் பேசப்பட்டது. நாட்டுப் பற்று, தேசப்பற்று என தேசியவாதம் பேசப் பட்டது. உடனே தடாலடியாக பதான்கோட் தாக்குதல் பெரிதாக ஊதப்பட்டது. அதனால் தேர்தல் காலத்தில் அவர்களுக்கு நல்ல அறுவடை.
திட்டித் தீர்ப்பது, பழிபோடுவது
இந்தச் சூழலில் பாஜக ஆட்சியின் அலங்கோ லத்தை எதிர்த்துப் பேசினாலோ, விமர்சனம் செய்தா லோ, அப்படிச் செய்கிறவர்கள் நாட்டுப் பற்றற்றவர் கள், தேசத்துரோகிகள், அந்நியர்களுக்கு உதவும் ஆள் காட்டிகள் என்று பலமாக திட்டித் தீர்த்தார்கள். இந்த விஷயத்திலும் இட்லர் இவர்களுக்குப் பயன் பட்டான். வீண் பழிபோடுவதில். நாயைக் கொல்ல வேண்டும் என்று நீ நினைத்தால் அது வெறிநாய் என்று பழி போட்டு கொன்றுவிடு என்றான். நம் நாட்டு பாஜகவினர் மற்றவர்களை தேச விரோதிகள் என்று பழி போட்டார்கள். இந்துத்துவா தேசியவாதம் வேலை செய்தது.
பாஜக இரண்டாவது முறையும் வென்றதோடு, பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்ததற்கு மேற்கூறியவை மட்டும்தானா காரணம்? அப்படி வாதிட்டால் நாம் சரித்திரத்தை தவறாக கணித்தவர்கள் ஆவோம். நம்மை நாம் சுயவிமர்சனத்துக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். இந்துத்துவா கொள்கையை அடிப்படையாக வைத்து செயல்படும் பாஜக-வை, ஆர்.எஸ்.எஸ் வழி காட்டுதலோடு செயல்படும் அந்தக் கட்சியின் சூட்சு மத்தை, இந்தியாவில் உள்ள பல மாநிலக் கட்சிகள், அகில இந்திய கட்சியான காங்கிரஸ் உட்பட ஆழமாக பார்க்கத் தவறிவிட்டன. எல்லா கட்சிகளுக்கும் தன்நிலை வாதம்தான் தலைதூக்கி நின்றது. அந்தந்தக் கட்சிகள் சுயலாபம், அதிக தொகுதிகள் என்றுதான் பார்த்தன. அதிலும் சில கட்சிகள் பிரதம மந்திரி நாற்காலி மீதும் கண்ணாய் இருந்தன. கட்சிகளுக்கு இடையில் இருந்த மனமாச்சரியங்க ளையும் அந்த நேரத்தில் பார்த்தன. பாஜக என்னும் பொது எதிரியை, இந்தியாவில் ஏற்பட இருக்கும் எதிர்கால ஆபத்துக்களைப் பார்க்கத் தவறின. தமிழ்நாடு மட்டும் இதற்கு விதிவிலக்காக இருந்தது. கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு என்பது போல, 16ஆவது நாடாளுமன்ற தேர்தலில் வாங்கிய வாக்குகள் தெற்றன விளக்குகின்றன.
அட்டூழியங்களை எதிர்ப்பதில் ஒற்றுமை வேண்டாமா?
தேர்தலில் மட்டும்தான் கூட்டணி சேர்வதில் இந்தத் தவறுகள் நடந்துவிட்டன என்று சொல்லி முடிக்க முடியாது. பாஜக-வின் ஆட்சியில் நடைபெறுகின்ற ஜனநாய கத்துக்கு எதிராக நடைபெறுகின்ற அட்டூழியங்கள் எத்தனை, எத்தனை? அந்தப் பொது எதிரியை எதிர்ப்பதில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்ன ஆனது?
மோடியின் பாஜக ஆட்சியின் தலைமை, புழக்கத்தில் இருந்த நாணயங்களை செல்லாது என ஆணை பிறப்பித்தபோது இந்திய மக்களே அதிர்ந்து போனார்கள். அதனால் ஏற்பட்ட துயரங்கள், தொல்லைகள் எவ்வளவு? இந்த ஒன்று போதாதா? அனைத்துக் கட்சிகளும், வெகுஜன அமைப்புகளும் ஒன்றுகூடி இந்த ஆணை ரத்தானாலன்றி ஓய மாட்டோம் என ஒன்று திரண்டு போராடியிருந்தால், அரசை ஸ்தம்பிக்க வைத்திருந்தால், செயல்படாமல் வைத்திருந்தால், அதன்மூலம் நாணயம் செல்லாது என்ற ஆணையை ரத்து செய்ய வைத்திருந்தால், அந்தப் பொது எதிரி, அடுத்து ஜி.எஸ்.டி வரியைக் கொண்டு வந்திருக்குமா? ருசி கண்ட பூனை அடுத்துப் பாய்ந்தது. ஜி.எஸ்.டி வரியால் எவ்வளவு வேதனை? ஆனால் ருசி கண்ட பூனை காஷ்மீர் மாநிலத்தையே ஒழித்துவிட்டது. இந்த சர்வாதிகார உத்தரவு ரத்தாகும் வரை ஒரு மனிதனாக நின்று அரசை ஸ்தம்பிக்க வைத் தோமா? வெறும் கண்டனத் தீர்மானம், ஆர்ப்பாட்டம். இதைக் கண்டா இந்துத்துவா பாசிசம் பின் வாங்கும்?
இப்போது அந்தப் பொது எதிரி, ருசி கண்ட எதிரி, ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, இப்போது மனித ரத்தத்தைக் குடிக்கத் துவங்கிவிட்டது. ஒரு கை பார்த்து விடலாம் என்ற தைரியத்தோடு அரசியல் சட்டத்துக்கு எதிராக, குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (NPR), தேசிய குடி மக்கள் பதிவேடு (NRC) எனப்படும் திரிசூலாயுதத்தை எடுத்துக் கொண்டு தாக்க வருகிறது. நாம் இங்கே பார்க்க வேண்டியது மக்களை மதத்தால் பிரிக்கும் இந்த வஞ்சகத்தை எதிர்த்து எழுந்துள்ள போராட்டங்க ளை சரிந்துவிடாமல் காக்க என்ன செய்யப் போகி றோம் என்பதுதான் கேள்வி.
பொது எதிரி யார்? யாருக்குப் பொது எதிரி?
பாஜக வழக்கப்படி தவறான பொய்களை அள்ளி வீசிக் கொண்டே, மறுபுறும் எதிர்ப்புகளை அடக்கு முறை மூலம் ஒடுக்கப் பார்க்கிறது. இந்த போராட்டங்கள் வெகுநாட்கள் நீடிக்காது என கணக்குப் போடுகிறது. இந்த பொது எதிரி யாருக்கு எதிரி, எதற்கு எதிரி? மதச்சார்பற்ற கொள்கைக்கு, மதநல்லிணக் கத்துக்கு, வேற்றுமையில் ஒற்றுமை காணும் மாண்புக ளுக்கு, சமத்துவக் கல்விக்கு, இடஒதுக்கீடு உரி மைக்கு, பெண்ணுரிமைக்கு, சாதிய, சனாதன ஒழிப்பு க்கு, சுயமரியாதைக்கு, சமதர்ம தத்துவத்துக்கு, மாநில சுயாட்சிக்கு, மொழிவாரி மாநிலங்களுக்கு, பொதுத்துறைகளைக் காப்பதற்கு, தொழிலாளர்கள் சட்டத்தை மேன்மைப் படுத்துவதற்கு, விவசாயிகளை கௌரவத்தோடு வாழ விடுவதற்கு, அரசு ஊழியர்க ளுக்கு வேலைநிறுத்த உரிமையை வழங்குவதற்கு, மலைவாழ் மக்களை நிம்மதியாய் வாழ விடுவதற்கு, பழைய பென்ஷன் முறையைக் கொண்டு வருவதற்கு எதிரான ஆட்சிதான் பாஜக ஆட்சி. ஆக இந்தியாவில் அனைவருக்குமான பொது எதிரி ஆர்.எஸ்.எஸ், பாஜகவும் அதன் பரிவாரங்களும் தான். குடியுரிமை சட்டத்திருத்தத்திலும் பாஜக வெற்றி யடைந்துவிட்டால் நாடு என்னாகும்? அடுத்த நடவ டிக்கையாக, இந்தச் சட்டத்திருத்தத்தை எதிர்த்தவர்க ளெல்லாம் தேசத் துரோகிகள். ஆகவே இவர்கள் அனைவருக்கும் குடியுரிமை இல்லை என்று சட்டத் திருத்தம் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படு வதற்கில்லை. இதுதான் இந்துத்துவா பாசிசம்தான்.
ராணுவத்தின் தலையீடு அதிகரிப்பு ஜனநாயகத்தை காவு கொள்ளும்
பாசிச இட்லர் தன் ஆட்சியில் வழக்கில் உள்ள எல்லா சட்டங்களையும் எந்தச் சட்டமானாலும் அதை ரத்து செய்கிற சட்டம் ஒன்றை நிறைவேற்றி, அதை அமல்படுத்தும் அதிகாரத்தையும் கையில் வைத்துக் கொண்டான். அந்தச் சட்டத்திற்கு அவன் பெயரிட்டது விசித்திரமானது. மக்களையும், குடியரசையும் துன்பத்திலிருந்து காக்கும் சட்டம் எனக் கூறிக் கொண்டான். இயங்கிய நீதிமன்றத்தையே கலைத்துவிட்டு, தனக்கு ஏற்ப ஒரு நீதிமன்றத்தை உருவாக்கிக் கொண்டான். இந்தியா வில் பாசிச இந்துத்துவா அப்படிச் செய்யாது என எண்ண முடியாது. மனு தர்மம்தான் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு ஏற்கனவே பகிரங்கமாக ஒரு தீர்மானம் நிறை வேற்றியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் பொருத்தமட்டில் அந்தத் தீர்மானம் நடைமுறைக்கு வந்தே ஆக வேண்டும். அதற்கான முன் ஏற்பாடுகள்தான் இவையாவும்.
ஒருபக்கம் இவை அமலாக்கப்படவும் செய்யும், இன்னொரு புறம் கடுமையான அடக்குமுறையை யும் அமல்படுத்தும். அதற்கான முன் ஏற்பாடுகளில் ஒன்றுதான் பிபின் ராவத் என்கிற ராணுவ தளபதியை, ஆர்.எஸ்.எஸ் அனுதாபியை முப்படையின் தளபதி யாகக் கொண்டு வரப்பட்டுள்ளார். ஏற்கனவே முன்னாள் ராணுவ வீரர், ஆர்.எஸ்.எஸ் அனுதாபி வி.கே.சிங் பாஜக உறுப்பினராகி இப்போது மத்தி யில் அமைச்சராக உள்ளார். இப்போது நிலவிவரும் மற்றொரு ஆபத்தையும் கவனிக்க வேண்டும். உள்நாட்டுப் பிரச்சனைகளில், சிவிலியன் போராட் டங்களில் எவ்வளவுக்கெவ்வளவு அடக்குமுறையை ஒடுக்க ராணுவம் பயன்படுத்தப்படுகிறதோ அவ்வள வுக்கவ்வளவு நாட்டின் ஜனநாயகம் பலகீனமாகி வருகிறது என்பதன் அடையாளம். அந்த நிலை இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
வீரமிக்க போராட்டங்கள் வீணாகிவிடக் கூடாது
மாநிலங்களில் கட்சிகளுக்கு இடையிலே உள்ள சிறு சிறு பூசல்களை ஒதுக்கி வைத்துவிட்டு, அகில இந்திய கட்சிகளும் கூட எல்லோரும் ஒன்றுபட்டு நின்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கைவிடும் வரை, ரத்தாகும்வரை போராடியே தீர வேண்டும், ஒத்துழையாமையை ஓங்காரத்தோடு நடத்தியாக வேண்டும். போராடும் மாணவர்கள் விரக்தி அடைந்து விடக் கூடாது. பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பெண்கள் காட்டிய துணிவை பாராட்டியே தீர வேண்டும். ஜேஎன்யு-வில் மாணவர்களின் தலைவி அய்ஷே கோஷ் தன் மீதான தாக்குதல்களையும் தாங்கிக் கொண்டு வீரத்தோடு சூளுரைத்ததை வாழ்த்தி வரவேற்க வேண்டும். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக மாணவர்களையும், ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக் கழக மாணவர்களையும் பாராட்டி, வாழ்த்தி உற்சாகப்படுத்த வேண்டும். அவர்களின் வீரம் செறிந்த போராட்டங்கள் வீணாகிவிடும் அளவிற்கு ஜனநாயக சக்திகளின் செயல்பாடுகள் அமைந்து விடக்கூடாது.
நோபல் பரிசு பெற்ற அபித் பானர்ஜி ஜெர்மனியில் இட்லர் நடத்திய பாசிச ஆட்சிபோல், இந்தியாவிலும் நடக்க ஆரம்பித்துள்ளது என்று சொன்னது சரிதான். கேரள அரசு நல்ல முடிவெடுத்து செயல்படுகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களும் இப்படி முன்னணியில் நிற்க வேண்டும். பாஜக ஆட்சி யில் உள்ள மாநிலங்களில் எதிர்க் கட்சியினர், வெகுஜன அமைப்புகள் ஒன்று கூடி போராடியே தீர வேண்டும். தடைகள் வரலாம், தாக்குதல்கள் தொடுக் கப்படலாம். வேதனைகளை ஏற்றுதான் சாதனை களைப் படைக்க முடியும். அடிமைகளாக இருந்து அவமானத்தோடு வாழும் சிரமத்தைவிட அதை எதிர்த்து இரத்தம் சிந்துவது மேல். அது மகிழ்வைத் தருவது. அதற்காக மாண்டு போவதுகூட மேலும் மகத்தானது.