மக்கள் நலத் தீர்ப்பு!

 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் ஆலை மூடி சீல் வைத்த தமிழ்நாடு அரசின் நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது. 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெலைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சுப் புகையால் பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 2018ம் ஆண்டு பொதுமக்கள் நடத்திய போராட்டம் நூறாவது நாளை எட்டியதை தொடர்ந்து, மே.22ம் தேதியன்று பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். 

அப்போதைய அதிமுக ஆட்சியில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழ்நாடு அரசால் சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்த அரசாணையும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம் முதலாவதாக தொடர்ந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் நிர்வாகத்துக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்தது.


இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையின் கோரிக்கையை நிராகரித்து, அவர்களது ரிட் மனுவை தள்ளுபடி செய்ததோடு, இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது. 

வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,‘‘ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்ததுடன், தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் என கடந்த 2020ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

 சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் நான்காவது நாளாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.


அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், கோபால் சங்கர் நாராயணன், குமணன் மற்றும் பூர்ணிமா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தங்கள் வாதத்தில், காப்பர் கழிவுகள், ஜிப்சம் ஆகியவற்றை ஆலை நிர்வாகத்தின் தரப்பில் நீக்கம் செய்யாததே ஆலையை மூடியதற்கு முக்கிய காரணம்.


 குறிப்பாக நிலத்தடி நீர் மாசு அடைந்தது மட்டுமில்லாமல், அது ஆரஞ்சு நிறம் போன்று மாறியுள்ளது. இதனை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக ஸ்டெர்லைட் ஆலை அமைவதற்கு முன்னதாக அந்த பகுதியில் 1700க்கும் மேற்பட்ட பசுமையான மரங்கள் இருந்தது. தற்போது ஆலையால் ஏற்பட்ட பாதிப்பால் அப்பகுதி கான்கிரீட் காடுகளாக மாறியுள்ளன. இதனை தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட குழு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை உறுதி செய்துள்ளது என்று தெரிவித்தனர்.


இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்பை வரைபடத்துடன் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் காண்பித்து நீதிபதிகள் முன்னிலையில் விளக்கமளித்தனர். அதில், ‘‘கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சுழல் மாசை ஏற்படுத்தி வருகிறது. அதனால் தான் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. 

இதில் மாசு மட்டுமில்லாமல் சல்பர் டை ஆக்சைடு கசிவு ஏற்பட்டதால் மக்கள் அதிகளவில் பாதிப்படைந்தனர். ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளில் மாசு ஏற்படுத்துபவை மற்றும் மாசு ஏற்படுத்தாதவை என்று இரு பிரிவுகள் உள்ளன. அதனால் அனைத்து கழிவுகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.


 மேலும் தாமிர கழிவுகளில் அதிக அளவிலான ஆர்சனிக் அளவு உள்ளது ஆய்வில் தெளிவாக தெரிய வந்துள்ளது. ஆலையால் கொட்டப்பட்ட கழிவுகள்தான் தற்போது தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட காரணமாக அமைந்தது. மேலும் பயன்பாட்டு நீரில் இந்தக் கழிவுகள் கலந்துள்ளது.


எனவே வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் நேற்று வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது: ஒரு மாநிலத்தின் சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது அந்த மாநில அரசின் மிக முக்கியமான கடமைகளில் ஒன்றாகும். அதில் எந்தவித சமரசமும் செய்ய முடியாது. 

எனவே இந்த விவகாரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழ்நாடு அரசின் முடிவு மற்றும் அரசாணை செல்லும். தற்போது இருக்கும் சூழலில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது என்பது மட்டுமில்லாமல், விரும்பவும் இல்லை. 

எனவே இந்த விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது.


குறிப்பாக ஸ்டெர்லைட் ஆலையால் மேற்கொள்ளப்பட்ட விதிமுறை மீறல்களின் அடிப்படையில் இந்த முடிவை உச்ச நீதிமன்றம் எடுத்துள்ளது. 


இதற்கான விரிவான ஆவணங்களையும் தரவுகளையும் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்துள்ளது. 


அதேபோன்று கழிவுகளை கையாண்டதில் கடந்த 2013ம் ஆண்டுக்கு பிறகு பலமுறை வாய்ப்பு வழங்கியும் தங்களது தவறுகளை ஆலை நிர்வாகம் சரிசெய்து கொள்ளவே இல்லை. இதில் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள மக்களின் சுகாதாரம் என்பது மிகவும் முக்கியமானது. 

அதனை கண்டிப்பாக புறந்தள்ள முடியாது. 


குறிப்பாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்திய சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் காப்பர் கழிவுகளை கையாண்ட முறைகள் மிகவும் கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. 


அதனை நாங்கள் வரைபடத்தின் மூலம் தெளிவாக பார்த்து தெரிந்து கொண்டோம் என்று தெரிவித்த நீதிபதிகள், 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

* இந்த தீர்ப்பை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு எனமுதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.


நாசகார  ஸ்டெர்லைட்

ஒருபார்வை.
1992 : குஜராத், கோவா, கேரளா, கர்நாடகா குஜராத்,கோவா,கர்நாடகா,கேரளாஆகிய மாநிலங்களில் ஸ்டெர்லைட் ஆலை அமைக்க இடம் தரப்படவில்லை.

 மராட்டிய மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தில் ஆலைக்கு அனுமதி அளிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடந்தபோது,  மக்களின்கடுமையான எதிர்ப்பு,கலவரங்களால்   பணிகள் நிறுத்தப்பட்டன.


ஆகஸ்ட் 1, 1994 : ஜெயலலிதா அரசு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க அனுமதித்தது.


ஆகஸ்ட் 20, 1997: ஸ்டெர்லைட் தொழிற்சாலை அருகே உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய கிளை நிலைய ஊழியர்கள்,ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வரும் புகையால் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது என்று புகார்.


நவம்பர் 23, 1998: ஐகோர்ட் உத்தரவுப்படி ஆலை சிறிது காலம் மூடப்பட்டது.


மார்ச் 23, 2013: ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறிய வாயு கசிவினால் தூத்துக்குடி நகர மக்களுக்கு இருமல், கண் எரிச்சல் போன்ற பல உடல் நலக்குறைவுகள் ஏற்பட்டன.


மார்ச் 29,2013: தொழிற்சாலையை மூடுவதற்கும், மின் இணைப்பை துண்டிப்பதற்கும் உத்தரவு.

மே 31, 2013: தேசிய பசுமை தீர்ப்பாயம் முதன்மை அமர்வு முன்பு, ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு. மனுவை விசாரணை செய்து ஆலையை மூடும் உத்தரவை ரத்து செய்து, தொழிற்சாலையை இயங்க உத்தரவிட்டது.
பிப்ரவரி 12,2018: ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அதன் அருகிலுள்ள குமரெட்டியாபுரம் கிராம மக்கள் போராட்டத்தை தொடங்கினர்.
ஏப்ரல் 9, 2018: தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான உரிமத்தை புதுப்பிக்க மறுப்பு.


மே 22, 2018: குமரெட்டியாபுரம் போராட்டம் தொடங்கி 100:வது நாளில் தூத்துக்குடி நகரமே போர்க்களமானது. போலீசார் துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் சாவு. ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.

மே 23, 2018: தூத்துக்குடி பொதுமருத்துவமனை முன்பு இறந்தவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம். ஆஸ்பத்திரி அருகேபோலீஸ் வேன் தீவைப்பு. தூத்துக்குடியில் மீண்டும் போலீசார் துப்பாக்கிசூடு. மேலும் ஒருவர் சாவு. இதன் மூலம் சாவு எண்ணிக்கை 13 ஆக உயர்வு. ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு துண்டிப்பு.
மே 28, 2018 : ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் மாலையில் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
ஜூன் 22,2018: ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்வைக்கப்பட்டதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வழக்கு.
டிசம்பர் 15,2018: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.
ஜனவரி 2,2019: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு.
பிப்ரவரி 18,2019: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு.
ஜூலை 27, 2019 சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு, வழக்கு விசாரணையைத் தொடங்கியது. தொடர்ந்து 39 நாள்கள் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது.
ஜனவரி 8, 2020 வழக்கு விசாரணை முடிந்தது. தேதி குறிப்பிடப்படாமல் இந்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 18, 2020 ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்’ எனவும் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
பிப்ரவரி 29. 2024 வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி மறுத்தது.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?