கூட்டுக் களவாணிகளின்
ராம ராஜ்ஜியத்தில்...
இதுவரையிலும் வெளியாகியுள்ள தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் விவரங்கள் ஓர் அம்சத்தை மிகவும் தெள்ளத்தெளிவாக உறுதிப்படுத்தியிருக்கிறது.
அது என்னவெனில், மதவெறி-கார்ப்பரேட் கள்ளப் பிணைப்பு, இன்னும் குறிப்பாகவே சொல்வதென்றால், இந்துத்துவா-கார்ப்பரேட் கள்ளப்பிணைப்பு உறுதிப்படுத்தப்பட்டு, வெளிச்சத்திற்கு வந்திருப்பதாகும். வெளிவந்திருக்கிற தரவுகளின் அடிப்படையில், 2018இல் தேர்தல் பத்திரங்கள் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டிற்குப் பின்னர் அதனால் பிரதானமாக பயன் அடைந்திருப்பது பாஜக-தான் என்பது தெளிவாகவே தெரிகிறது.
அதாவது பாஜக 8,252 கோடி ரூபாய் அளவிற்கு பெற்றிருக்கிறது.
கார்ப்பரேட்டுகள் - முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் மீது கையூட்டுகள் அளிப்பதும், லாபத்தில் கமிஷன் அளிப்பதும் நடைமுறையாகவே இருந்து வருகிறது.
அவை அரசியல் ஊழலின் அடிநாதமாக அமைந்திருக்கின்றது. அத்தகைய ஊழலை சட்டப்பூர்வமாக்குவதற்கு மோடி அரசாங்கத்தின் மேதைமை தேவைப்பட்டது. கார்ப்பரேட் நிறுவனங்களையும் அப்பாவிகளைப்போல் சித்தரிப்பதும், அவர்களை மிரட்டிப் பணம் பறிக்கிறார்கள் என்று கூறுவதும்கூட தவறாகும். தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜக-விற்கு அளிக்கப்பட்ட தொகையில் பெரும்பகுதி, கார்ப்பரேட்டுகள் தாங்கள் அரசாங்கத்திடமிருந்து பெற்றவற்றிற்கு கைமாறாக கையூட்டாகவும், கமிஷனாகவும் அளிக்கப்பட்டவைதான்.
மேலும் எதிர்காலத்திலும் அரசாங்கம் தொடர்ந்து தங்களுக்கு சலுகைகள் அளிக்க வேண்டும் என்பதற்காக, அரசாங்கத்திடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் அளிக்கப்பட்டவைகளேயாகும்.
ஒப்பந்தங்கள் பெற..
ஹைதராபாத்தை அடிப்படை யாகக் கொண்டு செயல்பட்டுவரும் மெகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் (MEIL-Megha Engineering and Infrastructures Ltd) நிறுவனம் அளித்துள்ள தேர்தல் பத்திரங்களில் பெரும்பகுதி இவ்வகையிலானதேயாகும்.
உதாரணமாக, மேற்படி எம்இஐஎல் நிறுவனம், தானே-போரிவாலி இடையே சுரங்கப்பாதை அமைப்பதற்காக 14,400 கோடி ரூபாயில் இரண்டு திட்டங்களைப் பெற்றிருக்கிறது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெரும் தொகை கொடுக்கப்பட்டிருக்கிறது. இதே பாணிதான் ஜோசிலா சாலை சுரங்கப் பாதை திட்டத்திலும் (Zojila Road tunnel project) மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
சில சுரங்க நிறுவனங்கள் (mining companies), வனப் பகுதிகளில் தங்கள் திட்டங்களை பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் முன்னெடுத்துச் செல்வதற்காக, ஆளும் கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலமாக பணம் கொடுத்திருக்கின்றன.
தரமற்ற மருந்துகளும்
35 மருந்துக் கம்பெனிகளும்
எண்ணற்ற நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக ஆட்சியாளர்களுக்கு நிதி அளித்திருக்கும் மற்றொரு துறை மருந்துத் துறை (pharmaceutical sector) ஆகும். சுமார் 35 மருந்துக் கம்பெனிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளித்திருக்கின்றன.
இவற்றில் இதுவரை ஏழு கம்பெனிகள்தான் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. அவை தேர்தல் பத்திரங்கள் வாங்கிய சமயத்தில் மிகவும் மோசமான முறையில் தரமற்ற விதத்தில் மருந்துகளை உற்பத்தி செய்ததாக புலன்விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருக்கிறது.
தங்கள் மீது சட்டரீதியாக தொடர் நடவடிக்கைகள் எடுப்பதைத் தவிர்ப்பதற்காகவே அவை தேர்தல் பத்திரங்கள் வாங்கியதன் மூலம் ஆளும் கட்சிக்கு உதவியிருக்கிறது என்று ஊகிக்கலாம். அநாமதேய தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின்கீழ் பரஸ்பரம் கைமாறு எப்படி நடந்திருக்கிறது என்பதற்கு இவை சில எடுத்துக்காட்டுகளாக இருக்கக்கூடிய அதே சமயத்தில், மோடி அரசாங்கம் இந்தத் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெருக்குவதற்கு மேலும் சில அச்சுறுத்தும் பரிமாணத்தைச் சேர்த்தது.
அரசியல் எதிரிகளைக் குறிவைத்தும், சுதந்திரமாகச் செயல்படும் ஊடகங்களைக் குறிவைத்தும், மனித உரிமை அமைப்புகளைக் குறிவைத்தும் எப்படி தன்னுடைய புலனாய்வு முகமைகளான அமலாக்கத்துறை, மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) மற்றும் வருமான வரித் துறையினரைப் பயன்படுத்தின என்பதை ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம்.
ஆர்எஸ்எஸ்சின் ஒப்புதல்
ஆர்எஸ்எஸ்-ஐப் பொறுத்தவரை, தேர்தல் பத்திரங்கள் என்பது ஒரு மதிப்புமிகு பரிசோதனை முயற்சி என்றும், இதனை ரத்துசெய்யக்கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறது.
சமீபத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டத்தில் அதன் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே (Dattatreya Hosabale) தேர்தல் பத்திரங்கள் தேவை என்று வலியுறுத்தும் விதத்தில், “தேர்தல் பத்திரங்கள் திட்டம் ஒரு பரிசோதனை முயற்சியாகக் கொண்டுவரப்பட்டது, அது ஒன்றும் திடீரென்று அறிமுகப்படுத்தப்படவில்லை.
ஒரு மாற்றம் கொண்டுவரப்படுகையில் கேள்விகள் கேட்கப்படலாம்தான். மின்னணு வாக்கு எந்திரங்கள் (EVM) கொண்டுவரப்பட்டபோதுகூட இப்படிக் கேள்விகள் எழுந்தன.” என்று கூறியிருக்கிறார்.
இவ்வாறு ஆர்எஸ்எஸ்-ஐப் பொறுத்தவரை தேர்தல் பத்திரங்கள் திட்டம் என்பது ஒரு மதிப்புமிகு பரிசோதனையாகும். எனவே அதனைத் தூக்கி எறிந்துவிடக்கூடாது. இவ்வாறு ஆர்எஸ்எஸ், தங்களுடைய இந்துத்துவா திட்டத்தில் கார்ப்பரேட்டுகள் ஐக்கியமாகி இருக்கிறார்கள் என்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டிருக்கிறது.
விசித்திரமான வாதம்
வர்த்தக சங்கங்களின் மூன்று உயர் அமைப்புகளும் ஃபிக்கி (FICCI) எனப்படும் The Federation of Indian Chambers of Commerce and Industry, CII எனப்படும் the Confederation of Indian Industry மற்றும் அஸோசெம் (ASSOCHAM) எனப்படும் the Associated Chambers of Commerce and Industry of India ஆகிய மூன்று அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தில் கூட்டாக ஒரு மனு தாக்கல் செய்திருக்கின்றன.
இவ்வாறு வெளியிடுவது என்பது ‘ஒப்பந்தங்களின் ரகசியத்தன்மைக்கு எதிரானது’ (‘breach of confidentiality agreements’) என்றும், ‘அது தொழில்களின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் குந்தகத்தை ஏற்படுத்திடும்’ என்றும், ‘சட்டத்தின் ஆட்சியையே அரித்துவீழ்த்திவிடும்’ என்றும் அவை கூறியிருக்கின்றன.
பல்வேறு வடிவங்களில் அரசுடன் கைமாறு மேற்கொள்ளப்பட்டு ஒப்பந்தங்கள் முடிந்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தங்கள் எவ்வாறு ஏற்பட்டன என்பது வெளிச்சத்திற்கு வருவதை கார்ப்பரேட்டுகள் விரும்பவில்லை.
எனினும் இவர்களின் வேண்டுகோள் விண்ணப்பத்தை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
லஞ்சம்:-தேர்தல் பத்திரம்
கார்ப்பரேட்டுகளிடமிருந்து பணத்தைக் கறப்பதற்கு இவ்வாறு முகமைகளைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி இருக்கிறது.
கார்ப்பரேட்டுகளின் முறைகேடுகளை, (அவை உண்மையானதாகவும் இருக்கலாம் அல்லது கற்பனையானதாகக்கூட இருக்கலாம் ) பயன்படுத்தி நிறுவனங்களை சோதனை மேற்கொண்டு, புலன் விசாரணை செய்து அவற்றின் நிதி மற்றும் சொத்துக்களை அரசுக்கு ஆதாயமாக்கிட நடவடிக்கைகள் எடுத்தன.
அத்தகைய நிறுவனங்களின் உரிமையாளர்கள் பின்னர் தேர்தல் பத்திரங்கள் வாங்குவதற்கும், ஆளும் கட்சிக்குத் தாராளமாக நிதி வழங்குவதற்கும் வழிவகை செய்து கொடுத்தன. இவ்வாறு இருவிதங்களில் ஒன்றிய ஆட்சியாளர்கள் தங்கள் நிதியை கார்ப்பரேட்டுகளிடமிருந்து கசக்கிப் பிழிந்து சேகரித்துக்கொண்டனர். அதாவது ஒன்றிய அரசாங்கத்தின் புலனாய்வு முகமைகள் மூலமாக சட்டவிரோதமான முறையில் அச்சுறுத்தல்களையும், பிளாக்மெயில் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, அவற்றிடமிருந்து கசக்கிப்பிழிந்து நிதியை வசூலித் தது.
அரசியலமைப்பை கேலிக் கூத்தாக்கும் செயல்
நாட்டில் வெளிப்படைத் தன்மையையும், சட்டப்பூர்வமான முறையில் நிதி வசூல் செய்வதையும் இவ்வாறு நாட்டின் அரசியலமைப்பையே கேலிக்கூத்தாக்கும் விதத்தில், பெயரளவிலான கம்பெனிகள் (shell companies) மூலமாக கறுப்புப் பணம் மற்றும் பண மோசடி மூலமாகவும் தேர்தல் பத்திரங்களின் மூலமாக பணத்தை வசூலித்திருக்கிறார்கள்.
உதாரணமாக, சில நிறுவனங்கள் தங்களுக்கு லாபமே வரவில்லையென்றபோதிலும்கூட ஏராளமான தொகையை தேர்தல் பத்திரங்கள் மூலமாக ஆட்சியாளர்களுக்கு வழங்கி இருக்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் போதிய அளவிற்கு லாபம் ஈட்டாத நிறுவனங்கள் பல, இவ்வாறு ஆட்சியாளர்களுக்கு ஏராளமாக வாரி வழங்கி இருக்கிறார்கள்.
தேர்தல் பத்திரங்கள் திட்டம் இந்துத்துவா-மதவெறி இணைப்பின் விளைவே என்பது ஒருபுறம் வர்த்தக சங்கங்களும் மறுபுறம் ஆர்எஸ்எஸ்-உம் இதுதொடர்பாக எதிர்வினையாற்றுவதிலிருந்தே தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.
நீதிமன்ற நடவடிக்கை தேவை
இப்போது நம்முன் உள்ள கேள்வி என்னவெனில் இவ்வாறு அர சாங்கத்திற்கு கையூட்டுகள் வழங்கிய விவரங்கள், பண மோசடி நடவடிக்கைகள், பிளாக்மெயில் செய்து பணத்தைக் கறந்திருக்கும் சங்கதிகள் அனைத்தும் வெளிவந்தபின் இவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை என்ன என்பதாகும்.
ஆழமான கள்ள உறவு
இப்போது உச்சநீதிமன்றம், தேர்தல் பத்திரங்களின் தரவுகள் குறித்து முழுமையான தகவல்களை வெளிப் படுத்திடும்படி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிற்கு கட்டளை பிறப்பித்திருக் கிறது. தேர்தல்பத்திரங்களின் சங்கேதக் கூறியீட்டு எண்கள் (alphanumeric numbers) என்ன என்பதை விளக்கு வதுடன், யார் எப்போது எவ்வளவு கொடுத்தார்கள் என்கிற முழு விவரங்களையும் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக் கிறது.
இது வெளிவரும்பட்சத்தில் இந்துத்துவா கட்சிக்கும் கார்ப்பரேட்டு களுக்கும் இடையேயான ஆழமான கள்ள உறவு எந்த அளவிற்கு இருந்திருக்கிறது என்பது மேலும் உறுதி செய்யப்பட்டுவிடும்.
பீப்பிள் டெமாக்ரசிமார்ச் 20, 2024 /
தமிழில்: ச.வீரமணி