மின் உற்பத்தி: இந்தியா
‘பவர்க்ரிட்’ நிறுவனத்தினர் ராய்ச்சூர் - ஷோலாப்பூர் 765 கிலோவோல்ட் மின் பாதை (ட்ரான்ஸ்மிஷன் லைன்ஸ்) அமைத்ததன் மூலம், நமது நாட்டின் மற்றைய பிராந்தியங்களைத் தென் பிராந்தியங்களுடன் இணைத்திருக்கிறார்கள்.
இந்தச் சாதனையால் தமிழகத்துக்கு மட்டுமின்றி, தென் மாநிலங்கள் அனைத்துக்கும் மற்றைய பிராந்தியங்களிலிருந்து மின்சாரம் வாங்கக்கூடிய வசதி ஏற்பட்டிருக்கிறது.
இது நாளையே நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், எதிர்காலத்தை நோக்கி நமது மின்துறை செல்லும் பயணத்தில் இதை முக்கியமான ஒரு மைல்கல்லாகக் கருதலாம்.
உதாரணமாக, அருணாசலப் பிரதேசத்தில் மட்டும் நீர் மின்சாரம் இன்று 100 மெகா வாட்டுகளுக்கும் குறைவாக எடுக்கப்படுகிறது.
ஆனால், எதிர்காலத்தில் அணைகள் கட்டப்பட்டால் சுமார் 40,000 மெகா வாட்டுகள் எடுக்கலாம் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இப்படிக் கிடைக்கும் அதிக மின்சாரத்தைத் தமிழகம் வாங்க நினைத்தால், வருவதற்கு வழி தயாராகிவிட்டது.
குறித்தகாலத்துக்கு ஐந்து மாதங்கள் முன்பே ‘பவர்க்ரிட்’ நிறுவனத்தார் இந்தப் பாதையை முடித்துக் கொடுத்துவிட்டனர். இரவு பகல் பார்க்காமல், அதிக வசதிகள் ஏதும் இல்லாத இடங்களில் நிறுவனத்தின் பொறியியல் வல்லுநர்களும் தொழிலாளர்களும் முனைப்போடு வேலை செய்ததாக பவர்க்ரிட் நண்பர்கள் கூறுகிறார்கள். அவர்கள் நமது பாராட்டுக்குரியவர்கள்.
2013-ம் ஆண்டு செப்டம்பர் வரை நமது நாட்டின் மொத்த மின் உற்பத்தித் திறன் 2.30 லட்சம் மெகா வாட்டுகள். 2012-ம் ஆண்டு 2. 07 லட்சம். 2011-ம் ஆண்டு 1.81 லட்சம். எனவே, நமது மின் உற்பத்தித் திறன் இரண்டு ஆண்டுகளில் சுமார் 50,000 மெகா வாட்டுகள் அதிகரித்திருக்கிறது.
இதேபோன்று 11 திட்டங்களின் முடிவில் (மார்ச் 2012) 2.69 லட்சம் கி.மீ. ஆக இருந்த மொத்த மின் பாதைகள், இந்த ஆண்டு நவம்பர் இறுதி வரை 2.82 லட்சம் கி.மீ. ஆக உயர்ந்திருக்கின்றன. இவையெல்லாம் மெச்சத் தகுந்த சாதனைகள்.
சீனாவுடன் ஓர் ஒப்பீடு
ஆனால், சீனாவுடன் இந்தப் புள்ளிவிவரங்களை ஒப்புநோக்கிப் பார்த்தால், இந்தியா எங்கே இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். இந்தியாவை விட ஐந்து மடங்குகள் மின் உற்பத்தித் திறனை சீனா கொண்டிருக்கிறது. 2012 இறுதிவரை கிடைத்த புள்ளிவிவரங்களின்படி அதன் மின் உற்பத்தித் திறன், 1.14 மில்லியன் மெகா வாட்டுகள். மின் பாதைகளின் நீளம் 2012-ல் 7 லட்சம் கி.மீ. ஆண்டுக்கு சுமார் 70,000 கி.மீ. மின்பாதைகள் அங்கு அமைக்கப்படுகின்றன.
சீனாவின் ‘மூன்று பள்ளங்கள்’ என்று பெயரிடப்பட்ட அணை, யாங்ட்ஸே நதியைத் தடுத்து அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த அணையினால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 22,500 மெகா வாட்டுகள். இது இந்தியாவில் எல்லா நீர்மின் திட்டங்களிலிருந்தும் பெறப்படும் மின்சாரத்தில் பாதி பங்குக்கும் மேல். தமிழ்நாட்டில் நிறுவப்பட்டிருக்கும் எல்லா மின் உற்பத்தி நிலையங்களும் கொடுக்கும் மின்சாரத்தைவிட இது அதிகம். உலகில் மிகப் பெரிய நீர்மின் திட்டம் இது.
மேற்கூறிய புள்ளிவிவரங்கள் நமது நாட்டின் மின் உற்பத்தித் திறனைப் பற்றிப் பேசுகின்றன. ஆனால், உண்மையாகவே உற்பத்தி நடக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம். ஒரு மின் உற்பத்தி நிலையம் திறமையாக இயங்குகிறதா இல்லையா என்பதைக் கணிக்க, ப்ளாண்ட் லோட் ஃபாக்டர் எனப்படும் இயந்திரப் பளுக் காரணி என்ற அளவீடு கையாளப்படுகிறது. இதன்படி, நமது நாட்டில் நிலக்கரி கொண்டு இயங்கும் மின் நிலையங்களின் இயந்திரப் பளுக் காரணி கடந்த ஆறு மாதங்களில் சுமார் 61.5 சதவீதம். டீசல் மற்றும் எரிவாயு கொண்டு இயங்கும் மின் நிலையங்களில் 26%.
எனவே, திறமையாக இயங்கும்பட்சத்தில், நமக்குக் கிடைக்க வேண்டிய மின்சாரம் நிலக்கரித் தட்டுப்பாட்டால் கிடைக்காமல் போகிறது. இவ்வளவுக்கும் இந்தியாவில் நிலக்கரி மட்டும் 92,000 மில்லியன் டன்கள் பூமிக்கு அடியில் புதைந்துகிடக்கின்றன.
தோண்டியெடுப்பதில்தான் பல சிக்கல்கள். அதனாலேயே நிலக்கரியை ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம். இதே போன்று எரிவாயு கிடைக்காததால் சுமார் 15,000 மெகா வாட்டுகள் உற்பத்தி செய்ய வேண்டிய மின் உற்பத்தி நிலையங்கள் உறங்கிக்கொண்டிருக்கின்றன.
உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரமும் சேர வேண்டிய இடத்துக்குச் செல்லாமல் இடையிலேயே இழந்துபோகக்கூடிய அபாயமும் இருக்கிறது. இதை மின் செலுத்தீட்டு மற்றும் பங்கீட்டு இழப்பு என்று கூறுவார்கள். இந்த இழப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், மின் திருட்டு. இந்த இழப்பு இந்தியா முழுவதும் 24 சதவீதம். மணிப்பூர் மாநிலத்தில் சுமார் 80 சதவீதம். காஷ்மீரில் 60 சதவீதத்துக்கும் மேல். தமிழ்நாட்டில் இது 2012-13-ம் ஆண்டுகளில் 16.8 சதவீதமாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் இந்த இழப்பு 6 சதவீதத்துக்கும் மேல் இருப்பதில்லை. எனவே, மின் திருட்டை ஒழிக்க வேண்டிய கட்டாயம் நிச்சயம் இருக்கிறது.
தமிழகம், மின் உற்பத்தித் திறனில் மகாராஷ்டிரத்துக்கும் குஜராத்துக்கும் பின்னால் இந்தியாவிலேயே மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நமது முதல்வர் தமிழ்நாடு இன்னும் ஆறு மாதங்களில் மின் உற்பத்தியைப் பொறுத்த அளவில் உபரி மாநிலமாக மாறும் என்று அறிவித்திருக்கிறார். தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் அதன் மின் உற்பத்தித் திறன் சுமார் 20,000 மெகா வாட்டுகளாக இருந்தாலும், அதில் சுமார் 7,400 மெகா வாட்டுகள் காற்றாலைகளிலிருந்து வருகின்றன.
எனவே, காற்றில்லாத நேரங்களில் நமக்குக் கிடைக்கும் மின்சாரம் கணிசமாகக் குறைந்துவிடுகிறது.
போன மாதம் மட்டும் தமிழகத்தில் மின் பற்றாக்குறை 2,500 மெகா வாட்டுகளாக இருந்ததாக ஒரு செய்தி சொல்கிறது. மின்சாரத்துக்கான தேவை, ஆண்டுக்கு 10 சதவீதமாவது அதிகரித்துவருகிறது. எனவே, தமிழகத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் நிச்சயம் இருக்கிறது. ஆனால் 4,000 மெகாவாட்டுகள் உற்பத்திசெய்யக்கூடிய செய்யூர் மின்உற்பத்தி நிலையம் போன்ற திட்டங்களுக்கு எதிர்ப்புகள் இருக்கின்றன. சமீபத்தில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் இருப்பதைத் திறமையாக இயக்கினாலே அதிக மின்சாரத்துக்குத் தேவையிருக்காது என்று கூறப்பட்டது. இது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பது தெரியவில்லை.
எது எப்படி இருந்தாலும், ராய்ச்சூர் - ஷோலாப்பூர் இணைப்பு ஒரு புதிய பாதையைத் திறந்துவிட்டிருக்கிறது. தமிழகத்தால் மின்சாரத்தை நியாயமான விலையில் இப்போது வாங்க முடியும்.
நம்மிடம் உபரி மின்சாரம் இருந்தால் விற்கவும் முடியும்.
என்ன தடுமாற்றங்கள் இருந்தாலும், நாம் முன்னோக்கியே பயணிக்கிறோம் என்பதை இந்தச் சாதனை காட்டுகிறது.
- பி.ஏ.கிருஷ்ணன்,
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------நிலக்கரி ஊழல்
உண்மைதான்
நிலக்கரிப் படுகைகள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஊழல் நடந்தது உண்மைதான் என்பதை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முதல் முறையாக ஒப்புக்கொண் டுள்ளது. ரூ.1.86 லட்சம் கோடி அளவிற்கு நாட்டின் அரிய வளமான நிலக்கரி சூறையாடப்பட்ட இந்த வரலாறு காணாத ஊழலை மறைப்பதற்கு கடுமையாக முயற்சித்து வந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, அடுத்தடுத்து ஆதாரங்கள் சிபிஐ வசம் சிக்கியுள்ள நிலையில் வேறு வழியின்றி, உச்சநீதிமன்றத்தில், நிலக்கரி படுகை ஒதுக்கப்பட்டதில் தவறுகள் நடந்ததை ஒப்புக்கொள்வதாக கூறியுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பரந்துவிரிந்து கிடக்கும் நிலக்கரி படுகைகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் விதிமுறைகள் மீறப்பட்டு, நாட்டின் கருவூலத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய ரூ.1.86 லட்சம் கோடிக்கும் அதிகமான வளங்கள் பல்வேறு தனியார் பெரும் நிறுவனங்களால் சூறையாடப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன் சிங் அரசு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சிக்கி வெளிவரத் துடித்துக்கொண்டிருந்த சமயத்தில், மேற்கண்ட நிலக்கரி ஊழலையும் தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரியின் அலுவலகம் (சிஏஜி) கண்டுபிடித்தது. நிலக்கரிச் சுரங்கங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் கொள்கையை, தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி படுகை ஒதுக்கீடு என்ற பெயரில் 11வது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் மன்மோகன் சிங் அரசு அமலாக்கியது. அப்போது 86 நிலக்கரிப் படுகைகள் தனியார் கம்பெனிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் விதிமுறைகள் மீறப்பட்டும், தளர்த்தப்பட்டும் மிகப்பெரும் ஊழல் நடந்தது. வளங்களைக் கொள்ளையடிக்க தனியார் நிறுவனங்களுக்குத் தாராளமாக வழி செய்யப்பட்டது.
நிலக்கரி ஊழலை சிஏஜி அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, அதை மன்மோகன் அரசு விடாப்பிடியாக மறுத்துவந்தது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டு செயலாற்றி வரும்நாட்டின் உயரிய தணிக்கை அமைப்பான சிஏஜியையும் மலினப்படுத்தும் முயற்சிகளையும் மேற்கொண்டது. இந்நிலையில்தான், நிலக்கரிச் சுரங்கங்களில் இப்படிப்பட்ட ஊழல் நடந்திருப்பதை சுட்டிக்காட்டி ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரின் கவனத்திற்கு தொடர்ந்து கொண்டு சென்றது தொடர்பாக ஏராளமான விபரங்கள் வெளியாகின. இதுதொடர்பான வழக்கை உச்சநீதிமன்றமே நேரடியாக கண்காணிப்பது என முடிவுசெய்யப்பட்டது.
இதன்பின்னரே மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் (சிபிஐ) நிலக்கரி ஊழல் தொடர் பாக விசாரணையைத் துவக்கியது. முறைகேடாக நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக 16 வழக்கு களை பதிவு செய்து, விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், 1993ம் ஆண்டிலிருந்தே பாஜக ஆட்சிக்காலத்தில் ஒதுக்கப்பட்ட நிலக்கரிப் படுகைகள் உட்பட அனைத் தையும் ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு களை உச்சநீதிமன்றம் விசாரித்து வரு கிறது. இந்த வழக்கில் வியாழனன்று நடைபெற்ற விசாரணையில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஜி.இ.வாஹன்வதி கூறியதாவது:-நாங்கள் (மத்திய அரசு) எப்போதும் உரிய வழியில்தான் நிலக்கரிப்படுகைகளை ஒதுக்கீடு செய்தோம்.
ஆனால் கடந்த 1991-92ல் மின் உற்பத்தி நிலை சற்று மாற்றமடைந்திருந்தது.
இந்நேரத்தில் மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கு தேவைகள் அதிகம் இருந்தது.
இதனால் ஒதுக்கீட்டு விதிகளை அரசு மாற்றியிருக்கலாம். இந்த ஒதுக்கீட்டில் இன்னும்சரியாக நடந்திருக்க முடியும். தேசிய நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்பட்டன. சில நேரங்களில் தவறாகவும் போயிருக்கலாம். நிகழ்வுகளில் தவறு நடந்திருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தனதுவாதத்தின் போது தெரிவித்தார்.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்தாக்கல் செய்த விபரங்களில், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் விருப்பத்தின்படியே நிலக்கரி படுகைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன என்றும், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிறுவனங்கள் இன்னும் நிலக்கரியை வெட்டியெடுக்கத் துவங்காததால் அந்த ஒதுக்கீடு என்பது இன்னும் முதல் நிலையிலேயே இருக்கிறது என்றும் உச்சநீதிமன்றத்தில் கூறியிருந்தார். ஆனால் தற்போது அதை முற்றிலும்மறுத்து, ஒதுக்கீட்டில் தவறு நடந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டிருக் கிறார்.
முன்னதாக நிலக்கரி ஊழல் விவகாரத்தில், தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரிபடுகை ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்கள் நிலக்கரி அமைச்சகத்திலிருந்து திடீரென காணாமல்போன சம்பவமும் நாட்டையே உலுக்கியது.
நாடாளுமன்றத்தில் பெரும் பிரச்சனை எழுந்தது. ஆனால் அப்போதும், நிலக்கரி ஒதுக்கீட்டில் தவறு நடக்கவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் பிடிவாதமாகக் கூறினார்.
இந்தப்பின்னணியில் முதல் முறையாக நிலக்கரி படுகை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருப்பதை மத்திய அரசு இப்போது நீதிமன்றத்திலேயே ஒப்புக்கொண்டிருக்கிறது
------------------------------------------------------------------------------------------------------------------------------திருப்பூர் குமரன்
இந்திய விடுதலைப் போராட்
ட தியாகி . இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். 1932-ம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து, கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தவர் திருப்பூர் குமரன் . இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் 1904 அக்டோபர் 4-ந்தேதி, நாச்சிமுத்து- கருப்பாயி தம்பதியினருக்கு முதல் மகனாகப் பிறந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக் கொண்டார். கைத்தறி நெசவுத் தொழிலை செய்து வந்த குமரன், 1923-ல் தனது 19-வது வயதில், 14 வயது ராமாயியை மணம் முடித்தார். கைத்தறி நெசவுத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், மாற்றுத் தொழில் தேடி திருப்பூர் சென்று, ஈங்கூர் கந்தசாமி கவுண்டர் நடத்திய மில்லில் எடைபோடும் பணியில் சேர்ந்தார். காந்தி கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டார்.
தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரன் தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில் திருப்பூர் குமரன் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு தற்காலிக நூல் நிலையம் உள்ளது. படிப்பகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. மேலும் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் வரைந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவரது நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், அக்டோபர் 2004-ல் சிறப்பு நினைவுத் தபால் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்டது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ரா. சு. மனோகர்
ஆர். எஸ். மனோகர் பழம்பெரும் நாடக, திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ராமசாமி சுப்ரமணிய மனோகர், 1925-ம் ஆண்டு ஜுன் 29-ம் திகதி தமிழ்நாடு, நாமக்கலில் சுப்ரமணிய ஐயர் மற்றும் ராசலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் லட்சுமி நாராயணன். இவர் தன்னுடைய பள்ளிப் பருவத்தில் மனோகரா நாடகத்தில் நடித்ததால், மனோகர் என்னும் பெயர் பெற்றார். சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவராவார்.
வண்ணக்கிளி, கைதி கண்ணாயிரம், வல்லவனுக்கு வல்லவன், வல்லவன் ஒருவன, இரு வல்லவர்கள், ஆயிரத்தில் ஒருவன், உலகம் சுற்றும் வாலிபன், பல்லாண்டு வாழ்க, அடிமைப் பெண், காவல்காரன், இதயக்கனி, அதிசய பெண் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
மனோகர் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி நடித்துள்ளார். அவற்றுள் இலங்கேசுவரன், சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், இந்திரசித், சுக்ராச்சாரியார், நரகாசுரன் மற்றும் திருநாவுக்கரசர் நாடகங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.
நடிகர் மனோகர் 2006-ம் ஆண்டு ஜனவரி 10-ந்தேதி மரணம் அடைந்தார்.
பிடல் காஸ்ட்ரோ