இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

வெள்ளி, 10 மே, 2019

காவி வேட்டி துண்டு.

மாதிரி ஓட்டுப்பதிவிற்கு பின், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் ஓட்டுப்பதிவு சரிபார்ப்பு கருவியில் இருந்த பதிவுகளை நீக்காமல், தேர்தலை அதிகாரிகள் நடத்தியதால், குளறுபடி ஏற்பட்டுள்ளது.

அந்த குளறுபடிகளை சமாளிக்க, 43 ஓட்டுச் சாவடிகளில், ஓட்டு சரிபார்ப்பு கருவியில், அச்சிட்டு விழுந்த, ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்க, தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.

தமிழகத்தில், 38 லோக்சபா தொகுதிகள், 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், ஏப்ரல், 18ல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை, வரும், 23ல் நடக்கவுள்ளது.
 சூலுார், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய, நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு, வரும், 19ல், இடைத்தேர்தல் நடக்கிறது.முறைகேடுகள் காரணமாக, தர்மபுரி, திருவள்ளூர், கடலுார் லோக்சபா தொகுதிகளில், 10 இடங்களில், மறு ஓட்டுப்பதிவு நடத்த பரிந்துரைத்துள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு கூறியிருந்தார். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் ஓட்டுப்பதிவு சரிபார்ப்பு கருவில் இருந்த, மாதிரி ஓட்டுகளை நீக்காமல், 13 மாவட்டங்களில் உள்ள, 46 ஓட்டுச் சாவடிகளில் தேர்தல் நடந்ததை, அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதனால், இந்த இடங்களையும் சேர்த்து, மறு ஓட்டுப்பதிவு நடத்தப்படலாம் என, தலைமை தேர்தல் அதிகாரி நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

இந்நிலையில், '13 இடங்களில், மறு ஓட்டுப்பதிவு நடத்தப்படும்' என, தேர்தல் ஆணையம், அன்று இரவே அறிவித்தது. இந்த பட்டியலில், ஆணையத்திற்கு முதலில் பரிந்துரைக்கப்பட்ட, 10 இடங்களுடன், மாதிரி ஓட்டுப்பதிவை நீக்காத, 46 ஓட்டுச்சாவடிகளில், தேனியில், இரண்டு; ஈரோட்டில், ஒன்று என, மூன்று ஓட்டுச்சாவடிகளும் இடம் பெற்றுள்ளன.
மீதமுள்ள, 43 இடங்களில், ஓட்டுப்பதிவு சரிபார்ப்பு கருவியில் அச்சிட்டு விழுந்த, ஒப்புகை சீட்டுகளை எண்ண, தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில், 13 இடங்களில், மறு ஓட்டுப்பதிவு நடத்த, தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. நான்கு சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலுடன்,
13 இடங்களில், மறு ஓட்டுப்பதிவு நடத்த, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


எந்தெந்த இடங்களில் மறு ஓட்டுப்பதிவு?

* திருவள்ளூர் - தனி லோக்சபா தொகுதியில், பூந்தமல்லி சட்டசபைக்கு உட்பட்ட, மேட்டுப்பாளையம் பஞ்சாயத்து யூனியன் துவக்கப் பள்ளியின், 195ம் எண் ஓட்டுச்சாவடி

* தர்மபுரி லோக்சபா தொகுதியில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபைக்கு உட்பட்ட, அய்யம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின், 181, 182ம் எண் ஓட்டுச்சாவடிகள். நத்தமேடு அரசு மேல்நிலைப் பள்ளியின், 192, 193, 194, 195ம் எண் ஓட்டுச்சாவடிகள். ஜாலிபுதுார் பஞ்சாயத்து யூனியன் துவக்கப் பள்ளியின், 196ம் எண் ஓட்டுச்சாவடி

* கடலுார் லோக்சபா தொகுதியில், பண்ருட்டி சட்டசபைக்கு உட்பட்ட, திருவதிகை நகராட்சி உயர்நிலைப் பள்ளியின், 210வது ஓட்டுச்சாவடி

* ஈரோடு லோக்சபா தொகுதியில், காங்கேயம் சட்டசபைக்கு உட்பட்ட, திருமங்கலம் பஞ்சாயத்து யூனியன் துவக்கப் பள்ளியின், 248ம் எண் ஓட்டுச்சாவடி

* தேனி லோக்சபா தொகுதியில், ஆண்டிப்பட்டி சட்டசபைக்கு உட்பட்ட, பாலசமுத்திரம், கம்மவார் சரஸ்வதி நடுநிலைப் பள்ளியின், 67ம் எண் ஓட்டுச்சாவடி. பெரியகுளம் தொகுதிக்கு உட்பட்ட, வடுகப்பட்டி சங்கர நாராயணா நடுநிலைப் பள்ளியின், 197ம் எண் ஓட்டுச்சாவடியில் மறு ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.


மறு ஓட்டுப் பதிவின் போது, வாக்காளர்களுக்கு, இடது கை நடுவிரலில் மை வைக்கப்படும். அது மட்டுமின்றி, மேலும், 43 இடங்களிலும், குளறுபடிகள் நடந்துள்ளது தெரிய வந்தது. இங்கு, தேர்தல் நடத்துவதில்லை என, தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. 
 
அதற்கு மாற்றாக, ஓட்டுப்பதிவு சரிபார்ப்பு கருவியில், அச்சிட்டு விழுந்த ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும். தமிழகத்தில் மட்டுமல்ல, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், மாதிரி ஓட்டுப்பதிவு குளறுபடிகள் நடந்துள்ளன.

ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், காலை, 6:00 முதல், 7:00 மணி வரை, மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டுள்ளது. ஈரோட்டை பொறுத்தவரை, 50 மாதிரி ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதை அழிக்காமல் ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டுள்ளது. 
 
இறுதியாக பார்த்த போது, 41 ஓட்டுகள் வித்தியாசம் வந்துள்ளது.
 இதை கழித்தாலும், ஒன்பது ஓட்டுகள் குளறுபடி ஏற்படும். எனவே தான், அங்கு மறு ஓட்டுப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி தொகுதிக்கு உட்பட்ட, ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதியில், ஓட்டுப்பதிவு சரிபார்ப்பு கருவியில், மாதிரி ஓட்டுகளை அழிக்கவில்லை. பெரியகுளத்தில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை மாற்றியுள்ளனர். எனவே, இங்கும், மறு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோவையில், 2,000த்துக்கும் மேற்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
 இதனால், அங்கிருந்து தேனிக்கும், ஈரோட்டிற்கும், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓட்டுப்பதிவு சரிபார்ப்பு கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணைய அனுமதி பெற்று தான், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை இடமாற்றம் செய்ய முடியும்.


கோவை மற்றும் தேனியில், அரசியல் கட்சிகளுக்கு, தகவல் தெரிவித்து விட்டு தான், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றப்பட்டதாக, கலெக்டர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தால், 2.75 லட்சம் தபால் ஓட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இதுவரை, 1.85 லட்சம் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளன.
 இன்னும், 10 நாட்கள் அவகாசம் உள்ளது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து மையங்களுக்கும், பலத்த பாதுகாப்பை, தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


வட சென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலுார், கடலுார், தஞ்சாவூர், துாத்துக்குடி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருவாரூர், தென்காசி மற்றும் திருநெல்வேலி லோக்சபா தொகுதிகளுக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளில், ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட உள்ளன. இந்த பட்டியலில், இடைத்தேர்தல் நடக்கும்,சில சட்டசபை தொகுதிகளும் உள்ளன. மாதிரி ஓட்டுப்பதிவுகளை நீக்காமல், ஓட்டுப்பதிவை நடத்தி, தேர்தல் அதிகாரிகள் குளறுபடி செய்து உள்ளனர்.
இந்த குளறுபடிகளை சமாளிக்க, ஒப்புகை சீட்டுகளை எண்ணும் முடிவை, தேர்தல் ஆணையம் எடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இது, அரசியல் கட்சிகள் மத்தியில் புது குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு பின், இப்பிரச்னையால், சிலர் நீதிமன்றங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

தேனித் தொகுதியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக 33 வாக்குச் சாவடிகள் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டால் கண்டறியப்பட்டாலும் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு பன்னிர்செல்வம் மகனுக்கு குறைந்த அளவில் வாக்குகள் கிடைத்த ,அதிமுகவினர் கள்ள வாக்குகள் பதிவு செய்ய முயன்று திமுகவினர்,அமமுகவினரால் அடித்து விரட்டப்பட்ட 10 தொகுதிகளில் மட்டும் மறு தேர்தல் என்பது ஐயத்தை கிளப்புகிறது.

பன்னிர்செல்வம்,அவரது மகனுடன் காவி வேட்டி துண்டுடன் காசி சென்று மோடி,அமித் ஷாவை சந்தித்து அளவளாவியப் பின்னர் தேனீ மாவட்டாட்சியருக்கு கூட முன்னறிவிப்பின்றி 50 வாக்குப்பதிவு எந்திரங்கள் திடீரென தேனீ வட்டாசியருக்கு அனுப்பி விட்டு எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்புக்குப் பின்னர் மாரு தேர்தல் என்று இரு தினங்களுக்கு பின்னர் தேர்தல் ஆணையர் அறிவிப்பது.மூன்று கண்டெய்னர் விவகாரத்தைப்போலவே அமைந்துள்ளது.
மாவட்ட ஆட்சியர்,வட்டாசியருக்கு தெரியாமலே இவை நடந்திருப்பது பாரதிய தேர்தல் ஆணையத்தை பாஜக துணை அமைப்புதான் என்பதை உறுதி செய்துள்ளது.

இவைகளைப்பார்க்கையில் மோடி,அதிமுக காட்சிகள் மக்களின் (தேர்தல் ஆணையத்தின்)அமோக ஆதரவுடன் பெரும்பான்மையை கைப்பற்றும் என்றே பயம் கொள்ளவைக்கிறது.


-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 தோப்பில் முகமது மீரான்.
 மறைவு.
பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான தோப்பில் முகமது மீரான்  உடல்நல குறைவால் இன்று காலமானார்.
தற்போது அவருக்கு 74 வயது.
தமிழ் மற்றும் மலையாள எழுத்தாளரான தோப்பில் முகமது மீரான் 1997 ஆம் ஆண்டில் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார்.கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தை சேர்ந்த தோப்பில் முகமது மீரான் நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியில் வசித்து வந்தார்.

இவர் பல்வேறு புதினங்கள், சிறுகதை தொகுப்புகள், மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ளார்.
 சாய்வு நாற்காலி என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
இந்நிலையில் முகமது மீரான் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை 1.20க்கு காலமானார்.

முகமது மீரான் உடல் நெல்லை வீரபாகுநகரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தோப்பில் முகமது மீரான் உடல் இன்று மாலை நெல்லை பேட்டையில் உள்ள பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்படுகிறது.

5 புதினங்கள், 6 சிறுகதைகள், சில மொழிபெயர்ப்பு நூல்களை முகமது மீரான் எழுதியுள்ளார்.

 இதுவரை தோப்பில் முகமது மீரான் வாங்கிய விருதுகள்
சாகித்திய அகாதமி விருது – சாய்வு நாற்காலி (1997)
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது
இலக்கியச் சிந்தனை விருது.
லில்லி தேவசிகாமணி விருது
தமிழக அரசு விருது
அமுதன் அடிகள் இலக்கிய விருது
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது.
இவர் எழுதிய அன்புக்கு முதுமை இல்லை, தங்கரசு, அனந்தசயனம் காலனி போன்ற சிறுகதை தொகுப்புகள் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவை ஆகும்.

 அதே போல் அஞ்சுவண்ணன் தெரு, கூனன் தோப்பு, ஒரு கடலோரக் கிராமத்தின் கதை போன்றவை தோப்பில் முகமது மீரான் படைப்பில் வெளிவந்த சிறந்த நூல்கள் ஆகும்.

மீனவ கிராமங்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வை அடிப்படையாக கொண்ட ஒரு கடலோரக் கிராமத்தின் கதை நூல் இன்றளவு பல இலக்கியவாதிகள்  போற்றக்கூடிய படைப்பாகும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
  நீரிழிவு கட்டுப்பாடு.
இன்று நம் சந்திக்கும்  மனிதர்களில் நீரிழிவு (சர்க்கரை)பிரச்னை இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
அவர்களுக்கான உணவுக் கட்டுப்பாடும் தீவிரமாக இருக்கும்.
 நமது பாரம்பரிய உணவுகளிலேயே சிறு, சிறு மாற்றங்கள் மூலம் நீரிழிவு நோய்க்குத்தக்கபடி மாற்றி அமைக்கலாம்.

நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது.அதற்கு கரணம்.நம் மருத்துவர் தந்த மாத்திரை,ஊசிகளைப்பயன்படுத்தி அதற்கு தக்க நமது உடலை கொண்டுபோய் விட்டதுதான்.அந்த மாத்திரைகள் நம்மை நிரந்தரமாக தனது கட்டுக்குள் கொண்டு வந்து விடும்.மாத்திரையின்றி உடல் வேலை செய்யா நிலை.

ஆனால் கட்டுக்குள் வைக்கலாம்.
நோயாளியின் வயது, உயரம், எடை, ஆண், பெண் உடலுழைப்பின் தன்மை ஆகியவற்றை கணக்கில் கொண்டே, அவரது உணவு முறையை தீர்மானிக்க வேண்டும்.

ஒருவரது உடல் எடைக்கேற்ப, 1 கிலோவுக்கு 1 கிராம் என்ற அளவில் தினமும் ஒருவருக்கு புரதம் தேவைப்படுகிறது. உடலில் ஏதேனும் நோய், குறைபாடு இருப்பின், இந்த அளவில் மாறுதல் தேவைப்படலாம். இப்போது உணவு முறையை பார்க்கலாம்….

இட்லி
வெறும் அரிசி, உளுந்து அரைத்து, இட்லி செய்வதற்கு மாற்றாக காஞ்சிபுரம் இட்லி, சிறுதானிய இட்லி செய்யலாம். இட்லி மாவுடன் விருப்பமான காய்கறிகளில் மசாலா சேர்த்துக் கலந்து இட்லி, தோசை, பணியாரம் செய்யலாம்.

சப்பாத்தி
சப்பாத்தி மாவுடன், வேக வைத்த பருப்பு, கடலை மாவு, சோயா மாவு சேர்த்து கூட விருப்ப மான காய்கறி துருவியது, மசாலாப்பொடிகள் சேர்த்துப்பிசைந்து சப்பாத்தி செய்யலாம்.
சப்பாத்தி மாவில் காய்கறிக்குப்பதிலாக கீரை வகைகள், முட்டை, கைமா என பலவிதமான பொருட்களைச் சேர்க்கலாம்.
காய்கறி மசாலாவைத்தனியே தயாரித்து திரட்டிய சப்பாத்தி மீது வைத்து மடித்தும் சப்பாத்தி செய்யலாம்.

சுண்டல்
சிப்ஸ் வடை போன்ற எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களுக்குப் பதிலாக சுண்டல், ஆவியில் வேக வைத்த கொழுக்கட்டை, டோக்ளா போன்றவற்றை உண்ணலாம். அவல், நெல்பொரி போன்றவற்றுடன் துருவிய காய்கறி சேர்த்து chat ஆக சாப்பிடலாம். வெள்ளரி, கேரட் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

கார்போஹைட்ரேட் உணவு
கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடும்போது அவற்றோடு சேர்த்து அதிக காய்கறி உணவுகளைச் சாப்பிடலாம். சமைக்கும்போது அதிக காய்கறி மற்றும் பருப்பு வகைகளைச் சேர்க்கலாம்.

காய்கனிகள் கலவை.
காய்கனிகள் கலவை(சாலட்) எடுத்துக் கொள்ளுங்கள் சாலட் ஒரு மிகச்சிறந்த உணவாகும்.
அதிலும் காய்கறிகள் மற்றும் கீரைகள், பழங்கள் அடங்கிய சாலட் உங்களுக்கு நிறைய நன்மைகளை அளிக்கும். இதில் கேரட், வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம், கீரை மற்றும் பூண்டு சேர்த்து சாப்பிடுங்கள்.

மதிய உணவிற்கு முன் அல்லது இரவு உணவில் முன் எடுத்து கொள்ளுங்கள்.
அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் வினிகர் சேர்க்க மறந்து விடாதீர்கள்.
வினிகர் சேர்ப்பதால் உணவிலிருந்து உறிஞ்சப்படும் சர்க்கரை அளவு குறையும் இதனால் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை சேராமல் நீரழிவு வருவது தடுக்கப்படும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------