ஞாயிறு, 26 மே, 2019

தமிழகம் சந்திக்க இருப்பவை

பாஜக மீண்டும் ஆட்சியமைத்து, அதன் பினாமி எடப்பாடி ஆட்சி தொடருவதால், 
தமிழகம்சந்திக்க இருப்பவை 

* 7 தமிழர் விடுதலை இப்போதைக்கு சாத்தியமில்லை
* நீட் தேர்விற்கு விலக்கு கிடையாது
* பொறியியல் படிப்பிற்கும் நீட் தேர்வு கொண்டுவரப்படும்
* ஹைட்ரோகார்பன் திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்படும்
* பெட்ரோலிய மண்டலம் திட்டம் செயல்படுத்தப்படும்
* டெல்டா விவசாய நிலத்தில் கெயில் குழாய் பதிக்கப்படும்
* சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டம் செயல்படுத்தப்படும்
* 8 வழி சாலை திட்டத்திற்கு விவசாய நிலங்கள் பிடுங்கப்படும்


* அதற்கான நிவாரணம் முன்பு அறிவித்தது போல் இருக்காது
* ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும்
* ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் பெறும்
* நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்படும்
* பாதுகாப்பு காரணம் காட்டி முல்லை பெரியாறு நீர்மட்டம் குறைக்கப்படும்
* கூடங்குளத்தில் மேலும் சில புதிய அணுஉலைகள் நிறுவப்படும்
* அணுக்கழிவுகள் தமிழகத்திலேயே புதைக்கப்படும்
* கர்நாடகா மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டப்படும்
* காவிரியில் இனி தண்ணீர் வரப்போவதில்லை

* தமிழகத்தில் இராணுவ தளவாட உற்பத்தி மையங்கள் உருவாக்கப்படும்
* அதனையொட்டி புதிய இராணுவ படைத்தளம் உருவாக்கப்படும்
* இப்பகுதிகள் பாரத்மாலா திட்டத்தின் கீழ் 6/8 வழி சாலைகளால் இணைக்கப்படும்
* சாகர்மாலா திட்டத்தின் கீழ் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் பெரும்
* CRZ திட்டத்தின் கீழ் கடற்கரையில் கார்ப்பரேட்கள் கட்டுப்படுத்தக்கூடிய புதிய சுற்றுலா தளங்கள் உருவாக்கப்படும்

* மீனவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு மீன்பிடி தொழில் கார்ப்பரேட் வசம் வழங்கப்படும்
* மீன்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்ய கார்ப்பரேட்களுக்கு அனுமதி அளிக்கப்படும்
* புதிய துறைமுக திட்டங்கள் உருவாக்கப்பட்டு அதானிக்கு வழங்கப்படும்
* கன்னியாகுமரி துறைமுக திட்டம் செயல்படுத்தப்படும்
* தனுஷ்கோடி இராணுவ/ஆன்மீக பகுதியாக மாற்றப்படும்
* மேலும் பல ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கப்படும்

* கோவை போன்று சூயஸ் நிறுவனம் தண்ணீர் விநியோகிப்பது பல நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்
* பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தமிழக ஆறுகளில் தண்ணீர் எடுக்க அனுமதி அளிக்கப்படும்
* ஆற்று மணல் கொள்ளை சட்டப்பூர்வமாக நடக்கும்
* மாவட்டம் தோறும் நவோதயா பள்ளிகள் திறக்கப்படும்
* அதில் இந்தி கட்டாயப் பாடமாக இருக்கும்
* அதிகளவில் CBSC பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்படும்
* தமிழக அரசின் துவக்கப் பள்ளிகள் மூடப்படும்

* 5, 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறை கொண்டு வரப்படும்
* 11, 12 வகுப்புகளுக்கு ஆங்கிலம் அல்லது தமிழை தேர்ந்தெடுக்கும் முறை கொண்டுவரப்படும்
* மருத்துவ கட்டமைப்பை இந்தியா கொள்ளையடிக்கும் அல்லது நாசப்படுத்தும்
* பல்கலைக்கழகங்கள் இந்திய அரசு கட்டுப்பாட்டில் செல்லும்
* பல்கலைக்கழக துணைவேந்தர்களாக வடஇந்திய ஆர்எஸ்எஸ் ஆட்கள் மட்டுமே நியமிக்கப்படுவர்
* வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் புதிய கல்வி நிறுவனங்களை துவங்க அனுமதி அளிக்கப்படும்

* உயர் கல்விக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யும் கட்டுப்பாடு இந்திய அரசிற்கே இருக்கும்
* பொருளாதார அடிப்படையிலான 10% இடஒதுக்கீடு அனைத்து துறைகளிலும் அமல்படுத்தப்படும்
* தமிழக அரசு வேலை வாய்ப்புகள் வட இந்தியர்களுக்கு வழங்கப்படும்
* தமிழகத்தில் ஒன்றிய அரசு வேலைகள் 100% வட இந்தியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்
* 69% இடஒதுக்கீடு சரிவர பின்பற்றப்படாது
* கீழடி வரலாறு மூடி மறைக்கப்படும்
* புதிய தொல்லாய்வுக்கு அனுமதி கிடையாது

* தமிழன்னை சிலை என்ற பெயரில் ஆரியமாதா சிலை அமைக்கப்படும்
* கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்படும்
* அங்கு விவேகானந்தர் அல்லது பாரத மாத சிலை வைக்கப்படலாம்
* கொங்கு பகுதி விவசாய நிலங்கள் ஊடாக கெயில் குழாய் பதிக்கப்படும்
* விவசாய நிலங்கள் ஊடாக உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கப்படும்
* கிழக்கு தொடர்ச்சி மலைகள் வெட்டப்பட்டு கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படும்
* அதானியின் சூரிய மின்சார திட்டம் விரிவாக்கப்படும்
* புதிய எண்ணெய் கிணறுகள் தோன்றும்

*தமிழக அரசின் அறநிலையத்துறை பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டில் செல்லும்
* ஆர்எஸ்எஸ், இந்துத்துவ அமைப்புகள், ABVP கிளை பரப்பும்
* அம்மன் கோவில்களில் மஞ்சள் நீக்கப்பட்டு காவி நிறம் ஆக்கிரமிக்கும்
* தெரு, ஊர் பெயர் மாற்றம் என்ற பெயரில் சமஸ்கிருதம் திணிக்கப்படும்
* அண்டை மாநிலங்களில் கூலி வேலைக்கு செல்பவர்கள் கொல்லப்படுவது அதிகரிக்கும்
* பொய் செய்திகள் அதிகளவில் பரப்பப்படும்
* மதுபான கடைகள் அதிகரிக்கும்

* வடஇந்தியர் குடியேற்றம் அதிகரிக்கும்
* கொலை, கொள்ளை குற்ற செயல்கள் அதிகரிக்கும்
* சிறுபான்மையினர் மீதான குற்ற செயல்கள் அதிகரிக்கும்
* பசு பாதுகாப்பு பெயரில் இஸ்லாமியர்கள், தலித்துகள் அடித்து கொல்லப்படுவர்
* காவல்துறையின் முக்கிய பொறுப்புகள் அனைத்தும் வடஇந்திய அதிகாரிகளால் நிரப்பப்படும்
* தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்களும் வடஇந்திய அதிகாரிகளாக இருப்பர்
* ஒன்றிய அரசின் திட்டங்களை மட்டுமே தமிழக அரசு செயல்படுத்தும்

அப்புறம் இவைகளுக்கு எதிராக போராடினால் துப்பாக்கி சூடு நடத்தப்படும்.

(பட்டியலில் நிறைய விடுபட்டிருக்கலாம். குறிப்பிட்டால், இணைத்துக்கொள்ளப்படும்)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

பூசணி விதை


இனிப்புகள் மற்றும் பிற சமையல்களில் பூசணி விதை, வெள்ளரி விதை போன்றவற்றை சேர்ப்பது வழக்கமாகிவிட்டது. 
 இந்த விதைகள் உணவில் ருசியை அதிகரிப்பதுடன், ஆரோக்கியத்தையும் அள்ளித் தருகிறது.  பூசணி விதையில் புரதம், வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கின்றன. 


 இருதய நோய்கள், புற்றுநோய் மற்றும் நாட்பட்ட நோய்கள் அனைத்திற்கும் சிறந்த தீர்வாக இருக்கிறது பூசணி விதை.

  தொடர்ச்சியாக பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
  தினசரி பூசணி விதையை எப்படி உணவில் சேர்த்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.

பூசணி சாஸ்:

பூசணி விதைகளை மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்து அதனை சாஸாக பயன்படுத்தலாம்.
பெஸ்டோ சாஸ் மற்றும் டார்டர் சாஸுடன் ருசியாக இருக்கும்.
 இந்த சாஸை தோசை, இட்லி மற்றும் சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாக பயன்படுத்தி கொள்ளலாம்.


சாலட்:

பூசணி விதைகளை லேசாக வறுத்து அதனை சாலட்டுடன் சேர்த்து சாப்பிடலாம்.
 இப்படி சாப்பிடும்போது அதன் ஆரோக்கியம் இன்னும் அதிகரிக்கும்.

நீங்கள்  மென்பானங்கள்   தயாரிக்கும்போது, அத்துடன் ஒரு கைப்பிடி பூசணி விதைகளை சேர்த்து அரைத்து குடுக்கலாம் அல்லது மேலே தூவி குடிக்கலாம்.


டெசர்ட்ஸ்:

பாதாம் மற்றும் முந்திரியை தவிர்த்து, வறுத்த பூசணி விதையை உங்கள் டெசர்ட்ஸுடன் சாப்பிடலாம்.  உங்கள் டெசர்ட்டிற்கு மேலும் கொஞ்சம் ருசியை சேர்க்கும்.ஸ்நாக்ஸ்:

பூசணி விதையையே ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.  அதில் சிறிதளவு வெங்காயம், தக்காளி, மிளகு மற்றும் உப்பு சேர்த்து சாப்பிடலாம்.  நீங்கள் விருப்பப்பட்டால் எலுமிச்சை சாறும் சேர்த்து கொள்ளலாம்.
ரயில்வே இணையமைச்சர்?நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மோடி இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமர் பொறுப்பேற்க உள்ளார்.
அவரது அமைச்சரவையில் யார் யாரெல்லாம் இடம்பெறப்போகிறார்கள் என்பதற்கான மிக நீண்ட விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணியிலிருந்து வெற்றிபெற்றுள்ள ஒரே நபர் தேனி தொகுதியின் ரவீந்திரநாத் குமார்தான் என்பதால் அவரை எப்படியாவது மத்திய அமைச்சர் பதவியில் அமர்த்திவிட வேண்டும் என்று தீவிர முயற்சிகளை முன்னெடுத்துவருகிறார் அவரது தந்தையும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம்.

குறிப்பாக பொன்.ராதாகிருஷ்ணன் வகித்துவந்த கப்பல் போக்குவரத்துத் துறையை கேட்பதாகவும் ஒரு தகவல் வெளியானது.

இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரதமராக மோடியை தேர்ந்தெடுக்க டெல்லியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக சார்பாக பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, ரவீந்திரநாத் குமார் மூவரும் கலந்துகொண்டனர்.

அதன்பிறகு கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம்கொடுப்பது தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சரவையில் இடம் உறுதியாகிவிட்டதாக கூறி தொகுதி முழுக்க குஷியாக வலம் வருகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
 அதுபற்றி அதிமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, “தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வென்ற ஒரே நபர் என்பதாலும், கூட்டணி தர்மத்தின் அடிப்படையிலும் மத்திய ரயில்வே இணையமைச்சர் பதவி ரவீந்திரநாத்துக்கு வழங்கப்படவுள்ளது.

 இதற்காக ரவீந்திரநாத்தின் படிப்பு, தொழில் உள்ளிட்ட பயோ-டேட்டாவை அவரது குடும்பத்தினரிடமிருந்து பாஜக தரப்பு கேட்டிருக்கிறது. இந்த மகிழ்ச்சியை தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள் ரவீந்திரநாத் குடும்பத்தினர்” என்கிறார்கள்.

இதுதொடர்பாக பாஜக தரப்பில் விசாரித்தபோது, இதுவரை யாருக்கும் எந்த இலாகாவும் ஒதுக்கப்படவில்லை. மத்திய அமைச்சரவையில் இடம்பெறுபவர்கள் குறித்து ஆலோசனை மட்டுமே நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனர்.

பன்னிர்செல்வம் தனது மகனை மத்திய அமைச்சராக்க முயற்சிகளில் இருக்க வைத்திலிங்கம் உள்ளிட்ட சீனியர்கள் பலர் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும்போது முதல்முறையாக எம்.பி.யாகியுள்ள அனுபவம் இல்லா  ரவீந்திரநாத்துக்கு எப்படி அமைச்சர் பதவியை கொடுப்பது என்ற எதிர்ப்பு  அதிமுகவுக்குள் எழுந்துள்ளது.

 ஆனால் ரவீந்திரநாத் தேர்ந்தெடுக்கபப்ட்டதையே தவறு என்கிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
தேனியில் ஓ.பி.எஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
 தற்போது, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அதற்கான ஆதாரங்களை சேகரித்த வருவதாகவும் இன்னும் சில நாட்களில் வழக்கு தொடரப்  போவதாகவும் தெரிவித்துள்ளார் ரவீந்திரநாத்தை எதிர்த்துப் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

 “தேனி தொகுதியில் பணம் மழையாகப் பொழியவில்லை; சுனாமியாகக் கொட்டியது. ஓ.பி.எஸ் மகன் வெற்றிபெற மோடி உதவியுள்ளார். ஓ.பன்னீர்செல்வமும் அவரது மகனும் வாரணாசிக்குச் சென்று பிரதமர் மோடியைச் சந்தித்ததால் தான் ரவீந்திரநாத் வெற்றி பெற்றுள்ளார்.
தேனி மக்களவைத் தொகுதியில் நிறைய தில்லுமுல்லு நடந்துள்ளது.
அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன.

தேர்தல் ஆணையமும் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டது.
 வாக்கு எண்ணிக்கையின்போது பல மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சீல் இல்லை. கேட்டால், அரக்கு கீழே விழுந்துவிட்டதாகக் கூறினர்.
என் தோல்வி உருவாக்கப்பட்ட தோல்வி; அதிகாரம் மற்றும் பண பலத்தால்தான் நான் தோற்கடிக்கப்பட்டேன். எனக்கு வாக்களித்த தேனி தொகுதி மக்களுக்கும் உழைத்த கூட்டணிக் கட்சியினருக்கும் நன்றிகள்.


தேனி தொகுதியின் விவிபாட் வாக்குகளை முழுமையாக எண்ணவேண்டும். ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவேன்” என்கிறார்  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.


 வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதியோடு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் மைத்ரேயன், ரத்தினவேல், அர்ஜுனன், லக்ஷ்மணன், திமுக எம்.பி கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் முடிவதைத் தொடர்ந்து, 6 இடங்களுக்கும் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை.
 தற்போதைய சூழலில் ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களோடு சேர்த்து 123 பேரின் ஆதரவு உள்ளது.
எனவே அக்கட்சியால் 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும்.

 திமுகவின் பலம் நடந்து முடிந்த இடைத் தேர்தலில் 13 இடங்களில் வெற்றிபெற்றதையடுத்து சட்டமன்றத்தில் அதிகரித்துள்ளது.
மேலும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவோடு திமுக சார்பாக 3 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். ஆகவே திமுக, அதிமுக சார்பில் தலா 3 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.


அதிமுகவைப் பொறுத்தவரை கூட்டணி உடன்படிக்கையின்போதே பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கப்படும் என்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

கூட்டணியின் தோல்வியை காரணம் காட்டி பாமகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி மறுக்கப்பட்டாலும் கூட, அமித் ஷாவிடம் தனக்குள்ள நெருக்கத்தை பயன்படுத்தி அதிமுகவிடம் எம்.பி பதவியை பெற திட்டமிட்டுள்ளார் அன்புமணி.

 மற்ற இரண்டு இடங்களில் ஒன்றை பாஜக கேட்டுப்பெறும் என்கிறார்கள்.
 தமிழகத்தில் சார்பின் மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியில் தோல்வியைத் தழுவியதையடுத்து, மத்திய அமைச்சரவையில் தமிழகத்துக்கான பிரதிநிதித்துவம் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது.
 தமிழகத்தின் சார்பாக பாஜக வில் இருந்து ஒருவரை மத்திய அமைச்சராக தேர்ந்தெடுக்க பாஜக விரும்புவதால், கண்டிப்பாக ஒரு மாநிலங்களவை  பதவியை கேட்கும் .
 ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்றால், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஒதுக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் நிபந்தனை விதிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் பாஜகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படும்.
கடைசியாக உள்ள ஒரு இடத்திற்கு அதிமுகவினர் மத்தியில் பலத்த போட்டி நிலவுகிறது. அதிமுக-பாமக கூட்டணி உருவாவதில் தான் முக்கிய பங்கு வகித்ததாக கூறி முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மாநிலங்களவை உறுப்பினர் பதவியைக் கேட்டு வருகிறார்.
 
இதுபோலவே அதிமுக சார்பாக சென்ற மக்களவையில் துணை அவைத்தலைவராக இருந்த தம்பிதுரைமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு காய் நகர்த்திவருகிறார்.
பணச்  சுனாமி

ரவீந்திரநாத் எம்.பி.யாகியுள்ளதால் தேசிய அரசியலில் பன்னீர்செல்வம் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிடுவார் என்று கருதும் எடப்பாடி தனக்கு நம்பிக்கையான ஒருவர் டெல்லியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

 அதுபோலவே சமீப காலமாக எடப்பாடியுடன் நெருங்கி வருகிறார் தம்பிதுரை.
 தேர்தலுக்கு முன்பும் பின்பும் எடப்பாடி டெல்லி செல்லும்போதெல்லாம் அவருடன் தம்பிதுரையை சென்றார். இதனால் அந்த ஒரு உறுப்பினர் பதவிக்கு தம்பிதுரையை எடப்பாடி பழனிசாமி பரிசீலிக்கலாம் .

அதிமுக செய்தித் தொடர்பாளருமான வைகை செல்வன், தற்போது எடப்பாடியின் நம்பிக்கைக்கு உரியவராக இருக்கிறார்.

 மக்களவைத் தேர்தலின்போது தமிழகம் முழுக்க எடப்பாடியின் பேச்சையும்,பயணத் திட்டத்தையும் கொடுத்தது வைகைச் செல்வன்தான். இவர்கள் மூவரில் ஒருவருக்கு டெல்லிக்கு போகும் வாய்ப்பு கிடைக்கலாம்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------
தேர்தலுக்காக சவுகிதார்கள் புதைத்த உண்மைகள்!
இந்தியாவை எதிரி நாடுகளிலிருந்து பாதுகாக்க மோடியை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள் எனப் பிரச்சாரம் செய்து பெரும் வெற்றியை பா.ஜ.க. பெற்றுவிட்ட நிலையில்தான், அந்த அதிர்ச்சித் தகவலை அறிந்திருக்கிறார்கள் பதானி கிராமத்தில் உள்ள அந்த இரண்டு பெண்களும். 

அவர்கள், சார்ஜெண்ட் விக்ராந்த் ஷெராவத்தின் தாய் கந்த தேவியும், மனைவி சுமனும் ஆவர்.

என்ன நடந்தது என்பதை புரிந்து கொண்டபடி, படுக்கையில் இருக்கிறார் விக்ராந்த்தின் அப்பா ஸ்ரீகிருஷ்ணா.
மோடியின் வீரதீர யோசனையின் பேரில்-மேகம் சூழ்ந்த நாளில் எதிரியின் ரேடாரை ஏமாற்றிவிட்டு, பால்கோட்டில் ‘அதிரடி தாக்குதல்’ நடத்தப்பட்டது.

அதில் இறந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் எத்தனை பேர் என்ற விவரத்தையும் எந்த ரேடாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தத் தாக்குதல் நடந்த மறுநாள், இந்தியா-பாகிஸ்தான் விமானப்படைகள் மாறி மாறி வானில் பறந்து பதற்றத்தை உண்டாக்கிக் கொண்டிருந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பட்காம் பகுதியில் இந்திய விமானப்படையின் எம்.ஐ-17 ஹெலிகாப்டரில் பறந்து பலியான 6 பேரில் ஒருவர்தான் சார்ஜெண்ட் விக்ராந்த் ஷெராவத்.

தொழில்நுட்பக் கோளாறால் ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதாக விக்ராந்த் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டு, அவரது உடலின் மிச்சமீதங்கள் உரிய மரியாதையுடன் ஒப்படைக்கப்பட்டன.

தேர்தலுக்கு ஆயத்தமான பிப்ரவரி மாதம் முதல், தேர்தல் முடிவுகள் வெளியான மே கடைசிவாரம் வரை, விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து குறித்த எந்தத் தகவலும் வெளியாகாத நிலையில், தற்போது வெளியாகியுள்ள முதல் கட்ட விசாரணையில்தான், இந்திய விமானப்படையின் தரைத்தள பாதுகாப்பு சாதனங்கள் மூலம் சொந்த ஹெலிகாப்டரையே சுட்டு வீழ்த்தியதால் (Friendly fire), அதிலிருந்த வீரர்கள் 6 பேரும், பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர் என்ற உண்மை வெளிப்பட்டிருக்கிறது.

“என் மகன் இறந்த விவகாரத்தில் எங்களை ஏமாற்றியிருக்கிறார்கள். எந்த சூழ்நிலையில் இறந்தான் என்பதை தெரிந்துகொள்ளும் உரிமை எங்களுக்கு இருக்கிறது” என்கிற விக்ராந்தின் தந்தை, “எங்களால் இந்த அரசியலைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
ஆனால், தேர்தல் நேரம் என்பதால்தான் உண்மைகளை எங்களிடமிருந்து மறைத்திருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது.
 எப்படி புலவாமா தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டதை தேர்தல் லாபத்தைக் கணக்கிட்டு அரசியல் செய்தார்களோ, அதுபோலவே, தேர்தல் நேரத்தில் அரசாங்கத்துக்கு நெருக்கடியை உண்டாக்கிவிடக்கூடாது என்பதற்காகவே சொந்த நாட்டு ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதை மறைத்திருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது” என்கிறார்.

கணவனை இழந்து தவிக்கும் சுமன், “ஏற்கனவே இது பற்றி இந்தி பத்திரிகையில் வந்த செய்தியால் அதிர்ந்து போயிருந்தேன். இப்போது விசாரணைத் தகவல் மூலம் உறுதியாகியிருக்கிறது” என்கிறார் வேதனையுடன்.

விக்ராந்தின் அம்மாவோ, “விமானப்படையில் அவனுடன் வேலைபார்த்த பக்கத்து கிராமத்து நண்பர்கள் ஏற்கனவே இந்த உண்மையைச் சொன்னார்கள். ஆனால், அரசியல் சூழல்களால் இது பற்றி வாய் திறக்க வேண்டாம் என எச்சரிக்கை செய்தார்கள்.
 இப்போது உண்மை வெளிவர ஆரம்பித்திருக்கிறது. என் மகன் உள்ளிட்டோர் கொல்லப்பட்டதற்கு காரணமான அதிகாரிகள் அத்தனை பேரும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்” என்கிறார்.

தேர்தல் லாபத்திற்காக இன்னும் எத்தனை பலிகள் நடந்து, உண்மைகள் புதைக்கப்பட்டிருக்கிறதோ!
------------------------------------------------------------------------------------------------------------------------------------