விடுதலைப்போர்.முதல் பலி தூத்துக்குடியில்.
2023 பா.ஜ.க வின் ராசிபலன்
அண்மையில் டிசம்பர் மாதம் நடைபெற்ற பாஜக பாராளுமன்ற கூட்டத்தில், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
* இதன் ஒரு பகுதியாக தற்போதைய மத்திய அமைச்சரவையில் உள்ள சில முக்கிய அமைச்சர்களை, அமைச்சரவையிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு ஏற்ற மாநிலங்களில் கட்சிப் பணிகளில் ஈடுபடுத்த அனுப்புவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
* செயல்பாடில்லாத பொம்மை அமைச்சர்களை நீக்கவும், பட்டியலின, பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையிலும் மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த அமைச்சரவை மாற்றமும், கட்சி பணிகளைத் தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் வருகிற பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் மேற்கொள்ளப்படலாம் என டெல்லி பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கைகள் கட்சி ரீதியாக பாஜக-வுக்கு பலன் அளித்தாலும், மக்கள் செல்வாக்கை திரட்டுவதில் அது எந்த அளவுக்குப் பலன் அளிக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஏனெனில், " பாஜக-வின் தேர்தல் பிரசாரம் பெரும்பாலும் மதவாத மற்றும் தேசியவாத உணர்வுகளைத் தூண்டி ஓட்டுகளைப் பெறும் மலிவான தந்திரமாகவே உள்ளது.
வளர்ச்சிப் பணிகள், திட்டங்கள், வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி போன்றவற்றை முன்வைத்து செய்யும் பிரசாரமாக இல்லை" என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளிலும் உண்மை இல்லாமல் இல்லை.
இதற்கு உதாரணமாக கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி நளின் குமார் கட்டீல், நேற்று கட்சித் தொண்டர்களிடம் பேசுகையில், பொதுப் பிரச்னையில் கவனம் செலுத்தவேண்டாம் என்றும், லவ் ஜிஹாத் பிரச்னையில் கவனம் செலுத்துங்கள் என்றும் கூறியது சர்சையைக் கிளப்பியுள்ளது.
இத்தகைய சூழலில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்றவை சாதகமாக இருப்பதாகவும், பணவீக்கம் குறைந்துவிடும் என்றும் பிரதமர் மோடி, போன்றோர் வழக்கம்போலவே வாய்சவுடாலாகப் பேசிவருகின்றனர்.
ஆனால்2023-ம் ஆண்டுக்கான தொடக்கம் அப்படி நம்பிக்கை அளிப்பதாக இல்லை என்று மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், இடதுசாரி கட்சித்தலைவர்கள் ,பொருளாதார ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்.
ஏனெனில் கடந்த 2008 ஆம் ஆண்டில் பொருளாதார மந்தநிலையின் தாக்கம், அடுத்து வந்த 2009-ம் ஆண்டில் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
அதேபோன்று 2020-ம் ஆண்டில் கொரோனாவால் ஏற்பட்ட தொழில் முடக்கம், வேலைவாய்ப்பின்மை போன்றவை 2021-ம் ஆண்டில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் 2022 -ல் ரஷ்யா - உக்ரைன் போரால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலக அளவில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தி, பொருளாதார சரிவுக்கு வித்திட்டுள்ளது.
இன்னொருபுறம் அமெரிக்க ஃபெடரல் வங்கி தொடர்ந்து கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருவதால்,
* டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்து வருகிறது.
கூடவே அன்னிய முதலீடுகளும் இந்திய சந்தைகளிலிருந்து வெளியேறி வருகின்றன.
* பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு ( The Organization for Economic Co-operation and Development - OECD) 2022-க்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 6.6 சதவீதத்திலிருந்து 5.7 சதவீதமாக குறைத்துள்ளது. ,
இத்தகைய சூழ்நிலையில்,
* இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2022-ம் ஆண்டு செப்டம்பர் காலாண்டில் 36.4 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது நாட்டின் ஜிடிபி அளவில் 4.4% ஆகும்.
* அடுத்ததாக நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம், கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு 2022 டிசம்பரில் 8.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ( Centre for Monitoring Indian Economy -CMIE) தரவுகள் தெரிவிக்கின்றன.
* அதேபோன்று இந்திய பங்குச் சந்தையும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2022 டிசம்பரில் மிகப் பெரிய சரிவைச் சந்தித்துள்ளது.
2022 தொடக்கத்தில் இந்திய பங்குச் சந்தையின் போக்கு நன்றாக காணப்பட்டபோதிலும், ஆண்டின் இறுதி மிக மோசமான நிலைக்கு சென்றுவிட்டது.
இத்தகைய சூழ்நிலைகளில், கட்சி மற்றும் அமைச்சரவை மட்டத்தில் செய்யப்படும் மாற்றங்கள் மட்டுமே, 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு கைகொடுக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவந்துவிடும்.
----------------------------------------------------------------
இந்தியாவின் முதல் விடுதலை வீரர்கள் அழகுமுத்து சகோதரர்கள்:
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு முன்னரே இந்தியாவில் முதல் படுகொலை தமிழகத்தில் குறிப்பாக தூத்துக்குடியில் நடந்துள்ளது.
1757ஆம் ஆண்டு பெத்தநாயக்கனூர் கோட்டையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிடுவதற்காக தங்கியிருந்த 766 வீரர்களையும் இரவோடு இரவாக தாக்குதல் நடத்தி படுகொலை செய்தது.
பிறகு மன்னன் அழகுமுத்து கோன் மற்றும் 6 தளபதிகளையும் பீரங்கியால் மார்பு பிளக்க சுட்டுக் கொன்று எஞ்சிய 247 போர்வீரர்களையும் நடுக்காட்டூர் என்னுமிடத்தில் படுகொலை செய்தது ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி.
தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தை ஆட்சி செய்த ஜமீன்தார் குடும்பத்தில் யாதவர் மரபில் ஜனவரி 23 ம்நாள் 1710 ஆம் ஆண்டு பிறந்த மாமன்னர் அழகுமுத்துக்கோனார் 1725 முதல் 1750 வரை ஆட்சி செய்தார்.
இவருக்கும் பாக்கியத்தாய் என்ற இராணி அழகுமுத்தம்மாள் ஆகிய இணையருக்கு பிறந்த அழகுமுத்து சகோதரர்கள் எனப்படும் இவர்கள் மூத்த சகோதரர் வீர அழகுமுத்துக்கோன் எனவும் இளைய சகோதரர் சின்ன அழகுமுத்து கோனார் எனவும் அழைக்கப்பட்டனர்.
கட்டாலங்குலத்தில் யாதவர் மரபில் 1728 ஜீலை11 ஆம் நாள் வீர அழகுமுத்துக்கோனும் 1729 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் நாள் திருநெல்வேலி சீமையின் சிங்கம் என்று அழைக்கப்பட்ட சின்ன அழகுமுத்து கோனும் பிறந்தனர்.
1750 ஆம் ஆண்டில் ராமநாதபுரம் சேதுபதிக்கு ஆதரவாக போரிட்ட மாமன்னர் அழகுமுத்துக்கோன், ஜூலை 09ம் நாள் அனுமந்தகுடி போரில் வீர மரணம் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரது மூத்த மகனான வீர அழகுமுத்துக்கோன் கட்டாலங்குளம் மன்னராக முடி சூடினார்.இவரது தம்பி சின்ன அழகுமுத்து கோன் இவரது அரசவையின் நிருவாகப் பொறுப்பை ஏற்று நடத்தினார்.
தங்கள் நாட்டில் ஆங்கிலேயர்கள் வணிகம் செய்வதை விரும்பாத சின்னழகுமுத்துக்கோனுக்கு ஆங்கிலேயர்கள் மீது அதிக வெறுப்புணர்வு இருந்தது.
எட்டயபுரம் மன்னரிடம் நட்பு கொண்டிருந்ததால் ஜெகவீரராம எட்டப்பர் வேண்டுகோளுக்கு இணங்க அழகுமுத்து சகோதரர்கள், எட்டையபுரம் பாளையத்திற்கு ஆதரவாக தலைமை தாங்கி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டனர்.
போது சின்ன அழகுமுத்து கோனார் சுடப்பட்டு பெருமாள் கோவில் முன்பு 1755ஆம் ஆண்டு ஏப்ரல் 07 ம் நாள் மரணம் அடைந்தார்.இதனைக் கண்ட பெரிய அழகுமுத்துவும் அவரது வீரர்களும் கடுமையாக ஆங்கிலேயர்களை தாக்கினர்.
தொடர்ந்து நடந்த போரின் தாக்கத்தால் ஆங்கிலேய படை போரில் பின்வாங்கியது.இதனையடுத்து 1757 ல் கான்சாகிப் படை, தன்னுடன் பீரங்கி படையையும் சேர்த்துக்கொண்டு பெத்தநாயக்கனூர் மீது போர் அறிவிப்பு செய்தது.
வீர அழகுமுத்து கோன், மன்னரையும், மக்களையும் பாதுகாப்பாக இருக்க வைத்து, பல இடங்களில் அலைந்து தனது படையில் மொத்தம் 766 வீரர்களை சேர்த்தார்.
மன்னர் படையில் சேர்ந்த மக்களை அழகுமுத்து கோன், பெத்தநாயக்கனுார் கோட்டையில் இரவு தங்கிமறுநாள் மாவேலியோடை அழைத்து செல்ல நினைத்து இரவு துாங்கினர்.ஆனால் தந்திரமாக செயல்பட்ட யூசுப் கான் அன்று இரவே எட்டையபுரத்தை முற்றுகையிட்டார்.
தனது பலமிக்க பெரும் படையை பெத்தநாயக்கனுார்கோட்டையை தாக்கி பல பேரை கொன்று குவித்தார். இந்த தாக்குதலால் நிலை குலையாத அழகுமுத்து கோன், துணிந்து கான்சாகிப்பை எதிர்த்து போரிட்டார். இதை சேர்வைக்காரர் சண்டை கும்மி என்ற பாடல் சொல்கிறது.
இந்நிகழ்வை எடுத்துரைக்கிறது.1757ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி நடந்த இந்நிகழ்வே இந்திய விடுதலை வரலாற்றில் நடந்த முதல் மிகப்பெரிய படுகொலையாகும்
இப்போர் முடிந்த பிறகு கட்டாலங்குளம் அரசவையும் அழகுமுத்துக்கோன் கட்டிய கோட்டையும் ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்டது.தற்பொழுது அவர் வாழ்ந்த வீடு மட்டுமே எஞ்சியுள்ளது.
1757 ல் அழகுமுத்து கோன் நடத்திய இந்த விடுதலை போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற முதல் விடுதலைப் போராகும்.
பீரங்கியின் முன்பு இரும்பு சங்கிலியால் கட்டபட்ட நிலையில் மன்னிப்பு கேட்டு வரி செலுத்தினால் உயிர்பிச்சை இடுவதாக கூறிய யூசுப்கானிடம் கடைசிவரை மண்டியிடாமல் பீரங்கிமுன் சிரித்தபடி உயிரைவிட்டார் பெரிய அழகுமுத்து என்ற வீர அழகுமுத்துக்கோன்.கி.பி 1757 நவம்பர் 18 ல் நடந்த இந்த நிகழ்வே இந்தியாவின் முதல் பீரங்கி படுகொலை ஆகும்.
பீரங்கி முன் நின்று சாகும் தருவாயிலும் தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறிய நெஞ்சுரம் மிக்க மாவீரர் வீரஅழகுமுத்து கோன்.பொழுது போனபிறகு போர்செய்வது தமிழர் மரபு அல்ல அதை தெரிந்துகொண்டு நடு இரவில் தாக்கி கைது செய்தார் யூசுப்கான் எனும் மருதநாயகம்.
தமிழ்நாடுஅரசு மரியாதை:
2005 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பாக முதல் விடுதலை வீரர் வீரஅழகுமுத்து கோன் நினைவாக தபால் தலை வெளியிட்டது.
தமிழக அரசு சார்பில் ஜூலை 11 ம் நாள் வருடம் தோறும் குருபூஜை விழாவாக அனுசரிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் வீர அழகுமுத்துக்கோனுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் வீர அழகுமுத்துக்கோன் சிலை அமைக்கப்பட்டுள்ளது..