கமல்ஹாசன் சொன்னதும்,
சொல்லாமல் விட்டதும்...!
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வரப்போகிறார் என்னும் ஊகம் கொஞ்சம் கொஞ்சமாய் உறுதியான செய்தியாய் வெளிப்படத் தொடங்கி இருக்கிறது.
அவரும் மெல்ல மெல்ல ஆழம் பார்ப்பவரைப் போல்காலை விடத்தொடங்கியிருக்கிறார். வேறு யாராவது பேசினால் அந்தக் கருத்து சாதாரண செய்தியைப் போலக் காற்றில் கரைந்துவிடும். பெரிய முக்கியத்துவம் கிடைத்துவிடாது. பேசுபவர் கமல்ஹாசன் என்பதால் பரபரப்பும் பதற்றமும் அதிகமாகிவிடுகிறது.
ஒற்றை மனிதர் பேசும்வார்த்தை வெகு மக்களிடம் எளிதாகச் சென்று சேர்ந்து விடுகிறது.இதனால் அரசியல் களத்தில் ஏற்கெனவே ஆலவட்டம்போட்டுக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் உணர்ச்சிவசப்படத் தொடங்குகின்றனர்.
தாங்கள் கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பம் பிரபலமான நடிகர் ஒருவரால் மணல் வீடு மாதிரி கரைந்து போகிறதே என்று அவர்கள்கவலை கொள்கின்றனர். ‘அடுத்து அவர் என்ன செய்யப் போகிறார்’? என்னும் ஆதங்கம் எல்லாக் கட்சிகளுக்கும் இருக்கத்தான் செய்கிறது.
ஆனால் குறிப்பாக இந்துத்துவத்தை வலியுறுத்தும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுக் கிளை முந்திக்கொண்டு வந்து மூக்கை நீட்டுகிறது.
இவர்களே தங்கள் அவசரக் குடுக்கைத் தனத்தால் கமல்ஹாசனுக்கு ஓர்அதீதவிளம்பரத்தை அள்ளிக் கொடுக்கின்றனர்.
அவர்களது கவலைகள் இரண்டு.
ஒன்று, தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் இடைவெளியை எப்படியாவது இட்டு நிரப்பிவிட வேண்டும் என்பது.
இரண்டாவது, தமிழ்மொழி - இனம் - சமூக நீதி என்று ஊறி வளர்ந்து விட்ட இந்த மண்ணில் இதற்கு முற்றும் ஒத்துவராத இந்துத்துவத் தத்துவத்தை பயிர் செய்ய நினைக்கும் வேலையைப் பாழ்படுத்துகிறாரே கமல்ஹாசன் என்பது.
திருவனந்தபுரம் சென்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்தார் கமல்ஹாசன். அந்தச்சந்திப்பே பாரதிய ஜனதா கட்சிக்கு எரிச்சல் ஊட்டக்கூடியது.
போதாக்குறைக்கு அவரைப் பார்த்துவிட்டு வெளியில் வந்தவுடன் கமல்ஹாசன் பத்திரிகையாளர்களிடம் "என் நிறம் காவி அல்ல!" என்று போட்டுடைத்தார். தான் எந்த நிறம் என்பதை சொல்வதை விட்டு எந்த நிறம் இல்லை என்று சொல்வதில் அவர் அக்கறையாய் இருந்தார்.
இதிலிருந்து ‘தான் யாருக்கு எதிராகக் களத்தில் நிற்கப் போகிறேன்’ என்பதை பிரகடனப்படுத்திவிட்டார்.
பந்தயத்திடலுக்கு வந்துவிட்ட பரம எதிரியாகக் கமலை, பாரதிய ஜனதாகட்சி பார்க்கத் தொடங்கியது.அவர் இயற்கையாகவே பகுத்தறிவுவாதி. சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர்.
`சாத்திரச் சந்தடிகளை, கோத்திரச்சண்டைகளை’க் கட்டோடு வெறுப்பவர். திரைப்பட நடிகர்களில் நிறைய நூல் வாசிக்கும் பழக்கம் உடையவர். இவையாவும் அவரை அவரது அறுபதாவது வயதில் ‘பொது வாழ்க்கைக்குப் போ’ என்று பிடரி பிடித்துத் தள்ளி இருக்கின்றன.
கத்திரிக்காய்க்குக் கால் முளைத்தால் கடைத் தெருவுக்கு வந்துதானே தீர வேண்டும்."இந்து தீவிரவாதம் இல்லையென்று இனியும் சொல்லமுடியாது!" என்பது போன்ற சில கருத்துக்களை ஒரு கட்டுரையில் அண்மையில் அவர் பதிவு செய்திருக்கிறார்.
ஏற்கெனவே இது போலவும் இதைவிடத் தீவிரமாகவும் பல நேரங்களில் அவர் பேசியதுண்டு. அப்போதெல்லாம் வராத சீற்றம் இப்போது பாரதிய ஜனதா கட்சிக்கு வந்திருக்கிறது.
காரணம், அவர் அரசியல் ஆடுகளத்தில் காய் உருட்டத் தொடங்கிவிட்டார்.
அவர் ஏதோ இந்து மதத்தைத் தாக்கிப் பேசிவிட்டார் என்பதைப் போல சித்தரிக்கத் தொடங்கி இருக்கின்றனர்.
இந்துமதத்தைச் சார்ந்த பெரும்பான்மை மக்களைக் கோபப்படுத்தி கமலை நோக்கி ஏவி விட நினைக்கும் தந்திரம் இதில் அடங்கியிருக்கிறது. மதம் ஒரு வாழ்வியல்நெறி என்பது போய் அதை ஒரு ஓட்டு வங்கியாக மாற்ற நினைக்கும் வகுப்புவாதிகளைப் பற்றித்தான் கமல்ஹாசன் கவலைப்படுகிறார். வன்முறை நிரந்தர வெற்றியை தராது என்று எச்சரிக்கிறார்.
‘எங்கள் வீட்டிலும் இந்துக்கள்இருக்கிறார்கள்’ என்கிறார்.இந்துமதம் எல்லாக் கருத்துக்களையும் உள்வாங்கிக்கொள்ளும் வல்லமை வாய்ந்தது.
பேதம் பாராமல் `யாவரும்சோதரர்’ என்னும் நல்லிணக்கத்தைப் பேணக்கூடியது.
ஆதிசங்கரர் - ஸ்ரீ இராமானுஜர் - இராமகிருஷ்ண பரமஹம்சர் - சுவாமி விவேகானந்தர் - தாயுமான சுவாமிகள் - பட்டினத்தார் - வள்ளலார் - என்று வாழையடி வாழையாய் வந்தஅருளாளர்கள் ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்’ வாடினார்கள்.
‘ஆன்மநேய ஒருமைப்பாட்டையே’ போற்றிப்பாடினார்கள். ‘மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்’ என்று மக்களுக்கு அறிவு புகட்டினார்கள்.
கமல்ஹாசன் வீரபாண்டியன் |
அத்தனை விசாலமான சிந்தனைப் பரப்பைக் கொண்டமதத்தில் இந்துத்துவா முழக்கம் என்று தொடங்கியதோ அன்றே சமூகத்தில் பதற்றமும், பரபரப்பும் பற்றிக் கொள்ளத் தொடங்கிவிட்டன.
சகிப்புத் தன்மைக்குப் பெயர்போன இந்த தேசம் சந்தேகத்தாலும், அச்சத்தாலும் கவலைகொண்டு கலவர பூமியாக மாறத் தொடங்கியது.
கிராமப்புறங்களில் மக்கள் அனைவரும் மதங்களை மறந்து அண்ணன், தம்பிகளாகவே வாழ்ந்து வருகின்றனர். அந்த நல்லிணக்கத்தைக் குலைக்கிற நடவடிக்கைகளை தீவிரவாதிகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
கமல்ஹாசன் ‘இந்து தீவிரவாதம்’ என்று கூறிய அடுத்த நிமிடமே “கமல்ஹாசனைச் சுட்டுக் கொல்லுங்கள்’! என்றுகூறினார் மீரட்டில் தலைவர் ஒருவர்.
‘ஆமாம். கமல்ஹாசன் சொல்வது சரிதான். நாங்கள் தீவிரவாதிகள்தான்’! என்று பகிரங்கமாக வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டனர் இவர்கள்.
கேரள முதல்வர் பினராயி விஜயனின் தலைக்கும்இதேபோல முன்னர் விலை வைக்கப்பட்டது.கல்புர்கி - கோவிந்த்பன்சாரே - நரேந்திர தபோல்கர் - கௌரி லங்கேஷ் - வரிசையில் கமல்ஹாசனையும் வைத்துவிடலாம் என்று கங்கணம்கட்டிவிட்டார்கள் போலிருக்கிறது.
கருத்தைச் சொல்லுகிறவர்களின் கழுத்தை நெரிக்கும்ஹிட்லர், முசோலினியின் குணம் வெகுமக்களால் விரட்டப்படும். ஊரின் பொதுமன்றத்தில் கட்டித் தொங்கவிடப்பட்ட முசோலினியின் முடிவை வகுப்புவாதிகள் திரும்பிப் பார்த்துக் கொள்வது நல்லது.கமல்ஹாசன் சொன்னது ஒரு சில வரிகள்தாம்.
அதற்கேஇவ்வளவு ஆர்ப்பாட்டத்தை இவர்கள் ஆடித் தீர்க்கின்றனர்.
இன்னும் அவர் சொல்லாமல்விட்டவை சரித்திரத்தில்இரத்த சாட்சியங்களாக நிற்கும் எத்தனையோ சம்பவங்கள்உண்டு. ‘வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ வாழ்க! வாழ்க!’என்று பாரதி பாடிய உத்தமர் காந்தியைச் சுட்டுக் கொன்றகோட்ஸே என்ன சாந்த சொரூபியா?
எந்தக் கொள்கை காந்தியைக் கொன்றதோ அதே கொள்கையைத்தான் கமல்ஹாசன் குறிப்பிடுகிறார். அவர் விரிவுரை நிகழ்த்தவில்லை. சந்கேதமாகப் பேசியேபழக்கப்பட்டவர். ரத யாத்திரை நடத்தி வீதி நெடுகப் பிணங்களை விழ வைத்தவர் யார் என்று வரலாறு சொல்லும்.
1992இல் பாபர் மசூதியை இடித்துத் தகர்த்தவன்முறைக் கூட்டம் தீவிரவாதிகளின் கூட்டமா? அல்லதுஆன்மீகவாதிகளின் அரங்கேற்றமா?
குஜராத் கலவரத்தில்முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரையே வீட்டுக்குள் புகுந்து வெட்டினார்களே அது தீவிரவாதமா?
அல்லது தேசியவாதமா? ஆயிரக்கணக்கான பிணங்கள்கைகளோடும், கால்களோடும் குற்றுயிரும் கலையுயிருமாக குஜராத் மாநில வீதிகளில் துடித்துக் கிடந்ததே.
அதுதீவிரவாதம் இல்லாமல் வேறென்ன? இந்தக் காட்சியை வந்து பார்த்த அன்றைய பாரதப் பிரதமர் திரு. வாஜ்பாய் ‘இனி நான் எந்த முகத்தோடு வெளிநாடுகளுக்குப் போவேன்’ என்று பதறினார்.
‘இதுவா மாநில அரசாங்கம் கடைப்பிடிக்கும் ராஜ தர்மம்?’ என்று கேட்டு வெட்கப்பட்டார்.‘
அங்கிங்கு எனாதபடி எங்கும் நிறைந்தவன் ஆண்டவன் என்றால் இல்லை... இல்லை... அவன் அயோத்தியில் மட்டும்தான் இருக்கிறான்’ என்று பேசுவது பேதைமை அல்லவா?
மதங்களின் மீது குற்றமில்லை; மனிதர்களே குற்றவாளிகள். அடித்துக் கொண்டு சாகச் சொல்லி எந்தமார்க்கமும் சொல்லிக் கொடுக்கவில்லை.
மக்கள் சமூகத்தை பதற்றத்திலேயே வைத்திருப்பது, அதன் வழியாகத் தங்கள் ஆட்சி, அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ளலாம் என்று நினைப்பது நிரந்தரமாக நடக்காது.
வள்ளலார்பாடியது போல் “கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக!
அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க..!’’ என்று பொதுமக்கள்முடிவெடுத்து விடுவார்கள்.
“சத்தியமேவ ஜெயதே!”
- வீரபாண்டியன்
கட்டுரையாளர்: கவிஞர் -
அரசியல் விமர்சகர் - ஊடகவியலாளர்
thiru.veerapandian@gmail.com
========================================================================================
"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் . "எண்ணியவர் உறுதியாக தான் எண்ணியபடியே உறுதியுடன் செயல் ஆற்றினால்
அவர் எண்ணியதை எண்ணியவாறே அடைந்தே தீருவார்.
இன்று,
நவம்பர்-26.
- உலக உடல் பருமன் எதிர்ப்பு தினம்
- நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1842)
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது(1949)
- நேபாளத்தில் மன்னர் கயனேந்திரா, அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார்(2001)
- மும்பை பயங்கரவாத தாக்குதல் தினம் (2008)
ஊழலின் எதிரி பாஜக,
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்கரி. இவர் முன்னாள் பாஜக தலைவரும் கூட.
இவரது தனி செயலாளர் வைபவ் டாங்கே. இவருக்கு நெருக்கமானவர் மோதிராம் கிசான் ராவ் பாட்டீஸ். நிதின் கட்கரியின் தனி செயலாளர் வைபவ் டாங்கே மீது காங்கிரஸ் கட்சி ஊழல் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது.
வைபவ் டாங்கேவும், மோதிராமும் இணைந்து கடந்த 2014ம் ஆண்டு நிறுவனம் ஒன்றை ரூ. 1 லட்சம் முதலீட்டில் தொடங்கினர். அந்த நிறுவனம் தற்போது வரை மத்திய அரசிடம் ரூ.1.5 கோடி வரை நிதி உதவி பெற்றுள்ளது.
இந்த தொகை முழுவதும் நிதின் கட்கரியின் பொறுப்பில் உள்ள அமைச்சகங்கள் வாயிலாக தரப்பட்டுள்ளது.
அதே போல் மத்திய அமைச்சகங்களுடன் தொடர்புடைய பன்னாட்டு நிறுவனங்கள், தனி நபர்களிடம் இருந்தும் இவர்கள் நிதி பெற்றுள்ளனர். மேலும் இவர்களின் நிறுவனத்திற்கு மத்திய அமைச்சர்கள் சுரேஷ் பிரபு, பியூஷ் கோயல் ஆகியோரின் ஆதரவும் உள்ளது.
எனவே இவை அனைத்தும் நிதின் கட்கரிக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. அரசு விதிகளின் படி, மத்திய அரசு ஊழியர் இது போன்ற முறையில் நிதி திரட்ட கூடாது.
எனவே அவர் விதிமுறைகளை மீறி நிதி திரட்டியுள்ளார்.
அதே போல் இந்த நிறுவனத்தில் உறுப்பினராக உள்ள ரவி போரத்கர் என்பவர் நிதின் கட்கரி குடும்பத்தினரின் நிறுவனமான புர்தி நிறுவனத்தில் இயக்குனராக உள்ளார்.
எனவே இவை அனைத்தும் நிதின் கட்கரிக்கு நன்றாக தெரியும்.
எனவே உடனடியாக வைபவ் பதவி விலக வேண்டும்,என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
சொன்னதும் செய்ததும்.