வாங்கிக் கட்டிய வானதி
பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் தெற்கு ரயில்வேயின் கீழ் கோவையை தலைமையிடமாகக் கொண்டு தனி ரயில்வே கோட்டத்தை உருவாக்க வேண்டும் அல்லது பாலக்காடு கோட்டத்திலிருந்து கோவையை பிரித்து சேலம் கோட்டத்தில் இணைக்க வேண்டும் எனக் கோரி ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் மனு அளித்து கோரிக்கை விடுத்திருந்தார்.
பாலக்காடு கோட்டத்தில் இருந்து கோவை பிரிக்கப்பட்டு கடந்த 2006ல் சேலம் கோட்டத்தில் இணைக்கப்பட்ட நிலையில், வானதி சீனிவாசன் இப்படியொரு கோரிக்கையை முன்வைத்திருப்பது கோவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து கோவை தொகுதி எம்.பி. பி.ஆர்.நடராஜன் “தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பாலக்காடு கோட்டத்தில் இருந்து கோயமுத்தூர் தனியாக பிரிக்கப்பட்டு சேலம் கோட்டத்தில் கடந்த 2006 ம் ஆண்டே இணைக்கப்பட்டுவிட்டது. (16 ஆண்டுகளுக்கு முன்பு) இதற்காக பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாகவே, அப்போது ரயில்வே அமைச்சராக இருந்த லாலுபிரசாத் யாதவ் சேலம் கோட்டத்தை உருவாக்கினார்” என பதில் அளித்திருந்தார்.
ஆனால் உண்மையை ஏற்றுகொள்ள மறுத்து வானதி மீண்டும் பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கோவை தொகுதி எம்.பி. பி.ஆர்.நடராஜன் பதற்றத்தில் பேசுகிறார் என்றும் எம்.பி-யாக இருந்தபோது என்ன பணி செய்தார் என்றும் கேள்வி எழுப்பி விமர்சித்திருந்தார். இந்நிலையில் வானதிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எம்.பி. பி.ஆர்.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக எம்.பி. பி.ஆர்.நடராஜன் வெளியிட்ட அறிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினராக நான் என்ன செய்தேன் – பட்டியலை படித்துக்கொள்ளுங்கள் வானதி சீனிவாசன் அவர்களே..
பொதுமக்களின் கோரிக்கைகளுக்காக குரல் கொடுப்பதிலும், அந்த கோரிக்கைகளை வென்றெடுக்க களத்தில் இறங்கி போராடுவதிலும் முன் நிற்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்). இதனை அரசியல் அறிந்தோர் மட்டுமல்ல சாதராண பொதுமக்களும் அறிவார்கள். ஆனால் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பா.ஜ.க தேசிய மகளிர் அணி நிர்வாகியுமான வானதி சீனிவாசன் அறிந்திருக்கவில்லை என்பது ஆச்சரியமானது.
திருமதி வானதி அவர்களுக்கு, கோவை பகுதி சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டிலேயே இணைக்கப்பட்டு விட்டதை சுட்டிக்காட்டியதை அறிந்து கொள்ளாமல் அவர் ஒன்றிய ரயில்வே அமைச்சரிடம் கோவை பகுதியை சேலம் கோட்டத்துடன் இணைக்குமாறு கோரிக்கை வைத்த்தை எடுத்து சொன்னோம்.
தவறை சுட்டிக்காட்டி விட்டோம் என்கிற ஆற்றாமையில், இதை சரி செய்து கொள்ள முயற்சிக்காமல் எண்ணை சிறுமைப்படுத்த முயற்சித்துள்ளார். திருமதி வானதி அரசியல் செய்கிறார் என்பது அப்பட்டமாகவே தெரிந்தாலும், மக்கள் பிரதிநிதி என்கிற முறையில் அவரது விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் கடமை நமக்கு இருக்கிறது.
2019ல் எம்பியானது முதல் கோவைக்கு எத்தனை ரயில்களை கொண்டு வந்தீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவருக்கு கடந்த 2009 முதல் 2014 வரையிலும் நான் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியதை நினைவு கூர்கிறேன். அப்போது கோவையில் ரயில்வே போராட்டக்குழு எனது தலைமையில் அமைக்கப்பட்டது. இதுகுறித்து அந்த ரயில்வே போராட்டக்குழுவில் உள்ள உறுப்பினர்களிடமோ, கோவையின் நலன் விரும்பிகளை கேட்டாலே சொல்லியிருப்பார். போகட்டும்.
கோவை ரயில்வே போராட்டக்குழுவின் தொடர் போராட்டம், மக்கள் பிரதிநிதி என்ற முறையில் எனது தொடர் முயற்சியினால் கோவை மாநகருக்கு 8 புதிய ரயில்கள் கிடைத்துள்ளன. திருப்பதி, ராமேஸ்வரம், ராஜஸ்தான் பிக்கானியர் எக்ஸ்பிரஸ், செம்மொழி, நாகர்கோவில், கும்பகோனம் போன்ற ஊர்களுக்கு இப்போதும் அது செல்கிறது. அதேபோல் கோவை ரயில்நிலையம் வராமல் போத்தனூர் வழியாக கேரளாவிற்கு சென்ற 13 ரயில்களை கோவை ரயில்நிலையம் வந்து செல்ல வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைவைத்து போராடி வந்தோம். பல கட்ட போராட்டங்கள் தொடர் அழுத்தங்களுக்கு பிறகு 13ல் 9 ரயில்கள் கோவை வழியாக திருப்பிவிடப்பட்டது.
சேலம் கோட்டத்தின் 45 சதவீதம் வருவாயை ஈட்டித்தரும் கோவை ரயில்நிலையத்திற்கு ஆதர்ஷ் அந்தஸ்த்தும் பெற்றுத்தந்துள்ளோம்.
கோவை ரயில் நிலையத்தில பயணிகளுக்கு எக்ஸ்லேட்டர் வசதி, குடிநீர் வசதி, நடை பாதைகள் மேம்பாடு என அடிப்படை வசதி மேம்படுத்துவதில் மக்கள் பிரதிநிதயான எனது முயற்சிகளை கோவை அறியும்.
திருமதி வானதிக்கு தெரியவில்லை போலும், மேலும், வடகோவை ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டர் கட்டிடம், கோவை மற்றும் புறநர்களில் 11 ரயில் மேம்பாலங்கள் மற்றும் சுரங்கபாதைகள் அமைத்தது என கோவையில் ரயில்வே கோரிக்கைகளுக்காக மக்கள் பிரதிநிதி என்கிற முறையில் பெரும் பங்காற்றியுள்ளேன்.
கொரோனாவை காரணம் காட்டி ஓடிக்கொண்டிருந்த அத்தனை ரயில்களையும் நிறுத்திவிட்டது ஒன்றிய பா.ஜ.க அரசு. தனது 7 ஆண்டு கால பா.ஜ.க ஆட்சியில் கோவை பகுதிக்கு ஒரு புதிய ரயிலைக்கூட விடாத பா.ஜ.க, எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளையும் பார்த்து எத்தனை ரயில்களை கொண்டு வந்தீர் என்று கேட்பது அரசியல் சாமர்த்தியம்தானே.
தற்போது நாடாளுமன்றத்தில் பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உங்கள் பா.ஜ.க கட்சி எப்போது ஆட்சியில் ஏறியதோ அப்போதே ரயில்வே பட்ஜெட் என்று ஒன்று இருந்ததை காலி செய்துவிட்டீர்கள் என்பதை அறிவீர்களா வானதி அவர்களே. இதுபோன்ற திசை திருப்பல் நடவடிக்கைகளால் பா.ஜ.க.வின் மக்கள் விரோதக்கொள்கைளை மறைக்க முடியாது. இதில் பிரதமர் மோடி கோவையின் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றிவிடுவார் என்று நாம் பதட்டப்படுவதாக வானதி கூறுவது வேடிக்கையானது.
திருமதி வானதிக்கு நாம் சொல்வது உங்களது பா.ஜ.க ஆட்சியில் அரசு சொத்துக்களை எல்லாம் விற்று சூறையாடி வருகிறதே தவிர எந்தவொன்றையும் உருவாக்கவில்லை. உருவாக்கப்போவதில்லை. திருமதி வானதியால்கூட கோவைக்கு இதுவரை பிரதமர் மோடி அரசாங்கம் செய்த ஒரு நல்ல விசயத்தையும் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை என்பதே.
போத்தனூர் – பொள்ளாச்சி அகல ரயில்பாதை பணிகள் கூட கடந்த 2009 – 2010ல் துவங்கப்பட்டது. பா.ஜ.க அரசு ரயில்வேயில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பயணச்சலுகைகளை பறித்து விட்டது. இத்தனையும் பறித்துவிட்டு எதிர்கேள்வி கேட்கும் பா.ஜ.க.விற்கு என்ன அருகதை இருக்கிறது. இப்போதும் கோவையின் தொழில் அமைப்புகள் மற்றும் 180 மக்கள் அமைப்புகளுடன் இணைந்து , கோவையை தலைமையிடமாக கொண்டு தனி ரயில்வே கோட்டம் கோரி வருகிறோம். திருமதி வானதி ஊரில்தான் இருக்கிறாரா
இந்த சந்தர்ப்பத்தை பயண்படுத்தி திருமதி வானதிக்கு நாம் சொல்ல விரும்புவது, கோவை அரசு மருத்துவமனைக்கு உயிர்காக்கும் மருத்துவ கருவில், நவீன கருவிகள் என தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பெறப்பட்டுள்ளது. குடிநீர், சுகாதராம் உள்ளிட்ட அரசு மருத்துவமனை கட்டமைப்பு மேம்பாட்டிலும் பல்வேறு பணிகளை செய்துள்ளேன்.
இவை தவிர கோவை நாடாளுமன்ற தொகுதிக்குள் பல கிராமங்களில் அங்கன்வாடி மையங்கள், தண்ணீர் தொட்டிகள், சமூதாய கூடங்கள், பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், நூலகங்கள் என நேரடியாக இருந்து கட்டப்பட்டுள்ளன. கோவை நகருக்குள் நடந்ததே தெரியாதவர். புறநகருக்கெல்லாம் போவாரா என்பதே கேள்வி.
இத்தகைய தொகுதி மேம்பாட்டு நிதியைக்கூட உங்களது பா.ஜ.க அரசு இரண்டு வருடம் நிறுத்திவிட்டது என்பதை அறிவீர்களா. இதனால் எத்தனை மக்களுக்கு நேரிடையாக சென்று சேரவேண்டிய நலத்திட்டங்கள் முடங்கியுள்ளது என்பதை அறிவீரா வானதி அவர்களே..
அடுத்து 2019ல் நான் நாடாளுமன்ற உறுப்பினரான பின்னர், கோவை தொழில்துறையின் ஜாப் ஆர்டர்களுக்கு ஜிஎஸ்டி வரியை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி பேசினேன். பேசி வருகிறேன். கடந்த பா.ஜ.க ஆட்சியின்போதே கோவை வெட்கிரைண்டர்களுக்கு போடப்பட்ட 18 சதவீத ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என தொடர்ந்து அழுத்தம் கொடுத்தும், இங்குள்ள தொழில்துறையினர் தொடர்ந்து போராடியுமே 12 சதவீதமாக மாற்ற அழுத்தம் தந்தோம்.
சப்பாத்தி மாவு அரைக்கும் இயந்திரத்திற்கு ஜிஎஸ்டிவரியை குறைத்துவிட்டு இட்லிமாவு அரைக்கும் இயந்திரத்திற்கு வரியை உயர்த்தி பாரபட்சம் காட்டுவதை அப்போதே அம்பலப்படுத்தினோம். அன்றைய தேதிகளில் வந்த பத்திரிகைகளை படித்தால் தெரிந்து கொள்ளலாம்.
கோவை மாநகரம், புறநகரம் உள்ளிட்டு கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு மக்கள் பிரதிநிதியாக நான் ஆற்றிய பணிகள் ஏராளம், ஆனால் வானதிக்கு பதில் சொல்வதற்காக மட்டும் லெட்டர் ஹெட் பயண்படுத்தினேன் என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமானது. உங்களின் லெட்டர்ஹெட்டை வீணடிக்க வேண்டாம் என்கிற அறிவுரையைகூட உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே எனது கவலை.
மேலும் கோவை மட்டுமன்றி மேற்கு மண்டலம் முழுவதும் பாதிக்கும் கெயில் குழாய் பதிப்பிற்கு எதிராகவும், விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை நான் முன்னெடுத்தேன் என்பதை அனைவரும் அறிவார்கள். கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட நகரங்களின் தொழில்வளர்ச்சி, மக்கள் வாழ்வாதர கோரிக்கைகளிலும்கூட தொடர்ச்சியாக குரல் எழுப்பிவருகிறேன்.
நிறைவாக நாம் வானதியின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புவது, கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதிக கேள்விகள் எழுப்பியதில் 10 பேரில் 7 ஆவது இடத்தில் உள்ளேன். எனது நாடாளுமன்ற வருகை பதிவில் 93 சதவீதம் என்பதை அவர் அறிந்து கொள்ளவேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சியை குறைக்கலாம். மற்றபடி மக்கள் நலனில் உண்மையான அக்கறை வானதிக்கு இருந்திருந்தால், சேலம் கோட்டத்தில் கோவை இருப்பதை அறிந்திருப்பார்.
மீண்டும் பதில் எழுதும்போது எனது அறிக்கையை மேம்போக்காக படித்திருந்தாலே பொள்ளாச்சி, கிணத்துக்கிடவு ரயில் நிலையங்களை சேலம் கோட்டத்தில் இணைக்க போராடி வருவதை புரிந்திருப்பார். மேலும்மேலும் தவறிழைப்பது அவரது பதற்றத்தைத்தான் காட்டுகிறதே தவிர மக்கள் மீதான அக்கறையை அல்ல..
இத்துடன் எனது பணிகள் குறித்து பட்டியலிட்டுள்ளேன். இதுபோன்ற பட்டியலை வெளியிடும் அளவிற்கு நீங்களும் இந்த தெற்கு தொகுதி மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பணி
• பாராளுமன்ற குழுத் தலைவர் கூட்டங்களில் கலந்து கொண்டது - 3
• நாடாளுமன்ற அலுவல் குழு கூட்டங்களில் கலந்து கொண்டது - 5
• நிலைக் குழு கூட்டங்களில் கலந்து கொண்டது - 20
• எதிக்ஸ் கமிட்டி கூட்டங்களில் கலந்து கொண்டது - 3
• கலந்துகொண்ட விவாதங்கள் - 33
• எழுப்பிய கேள்விகள் - 137
• மத்திய அரசு தாக்கல் செய்த மசோதா மீது விவாதம் - 6
விவாதங்களில் பேசப்பட்டது
பொதுத்துறைகளின் பங்கு விற்பனை, மக்கள் விரோத பட்ஜெட், வேலையின்மை பிரச்சனை, கேரள மாநிலத்துக்கு குறைவான நிதி ஒதுக்கீடு, 100 நாள் வேலை திட்டத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை கண்டித்து, புதிய மின்சார சட்டத்தை வாபஸ் பெற கோரி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் சார்ந்த பிரச்சனைகள் சம்பந்தமாக. பேசப்பட்டது.
நாடாளுமன்றம் முன்பும் நடந்த போராட்டங்கள்.
மேற்குவங்கத்தில் நடந்த தாக்குதலை கண்டித்தும் மற்றும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இடதுசாரி கட்சிகள் தனியாகவும் மற்ற அரசியல் கட்சிகளும் இணைந்து மற்றும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளப்பட்டது.
கோவை நாடாளுமன்றத் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினரின் பணிகள்
1. பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள இழப்பீடு தொகைக்கான வட்டியையும், உரிய இழப்பீட்டையும் நீதிமன்ற உத்தரவுப்படி வழங்கக்கோரி இயக்கங்கள் மற்றும் தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
2. அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகம் அவினாசிலிங்கம் மகளிர் உயர் கல்வி நிறுவனத்திற்கு தேவையான மானியம் கிடைக்காததால் சுயநிதி நிறுவனமாக மாறும் அபாயம் இருப்பதாகவும் எனவே மத்திய அரசு தடையின்றி மானியம் வழங்க வேண்டும். என்றும் அதேபோல் பணி ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையினை வழங்க வேண்டும் என வலியுறுத்தியதால் தற்போது நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.147 பேர்களுக்கு ரூபாய் 8 கோடி வழங்கப்பட்டுள்ளது.
3. கோவை விமான நிலைய விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்துதல் பிரச்சனையில் பயனாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் முன்னாள் மாவட்ட ஆட்சியர் திரு.உமாநாத் அவர்கள் அளித்த வாக்குறுதி அடிப்படையில் மாற்று இடம் வழங்க வேண்டும் எனவும் தொடர்ந்து இயக்கங்கள் நடைபெற்று வருகிறது.
4. மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நேரடியாகச் சென்று பிரச்சனையில் தலையிட்டு மற்ற அமைப்புக்களுடன் இணைந்து இயக்கம் நடத்தப்பட்டு நிவாரணம் பெற்று தரப்பட்டுள்ளது. மேலும் வீடு மற்றும் வேலை ஆகிய கோரிக்கைகளுக்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை சந்தித்து தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
5. சூலூர் கே.வி.எஸ் பள்ளி பிரச்சனையில் தலையீடு.
6. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்காக தங்களது வீடுகளை இழந்தோர் அனைவருக்கும் வீடு ஒதுக்கீடு கிடைக்க ஆவண செய்யப்பட்டுள்ளது.
7. அனுப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஸ்டீல் பேக்டரி மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுவதால் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தை எம்பி தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தி, விரிவாக்கப் பணிகளை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
8. 27 .1. 2020, 27.10.2021 அன்று மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு எம்.பி உரையில் விடுபட்ட அனைத்து பழங்குடியினருக்கும் பட்டா கொடுக்கவும் ஒதுக்கப்பட்ட முழுத் தொகையை முழுமையாக செலவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. பல்வேறு பிரச்சனைகள் பேசப்பட்டுள்ளது.
9. 1998 ல் 25(3) சட்டப்படி மூடப்பட்ட வசந்தாமில் மேலும் ஊழியர்களுக்கு வரவேண்டிய நிவாரணம் தொகையை பெற்றுத் தர ஜவுளித்துறை அமைச்சர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
10. தொழிற்சங்க பிரச்சனைகள் குறிப்பாக பி.எஸ்.என்.எல் ஒப்பந்த ஊழியர்கள் சம்பந்தமாக அதிகாரிகள் மட்டத்தில் பேசி தீர்ப்பது அமைச்சர் இடம் பிரச்சினைகள் கொண்டு செல்லப்படுகிறது.
11. கோவை சிறு குறு நடுத்தர நிறுவனங்களை பாதுகாக்க மூலப் பொருள்களின் விலைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். ஜி.எஸ்.டி வரி விகிதத்தை கணிசமான அளவிற்கு குறைக்க வேண்டும், திறன் பயிற்சி மையத்தை அமைத்திட வேண்டும். தனிப்பட்ட சந்தை வசதி, வங்கி வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும். மின்சார மானியம், மின்சார வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என நாடாளுமன்றத்தில் பேசப்பட்டது.
12. தமிழக பின்னலாடை தொழிலை, விசைத்தறி, கைத்தறியை பாதிக்கும் பருத்தி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். என நாடாளுமன்றத்தில் பேசப்பட்டது.
13. கொரனாவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
14. கோவையில் யானைகளின் உயிரிழப்பு ஏற்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும், வனத்துறை ஆய்வு அறிக்கையை செயல்படுத்த வேண்டும்.
15. காரமடை வட்டாரத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மலைவாழ் படி நமது முயற்சியால் வழங்கப்பட்டது.
16. மூடப்பட்டுள்ள என்.டி.சி ஆலைகளை திறக்க வலியுறுத்தியும் அதுவரை தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் வழங்கக் கோரியும் தொழிற்சங்க தலைவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்பட்டது. மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கையை நிறைவேற்றுமாறு வலியுறுத்தப்பட்டது.
17. இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
18. மத்திய அரசு அதிகாரிகள் பயன்பெறும் வகையில் சி.ஜி.எச்.எஸ் மருந்தகம் மருத்துவர்கள் உள்ளடக்கிய மருத்துவ மையம் நமது முயற்சியால் அமைக்கப்பட்டுள்ளது.
19. சேலம் சென்னை எட்டு வழி சாலை திட்டத்தை கைவிட மேற்கு மண்டல எம்பி களுடன் இணைந்து வலியுறுத்தப்பட்டது.
20. கரூர் கோவை ஆறு வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி மேற்கு மண்டல எம்பிக்களுடன் இணைந்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
21. விளைநிலங்கள் வழியாக மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாய அமைப்புகளுடன் இணைந்து தொடர் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
22. கோவையிலுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் ஜவுளி கல்லூரியின் மாணவர் சேர்க்கை தொடர வேண்டுமென்று ஜவுளித்துறை அமைச்சரிடம் நேரில் சந்தித்து வலியுறுத்தியதால் கோரிக்கை நிறைவேறி உள்ளது.
23. ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்ற பெயரில் ஏழை எளிய மக்களின் குடியிருப்புகள் (ஸ்மார்ட் சிட்டி) கோவை மாநகரின் பல பகுதிகளில் இடிக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்களுடன் இணைந்து குறிப்பாக மேட்டுப்பாளையம் ரோடு ஜீவா நகர், முத்தண்ணன் குளப்பகுதி, சுங்கம் ஏரி மேடு - பைபாஸ் ஆகிய பகுதிகளில் மறியல் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தியும் மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அப்பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீடுகளை பெற்று தரப்பட்டுள்ளது. மேலும் சித்தாபுதூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பிரச்சினைகளில் தொடர்கவனம் செலுத்தப்படுகிறது.
24. இளநிலை பல் மருத்துவ படிப்பை முடித்த மாணவர்கள் நிறைவுச் சான்றிதழ் பெற முடியாமல் உள்ளதால் உடனடியாக சான்றிதழை அவர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
25. வங்கிகளில் சிறு - குறு தொழில்களுக்கு கடன் வழங்குவது, கல்வி கடன் கூடுதலாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
26. வால்பாறை கல்லார்குடி மலைவாழ் மக்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திலேயே பட்டா வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக பட்டா வழங்கப்பட்டது.
ரயில்வே
ரயில் பயணிகள் சங்கத்தையும், கூட்டணி கட்சித் தலைவர்களையும் நமது கட்சி தோழர்களையும் ஒருங்கிணைத்து சேலம் மற்றும் சென்னை ரயில்வே நிர்வாகத்திடம் (9-9-2019) தொடர்ந்து பேச்சு வார்த்தையின் மூலம் கீழ்கண்ட ரயில் வசதிகள் பெற்று தரப்பட்டுள்ளது.
1. கோவை – பொள்ளாச்சி - பழனி தற்காலிக வழித்தடம் தற்போது நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளது.
2. கோவை - மேட்டுப்பாளையம் 1-2-2020 முதல் காலை-மாலை என இரு முறை இயக்க ரயில் வசதி அதிகரிக்கப்பட்டுள்ளது.
3. பாலக்காடு - ஈரோடு மெமு ரயிலில் எல்.எச்.பி புதிய பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
4. கோவை - பொள்ளாச்சி ரயில் கூட்ட நெரிசலை தவிர்க்க 2 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.
5. கோவை - சென்னை தேஜாஸ் என்ற பகல் நேர ரயில் புதியதாக விடப்பட்டுள்ளது.
6. சென்னை - இன்டர்சிட்டி ரயில் பழைய பெட்டிகளுக்கு பதிலாக என்.எச்.பி புதிய பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
7. கோவை ரயில் நிலைய பிளாட்பாரம் 1 , 2 மற்றும் எஸ்கலேட்டர், லிப்ட் வசதி பணி முடிந்து பயன்பாட்டில் உள்ளது.
8. வடகோவை ரயில் நிலையத்தில் நடைமேடை, மேம்பாலம் மேட்டுப்பாளையம் சாலையில் 2 வது டிக்கெட் கவுன்டர் வசதி ஆகிய பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டு உள்ளது.
9. விழாக்கால நேரங்களில் பயணிகள் நெருக்கடியை தவிர்க்க சிறப்பு ரயில் என்ற நமது கோரிக்கையை ஏற்று பொங்கல் மற்றும் தைப்பூச விழாக்கால சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளது.
10. துடியலூரில் ரயில்வேக்கு சொந்தமான பாதையை இப்போது மக்களின் பயன்பாட்டிற்காக அனுமதிக்க கோரியும், நஞ்சுண்டாபுரம் விவசாயிகள் ரயில்வே துறைக்கு விவசாயிகள் பயன்படுத்துவதற்காக கட்டணம் வசூலிப்பதை கைவிட கோரியும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
11. ரயில்வே பணிகளில் இந்தி-ஆங்கிலம் தெரிந்தவர்கள் தான் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில மொழி பேசுபவர்களை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதால் கோரிக்கையை வென்றெடுக்கப்பட்டது.
12. கோவை ஒண்டிப்புதூரில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தை தரை பாலமாக மாற்றிட முயற்சிக்கு எதிராக பொது மக்களுடன் இணைந்து மறியல் போராட்டம் நடைபெற்றது.
13. ஊட்டி சுற்றுலா மலை ரயிலை தனியாருக்கு குத்தகைக்கு விட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது
தொகுதி மேம்பாட்டு நிதி
1. 2019 ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட இரண்டரை கோடி ரூபாய் 5 சட்டமன்ற தொகுதிகளில் (கோவை வடக்கு தவிர) சமுதாயக்கூடம், ரேஷன் கடை, பட்டியலின மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் மேல்நிலை கீழ்நிலை நீர்த்தொட்டிகள் மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட பணிகளுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனம், பாரதி புத்தகாலயம் சார்பில் புத்தகங்கள் மற்றும் காமராஜர் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட நூல்கள் பள்ளிகளுக்கும் நூலகங்களுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
2. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக இதுவரை 110 நபர்களுக்கு 2 கோடியே 5 லட்சம் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து பெற்று தரப்பட்டுள்ளது.
3. புற்றுநோய் மற்றும் இருதய அறுவை சிகிச்சைக்காக வெளியூர் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்ட கடிதங்கள் 75 ஆகும் தனியார் கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் பரிந்துரை கடிதம் 80 தரப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.