வியாழன், 3 மார்ச், 2022

கைவிட வேண்டிய

  நியூட்ரினோ திட்டம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பொட்டிபுரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு அனுமதி அளிக்க முடியாது என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதன் மூலம், இந்தத் திட்டத்துக்கு எதிராக கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வரும் அந்தப் பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். 

எனினும், இந்தத் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் உச்சநீதிமன்றத்தில் தவறான தகவலை மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் அளித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

 பொட்டிபுரம் பகுதி மலையில் சுமார் 1,000 மீ. ஆழத்துக்கு சுரங்கப்பாதை அமைத்து நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

நிலத்தடியில் அமைக்கப்படும் இந்த ஆய்வகத்தின் மூலம் பேரண்டத்திலிருந்து வெளிப்படும் நியூட்ரினோக்களை அதிசக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்தத் திட்டத்துக்கு இந்திய அணுசக்தித் துறையும், அறிவியல் தொழில்நுட்பத் துறையும் நிதியுதவி அளிக்கின்றன.

 இந்தத் திட்டத்துக்காக பொட்டிபுரம் மலையில் 2.30 லட்சம் கியூபிக் மீட்டர் அளவுக்கு சுரங்கம் தோண்டி, 6 லட்சம் டன் பாறைகள் பெயர்த்தெடுக்கப்படும் என இந்த மையத்துக்கான திட்ட அறிக்கை தெரிவிக்கிறது. 

இந்த மலைப்பகுதி கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மதிகெட்டான்சோலை தேசியப் பூங்கா முதல் பெரியாறு வரையிலான புலிகள் வழித்தடத்தில் அமைந்துள்ளது.

 சுரங்கம் தோண்டுவதாலோ பாறைகளைப் பெயர்த்தெடுப்பதாலோ அந்தப் பகுதியின் சுற்றுச்சூழலுக்கும், புலிகள் வழித்தடத்துக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என இந்த ஆய்வகத்தின் திட்ட இயக்குநர் கூறுகிறார். 

ஆனால், சுரங்கம் தோண்டுவதால் வெளியேற்றப்படும் பெருமளவிலான மண்ணும், பெயர்த்தெடுக்கப்படும் பாறைகளும் அருகிலுள்ள வனப்பகுதியில்தான் கொட்டப்படும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

 மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியானது உலகின் மிக அரிய பல்லுயிர் வாழுமிடமாகும். குறிப்பாக, புலிகள், யானைகளின் வழித்தடமாகவும் இது உள்ளது.

 இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கைச் சூழலியல் இந்தத் திட்டத்தால் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது எனக் கூறுவது முழுப் பூசணியை சோற்றில் மறைக்க முயல்வது போன்றதாகும்.

 இந்தத் திட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை விரிவாக மதிப்பீடு செய்யாமலும், மக்களின் கருத்தறியும் கூட்டத்தை நடத்தாமலும் நியூட்ரினோ ஆய்வகத்தை அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல்- வனத்துறை அமைச்சகம் கடந்த 2018, மார்ச்சில் அனுமதி அளித்தது. 

ஆனால், அதே ஆண்டு நவம்பரில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இடைக்காலத் தடை விதித்தது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் இந்தத் திட்டத்துக்கு இதுவரை தடையின்மைச் சான்றிதழ் அளிக்கவில்லை.

 இதற்கிடையில், இந்தத் திட்டத்துக்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. 

இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தபோது மத்திய சுற்றுச்சூழல் - வனத் துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த மதிப்பீடு செய்தல், மக்களின் கருத்தறியும் கூட்டம் நடத்தப்பட்ட பிறகே இந்தத் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

 சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து விரிவான மதிப்பீடு செய்யப்படவில்லை என்றும், மக்கள் கருத்தறியும் கூட்டம் நடத்தப்படவில்லை என்றும் தேனி மாவட்ட ஆட்சியர் மறுப்புத் தெரிவித்துள்ளதையும், இந்தத் திட்டத்துக்கு அனுமதி அளிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்து 

ஒன்றிய பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு, ஜூனில் கடிதம் எழுதியதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

 மேலும், இந்தத் திட்டத்துக்காக தோண்டப்படும் சுரங்கப் பாதைக்காக, பாறைகள் பெயர்தெடுக்கப்படுவதால் அந்தப் பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, புலிகளும் இடம்பெயர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 அறிவியல் ஆராய்ச்சியால் உலகில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. 

இயற்கை சமநிலையைச் சீர்குலைத்தும், இயற்கை வளங்களை அழித்தும் ஏற்படக்கூடிய வளர்ச்சியால் அதிகப்படியான எதிர்விளைவுகள் ஏற்படும் என்கிற சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எச்சரிக்கையை நாம் புறந்தள்ளிவிட முடியாது.

 இந்தத் திட்டத்துக்கு எதிராக திமுக, மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட அமைப்புகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. 

தேனி மாவட்ட மக்களும் இந்தத் திட்டத்துக்கு எதிராகப் பல ஆண்டுகளாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 இத்தகைய எதிர்ப்புகளை மீறி இந்தத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவது என மத்திய பாஜக அரசு முனைப்புடன் உள்ளது ஏன் என்பதுதான் புரியவில்லை. 

சட்ட விதிகளைத் தளர்த்தியும், உச்சநீதிமன்றத்தில் தவறான தகவலை அளித்தும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முயல்வது சரியல்ல.

 ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்தறிந்து செயல்படுவதுதான் மக்கள் நலன் காக்கும் அரசுக்கான இலக்கணம். 

மக்களின் விருப்பத்துக்கு மாறாகச் செயல்படுத்தப்படும் எந்தவொரு திட்டமும் வெற்றியடைந்ததாக வரலாறு இல்லை. சுற்றுச்சூழலுக்கும், இயற்கை வளத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நியூட்ரினோ திட்டத்தைக் கைவிடுவதுதான் நாட்டுக்கு நல்லது.

-------------------------------------------------------------------------------

திமுக மேயர் 

மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளுக்கான மேயர் பதவியில் கும்பக்கோணம்  மாநகராட்சியை காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மீதமுள்ள 20 மாநகராட்சிகளுக்கான மேயர் பதவிகளை திமுக வெளியிட்டுள்ளது.சைவமா

அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு ஆர்.பிரியா,  

மதுரை மாநகராட்சிக்கு இந்திராணி, திருச்சிக்கு மு.அன்பழகன், திருநெல்வேலிக்கு பி.எம்.சரவணன், கோவைக்கு கல்பனா, 

சேலம் மாநகராட்சிக்கு ஏ.இராமசந்திரன், திருப்பூருக்கு என்.தினேஷ் .

மேலும், ஈரோடு மாநகராட்சிக்கு நாகரத்தினம், தூத்துக்குடிக்கு என்.பி.ஜெகன், 

ஆவடிக்கு ஜி.உதயகுமார், 

தாம்பரம் மாநகராட்சிக்கு வசந்தகுமாரி கமலகண்ணன், 

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு மகாலட்சுமி, வேலூர் மாநகராட்சிக்கு சுஜாதா ஆகியோர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சண்.இராமநாதன், கரூருக்கு கவிதா, ஓசூர் மாநகராட்சிக்கு எஸ்.ஏ.சத்யா, திண்டுக்கல்லுக்கு இளமதி, சிவகாசிக்கு சங்கீதா, நாகர்கோவிலுக்கு மகேஷ் ஆகியோரை மேயர் வேட்பாளர்களாக திமுக நிறுத்தியுள்ளது.

--------------------------------------------------------------------------

வாயால் வடை சுடுவதை நிறுத்துங்கள் மோடி

"மோடி யின் ஒன்றிய அரசு செய்தது நாங்கள் வந்த பஸ்ஸில் இந்திய கொடியை ஒட்டியது மட்டுமே.

ஏஜென்சி மூலம் பஸ் ஏற்பாடு செய்துகொண்டது நாங்கள்.அதற்கு பணம் கொடுத்ததும் நாங்கள்தான்.

ஒன்றிய அமைச்சர்கள் ஆபரேசன் கங்கா என்று ஷோ காட்டுகிறார்கள். 

அவர்களை படம்போடுவதை நிறுத்தி விட்டு உக்ரைன் உள்ளே மாட்டிக்கொண்டு இருப்பவர்களிடம் மீட்புப் பணியை செய்யச்சொல்லுங்கள். "

- தப்பி வந்த மாணவர் காணொலி பேட்டி⁦ ⁦⁩.