கோட்டையிலிருந்து எச்சரிக்கை:

 முடிவை மாற்றினார் எடப்பாடி?

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து முடிந்து முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்று விட்டார். 
பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்ற நாள்களில் அதிமுக தரப்பு போட்ட ஒரு திட்டம் குறித்து முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று பத்து மாதங்கள் நிறைவடைந்து விட்டன. அரசின் மீது பெரியளவில் விமர்சனம் எழவில்லை. 

ஆனால் அதிமுக தரப்பிலோ ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் சென்ற வண்ணம் உள்ளன.

 தொடர் தோல்வி, முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு, இரட்டை தலைமைக்கிடையேயான பனிப்போர், சசிகலா சுற்றுப் பயணம் என அதிமுகவில் பிரச்சினைகள் தொடர்ந்து வட்டமடித்து வருகின்றன.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில் தோல்விகளிலிருந்து மீண்டெழுந்து கட்சியை பலப்படுத்த வேண்டும், திமுக அரசின் மீது மக்கள் மத்தியில் விமர்சனங்களை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

அரசுப் பள்ளிகளில் படித்து விட்டு கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ ஆகிய படிப்புகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

ஆனால் தாலிக்கு தங்கம் திட்டம் கைவிடப்பட்டதால் மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரத்தை கையிலெடுத்து தமிழ்நாடு முழுவதும் பிரம்மாண்ட போராட்டம் நடத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டதாக சொல்கிறார்கள் அக்கட்சி வட்டாரத்தில்.

ஜெயலலிதா முன்னெடுத்த திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு நிறுத்திவிட்டது என்ற பிரச்சாரத்தை மேற்கொள்ளலாம், இதன் மூலம் பெண்கள் மத்தியில் திமுக அரசின் மீது தற்போது மெல்ல எட்டிப் பார்க்கும் அதிருப்தியை எதிர்ப்பாக மாற்றலாம்.

பெண்களிடம் எதிர்ப்பு உருவாகிவிட்டாலே அது குடும்பம் முழுக்க பிரதிபலிக்கும் என திட்டமிடப்பட்டதாம்.


ஆனால் அதிமுக அரசின் காலத்திலேயே தாலிக்கு தங்கம் திட்டத்தில் தங்கம் வழங்கப்படவில்லை. 

மேலும் இந்த திட்டத்தின் மூலம் பெரியளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 3 லட்சத்து 35 ஆயிரம் விண்ணப்பங்களை அதிமுக அரசு கிடப்பில் போட்டுள்ளதாம். 

தகுதியில்லாதவர்களுக்கு போலியான ஆவணங்களை உருவாக்கி தங்கம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

இது ஒரு புறமிருக்க திருமண உதவித் தொகை திட்டமே கலைஞர் கருணாநிதி தொடங்கி வைத்த திட்டம் தான் என்றும் கடந்த அதிமுக ஆட்சியில் தங்கம் வழங்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிமுகவின் போராட்ட திட்டம் குறித்து முதல்வருக்கு சொல்லப்பட்டதாக கூறுகிறார்கள். 

அரசுக்கு எதிரான கருத்துகள் பரவிவிடக்கூடாது என்பதில் முதல்வர் உஷாராக இருக்கிறாராம். இந்நிலையில் அதிகாரிகள் சிலர் மூலம் முக்கிய எச்சரிக்கை ஒன்று எதிர்தரப்புக்கு விடுக்கப்பட்டதாம்.

தாலிக்கு தங்கம் திட்டத்தில் மட்டும் என்னென்ன ஊழல்கள் நடைபெற்றுள்ளது என்பது குறித்த முழு விவரங்களையும் அரசு சேகரித்து வருகிறது. 

கீழிருந்து மேல் வரை அதிமுக முக்கிய புள்ளிகள், மாஜி அமைச்சர்கள் என இதில் சம்மந்தபட்டவர்கள் பட்டியல் தயாராகிவருகிறது என்ற தகவல் மட்டும் எதிர்தரப்புக்கு சென்றதாம்.

ஏற்கெனவே இருக்கும் பிரச்சினைகள் போதாதென்று இது வேறய்யா என்று எதிர்தரப்பு தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விட்டதாக கூறுகிறார்கள்.

--------------------------------------------------------------------------

 மக்கள் மடையர்களா? 

முட்டாள்களா?

அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூர் வா.புகழேந்தி, ஒசூர் தனியார் ஓட்டலில் இன்று செய்தியாளர்களை சந்தி்த்தார். 

அப்போது அவர் :-

ஆறுமுகசாமி கமிஷன் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடியால் ஆணையம் அமைக்கப்பட்டது, அதற்கு காரணமானவர் ஓபிஎஸ், அம்மாவின் சாவில் உள்ள மர்மத்தை தெரிந்துக்கொள்ள அமைக்கப்பட்டது.

 பல இடையூறுகளுக்கு பிறகு ஆணையம் செயல்படுகிறது. 

ஸ்டாலின் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டிருந்தார்.

யார் மீதும் சந்தேகமில்லை, சசிகலா மீது பற்றுடையன் என்று ஓபிஎஸ் ஆணையத்தில் கூறியுள்ளார்.

 அப்படியானால் ஆணையம் எதற்கு..? 

எடப்பாடி பழனிசாமி ஊழல்வாதி எனக்கூறியவர் ஓபிஎஸ். தர்மயுத்தம் நடத்தி கட்சியில் இணைந்தீர்கள், மக்கள் மடையர்களா? 

முட்டாள்களா?

 சாதாரண ஓபிஎஸ்ஸை, உயரத்திற்கு கொண்டு சென்றவர் ஜெயலலிதா.

சசிகலா மீது போடப்பட்ட பழி போகும் என்றாலும், ஓபிஎஸ் - இபிஎஸ் பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியையும் ஆறுமுகசாமி கமிஷன் அழைத்து விசாரிக்க வேண்டும்.

ஜெயலலிதாவை சசிகலா கொன்றுவிட்டார் என்று மூலை மூடுக்கெல்லாம் எல்லாம் கேபி.முனுசாமி உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர். 

எம்ஜிஆரை போல், ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டு கொண்டு செல்லவில்லை என்று அலர் கேள்வியெழுப்பியுள்ளார். சசிகலா ஒன்றும் மருத்துவர் அல்ல; மருத்துவமனையில் சேர்த்தது அவர் தான்.

ஓபிஎஸ் நாடகமாடி வருகிறார். இந்த விஷயத்தை நான் விடமாட்டேன். மக்களை ஏமாற்ற நினைப்பவர்கள் அம்மா, எம்ஜிஆருக்கு துரோகம் செய்கிறார்கள். இந்த கமிஷன் யாரையும் விடக்கூடாது; அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று புகழேந்தி கூறினார்.

---------------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?