ராணி லலிதாங்கி
1957-ல் எம்ஜிஆரை நாயகனாக்கி லலிதாங்கி என்ற படத்தை பாடலாசிரியர் தஞ்சை என்.ராமையா தாஸ் ஆரம்பித்தார்.
இந்தப் படம் 1935-ல் இதே பெயரில் வெளியான திரைப்படத்தின் ரீமேக். படம் பத்தாயிரம் அடி வளர்ந்த நிலையில், கடவுளை புகழ்ந்து பாடும் காட்சியில் எம்ஜிஆர் நடிக்க வேண்டியிருந்தது. கட்சி கொள்கைக்கு விரோதமான பாடல் என்பதால் அதில் நடிக்க முடியாது என்று எம்ஜிஆர் மறுத்தார்.
இதனால் லலிதாங்கி படம் முடங்கிப் போனது. ஆனால், தயாரிப்பாளர் ராமையா தாஸ் அசரவில்லை.இந்த இடத்தில் ராமையா தாஸை குறித்து சொல்ல வேண்டும்.
இவர் கரந்தை தமிழ் சங்கத்தில் புலவர் பட்டம் பெற்று தஞ்சையில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
நாடகத்தில் ஏற்பட்ட ஆர்வத்தில் ஜகன்நாத நாயுடு நடத்தி வந்த சுதர்சன கான சபா நாடகக்குழுவில் எழுத்தாளராக இணைந்தார்.
பிறகு ஜெயலக்ஷ்மி கான சபா என்ற சொந்த நாடகக் கம்பெனியை தொடங்கி நாடகங்கள் எழுதி அரங்கேற்றினார். அவர் அரங்கேற்றிய நாடகங்களுள் ஒன்றான மச்ச ரேகையை பார்த்த நடிகரும், தயாரிப்பாளருமான டி.ஆர்.மகாலிங்கம் 1950-ல் மச்ச ரேகையை திரைப்படமாக்கினார். படம் ஓடவில்லை.
ஆனால் ராமையா தாஸ் சென்னை வந்து முழுநேர சினிமாக்காரர் ஆவதற்கு அது உதவியது. அப்போது பிரபலமாக இருந்த விஜயா வாகினி ஸ்டுடியோவில் எழுத்தாளராக 1950 - 1960 வரை பணிபுரிந்தார். மிஸ்ஸியம்மா, மாயபஜார், பாதாள பைரவி உள்பட ஏராளமான படங்களுக்கு பாடல்கள் எழுதினார்.
ஒமகசீயா போன்ற பொருளற்ற பாடல்களுக்கு முன்னோடி ராமையா தாஸ்.
இதனால் இவருக்கு டப்பாங்குத்து பாடலாசிரியர் என்ற பெயரும் இருந்தது. ஜாலியோ ஜிம்கானா டோலியோ கும்கானா என்ற பாடலை இவர் அமர தீபம் படத்துக்காக எழுதினார்.
மொத்தப் பாடலும் இதுபோன்ற பொருளற்ற வரிகளால் நிரம்பியிருக்கும். ஆனால், பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
லலிதாங்கி படத்தில் மொத்தம் 14 பாடல்கள். ஜி.ராமநாதன் படத்துக்கு இசையமைத்திருந்தார்.
கடவுளை புகழ்ந்து பாட எம்ஜிஆர் மறுத்ததால் அவரை வைத்து எடுத்த பத்தாயிரம் அடி காட்சிகளையும் தூக்கிப்போட்டு அதே கதையை சிவாஜியை வைத்து புதிதாக எடுத்தார் ராமையா தாஸ்.
இதனை கேள்விப்பட்ட எம்ஜிஆர் அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். ராமையா தாஸ் பதிலுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்த சட்டப்போரில் ராமையா தாஸே வென்றார்.
சிவாஜி நடிப்பில் லலிதாங்கி ராணி லலிதாங்கி என்ற பெயரில் வெளியானது. ஆனால், படம் தோல்வியடைந்தது.
எம்ஜிஆரை வைத்து பத்தாயிரம் அடிகள் எடுத்தது, படத்தின் தோல்வி எல்லாமும் சேர்ந்து ராமையா தாஸை கடனாளியாக்கியது.
வடபழனியில் இருந்த தனது வீட்டை விற்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். இதுபற்றி பிறகு நினைவுகூர்ந்த அவரது மகள், படம் தயாரித்து எழுதி சம்பாதித்த அனைத்தையும் அவர் இழந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
ராமையா தாஸ்
லலிதாங்கிக்குப் பிறகும் ராமையா தாஸ் எம்ஜிஆர் படத்தில் பாடல்கள் எழுதினார். எனினும் தயாரிப்பினால் இழந்ததை அவரால் மீட்டெடுக்க முடியவில்லை.
. 83 திரைப்படங்களில் 532 பாடல்களும், 25 படங்களுக்கு திரைக்கதை, வசனமும், 10 படங்களுக்கு கதையும் எழுதிய ராமையா தாஸ் தயாரிப்பாளராக தோல்வி கண்டு 1963 ஆம் ஆண்டு தனது ஐம்பதாவது வயதில் மரணமடைந்தார்.
------------------------------------------------
புதிய பூமி.
அழிந்து கொண்டிருக்கும் ஒரு சூரியனுக்கு அருகில் இருக்கும் ஒரு கிரகத்தில் உயிர்கள் வாழத் தகுதியான சாத்தியங்கள் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இது உறுதிசெய்யப்பட்டால், "ஓயிட் டார்ஃப்" என்று அழைக்கப்படும் அத்தகைய நட்சத்திரத்தை உயிர்கள் வாழும் சூழலைக் கொண்டுள்ள கோள் ஒன்று சுற்றிவருவது கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்தக் கோள் நட்சத்திரத்தின் ''உயிர்கள் வாழக்கூடிய மண்டலத்தில்'' (habitable zone) கண்டறியப்பட்டது. அங்கு உயிர்கள் வாழ முடியாத அளவிற்கு, மிகவும் குளிராகவோ அதிக வெப்பமாகவோ இருக்காது.
ராயல் அஸ்ட்ரானமிகல் சொசைட்டியின் மாதாந்திர அறிவிப்புகளில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேராசிரியர் ஜே ஃபரிஹி, இந்த கணிப்பு வானியலாளர்களுக்கு முற்றிலும் புதியது என்று கூறியுள்ளார்.
ஒரு "ஓயிட் டார்ஃப்" நட்சத்திரத்தின் 'உயிர்கள் வாழக்கூடிய மண்டலத்தில்' இத்தகைய கோள் ஒன்று காணப்படுவது இதுவே முதல் முறை. இதனால் மற்றொரு உலகில், உயிர்கள் அதைச் சுற்றி வருவதற்கான வாய்ப்பு உள்ளது", என்று அவர் பிபிசி நியூசிடம் கூறுகிறார்.
மிகப் பெரிய நட்சத்திரங்கள் இறக்கும் போது கருந்துளையாக மாறும் அதே வேளையில். நமது சூரியனைப் போன்ற சிறிய நட்சத்திரங்கள் ஒயிட் டார்ஃப்-ஆக மாறுகின்றன. சிறிய நட்சத்திரங்கள் அணு எரிபொருளை முழுவதுமாகப் பயன்படுத்திய பின்னர், அவற்றின் வெளிப்புற அடுக்குகளை இழந்து ஒயிட் டார்ஃப் ஆகும்.
அதாவது இந்த நட்சத்திரங்கள், தாங்கள் எரியத் தேவையான அணு ஆற்றல் அனைத்தும் தீர்ந்து போன பின், 'ஓயிட் டார்ஃப்' (வெண் குறுமீன்) எனும் நிலையை அடையும். இவற்றை விண்மீனின் எச்சம் எனலாம்.
அவை பொதுவாக ஒரு கிரகத்தின் அளவு இருக்கும். இது முதலில் உருவாகும்போது நீல-வெள்ளை ஒளியை வெளியிடுகின்றன.
- பூமியிலிருந்து 117 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்தக் கோளுக்கும் அதன் நட்சத்திரத்துக்கும் இருக்கும் தூரம், பூமிக்கும் சூரியனுக்கும் இருக்கும் தொலைவைவிட 60 மடங்கு குறைவாக இருப்பதாகக் கருதப்படுகிறது.
இப்படி ஒரு கோள் இருப்பதற்கான நேரடி ஆதாரங்கள் இந்த ஆராய்ச்சிக் குழுவிடம் இல்லை. ஆனால், 'ஒயிர் டார்ஃப்' நட்சித்தரத்தின் உயிர்கள் வாழக்கூடிய மண்டலத்தைச் சுற்றிவரும் 65 சந்திரன் அளவிலான விண்பொருட்களின் இயக்கங்கள், அப்படி ஒரு கோள் இருக்கலாம் என்று காட்டுகின்றன.
இந்த விண்பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் இடையே இருக்கும் தூரம் மாறாமல் இருக்கிறது. அப்படியானால் அவை தங்களின் அருகில் இருக்கும் கோளின் ஈர்ப்பு விசையின் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளன என்று அறிய முடிகிறது.
"எங்கள் குழுவுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. "இயக்கம் மிகவும் துல்லியமாக இருந்தது. நீங்கள் இத்தகைய விஷயங்களை உருவாக்க முடியாது," என்று பேராசிரியர் ஃபரிஹி கூறுகிறார்.
உயிர்கள் வாழக்கூடிய மண்டலம் என்பது, ஒரு நட்சத்திரத்தில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் அமைந்துள்ள பகுதியாகும். இப்பகுதியில் அமைந்துள்ள கோள்கள் திரவ நீர் இருக்க வாய்ப்புள்ள சூழலைக் கொண்டிருக்கும். எனவே, உயிர்கள் வாழ இது உதவும். இது பெரும்பாலும் "கோல்டிலாக்ஸ் மண்டலம்"("Goldilocks zone") என்று குறிப்பிடப்படுகிறது.
நட்சத்திரத்திற்கு மிகவும் அருகில் ஒரு கோள் இருந்தால் அது மிகவும் சூடாக இருக்கும். அதிக தூரத்தில் இருந்தால் அந்தக் கோள் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். அதேசமயம் இந்த மண்டலத்தில் இருக்கும் தட்பவெப்ப நிலை, உயிர்கள் வாழ "மிகச் சரியாக" இருக்கும்.
"ஓயிட் டார்ஃப்" விண்மீன்களைச் சுற்றியுள்ள கோள்களின் நேரடி ஆதாரங்களை வானியலாளர்கள் தீவிரமாகத் தேடுவதற்கு இந்தக் கணிப்புகள் ஒரு தூண்டுதலாக செயல்பட வேண்டும்.
-------------------------------------------------------------------