மேல் முறையீடு மேல் ஆய்வு.

நேற்றைய தொடர்ச்சி.............
ஜெயலலிதா தரப்புக்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் மாதக்கணக்கில் நேரில் வாதாடுகிறார்கள். 
உதாரணத்திற்கு ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் 9 நாட்கள் நாற்பதுமணி நேரத்துக்கு மேல் பேசி உள்ளார்.
 10 நிமிடம் கூட இடைவேளை எடுக்கவில்லை என்கிறார். மறுபுறம் அரசு தரப்போ வாதம் செய்ய ஆள் இல்லாமல் அனாதையாக நின்றது.நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில் வரும் கணக்கு மட்டுமல்ல வழக்கு விசாரணையில் பல்வேறு கட்டங்களில் திறந்த நீதிமன்றத்தில் அவர் வெவ்வேறாக பேசினார்.
வழக்கில் விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடுவை கட்டாயம் வரச்சொல்லுங்கள் என்று சொன்னார்.
பின்பு அதை வலியுறுத்தவில்லை. 
அவரின் வயது 73 என்பதை ஜெயலலிதா வகையறாவினர் தவறாக 93 என்று நீதிமன்றத்தில் குறிப்பிட்டனர். 
அதை மறுக்கத்தான் ஆள் இல்லையே. இதேபோல் கர்நாடக மொழி பெயர்ப்பு துறையினர் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்று சொல்லி பின் அதை புறக்கணித்தார். கட்டிட பொறியாளர்களை விசாரிப்பதாக கூறிய நீதிபதி அவர்களையும் விசாரிக்கவில்லை.
இதேபோல் சசிகலா வழக்கறிஞர் பசந்திடமும் இளவரசி, சுதாகரன் வழக்கறிஞர் சுதந்திரத்திடமும் ஜெயலலிதாவை காப்பாற்ற நினைக்காதீர்கள் உங்கள் தரப்பு குற்றச்சாட்டுக்காக மட்டும் வாதிடுங்கள் என்று கூறினார். வழக்கின் உண்மையான தன்மையை நீதிபதி குமாரசாமி உணர்ந்திருந்தார்.
47வயது ஜெயலலிதா 26 வயது சுதாகரனை வளர்ப்பு மகனாக தத்தெடுத்தார். “ஒரு முதலமைச்சரின் மகனுக்கு திருமணம் எப்படி நடக்குமோ அப்படித்தான் இந்த திருமணம் நடக்கும்“ என்று ஜெயலலிதா கூறியிருந்தார். கின்னஸ் அமைப்பு இந்த திருமணச் செலவு ரூ.75 கோடி. வந்த விருந்தினர்கள் எண்ணிக்கை 1,50,000 பேர் என்று மதிப்பிடப்பட்டது.
இத்தனை கோடி செலவு செய்து இவ்வளவு பிரம்மாண்டமாக திருமணம் செய்ய சுதாகரன் என்ன அதிமுக தொண்டரா இல்லை ஜெயலலிதா மகனா என்று நீதிபதி குமாரசாமி கேட்டார்.
மற்றொரு தருணத்தில் சுதாகரனின் அம்மா முதல்வர். தமிழ்நாடு சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கழகம் முதல்வரின் கீழ்தான் வருகிறது. மகனுக்கு அரசு டெண்டர் கொடுத்துள்ளார்கள் என்றால் அட்வான்ஸ் கொடுத்தமைக்கான ரசீது கொடுக்காமலா இருந்திருப்பார்கள் என்று நீதிபதி கேட்டார். 
ஜெயலலிதாவும் சசிகலா வும் உறவினர்கள் இல்லை. சசிகலாவிற்கு திருமணம் நடந்துவிட்டது. சுதாகரன் இளவரசிக்கு தனித்தனியே குடும்பங்கள் உள்ளன. 
பின் ஏன் நால்வரும் ஒரே வீட்டில் இருந்தனர்? என்றும் நீதிபதி குமாரசாமி கேட்டார்.நால்வரும் ஒரே முகவரியில் இருந்த கூட்டுக்குடித்தனம் குறித்து வழக்கு முழுவதும் தெளிவற்ற நிலை தோற்றுவிக்கப்பட்டது. விசாரணை நீதிமன்றத்தின் முன்பு தனி நீதிபதியாக மல்லிகார்ஜுனையா இருந்தார். அவர் ஜெயலலிதாவிடமே கேட்டார்.
 சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் உங்களுடன் வசிப்பது ஏன்?
இந்த கேள்விக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லை என்று ஜெயலலிதா கூறிவிட்டார்.
இதனை நீதிபதி குன்ஹா தம் தீர்ப்பில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். வாக்காளர் பட்டியல்படி எதிரிகள் நால்வரும் 36 போயஸ் தோட்டத்தில் வசித்து வந்துள்ளனர். ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு தன் வீட்டில் இருக்கும் தன் நண்பர்கள் நடவடிக்கை பற்றி தெரியாது என்றால் நம்ப முடியுமா?நீதிபதி குமாரசாமியும் இதனை கூறினார்.
 முதல்வாரான ஜெயலலிதா தன் வளர்ப்பு மகனின் நிறுவனத்துக்கு அரசு பணியை குத்தகை கொடுப்பது சட்டப்படி நியாயமா? 
இது அதிகார துஷ்பிரயோகம் இல்லையா?
உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணை முழுவதும் இவ்வாறு சொல்லிவிட்டு தீர்ப்பு எழுதும்போது மாற்றுகிறார்.
ஜெயலலிதா உடன் ஒரே வீட்டில் குற்றம்சாட்டப்பட்ட மூவரும் சேர்ந்து வசித்தார்கள் என்பதை மட்டும் வைத்து அவர்கள் குற்றச்சதியில் ஈடுபட்டதாக கூற முடியாது.இதே நீதிபதி திறந்த நீதிமன்றத்தில் மாற்றி சொல்லி இருந்தார். 
கனராவங்கி மேலாளர் வித்யாசாகர் அசா 2 ஆக விசாரிக்கப்பட்டிருந்தார். 
இதன்படி ஜெயா பப்ளிகேஷனிலிருந்து நமது எம்ஜிஆர் பத்திரிக்கைக்கும் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கும் வேறு சில நிறுவனங்களுக்கும் இடையே நடைபெற்ற பணப்பரிவர்த்தனைக்கு தேதி வாரியாக பதிவு இருந்தது. குறிப்பாக 1991-1996 கால கட்டத்தில் 3 மடங்கு அதிகம் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டது தெரியவந்தது
.நீதிபதி குமாரசாமி கூறினார் இவரது வாக்குமூலம் கூட்டுச்சதி நடைபெற்றுள்ளது தெரிய வருகிறது.
ஆவணங்கள் அடிப்படையிலும் திறந்த நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி பேசினார். அரசு தரப்பு சாட்சி அடிப்படையில் இளவரசியிடம் சுமார் 650 கேள்விகள் கேட்கப்பட்டன.
அதில் 95சதவீதத்துக்கும் அதிகமானவற்றுக்கு ஆம், இல்லை என்று மட்டுமே பதில் சொல்லி உள்ளார். போதிய விளக்கம் இல்லை என்று கூறினார். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவரது வருமானத்தை பயன்படுத்தி மற்ற மூவரும் சொத்து குவித்தார்கள் என்ற குற்றச்சாட்டை மறுக்க என்ன ஆதாரங்கள் உள்ளன என்றும் கேட்டார்.வருமான வரித்துறையில் ஜெயலலிதா தரப்பினர் தாக்கல் செய்த கணக்குக்கு மாறான தகவலை மேல்முறையீட்டில் தாக்கல் செய்தனர். 
நீதிமன்றத்தில் தவறான தகவல்களை பதிவு செய்யாதீர்கள் என்று நீதிபதி கண்டித்தார்.
ஆறு தனியார் நிறுவன மேல்முறையீட்டிலும் நிறுவனத்துக்கு எதிரான கருத்துக்களையே கூறினார்,
.“இத்தனை ஆண்டுகளாக உங்கள் நிறுவனத்தையும் அதன் சொத்துக்களையும் பாதுகாக்க உங்களது தரப்பில் தாக்கல் செய்த மனுக்களை சென்னை நீதிமன்றமும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றமும் தள்ளுபடி செய்துவிட்டன. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததில் இருந்து தீர்ப்பு வெளியான வரை உங்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
எனவே குற்றம்சாட்டப்பட்ட நிறுவன சொத்துக்களை அறிவிப்பு வெளியிடாமல் பறிமுதல் செய்தது சட்டப்படி தவறு அல்ல. 
15 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவன சொத்துக்களை மீட்க முயற்சிக்காமல் விட்டுவிட்டு தற்போது அனைத்தையும் தவறு என்பதை ஏற்க முடியாது”இந்த தீர்ப்பில் நீதிபதி குமாரசாமி விடுதலை செய்வதற்கு மற்றொரு காரணம் கூறுகிறார். 
சாட்சிகள் வெவ்வேறு கால கட்டத்தில் வெவ்வேறு விதமாக சாட்சியம் அளித்துள்ளனர். 
அவர்கள் மீது நம்பிக்கை வைப்பது நல்லதல்ல என்கிறார்.
தமிழகத்தில் ஆட்சிகள் மாறுகின்றன. 
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது நடந்த ஊழல் குறித்தது இந்த வழக்கு ஆகும். திமுக ஆட்சியில் நியூமார்பிள் கிரானைட் நிறுவன உரிமையாளர் கே.மாடசாமி அரசு தரப்பு சாட்சியாக இருந்தார். 
அடுத்து ஆட்சி மாற்றம் நடக்கிறது. 2014ல் இதேநபர் கே.எம்.சாமி என்ற பெயரில் குற்றவாளி தரப்பு சாட்சியாகிறார். (14.3.2015, தமிழ் இந்து). ஆட்சிமாற்றம் அதிகார மாற்றத்தை கொண்டு வருகிறது.
சாட்சிகள் மிரட்டப்படுகிறார்கள்.
இத்தகைய சூழல் இருந்தமையால் க.அன்பழகன் விசாரணையை மாற்ற கோருகிறார். தமிழகத்தில் அரசு தரப்புச் சாட்சிகளை மாற்றிச் சொல்ல வைக்கிறார்கள். 
தில்லி உச்சநீதிமன்றத்தில் அவர் மனு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. வழக்கு கர்நாடகத்துக்கு மாற்றப்படுகிறது. 
இந்த உண்மையை நீதிபதி அறியமாட்டாரா? 
அவர் விரும்பி இருந்தால் கர்நாடக அரசின் வழக்கறிஞரை தம்முன் தருவித்து வழக்கை நடத்தி இருக்கலாம்.
 92 வயதான க.அன்பழகன் நீதிமன்றத்துக்கு வரமாட்டாரா என்றுதான் கேட்டார்.
இது ஒன்றும் புதியவாதம் அல்ல.
இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிரிகளால் தொடுக்கப்பட்டது என்று ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தை அணுகினார். உச்சநீதிமன்றம் 18.11.2003ல் இந்த மனுவை தள்ளுபடி செய்தது.
 நீதிபதிகள் எஸ்.என். வரியவா, எச்.கே.சீமா ஆகியோர் தீர்ப்பு வழக்கினர். ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்கு சட்டமன்றத்தில் மட்டுமல்ல நீதிமன்றத்திலும் ஆக்கப்பூர்வமாக செயல்படும் பொறுப்பு இருக்கிறது. ஆட்சியில் இருப்பவர்கள் தவறு செய்யும்போது அதை தடுக்கவும் மக்களிடம் தெரிவிக்கவும் எதிர்க்கட்சிகாரருக்கு முழு உரிமை உள்ளது என்று கூறினார்.
17.12.1976ன் கிருஷ்ணானந்த் தீர்ப்பை தேடி கண்டுபிடித்த நீதிமன்றம் சொந்த வழக்கில் வந்த தீர்ப்பை புறக்கணிக்கிறதா?
இதேபோல் ஜெயலலிதா சசிகலாவின் டான்சி வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை நீதிபதி குமாரசாமி கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. 
விசாரணை நீதிமன்றம் மூன்று ஆண்டு சிறைத்தண்டனை வழங்கிய வழக்கு இது. உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுவித்தது. 
அதை உறுதிப்படுத்தினாலும் உச்சநீதிமன்றம் தன் கருத்தை கீழ் வருமாறு பதிவு செய்தது.
“ஜெயலலிதா தன் மனச்சாட்சிக்கு பதில் சொல்லியாக வேண்டும். அவர் நிலத்தை ஒப்படைப்பதன் மூலம் பிராயச்சித்தம் தேட வேண்டும்“சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி சொத்துக்கள் முறையாக வாங்கப்பட்டன என்றும், முறையாக வருமான வரி செலுத்தப்பட்டதாகவும் கூறுகிறார். 
தனி நீதிபதி மல்லிகாஜுனையா 1991-96ல் சசிகலா, இளவரசி, சுதாகரன் தமிழகம் முழுவதும் 197 இடங்களில் சுமார் 3000 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளது பற்றி கூறுகிறார்.
ஜெயலலிதா சசிகலாவிற்கு பவர் அப் அட்டார்னி கொடுத்திருந்தார். வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பிறகு 1997ல் தான் எதிரிகள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்படுகிறது.
வழக்கு சூடுபிடித்த காலங்களில் ஜெயலலிதா மிக கொதிப்பாக இருந்தார். விசாரணை அதிகாரியான நல்லம்மநாயுடு பரிசுப்பொருள் வாங்கினால் முதல்வர் என்ற முறையில் அதை அரசாங்கத்திடம் தானே ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டார். 
ஜெயலலிதா எம்ஜிஆரை இழுத்து பதில் சொன்னார். எந்த பாலிட்டிசியன் பரிசுப்பொருள் வாங்கல? 
எம்ஜிஆர் வாங்கவில்லையா என்றார். 
இந்த அம்சத்தைப் பற்றி நீதிபதி குன்ஹா தன் தீர்ப்பில் ஒன்றை குறிப்பிட்டார். 
பொது ஊழியர்கள் அன்பளிப்பு பெறலாம் என்று அறிவித்துவிட்டால் லஞ்சம் வாங்க சட்டம் உருவாக்கி உள்ள தடைகள் அன்பளிப்பு என்ற பெயரில் எளிதாக கடக்கப்படும் என்று கூறினார். இதற்கான உச்சநீதிமன்ற தீர்ப்பை குறிப்பிட்டு ஜெயலலிதா அன்பளிப்பு பெற்றது குற்றம் என்றார்.
இதேபோன்று வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவிற்கு 123 நாட்கள் கழித்தே பிணை கிடைத்தது. லல்லுபிரசாத் யாதவிற்கு 75 நாட்கள் கழித்தே பிணை கிடைத்தது. ஆனால் ஜெயலலிதாவிற்கோ 21 நாட்களில் பிணை கிடைத்துவிட்டது. பிணை வழங்கிய அமர்வு தலைமை நீதிபதிகள் எச்.எல்.தத்து தலைமையிலானது ஆகும்.
 ஜெயலலிதாவிற்கு வீட்டுக்காவல் என்ற நிபந்தனை விதித்தாலும் ஏற்றுக்கொள்ள தயார் என்று அவர் வழக்கறிஞர் பாலிநரிமன் கூறினார். ஜெயலலிதா வகையறாவினரின் தனிமனித சுதந்திரத்தை இந்த அமர்வு வலியுறுத்தியது. நிபந்தனைகள் இல்லாமல் பிணை வழங்கியது.சௌதாலா வழக்கு 16.1.2013ல் முடிந்தது. 
கீழமை நீதிமன்றம் அவரை அன்றுதான் தண்டித்தது. எனினும் 2 வருடம் கழித்து 5.3.2015ல் மேல்முறையீடு வழக்கு முடிவுக்கு வந்தது. தண்டனைதான் கிடைத்தது. 
17.10.2014ல் ஜெயலலிதா வகையறாவிற்கு பிணை வழங்கிய உச்சநீதிமன்றம் வழக்கை 3 மாதங்களில் முடிக்க உத்தரவிட்டது. வழக்கு 11.5.2015ல் முடிந்தும்விட்டது. 
இதற்கு காரணம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து காட்டிய ஆர்வம் என்று ஊடகங்களில் செய்தி வருகின்றன. ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கட்ஜு உள்ளிட்டோர் அவரை கடுமையாக விமர்சிக்கின்றனர்.தலைமை நீதிபதி எச்.எல்.தத்து துவக்கம் முதலே சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பை அவர் ஏற்கும் முன்பே ஒரு தடையைச் சந்தித்தார். நிஷா பிரியா பாட்டியா என்ற பெண்மணி தில்லி உயர்நீதிமன்றத்தில் அவர் மீது பாலியல் வழக்கு தொடுத்தார். 
எனினும் தில்லி உயர்நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
ஜெயலலிதா தரப்பினர் வழக்கில் அவர்களுக்கு சாதகமாக பரிவும் கனிவும் காட்டுவதாக நீதிபதி எச்.எல்.தத்து விமர்சிக்கப்பட்டார். அதே சமயம் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அவர் கடுமை காட்டினார்.
 தயாளு அம்மாள் தன்னை விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். 
இந்த மனுவை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது. 
அதிலும் நீதிமன்றத்தில் நீதிபதி எச்.எல்.தத்து தமிழிலேயே பேசினார்.
 எனக்கு ஒன்றும் தெரியாது(இதனை தமிழில் தலைமை நீதிபதி பேசினார்) என்று சிபிஐ கோர்ட்டில் போய் தயாளுஅம்மாள் சொல்லட்டும் என்று கூறினார். 
அந்த மனு தள்ளுபடியானது.
பாரதிய ஜனதாவின் அரசியல் தலையீடும் ஜெயலலிதாவை காப்பாற்றியது என்று கூறப்படுகிறது.
 சிறையிலிருந்து பிணையில் வெளிவந்த ஜெயலலிதாவை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி வீட்டில் போய் சந்தித்தார்.1997லிருந்து ஜெயலலிதா சசிகலா மீது வருமான வரித்துறையில் வழக்கு நிலுவையில் இருந்தது. காம்பவுண்டிங் என்ற பெயரில் ஜெயலலிதா தரப்பு அபராதம் செலுத்தி அந்த வழக்கு முடிவுக்கு வந்தது. 
மத்திய நில அபகரிப்பு மசோதாவிற்கு ஜெயலலிதா ஆதரவும் பிஜேபிக்கு கிடைத்தது. இந்த வழக்கில் நீதி பரிபாலன முறையை நீங்கள் கேலிக் கூத்தாக்குகிறீர்கள் என்று உச்சநீதிமன்றத்தில் முன்பே ஜெயலலிதா கண்டிக்கப்பட்டிருந்தார். 
குற்றத்தை ஒப்புக்கொள்ளும் ஏழையை சட்டம் மன்னித்துவிடுமா?
சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு வாதிட்டவர் ஓய்வுபெற்ற நீதிபதி சுதந்திரம் ஆவார். வழக்கில் தீர்ப்புக்கு முன்பே அவருக்கு ஒரு பதவி கிடைத்துவிட்டது. 
சுற்றுச்சூழல் தமிழக மேல்முறையீடு ஆணையத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுவிட்டார்.

ஜெயலலிதா தரப்பின் வழக்கறிஞர் குழுவின் உழைப்பும் இப்போது பெரிதும் சிலாகிக்கப்படுகிறது. விசாரணையின் போது பவானி சிங் இருக்கையில் கருப்பு, வெள்ளை மையில் வட்டம் வட்டமான பெயர்களுடன் எலுமிச்சை பழம் வைக்கப்பட்டிருந்தாக செய்திகள் வந்தன. மேலும் சில வழக்கறிஞர்கள் நீதிபதி குமாரசாமி எதிரில் மந்திரித்த எலுமிச்சை பழங்களை உருட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்ததாகவும் செய்திகள் வந்தன. (6.3.2015, தமிழ் இந்து).
ஜெயலலிதா தரப்பினரின் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நிச்சயம் மேல்முறையீடு நடக்கும்.கடைசிவார்த்தை இன்னும் மிச்சம் இருக்கிறது.
“ஒரு வழக்கு விசாரணையில் நீதிபதி அமரும் போது அவரும் விசாரணைக்குள்ளாகிறார். அவர் செயல்பாட்டில் தவறு ஏற்பட்டால் சார்பற்ற நிலையிலிருந்து அவர் பிறழ்கிறார் என்று அவர் மீதும் ஒரு கண் வைக்கப்பட வேண்டும் ”என்று நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர்  கூறியுள்ளார்”.
அரசாங்கங்களையும் அரசாங்கத்தை கண்காணிக்கும் நீதிமன்றங்களையும் சேர்த்து மக்களும் கண்காணித்து கொண்டுதான் உள்ளனர்.


எப்படி தருவது.தீர்ப்பை...?
------------------------------------------
கடைசி வார்த்தை மிச்சம் இருக்கிறது!
---------------------------------------------------------------
                                                                       - வெ.ஜீவகுமார்
நேற்றைய தொடர்ச்சி.............
==========================================================================================================
இன்று,
மே -24.

  • 1738 - மெதடிஸ்த இயக்கம் ஜோன் உவெஸ்லியால் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1798 - அயர்லாந்தில் பிரித்தானிய ஆக்கிரமிப்புக்கெதிராக ஐரியர்களின்
  •  எழுச்சி ஆரம்பமாயிற்று.

  • 1844 - முதலாவது மின்னியல் தந்திச் செய்தி சாமுவேல் மோர்ஸ் என்பவரால் வாஷிங்டன் டிசியில் இருந்து மேரிலாந்துக்கு அனுப்பப்பட்டது. அனுப்பப்பட்ட செய்தி: What hath God wrought.
  • 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் வேர்ஜீனியாவின்அலெக்சாண்டிரியா நகரைக் கைப்பற்றினர்.
  • 1883 - நியூ யோர்க்கில் புரூக்ளின் பாலம் திறந்து விடப்பட்டது.
1901 - தெற்கு வேல்சில் இடம்பெற்ற விபத்தில் 78 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.









========================================================================
தமிழக அமைச்சர்கள் பட்டியல்
---------------------------------------------------

1. ஜெயலலிதா -உள்துறை மற்றும் காவல்துறை
2. பன்னீர்செல்வம்- நிதி மற்றும் பொதுப் பணித்துறை
3. நத்தம் விஸ்வநாதன்- மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை
4. வைத்திலிங்கம் - வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் வேளாண் துறை
5. எடப்பாடி பழனிச்சாமி- நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை மற்றும் வனத்துறை
6. மோகன் - ஊரகத் தொழில் துறை மற்றும் தொழிலாளர் நலத் துறை
7. வளர்மதி - சமூகநலத் துறை மற்றும் சத்துணவு திட்டத் துறை
8. பழனியப்பன் - உயர்கல்வித் துறை
9. செல்லூர் ராஜூ - கூட்டுறவுத் துறை
10. காமராஜ் - உணவு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை
11. தங்கமணி - தொழில்துறை
12. செந்தில் பாலாஜி - போக்குவரத்துத் துறை
13. எம்.சி.சம்பத்- வணிகவரி மற்றும் பதிவுத்துறை
14. வேலுமணி- நகராட்சி நிர்வாகம், சட்டம் மற்றும் உள்ளாட்சித் துறை
15. சின்னையா- கால்நடைத் துறை
16. கோகுல இந்திரா- கைத்தறி மற்றும் ஜவுளித் துறை
17. சுந்தர்ராஜ்- விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்
18. சண்முகநாதன்- சுற்றுலாத் துறை
19. என். சுப்ரமணியன்- ஆதிதிராவிடர் நலத்துறை
20. ஜெயபால்- மீன்வளத் துறை
21. முக்கூர் என். சுப்ரமணியன்- தகவல் தொழில்நுட்பத் துறை
22. உதயகுமார்- வருவாய்த் துறை
23. ராஜேந்திர பாலாஜி- செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் அமலாக்கத் துறை
24. பி.வி.ரமணா- பால்வளத் துறை
25. கே.சி.வீரமணி- பள்ளிக்கல்வித் துறை
26. தோப்பு வெங்கடாசலம்- சுற்றுச்சூழல் துறை
27. பூனாட்சி- கதர் மற்றும் கிராமத் தொழில் துறை
28. அப்துல்ரஹீம்- பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை
29. விஜயபாஸ்கர்- சுகாதாரத்துறை துறை.

இதுதான் மே-23 அன்று  மந்தையாக பதவியேற்ற அமைச்சர்கள் பட்டியல்.
{மாறுதல்களுக்கு உடபட்டது.}

=========================================================================================================
புற்று நோய்

 இந்தியாவில் தினசரி 1,300 பேர் உயிரிழப்பு!

-இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு காரணமாக நாள் ஒன்றிற்கு 1, 300 பேர் உயிரிழக்கிறார்கள் என்ற அதிர்ச்சிதரும் தகவல் வெளியாகி உள்ளது. வருடத்திற்கு கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் புற்று நோய் பாதிப்பால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின், தேசிய புற்றுநோய் பதிவகம் சமீபத்தில் தெரிவித்துள்ளது. 
கடந்த 2012 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது புற்றுநோயினால் உயிரிழப்போர் எண்ணிக்கை 6 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, புகையிலை மற்றும் புகையிலை பொருட்கள் பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், நோய் கண்டறியும் வசதிகள் பற்றாக்குறை, அதிகரித்து வரும் வயதான மக்கள் தொகை போன்ற காரணங்களால் புற்றுநோய் இறப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
மேலும் மற்ற புற்று நோயை விட மூளையில் ஏற்படும் புற்றுநோய் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. 
இதில் உலகளாவிய அளவில் 3லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் 10 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்றும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 
இந்நிலையில் 2025 ஆம் ஆண்டுக்குள் புற்று நோயால் உயிரிழப்போர் எண்ணிக்கை, ஐந்து மடங்கு உயரும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் புற்றுநோயை எதிர்கொள்ளும் போதுமான , மருத்துவ வசதிகள் இல்லை.
 சுகாதார உள்கட்டுமானத்தில், புற்றுநோயை ஆரம்ப கண்டறிதல் தடுப்பு, சிகிச்சை மற்றும் நோய்த் தணிப்பு கவனிப்பு உள்ளிட்ட அம்சங்கள் மேம்படுத்தப்பட்டால் மட்டுமே புற்றுநோயை கட்டுப்படுத்த முடியும் என்று புற்றுநோய் சிறப்பு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?