சட்டமாவது,மரபாவது மண்ணாங்கட்டி
முதல்வராக இருந்த ஜெயலலிதாவுடன் சசிகலாவும், சென்னை, போயஸ் தோட்டம் இல்லத்தில் வசித்து வந்தார். அவரைத் தொடர்ந்து, சசிகலாவின் அண்ணி இளவரசியும், போயஸ் தோட்டத்தில் தங்கினார். சசிகலாவும், அவரது உறவினர்களும் தனக்கு எதிராக செயல்படுவதை அறிந்த ஜெயலலிதா, கடும் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து, 2011ல் அதிரடி நடவடிக்கை எடுத்தார்; சசிகலா மற்றும் அவரது உறவினர்களை, போயஸ் கார்டனில் இருந்து விரட்டினார்; கட்சியில் இருந்தும் நீக்கினார்.
அவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்து கொள்ளக் கூடாது என, கட்சியினருக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுத்தார்.சில மாதங்களுக்கு பின், சசிகலா மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார்.
'உறவினர்கள் செய்த துரோகம், எனக்கு தெரியாது.
நான் எந்தப் பதவிக்கும் வர விரும்பவில்லை; விரும்பவும் மாட்டேன்' என, உறுதிமொழி கொடுத்தார்.அதை ஏற்று, சசிகலாவை மட்டும் ஜெயலலிதா சேர்த்துக் கொண்டார்; மற்றவர்களை சேர்க்கவில்லை. ஜெயலலிதா மறையும் வரை, இந்நிலை தொடர்ந்தது.
ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், அவரால் விரட்டி அடிக்கப்பட்ட சசிகலாவின் உறவினர்கள் வரத் துவங்கினர்.ஜெயலலிதா மறைந்ததும், எந்த தடையும் இன்றி போயஸ் தோட்டத்திற்குள் நுழைந்து விட்டனர்.
கட்சியையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, சசிகலாவை பொதுச்செயலராகவும் ஆக்கிவிட்டனர்.
இதற்கு, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; மாறாக, சசிகலா தலைமைக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்தனர்.
இதை விரும்பாத கட்சித் தொண்டர்கள், சசிகலா பேனர் கிழிப்பு உட்பட பல்வேறு வகையில், தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
சசிகலா பொதுச் செயலராவதை ஏற்றுக் கொள்ள முடியாத தொண்டர் ஒருவர், ஜெயலலிதா நினைவிடத்தில் விஷம் குடித்தார். தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு, தற்போது மேல் மட்டத்திலும் பரவத் துவங்கி உள்ளது. அ.தி.மு.க.,வின் வெற்றிக்காக, அனைத்து தொகுதிகளுக்கும் சென்று, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டவர், நடிகர் ஆனந்தராஜ். அவர், 'ஜெ., இடத்தில் வேறு யாரையும் வைத்து பார்க்க முடியவில்லை' எனக்கூறி, அ.தி.மு.க.,விலிருந்து விலகினார்.
ஜெயலலிதாவின் திடீர் மறைவு, பொதுச்செயலராக சசிகலா தேர்வு போன்ற காரணங்களால், அ.தி.மு.க.,வில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால், முக்கிய பேச்சாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்களில், நடிகர் ஆனந்தராஜை தொடர்ந்து, நாஞ்சில் சம்பத், அ.தி.மு.க.,விலிருந்து நேற்று வெளியேறினார்.
இவர்களைப் போல மேலும் பல அதிருப்தி யாளர்களும், மாற்று கட்சிகளுக்கு தாவிட முயற்சி செய்கின்றனர்.
நாஞ்சில் சம்பத் திமுகவுக்கு செல்ல தூது விட்டாலும் திமுகவினர் மதிமுகவினரை சேர்ப்பதில் தயக்கம் கட்டி வருகின்றனர்.
அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்நிலை பேச்சாளர் ஜெயவேல், கட்சியிலிருந்து விலகினார்.
அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில் "ஜெயலலிதாவால், ஐந்து ஆண்டுகள் கட்சியை விட்டு நீக்கப்பட்டு, பின் மன்னிப்பு கடிதம் கொடுத்து இணைந்த சசிகலாவை, பதவியிலிருப்போர் தங்கள் சொத்துக்களை பாதுகாத்துக் கொள்வதற்காக ஆதரிக்கலாம்; அ.தி.மு.க.,வின் அடிமட்ட தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்.
'எம்.ஜி.ஆர்., இரட்டை இலை சின்னத்தை மட்டும் விட்டு விட்டுச் செல்லவில்லை; சின்னம்மாவையும் விட்டுச் சென்றார்' என, பண்ருட்டி ராமச்சந்திரன் கூறிய பிறகு தான், எம்.ஜி.ஆருக்கு ஒரு சின்னம்மா இருப்பதையே தெரிந்து கொண்டோம்.
முதல்வர் என்ற நிலை மறந்து, சசிகலா காலில் விழுந்த பன்னீர்செல்வம் போன்றவர்களை, மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். எனவே, அ.தி.மு.க.,விலிருந்து விலகுகிறேன்." எனக் கூறியுள்ளார்.
முக்கிய பேச்சாளர்களான, நடிகை விந்தியா உட்பட பலர், எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகின்றனர். இச்சூழலில், ஆனந்தராஜை தொடர்ந்து, கட்சியின் நட்சத்திர பேச்சாளரான நாஞ்சில் சம்பத், விலக முடிவு செய்துள்ளார்.
இவர், ம.தி.மு.க.,விலிருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்த போது அவருக்கு, இன்னோவா கார் ஒன்றை, ஜெயலலிதா பரிசாக வழங்கினார்.
அவர் மறைவுக்கு பின், அதிருப்தியில் இருந்த நாஞ்சில் சம்பத், கட்சிஅலுவலகத்தில் நேற்று, இன்னோவா காரை ஒப்படைத்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:" எட்டு மாதங்களாக, கட்சி பிரசார கூட்டம் எதற்கும் செல்லவில்லை; அதனால், காரை பயன்படுத்தவில்லை. என் நண்பர் வீட்டில், காரை நிறுத்தியிருந்தேன். என் சொந்த உபயோகத்திற்கு அதை பயன்படுத்தியதில்லை.
இனியும், பிரசார கூட்டம் எதுவும் நடைபெறுவது மாதிரி தெரியவில்லை. எனவே, காரை வீணாக வைத்திருக்க வேண்டாம் எனக்கருதி, கட்சி அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டேன். கட்சியில் இருந்தும் விலக முடிவு செய்துள்ளேன். மற்ற விபரங்களை, பின்னர் தெரிவிக்கிறேன்."
ஆனந்தராஜ், நாஞ்சில் சம்பத் வரிசையில் மேலும் பல முக்கிய பிரமுகர்கள், கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர்.
விரைவில், அவர்களும் விலகல் முடிவை அறிவிப்பார்கள் என்றே தெரிகிறது.
இன்று,
ஜனவரி-04.
- ஆங்கில அறிவியலாளர் சர் ஐசக் நியூட்டன் பிறந்த தினம்(1643)
- வில்லியம் மெக்டொனால்ட், மெக்டொனால்ட் தீவுகளை கண்டுபிடித்தார்(1854)
- ஃபாபியன் அமைப்பு லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது(1884)
- பிரிட்டன் காலனித்துவ நாடுகளில் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது(1912)
- பர்மா விடுதலை தினம்(1948)
=======================================================================================
அ.தி.மு.க., பொதுச் செயலராகியுள்ள சசிகலாவே, தமிழக முதல்வராகவும் ஆக வேண்டுமென வலியுறுத்தி, லோக்சபா துணை சபாநாயகர் பதவியில் உள்ள தம்பிதுரை அறிக்கை வெளியிட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், லோக்சபா துணை சபாநாயகர் பதவியில் உள்ளவர்கள், 'அரசியல் பேசலாமா, கூடாதா' என்ற கேள்வி எழுந்துள்ளது; இதற்கு, சட்ட விதிமுறைகள் என, தனியாக இல்லையென்றாலும், பார்லி., வழிகாட்டுதல் நெறிமுறை விளக்க புத்தகத்தில், விரிவான பதிலளிக்கப்பட்டு உள்ளது.
லோக்சபா செயலகம் சார்பில் வெளியிடப்பட்டதும், மல்கோத்ரா என்பவரை ஆசிரியராக வைத்து எழுதப்பட்டதுமான, 'பிராக்ட்டீஸ் அன்ட் புரொசீஜர் ஆப் பார்லிமென்ட்' என்ற தலைப்பிலான புத்தகம் தான், லோக்சபா நடைமுறைகளின் வேதப் புத்தகமாக கருதப்படுகிறது.
இந்த புத்தகத்தின், 125, 126, 127 ஆகிய பக்கங்களில், துணை சபாநாயகர் பதவியின் முக்கியத்துவம் கண்ணியம், அந்த பதவிக்கான தார்மீக நெறிமுறைகள் விளக்கப்பட்டு உள்ளன.
அதன் விபரம் கீழே :
துணை சபாநாயகர் பதவி, சபாநாயகர் பதவிக்கு எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல. சபாநாயகரை போலவே, எம்.பி.,க்களால், இவரும் தேர்வு செய்யப்படுகிறார்; சபையின் ஆதரவு உள்ளவரை, அந்த பதவியில் அவர் நீடிக்க முடியும்.
சபாநாயகர் இல்லாத நேரங்களில், துணை சபாநாயகரே, சபையின் தலைவராக செயல்படுகிறார். பல முக்கிய முடிவுகளையும், இவரது தலைமையின் கீழ் எடுக்கலாம்.
சபாநாயகரை போல் அல்லாமல், இவர் சபையில் பேசலாம்.
விவாதங்களில் பங்கேற்று, எம்.பி., என்ற முறையில் பேசலாம். சர்ச்சைக்குரிய வகையிலோ, கட்சி அடையாளம் தெரியும் வகையிலோ, அவரது பேச்சு இருக்கக் கூடாது.
தான் சார்ந்துள்ள கட்சிக்காக, அரசியல் நடவடிக்கையில் ஈடுபட அவருக்கு உரிமை இருந்தாலும், முடிந்தவரை, தீவிர அரசியல் அலுவல்களில் இருந்தும், சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளில் இருந்தும் விலகி இருக்க வேண்டும்.
தான் வகிக்கும் துணைசபாநாயகர் பதவியின் கண்ணியம் கருதி, அந்த பதவிக்கான நடுநிலை தவறாத மாண்பையும் பேணி பாதுகாக்க வேண்டும்.
சபையின் முழுநேர அதிகாரி என்பதால், இவருக்கு என, தனித் தொழில், வர்த்தகம், சுய சார்புடைய வேறெந்த பணிகளிலுமே ஈடுபடக் கூடாது.கடந்த, 1953ல், அப்போதைய சபாநாயகர், மாவ்லங்கர் தலைமையில், மத்திய, மாநில மாகாண சபைகளின் தலைவர்கள் மாநாடு நடந்தது; அதில், 'துணை சபாநாயகர், ஒரு சாதாரண, எம்.பி.,யைப் போல, விவாதங்களில் பங்கெடுப்பதும், அரசாங்கத்தை விமர்சித்துப் பேசுவதும் சரியா' என்ற மிக முக்கியமான கேள்வி எழுப்பப்பட்டது.
மிக நீண்ட விவாதம் நடந்து, அந்த மாநாட்டை முடித்து வைத்து, மவ்லாங்கர் அளித்த பதிலுரை தான், துணை சபாநாயகர் குறித்த கேள்விக்கு விடையாக அமைந்துள்ளது.
மாவ்லங்கர், தன் உரையில் கூறியதாவது: தங்கள் மீது எழுப்பப்பட்டுள்ள இந்த கேள்வியை, ஒவ்வொரு துணை சபாநாயகரும், தங்களை தாங்களே சுயமாக பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டும்.
துணை சபாநாயகர் என்பவர், ஒரு எம்.பி., தான். ஆனால், தாங்கள் ஒரு மாபெரும் சபைக்கு தலைமை தாங்கும் இருக்கையில் அமரக் கூடியவர்கள் என்பதை, அவர்கள் நினைவில் வைக்க வேண்டும்.
விவாதங்களின் போது, தங்கள் நடத்தை எவ்வாறு அமைய வேண்டுமென்பதில், அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். சபைக்குள், எம்.பி.,க்கள் மத்தியில், தன் மீது, கட்சி அடையாளம் விழ விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.இந்த கட்டுப்பாடு, சபைக்கு உள்ளேமட்டுமல்லாமல், சபைக்கு வெளியிலும், தீவிர அரசியலில் ஈடுபாடு காட்டுவதை அவர் தவிர்க்க வேண்டும். மேலும், தான் வெளிப்படுத்தும் ஒவ்வொரு கருத்துக்களிலும், மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என, மாவ்லங்கர் உரையில் கூறப்பட்டு உள்ளது.
இவ்வாறு அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுஉள்ளது.இந்த நெறிமுறைகளை மீறும் வகையில், தம்பிதுரையின், சமீபத்திய நடவடிக்கைகள் அமைந்துள்ளனவா என்ற கேள்வி, தற்போது எழுந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து, பார்லி., வட்டாரங்கள் கூறியதாவது:தார்மீக நெறிமுறைகள் பின்பற்றப்பட்டால் தான், அரசியல் சாசன பதவிகளுக்கே பெருமை. பி.எம்.சயீத், 15 ஆண்டுகளுக்கு மேல் துணை சபாநாயகராக இருந்தார்; அவர், கட்சி சார்ந்து அரசியல் பேசுவதை தவிர்த்தே வந்தார்.ஆனால், தான் வகிப்பது அரசியல் சாசன பதவி என்பது தெரிந்திருந்தும், தன்னை போலவே, மற்றொரு அரசியல் சாசன பதவி வகிக்கும் பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி அளிக்கும் வகையில், தம்பிதுரை பேசுவது ஏற்புடையது அல்ல.
ஒருமுறை, தானும் சபையில் பேச வேண்டுமென தம்பிதுரை கேட்க, அவரது பதவிக்கு, அது பொருத்தமானது அல்ல எனக்கூறி, சபாநாயகர் சுமித்ரா மறுத்தார். ஆனாலும், வலியுறுத்தி அனுமதி பெற்று பேசிய தம்பிதுரை, அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார்.அப்போது, அது சர்ச்சையானது. துணை சபாநாயகர் பதவியில் இருந்து கொண்டே, மத்திய அரசை விமர்சித்ததால் ஏற்பட்ட அதிருப்தியின் வெளிப்பாடுதான், பல முறை தம்பிதுரை நேரம் ஒதுக்கி தரும்படி கேட்டபோதெல்லாம், பிரதமர் தராததற்கு காரணம்.
தற்போது, மீண்டும் தன் அரசியல் நடவடிக்கைகள் மூலம், மவ்லாங்கர் வகுத்து அளித்துள்ள நெறிமுறைகளை, தம்பிதுரை காற்றில் பறக்க விட்டுள்ளார்.
தன் அரசியல் தலைமையை திருப்திபடுத்த, அரசியல் சாசன பதவியை பயன்படுத்தி இருக்கக் கூடாது. குறைந்தபட்சம், துணை சபாநாயகர், 'லெட்டர் பேடில்' அறிக்கை விட்டதையாவது, அவர் தவிர்த்திருக்கலாம்.
தற்போது, மீண்டும் தன் அரசியல் நடவடிக்கைகள் மூலம், மவ்லாங்கர் வகுத்து அளித்துள்ள நெறிமுறைகளை, தம்பிதுரை காற்றில் பறக்க விட்டுள்ளார்.
தன் அரசியல் தலைமையை திருப்திபடுத்த, அரசியல் சாசன பதவியை பயன்படுத்தி இருக்கக் கூடாது. குறைந்தபட்சம், துணை சபாநாயகர், 'லெட்டர் பேடில்' அறிக்கை விட்டதையாவது, அவர் தவிர்த்திருக்கலாம்.
துணை சபாநாயகருக்கு பொருத்தமில்லா செயல் மட்டுமல்ல அப்பதவிக்கு அசிங்கத்தையும் உருவாக்கி விட்டார் தம்பித்துரை.
அதிமுகவில் ஜெயலலிதா காலத்தில் இருந்து அரசு மரபுகள் மீறப்படுவதை ஒரு கொள்கையாகவே உண்டாக்கி விட்டனர்.
அதிமுகவில் அரசு சட்ட திட்டங்கள்,பரம்பரிய செயல்கள்,மரபுகள் கண்டுகொள்ளப்படுவதில்லை.இது மத்திய அரசுக்கு தெரிந்தும் இதுவரை தட்டிக்கேட்டதில்லை.மாறாக ஜெயலலிதா போன்றோருக்கு வைக்கலாத்துதான் வாங்கியிருக்கிறார்கள்.
சட்டமாவது,மரபாவது மண்ணாங்கட்டி என்பதுதான் அதிமுகவினர் செயல்பாடு ஆகிவிட்டது.
இதற்காக தம்பித்துரை மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கலாம்.எடுக்க வேண்டும்.
ஆனால் அதிமுக 50 உறுப்பினர் தேவையை கருத்திற்கொண்டு மோடி கையைக்கட்டிக்கொண்டுதான் இருப்பார்.
மோடி "காஷமீர் .ப்யூட்டிபுல் காஷ்மீர் "நவநீத கிருஷ்ணனை அதிமுக சார்பில் துணை சபாநாயகராக்கலாமே.