"இப்போது பத்திரிகையாளர்களுக்கு தலைவர்களிடம் மரியாதை இல்லை. தலைவர்களுக்கும் பத்திரிகையாளர்களிடம் மரியாதை இல்லை."
ஊடகங்கள் தொடர்பான இரு செய்திகள் இன்று விவாதிக்கப்படுகின்றன. முதலாவதாக பிரேமலதா விஜயகாந்த் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு, இரண்டாவதாக ‘ஹிந்து’ ராமிற்கு எதிராக மத்திய அரசு கொடுக்க முயலும் நெருக்கடிகள். இரண்டுக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா?
இரண்டுமே வெவ்வேறு தளங்களில் பத்திரிக்கையாளர்கள் நடத்தப்படும் விதம் மற்றும் நடந்து கொள்ளும் விதம் தொடர்பானது.
ரஃபேல் ஆவணங்கள் விவகாரத்தில், அரசின் ரகசிய ஆவணங்களை, ராம் திருடி விட்டார் என்ற குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் முன்வைத்தார். ரஃபேல் விவகாரம் தொடர்பாக, சீலிட்ட கவரில் நீதிமன்றத்திடம் அரசு அளித்த ஆவணங்களின் அடிப்படையில், இதில் முறைகேடுகள் ஏதும் நடைபெறவில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் ஹிந்து ராம் வெளிப்படுத்திய ஆவணங்கள் எதையும் நீதிமன்றத்தின் கவனத்துக்கே அரசு கொண்டு செல்லவில்லை. இது நீதிமன்றத்தை ஏமாற்றுகிற செயல்.
பாதுகாப்புத்துறைக்குத் தெரியாமல் பிரதமர் அலுவலகம் பேரம் நடத்தியதன் மூலம் இந்திய அரசின் பேர வலிமையைக் குறைத்தது, ஒப்பந்தத்தில் ஊழல் தடுப்பு ஷரத்துகளை நீக்கியது, வங்கி உத்திரவாதம் இல்லாமல் ஒப்பந்தம் மேற்கொண்டதன் மூலம் முந்தைய அரசு நிர்ணயித்த விலையை விட, அதிக விலை கொடுத்து வாங்கியது என முறைகேடுகளை ஹிந்து ராம் அம்பலப்படுத்தினார்.
இதைத்தான் ஆவணத்திருட்டு என பா.ஜ.க அரசு அலறுகிறது.
அரசு ரகசிய காப்புச் சட்டங்களை அவர் மீறி விட்டார் என மத்திய அரசு குற்றம் சாட்டுகிறது.
ஆனால் ஹிந்து ராம் சட்டரீதியாக இந்த விவகாரத்தில் தனக்குள்ள உரிமைகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். பத்திரிகை உலகமும் அவருக்கு ஆதரவாக ஒன்று திரண்டு வருகிறது. ஒரு நாட்டின் பாதுகாப்போடு தொடர்புடைய விவகாரங்களில், மக்களுடைய வரிப் பணத்தை கையாண்டு மேற்கொள்ளும் ஒப்பந்தத்தில் மத்திய அரசு முறைகேடாக நடந்து கொள்ளும்போது ஊடகங்கள் உண்மையை வெளிக்கொணர வேண்டிய பொறுப்பை மேற்கொள்கின்றன.
மேலும் ஹிந்து ராம் வெளியிட்ட ஆவணங்களில், விமானங்களை வாங்குவது தொடர்பான விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டதும், ஒரு தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக அரசு செயல்பட்டதும்தான் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதே தவிர, அதில் பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் எதுவும் இல்லை.
ஆனால் ரகசியம் என்கிற பெயரில் அரசு தன்னுடைய ஊழலை மூடிமறைக்கவே முயற்சிக்கிறது என்பதுதான் இப்போது பிரச்சினை.
ஆனால் ஆவணங்கள் திருடு போய்விட்டன என்று மத்திய அரசு சொன்னது பூமராங் போல அதனையே திருப்பித் தாக்கத் தொடங்கியிருக்கிறது. ஆவணங்களைகூட பாதுகாக்க முடியாதவர்கள் நாட்டை எப்படி பாதுகாப்பார்கள் என்ற கேள்வியின்முன் அரசு தடுமாறி நிற்கிறது. உடனே ஜகா வாங்கி ’’ நாங்கள் திடுபோனதாகச் சொன்னோமே தவிர பாதுகாப்புத்துறையிடமிருந்து திருடு போனதாகச் சொல்லவில்லை” என இப்போது சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.
பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட ஆவணங்களை பாதுகாப்புத்துறை வைத்திருக்காமல் வேறு யார் வைத்திருப்பார்கள்?
வேறு எங்கிருந்து பெற முடியும்?
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள். தனது முறைகேடுகளை மூடி மறைக்க அரசு இப்போது ஆத்திரத்தை ஹிந்து இதழ் மேல் திருப்புகிறது.
பத்திரிக்கையாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்க, ரஃபேல் போன்ற பெரிய விவகாரங்கள்தான் தேவை என்றில்லை. தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் சந்திப்புகளில், முரண்பாடுகளின் மூட்டைகளாகத் திகழும் தலைவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது ஒரு கேலிக்கூத்தான தொடர்கதையாக இருக்கிறது.
நிர்மலா சீதாராமன் ஊடகவியலாளரிடம் எவ்வளவு பதற்றத்துடன் நடந்துகொண்டார் என்பதை அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்புகளில் பார்த்தோம்.
இன்னோர் உதாரணம் அன்புமணி ராமதாஸ்.
தேர்தல் கூட்டணியில் அவர்கள் அடித்த தலைகீழ் பல்டிகளை பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டியபோது, அன்புமணி ராமதாஸ் பத்திரிகையாளர்களை கடுமையாகவும் கேலியாகவும் நடத்த முயற்சி செய்தார். கேள்வி கேட்ட பத்திரிகையாளரை , “முதல்ல தண்ணி குடிங்க” என்று எள்ள முற்பட்டார்.
உண்மையில் அன்று தண்ணீர் குடிக்க வேண்டிய நிலையில் அன்புமணி ராமதாஸ்தான் இருந்தார். அதிமுகவுடனான கூட்டணிக்கு என்ன அடித்தளம் என்ற கேள்விக்கு அவரிடம் சொல்ல ஒரு நாணயமான பதில்கூட இருக்கவில்லை.
இதனுடைய இன்னொரு உக்கிரமான வடிவமாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு “வா போ” என்று ஏக வசனத்தில் பத்திரிகையாளர்களை அழைத்தார். “நீ எந்தப் பத்திரிக்கை.. நீ எந்த டிவி?’’ என என்று ஒவ்வொருவரையும் மிரட்ட ஆரம்பித்தார்.
அவரது நிலைகுலைவும் பதற்றமும் மிக வெளிப்படையாக தெரிந்தன.
திமுகவுடனும் அதிமுகவுடனும் ஏன் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்ற கேள்விமுன் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்குள் அவருக்கு மூச்சு வாங்கியது.
ஊடகவியலாளர்களை இப்படி மோசமாக நடத்துவதில் பிரேமலதாவுக்கு முன்னோடி அவரது கணவர் விஜயகாந்த்.
இந்த சந்திப்பில் “எப்போதும் எங்கள் வீட்டுவாசலில் காத்துக் கிடந்தால் அதற்காக நாங்கள் பேட்டி தரமுடியுமா?” என்றெல்லாம் பிரேமலதா கேட்டார்.
விஜயகாந்தும் பிரேமலதாவும் ஊடகங்களின் துணை இல்லாமல் அரசியல் நடத்த முடியுமா?
ஒரு அரசியல் கட்சியின் எல்லா செயல்பாடுகளும் ஊடகங்கள் வாயிலாகவே மக்களிடம் சென்று சேர்கின்றன. அந்த வகையில் ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கின்றன.
ஆனால், இந்த பத்திரிகையாளர் சந்திப்பு சர்ச்சைகள் தொடர்பாக வேறொரு விஷயத்தையும் விவாதிக்க வேண்டியிருக்கிறது.
பொதுவாக செய்தித் தொலைக்காட்சிகள் வளர்ச்சி பெற்ற பிறகு நடக்கும் பத்திரிகையாளர் சந்திப்புகள் பிரச்னைகளை விவாதிக்கக் கூடிய ஒரு களமாக இல்லை; மாறாக எந்த முன் தயாரிப்பும் இன்றி கேட்கப்படும் கேள்விகள், அதற்கு எந்த பொறுப்பும் இல்லாமல் சொல்லப்படும் பதில்கள் என்ற அளவில்தான் பல பத்திரிகையாளர் சந்திப்புகள் நடக்கின்றன.
அச்சு ஊடகங்களில் வரக்கூடிய பேட்டிகள் பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கும் செய்தித் தொலைக்காட்சிகளை முன்வைத்து நடத்தப்படும் பத்திரிகையாளர் சந்திப்புகளுக்குமான வித்தியாசங்களை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் எப்போதும் பரபரப்பு, சர்ச்சை என்கிற மனநிலைக்கு ஊடகங்கள் சென்றுவிட்டன.
கேள்வி கேட்கும் பெரும்பாலான செய்தியாளர்கள் பிரச்னைகள் குறித்து தெளிவற்ற பார்வையையே கொண்டிருக்கிறார்கள். எந்த ஓர் அழுத்தமான கேள்வியையும் அவர்கள் கேட்பதில்லை.
பிரேக்கிங் நியூஸ், பரபரப்பு செய்திகள் என்பதற்காக ஒவ்வொரு மணி நேரமும் ஏதாவது ஒன்றை உருவாக்கியபடி தொலைக்காட்சிகள் பரபரத்த மனநிலையில் இருக்கின்றன.
கட்டுக்கதைகள், கற்பனைகள், ஏதேனும் ஒரு தரப்பிற்கு ஆதரவாகவோ எதிராகவோ ஊகச் செய்திகள் என ஒரு பதற்றமான செய்திமுறைமை நிலவுகிறது. இந்தச் சூழலில் பத்திரிகையாளர்கள் சந்திப்புகளில் அவமதிப்புகளும் மோதல்களும் நிகழ்கின்றன.
முந்தைய தலைமுறையைச் சேர்ந்த தலைவர்கள் பத்திரிகையாளர்களை எவ்வளவு கௌரவமாகவும் கண்ணியமாகவும் நடத்தினார்கள் என்பதை பல பத்திரிகையாளர்கள் நினைவு கூர்கின்றனர்.
ஒரு தலைவர் பத்திரிகையாளரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு கலைஞர் சிறந்த உதாரணமாக திகழ்ந்தார்.
ஜெயலலிதா பத்திரிகையாளர்களை சந்திக்க மாட்டாரே ஒழிய, பத்திரிகையாளர்கள் மேல் அவதூறு வழக்கு போடுவாரே தவிர, பத்திரிகையாளர்களை நேரில் கண்ணியக்குறைவாக நடத்த மாட்டார்.
பொதுவாக பத்திரிகையாளர்கள் அரசியல் தலைவர்களிடம் மிகவும் நெருக்கமாக இருந்திருக்கின்றனர்.
அரசியல் தலைவர்கள் பலர் முக்கிய முடிவுகளை எடுக்கும்முன் தங்களுக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களிடம் அந்தரங்கமாக ஆலோசிப்பார்கள்.
இப்போது பத்திரிகையாளர்களுக்கு தலைவர்களிடம் மரியாதை இல்லை. தலைவர்களுக்கும் பத்திரிகையாளர்களிடம் மரியாதை இல்லை. காரணம் பணத்துக்கு செய்தி இப்போது பரவலாகி விட்டது.
இதைக்கொண்டுவந்ததே மோடி கும்பல்தான்.குஜராத் பற்றிய செய்திகள் அப்படித்தான் ஊதிப்பெரிதாக்கப்பட்டன பத்திரிகைகளில்.அதனால்தான் முதல்வராக இருந்த மோடி பிரதமர் நாற்காலியை நோக்கி நகர முடிந்தது.
பத்திரிகையாளர் சந்திப்புகள் ஓர் ஆழமான உரையாடாலுக்கான மக்களிடம் தங்கள் நிலைப்பாடுகளை தெரிவிப்பதற்கான மேடையாக இருக்கவேண்டும்.
ஆனால் உள்ளொன்றுவைத்து புறமொன்று பேசும் தலைவர்கள் தாங்கள் விரும்பும் கேள்விகளையே பத்திரிகையாளர்கள் கேட்கவேண்டும் என்று விரும்புகின்றனர். தமக்கென எந்தக் கொள்கையும் நிலைப்பாடும் இல்லாத தலைவர்கள் கேள்விகளைக் கண்டு பதற்றமடைகின்றனர்.
அரசியலும் ஊடகங்களும் இன்று போட்டி போட்டுக்கொண்டு மதிப்பீடு சார்ந்த வீழ்ச்சிகளை சந்திக்கின்றன. அதன் விளைவுகள்தான் பத்திரிகையாளர் சந்திப்புகளில் வெளிப்படும் ஆணவமும் பதற்றங்களும். மைக்கை நீட்டும் முன் பத்திரிகையாளர்களும், மைக்கில் பேச வாயைத் திறப்பதற்கு முன் தலைவர்களும் கொஞ்சமேனும் தங்களை தயார்படுத்திக்கொள்வது நல்லது.
-மனுஷ்ய புத்திரன்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
மக்களிடம் இருந்து பாதுகாப்பு.?
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி, நாட்டின்
பல மாநிலங்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்து பல்வேறு நலத்திட்டங்களைத்
தொடங்கிவைத்துவருகிறார்.
இந்நிலையில், நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், கங்கை
நதிக்கரையில் இருந்து காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு எளிதாகச் செல்லும்
வகையில், 50 அடி அகலத்தில் 600 கோடி ரூபாய் செலவில், பிரமாண்ட சாலை
அமைக்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தை நேற்று மோடி தொடங்கிவைத்தார்.
இதில், பாதுகாப்பு என்ற பெயரில் அந்தப் பகுதியில் வசித்துவரும் பட்டியலின
மக்களை வீடுகளுக்குள் அடைத்துவைத்துள்ளனர் காவல் துறையினர்.
சாலை அமைத்தல், கோயில் சீரமைத்தல், சிலை கட்டுதல் போன்றவைக்காகத் தங்களின்
நிலம் கையகப்படுத்தப்பட்டு, அநீதி இழைக்கப்படுவதாகவும், தங்களின் உரிமைகள்
மறுக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதுதொடர்பாகத் தங்கள்
தொகுதி மக்களவை உறுப்பினர் மோடியை சந்தித்து மனு அளிக்க உள்ளதாகக் கூறிய
நிலையில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
பிரதமர் வருவதற்கு சில மணி
நேரங்களுக்கு முன்னதாகவே, அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதி
மறுக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 40 குடும்பங்கள் வசிக்கும் பகுதியில்,
அனைவரும் ஒரே இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவசர வேலை என வெளியில்
வந்தவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று வீட்டில் அடைத்துள்ளனர்.
‘மோடி எங்களைப் பார்க்கவே பயப்படுகிறார்.
அதன் காரணமாகவே, இன்றல்ல அவர் இங்கு
வரும்போதெல்லாம் எங்களை அடைத்து வைத்துவிடுகின்றனர்.
இந்த இடத்தை விட்டு
எங்களை வெளியேற்றுவதிலேயே மோடி அரசு குறியாக உள்ளது.
நாங்கள் இந்த இடத்தை
விட்டு ஏன் செல்ல வேண்டும், எங்கு செல்ல வேண்டும்?
எதுவும் தெரியவில்லை.
இது எங்கள் மண். நாங்கள் இதை விட்டுச் செல்ல மாட்டோம்’ என அப்பகுதி மக்கள்
தெரிவித்துள்ளனர்.
 |
வீரர்களின் படத்தை அரசியல் கட்சிகள் பயன்படுத்தக்கூடாது- தேர்தல் ஆணையம் |
கடந்த 26-ம் தேதி, அப்பகுதியில் உள்ள ஒரு கோயில் நிர்வாகிகள்,பாஜகவினர், காவல்
துறையினர் வந்து, அங்குள்ள பட்டியலின மக்களைத் தங்களின் வீடுகளைக்
காலிசெய்யும்படியும் அவர்களால் கோயில் புனிதம் கெடுவதாகவும் கூறியுள்ளனர்.
அப்போது, பெண்கள் மட்டுமே அப்பகுதியில்
இருந்துள்ளனர்.
ஆண்கள் அனைவரும் வேலைக்குச் சென்றுள்ளனர்.
ஆண்கள் வந்த
பிறகு, அவர்களிடம் பேசிக்கொள்ளுங்கள் எனப் பெண்கள் கூறியுள்ளனர்.
ஆனால்,
அதைக் கேட்காத காவல் துறையினர், பட்டியலின மக்களின் வீடுகளைச் சுத்தி மூலம்
தாக்கியுள்ளார். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. இந்தப் பிரச்னையே
இன்னும் முடியாத நிலையில், அடுத்த வாரமே அந்த மக்கள் அடைத்துவைக்கப்பட்ட
சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காவல்துறை யிடம் கேட்டபோது முதல்வர் ஆத்யநாத் ஆணை என்பதுதான் முடித்துக்கொண்டனர்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
===================================================
இன்று,
மார்ச்-10.
பிரிட்டனில் முதலாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது(1801)
ஐவரி கோஸ்ட், பிரெஞ்ச் குடியேற்ற நாடானது(1893)
அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் தொலைப்பேசி அழைப்பை மேற்கொண்டார்(1876)
யுரெனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்(1977)
===================================================
"
ராணுவவீரர்களின் புகைப்படத்தை அரசியல் மேடையில் பயன்படுத்த கூடாது". தேர்தல் ஆணையம்