எவரையும் கொல்லவில்லை.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப் பட்டதாகவும் மத்திய அரசுத் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திகளுக்கான ஆதாரங்கள் எங்கே என்ற குரல் வலுக்கத் துவங்கியிருக்கிறது.
 இந்நிலையில் இப்படி ஆதாரம் கேட்பது எதிரி நாட்டுக்கு சாதகமானது என்று பிரதமர் நரேந்திர மோடி எரிச்சலு டன் கூறத் துவங்கியிருக்கிறார். ஆதாரம் வெளியிட முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியும் கூறி யுள்ளார்.
வாக்குப்பொறுக்கவே போர் ,தேசபக்தி.


விமானப்படை நடத்திய பதிலடி தாக்குதல், பாகிஸ்தானின் எல்லைக்குள்அமைந்திருக்கும் ஜபா என்ற கிராமப் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம்களை அழித்துவிட்டதாக வெளியிடப்பட்ட செய்திகள் குறித்துவிபரங்களை சேகரிக்கும் பொருட்டு இந்திய ஊடங்களும், பல்வேறு நாட்டு ஊடகங்களும் பல முயற்சிகளை மேற்கொண்டன.

 ராய்ட்டர்ஸ், கிறிஸ்டியன் சய்ன்ஸ் மானிட்டர் உள்பட பல்வேறு சர்வதேச ஊடகங்களும், பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படும் தகவலுக்கு ஆதாரம் கிடைக்கவில்லை என்று, கடந்த செவ்வாயன்று நடந்த பதிலடி தாக்குதலைத் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டன.
 இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் ஜபா கிராமத்திற்கே நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.
 இதுதொடர்பாக தி இந்து நாளேட்டின் தில்லி பதிப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்ப தாவது:40 ஜவான்கள் கொல்லப்பட்ட புல்வாமா சம்பவத்திற்குப் பொறுப் பேற்றிருந்த ஜெய்ஷ்-இ-முகமது என்கிற தீவிரவாதக் குழுவின் மிகப்பெரிய பயிற்சிமுகாம் ஒன்று இந்தியத்தரப்பில் செவ்வாய்க் கிழமையன்று நடைபெற்ற தாக்குதலில் அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதுதொடர்பாக அயல்துறை செயலாளர், விஜய் கோகலே கூறுகையில், “இத்தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது குழுவைச் சேர்ந்த பயங்கரவாதிகள், பயிற்சி அளித்துவந்தவர்கள், மூத்த கமாண்டர்கள் மற்றும் பல்வேறு தீவிரவாத ஜிகாதிக் குழுக்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கொல்லப்பட்டார்கள்” என்று கூறியிருந்தார்.

மற்றுமொரு மூத்த அரசு அதிகாரி ஒருவரும் செய்தியாளர்களிடையே கூறுகையில் சுமார் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள் என்று கூறினார்.

ஆனால், வியாழக்கிழமையன்று பேட்டியளித்த மூத்த பாதுகாப்புத்துறை அதிகாரி, மேற்கண்ட கூற்றுக்களில் இருந்து நழுவும் விதத்தில் பதிலளித்தார். செய்தியாளர்கள், இவ்வாறான தாக்குதலில் நம் நாட்டின் யுத்த விமானங்களுக்கு எந்த அளவிற்குப் பாதிப்பு கள் ஏற்பட்டிருக்கின்றன என்று கேட்டபோது, ஏர் வைஸ் மார்ஷல் ஆர்.ஜி.கே. கபூர் பதிலளிக்கையில், “பாதிப்புகள் குறித்த விவரங்களை வெளியிடு வதற்கான காலம் இன்னும் கனிய வில்லை” என்று கூறினார்.
  இந்தியாவின் தாக்குதலில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டார்கள் என்கிற இந்தியத்தரப்பின் கூற்றை பாகிஸ்தான் ஏற்கவில்லை.

இந்தியாவின் ஜெட் விமானங்கள், மக்கள் வசிக்காத மலைப்பகுதிகளில் குண்டுகளை வீசிவிட்டுச் சென்றுள்ளன என்றும் இதில் எவரும் பாதிக்கப்படவில்லை என்றும் பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டது.ஜபா கிராமத்தைச்சேர்ந்த மக்கள், ஜெட் விமானங்கள் குண்டுவீசிய நான்குஇடங்களைக் காட்டி, அவற்றால் சிலபைன் மரங்கள் மட்டும் சேதம் அடைந் திருக்கிறது என்று காட்டினார்கள்.

 அந்தப்பகுதியில் ஒரு வேனில் செய்தி யாளர்களை ஏற்றிச்சென்ற ஓட்டுநர்அப்துல் ரஷீத், “யாரும் இறக்க வில்லை, சில பைன் மரங்கள் மட்டுமே சேதமடைந்தன, ஒரு காகம் இறந்து கிடந்தது” என்று கூறினார்.

மலைப்பகுதிகளில் இருக்கிற மரங்கள் அடர்ந்த ஒரு கிராமம்தான் ஜபா ஆகும். ஓடைகளும் இங்கே ஏராளமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.
 பாகிஸ்தான் நாட்டில் சுற்றுலாப்பயணிகள் விடுமுறைநாட்களைக் கழித்திடும் கோடை வாசஸ்தலங்களில் ஒன்றான காகன் பள்ளத்தாக்கு இதன் அருகில்தான் இருக்கிறது.

 2011இல் அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடன் வசித்த நகரமான அப்பட்டாபாத்திலிருந்து இந்த இடம் சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.
 இக்கிராமத்தில் சுமார் 400இலிருந்து 500 பேர் வரை வசிக்கிறார்கள். இவர்களில் 15 பேரை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பேட்டி கண்டது.
இவர்களில் எவருக்குமே பாதிப்புக்கு உள்ளான எவர் குறித்தும் தெரியவில்லை.ஜபாவில் இருக்கின்ற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் முகமது சாதிக் என்பவரும், தாக்குதல் சம்பவம் நடைபெற்ற அன்றிரவு பாதிப்புக்கு அதிகமானவர்கள் ஆளா னார்கள் என்ற கருத்தை தள்ளுபடி செய்திருக்கிறார்.
“அது ஒரு பொய். அது ஓர் அற்பவிஷயம்,” என்கிற அவர், மேலும், “காயம்அடைந்த ஒருவர்கூட சிகிச்சைக்காக இங்கே வரவில்லை. ஒரேயொருவர் மட்டும் சிறிய காயம் அடைந்தார்.

அவரும்கூட இங்கே கொண்டு வரப்பட வில்லை” என்றார்.
பாலக்கோட்டில் உள்ள மருத்துவ மனையில் மூத்த மருத்துவ அலுவல ராகப் பணியாற்றும் ஜியாவுல் ஹக், செவ்வாய்க்கிழமையன்று பாதிப்புக்கு உள்ளான எவரும் கொண்டுவரப்பட வில்லை என்று கூறியுள்ளார்.இங்குள்ள மக்கள், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு குறித்துக் கூறுகையில், அவ்வியக்கம் இங்கே பயிற்சி முகாம் எதையும் நடத்தவில்லை என்றும்,ஆனால் மதப் பள்ளி (மதராசா), குண்டு கள் வீசப்பட்ட இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் நடத்தப்பட்டு வருகிறது என்றும் கூறினார்கள்.

அந்த மதப் பள்ளிக்கும் எந்த சேதாரமும் ஏற்படவில்லை என்றும் கூறினர்
.இவ்வாறு அச்செய்தி விவரிக்கிறது.
அலுவாலியா
இதற்கிடையில் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ். அலுவாலியா பேசிய  காணொளி  சமூக வலைதளங்களில் வலம் வந்துகொண்டி ருக்கிறது.


அதில் 
" இந்திய அரசு, பாகிஸ்தானை எச்சரிக்கும் விதத்தில் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், எவரையும் கொல்லவில்லை.கொல்ல வேண்டும் என்கிறநோக்கமும் இல்லை ."
என்றும் கூறி யிருக்கிறார்.

இதனைச் சுட்டிக்காட்டி, “அமைச்சர் கூறுவது உண்மை என்றால், அதன் பொருள் இந்த சம்பவம் குறித்து முன்னதாக போர்வெறியைத் தூண்டும் விதத்தில் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளுடன் இந்திய அரசும் ஒத்துப்போயி ருக்கிறது என்றாகிறது,” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளது.

இதனிடையே பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை அழித்ததற்கான ஆதாரங்களைக் கேட்டு, ராணுவத்தின் மீது நம்பிக்கை இழக்கச் செய்யும் வகையில் எதிர்க்கட்சிகள் பேசுவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
 பீகார் மாநிலம் பாட்னாவில் நடை பெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடியும், அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமாரும் கலந்து கொண்டனர்.
 இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம்களை அழித்ததை எண்ணி ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டார்.

ஆனால் நமது சொந்தமண்ணைச் சேர்ந்த சிலர் சர்ஜிகல்தாக்குதல் தொடர்பாக சந்தேகங்களை எழுப்புவதாகவும், தாக்குதல் தொடர் பான ஆதாரங்களை எதிர்க்கட்சிகள் கேட்கத் தொடங்கி இருப்பதாகவும், இது எதிரி நாட்டுக்கு பயன் விளை விக்கும் என்றும் கூறினார்.


இந்நிலையில், பாகிஸ்தானிற்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை அழித்தது குறித்த ஆதாரத்தை பகிர்ந்து கொள்ள மத்திய அரசு மறுத்துள்ளது.இதுகுறித்து பதில் அளித்துள்ள நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, எந்த ஒரு பாதுகாப்பு தாக்குதல் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொள்ளாது என்றார்.

 இவ்வாறு கேட்பது பொறுப்பற்ற நிலைப்பாடு எனத் தெரிவித்த அருண்ஜெட்லி, ஆதாரம் கேட்போர் பாதுகாப்பு முகமைகளின் தன்மையை புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம் எனவும் கூறினார்.
ஆனால் 400  பலி என்று பாஜக ஆதரவு ஊடகங்கள் செய்தி வெளியிடுவதற்கு ஆதாரம் கொடுத்தது யார்.?

அந்த செய்தியைத்தைத்தானே உலக நாடுகள் ,ஊடகங்கள் தவறு என்கிறது.
அதை உண்மை என்று தெளிவுபடுத்தும் கடமை ,இறையாண்மை இந்தியாவுக்கு உள்ளது அல்லவா?

அல்லது உலகநாடுகளின் கிண்டலுக்கு ஆளான அந்த 400 பேர்கள் அழிப்பு செய்தி தவறானது என்றால் அதை வெளியிட்ட ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாய கடமை நம் பாதுகாப்புத்துறைக்கு உள்ளது என்பதை ரபேல் விமானம் இருந்தால் இன்னும் நன்றாக பாதிப்பு இருக்கும் என்று மேடையில் முழங்கும் பிரதமர் மோடி மறுக்க முடியாது.

காரணம் இந்தியாவையே உலகநாடுகள் ஐயம் நிறைந்த கண்களுடன் ,கேலிப்புன்னகையுடன் பார்க்கவைத்த இந்நிகழ்வு உங்களைப்போன்றல்லாமல் உண்மையிலேயே இந்திய தேசபக்தி,நம் படை வீரர்களைப்பற்றி பெருமைக்கொள்ளும் ஒவ்வொரு இந்தியனுக்கும் இழுக்காகவே தெரிகிறது.

====================================================

ன்று ,
மார்ச்-04.

சீன வானியலாளர்கள் முழுமையான சூரிய கிரகணத்தை கண்டறிந்தனர்(1275)
எமிலி பேர்லீனர், மைக்ரோபோனைக் கண்டுபிடித்தார்(1877)
பிரிட்டனின் முதலாவது மின்சார டிராம் வண்டி, கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது(1882)
கொலம்பியா 16 விண்ணோடம் ஏவப்பட்டது(1994)
அசாம் மாநிலம், அசோம் என பெயர் மாற்றப்பட்டது(2006)
====================================================
 ராணுவத்தை இழிவுபடுத்துவது பாஜக பரிவாரம்தான்.
‘நம்முடைய அனைத்து ராஜ தந்திரங்களும் தோற்றுவிட்டனவே’ என்றுஇம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தில் புலம்புவது போல ஆகிவிட்டது பிரதமர் மோடியின்நிலைமை.

கடந்த நான்கே முக்கால் ஆண்டுகளில் இந்திய மக்களுக்கு எதிராக ஒரு உள்நாட்டுயுத்தத்தையே மத்திய பாஜக கூட்டணி அரசுநடத்தியது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி என அடுத்தடுத்து இவர்கள் வீசிய குண்டுகளால் நாட்டில் பாதிக்கப்படாத வீடுகளே இல்லை.
இதனால், மக்கள் கடும் அதிருப்தியில்உள்ளனர். கடந்த தேர்தலில் வர்ணம் அடிக்கப்பட்ட ‘வளர்ச்சி நாயகன் மோடி’ என்ற வாசகங்கள் நிறம் இழந்து பல் இளிக்கின்றன.

‘ஏழைத்தாயின் மகன்’ என்ற படமும் ஓடவில்லை. ‘டீ விற்றவன் நாடாளக் கூடாதா?’ என்று அடிக்கடி பேசிய பஞ்ச் டயலாக் ஓவர்மேக் அப் காரணமாக எடுபடவில்லை.

மறுபுறத்தில் இவரது துவக்க கால கூட்டாளியான பிரவீன் தொகாடியா மோடி ஒருபோதும் டீ விற்றதே இல்லை என்று கூறியதும், வசூலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.
கடைசியில், பாகுபலி போல அவர்கள் வெகுவாக நம்பிய படம் பயங்கரவாத எதிர்ப்பு.
புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம்அடைந்தனர், கார்கில் போர் படக் கதையை தழுவி, மீண்டும் ஒரு பிரம்மாண்டமான படமாகஎடுக்கலாம் என்று நினைத்தார்கள்.

புல்வாமாதாக்குதலில் இவ்வளவு பாதுகாப்பு குறைபாடுகள் ஏன் என்ற கேள்விக்கும் உளவுத்துறையின் தோல்விக்கு யார் பொறுப்பேற்பது என்றகேள்விக்கும் இவர்களிடம் பதில் இல்லை.
பாஜக அரசு மீதான விமர்சனங்களை நாட்டுக்கு எதிரானது போலவும், ராணுவத்திற்கு எதிரானது போலவும், திசை திருப்ப மோடியும், அருண் ஜெட்லி , அமித்ஷா போன்றவர்களும் முயற்சி செய்து பரிதாபமாக தோற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
என்மீது உள்ள கோபத்தை நாட்டின் பாதுகாப்பின் மீது காட்டாதீர்கள், பாதுகாப்பு படையினரை கொச்சைப் படுத்தாதீர்கள் என குமரியில் பேசிவிட்டு போயிருக்கிறார் பிரதமர் மோடி.
நம் நாட்டு ராணுவவீரர்கள் மீதும் அவர்களது அர்ப்பணிப்பு மற்றும்தியாகத்தின் மீதும் நாட்டு மக்கள் அனைவரும் உயர்ந்த மரியாதை வைத்துள்ளனர்.

அவர்கள்மீது யாருக்கும் வெறுப்பு இல்லை. அவர்களைதங்களது சொந்த வீட்டுப் பிள்ளையாகவே இந்தியர்கள் அனைவரும் கருதுகிறார்கள். இந்திய மக்கள் வெறுப்பது மோடி ஆட்சியைத்தான், ராணுவத்தினரை ஓய்வூதியப் பிரச்சனையில் வஞ்சித்தது யார்? என்பதை நாடு நன்கு அறியும்.
எனவே, மோடிக்கு எதிரான விமர்சனங்கள் மூலம் அவர்கள், நாட்டை எதிர்க்கிறார்கள் என்று அவரே கூறிக் கொள்வது அபத்தமானது. கரக்காட்டக்காரன் படத்தில் ‘நாதஸ் திருந்திவிட்டான்’ என்று ஒருவர்கூற, யார் இப்படிச் சொன்னார்கள் என்று கேட்டதற்கு, ‘நாதஸே சொன்னான்’ என்று கூறி கதையாகத்தான், என்னை எதிர்ப்பவர்கள் நாட்டை எதிர்க்கிறார்கள் என்று மோடி கூறுவதும் உள்ளது.

மோடி என்கிற தனிமனிதன் மட்டுமே நாடு அல்ல.
 இன்னும் சொல்லப்போனால், மோடியை எதிர்ப்பவர்கள் நாட்டுக்கு ஆதரவானர்கள் என்பதுதான் உண்மை.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய விமானங்கள் குண்டு வீசியது குறித்து பொய்யான தகவல்களை பரப்பியது பாஜக மற்றும் அவர்களுக்கு வெண் சாமரம் வீசும் ஊடகங்களும்தான்.

பயங்கரவாத முகாமில் பலி எண்ணிக்கை 400 -500 என இஷ்டத்திற்கு அள்ளிவிட்டார்கள்.
நமது மதிப்புமிக்க தளபதிகள் பலி எண்ணிக்கை குறித்து உறுதியான தகவல் இல்லை என்று தர்ம சங்கடத்தோடு மறுக்க வேண்டிள நிலையை ஏற்படுத்தியது பாஜகதான்.
இப்போது, சந்தடி சாக்கில்,தன்னுடைய அரசின் ஊழல் நடவடிக்கையை நியாயப்படுத்தராணுவத்தின் நடவடிக்கையை இழிவான முறையில் இழுக்கிறார் பிரதமர் மோடி.


 ரபேல் விமானபேர ஊழல் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அம்பானிக்கு ஆதரவாக ஒப்பந்தத்தை திருத்தி ஒரு நாட்டின் பிரதமரே இடைத்தரகர் போல செயல்பட்டதும், உச்ச நீதிமன்றத்திற்கே தவறான தகவல்களை அளித்ததும் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்தப் பின்னணியில், இந்தியாவிடம் ரபேல் போர் விமானங்கள்இருந்திருந்தால், இன்னும் நிறைய சாதித்திருக்கலாம் என அழகாக ஊழலையும் நாட்டின்பாதுகாப்பையும் முடிச்சுப் போடுகிறார் மோடி.

இப்போது நடந்த தாக்குதலில் கூட, மிராஜ்ரக போர் விமானங்கள் சிறப்பாகவே செயல்பட்டுள்ளன.
 கார்கில் போரைத் தொடர்ந்து இந்த விமானங்களை கூடுதலான எண்ணிக்கையில் அன்றைய பாஜக அரசுதான் வாங்கியது.
 இப்போது ரபேல் விமான பேரத்தை அம்பானிக்குஆதரவாக முடித்துள்ளதால், மிராஜ் ரக விமானங்களை குறை கூறுகிறார் மோடி.

 போர் விமான தயாரிப்பில் எந்த அனுபவமும் இல்லாத, அம்பானிநிறுவனத்திடம் அலாக்காக தூக்கி தருவதால், தேசத்தின் எதிர்கால பாதுகாப்பு குறித்துஅச்சம் எழுகிறது.

மோடி தனது ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களையும் ராணுவத்திற்கு எதிரானதாக மடை மாற்றம் செய்ய முயலும் பஞ்ச தந்திரம் அறுந்து தொங்குகிறது.
ஒருபுறத்தில் போர், போர் என்று கத்திக் கொண்டே, மறுபுறத்தில் உள்நாட்டு விமான நிலைய பராமரிப்பை அதானி நிறுவனங்களுக்கு அள்ளி வழங்கிய அம்பானி- அதானி பாணி தேச பக்திதான் மோடி வகையறாவுக்கு உள்ளது.

 ராணுவத்தினரின் தாக்குதலால், கர்நாடகத்தில் பாஜகவுக்கு 22 தொகுதி உறுதிஎன்று உளறுவாயர் எடியூரப்பா வெளிப்படையாக கூறியதைத்தான் பாஜகவினர் மனதுக்குள் கணக்குப்போட்டு வைத்திருந்தனர்.

தன் உயிரைப் பணயம் வைத்து நாட்டுக்காக போராடிய அபினந்தன் படத்தைக் கூட தங்களது தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதன் மூலம்ராணுவத்தினரை இழிவுபடுத்துவது பாஜகவினர்தான்.

21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்குச் சொந்தமானதாக இருக்கும் என்று மோடி அடிக்கடி கூறுகிறார்.
அது நிச்சயம் நடக்கும்.

 ஆனால், அந்தஇந்தியா எந்தவிதமான மத பயங்கரவாதத்திற்கும் இடமில்லாத, அனைத்து இந்தியர்களுக்குமான இந்தியாவாக இருக்கும்.
                                                                                                                                  -மதுக்கூர் இராமலிங்கம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------







இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?