தூங்கும் போதும் தூங்காத மூளை.

”மனிதர்கள் தூங்கும்போதும் அவர்களின் மூளை தொடர்ந்து விழிப்புடன் இயங்குகிறது என்று தெரிவித்திருக்கும் விஞ்ஞானிகள், வார்த்தைகளின் பொருள் புரிந்து அதற்கேற்ற செயல்களை செய்விக்கும் அளவுக்கு மனித மூளை, மனிதர்கள் தூங்கும்போதும் விழிப்புடன் செயல்படுகிறது ”
என்று நிரூபித்திருக்கிறார்கள்.
கேம்பிரிட்ஜ் மற்றும் பாரிஸைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அதில் பங்கேற்பாளர்கள் விழித்திருக்கும்போது ஒரு வார்த்தைக்கட்டளையை பிறப்பித்து, அந்த கட்டளையை ஏற்று அந்த பங்கேற்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட செயலை செய்யும்படி பணிக்கப்பட்டார்கள். 
இந்த சோதனையின்போது இந்த பங்கேற்பாளர்கள் விழித்திருக்கும்போது செய்யப்பழகிய செயல்களை தூங்கும்போதும் அதே மாதிரி கட்டளை பிறப்பிக்கப்பட்டதும் தொடர்ந்து செய்தார்கள். இதன் முடிவில் மனிதர்கள் தூங்கும்போதும், அவர்களின் மூளை சிக்கலான அதேசமயம் தன்னிச்சையாக செய்யக்கூடிய செயல்களை செய்யும் என்பதை இந்த ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த ஆய்வின் முடிவுகள் கரெண்ட் பயாலஜி என்கிற விஞ்ஞான சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களிடம் சில சொற்கள் பேசப்பட்டன. அந்த சொற்கள் குறிப்பிடுபவை விலங்குகளா அல்லது பொருட்களா என்று பங்கேற்பாளர்கள் பிரித்தறியவேண்டும். குறிப்பிட்ட சொல் விலங்குகளை குறிக்கும் சொல்லாக இருந்தால் அவர்கள் தங்களின் வலது பக்கத்தில் இருக்கும் பொத்தானை வலது கையால் அழுத்தவேண்டும். 
மாறாக சொல்லப்படும் சொற்கள் பொருட்களை குறிப்பனவாக இருந்தால் பங்கேற்பாளர்கள் இடது பக்கத்தில் இருக்கும் பொத்தானை இடது கையால் அழுத்தவேண்டும். இது தான் சோதனை.
இந்த பரிசோதனையை அவர்கள் விழித்திருக்கும்போது ஆரம்பித்த ஆய்வாளர்கள், அவர்கள் இருளான அறைக்குள் உறங்கும்போதும் அந்த சோதனைகளை தொடர்ந்தனர். பங்கேற்பாளர்கள் ஆழ்ந்த உறக்க நிலைக்கு சென்றபிறகும் கூட, அவர்களிடம் இந்த வார்த்தை விளையாட்டு தொடர்ந்து நடத்தப்பட்டது. உறங்கிய நிலையில் இருந்த பங்கேற்பாளர்களும் தாங்கள் கேட்ட வார்த்தைகளுக்கு ஏற்ப வலது மற்றும் இடதுகைகளில் இருக்கும் பொத்தான்களை மாற்றி மாற்றி அழுத்தியபடியே இருந்தனர். இந்த ஒட்டுமொத்த பரிசோதனையும், ஈஈஜி என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் electroencephalogramஐ பயன்படுத்தி மூளையின் ஒட்டுமொத்த செயற்பாடும் பதிவு செய்யப்பட்டது.
அலாரம் கேட்டு விழிப்பது மூளையின் விழிப்பால் நடக்கிறது
இந்த பரிசோதனையின் போது பங்கேற்பாளர்கள் தூங்கிய பிறகு அவர்களிடம் புதிய சொற்களைப் பயன்படுத்தியும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த புதிய சொற்களை வகைப்படுத்த மூளை கூடுதலாக வேலை செய்யும் வகையிலான சொற்களாக அவற்றை விஞ்ஞானிகள் தேர்வு செய்திருந்தனர். அப்படியிருந்தும் தூக்கத்தில் இருந்தவர்களின் மூளை இந்த புதிய சொற்களையும் சரியாக தரம்பிரித்து அதற்கேற்ற சரியான பொத்தான்களை அழுத்தச் செய்தது. ஒரே வித்தியாசம் இந்த புதிய சொற்களை தரம்பிரிப்பதற்கு மூளைக்கு கூடுதல் நேரம் தேவைப்பட்டது. அவ்வளவே.
இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான பாரிஸைச் சேர்ந்த சித் கவ்தெர் இதுவரை தாங்கள் நம்பியிருந்ததைவிட தூங்கும்போதும் மனிதர்களின் மூளை கூடுதல் விழிப்புடன் இருப்பதை இந்த ஆய்வுகள் நிரூபித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
பெயரைச் சொல்லி அழைத்தால் விழிப்பு வருவது ஏன்?
ஒருவர் தூங்கும்போதும் கூட அவர் பெயரைச்சொல்லி அழைக்கும்போது அவர் விழிப்படைவதும், கடிகாரத்தின் குறிப்பிட்ட அலார ஒலிக்கு ஒருவர் எழுந்துகொள்வதும் கூட இதே காரணத்தின் அடிப்படையில் நடக்கும் மூளையின் செயற்பாடுகளே என்றும் அவர் விளக்குகிறார்.
ஒருவர் தானாக செய்யக்கூடிய எந்த ஒரு செயலையும் அவர் உறங்கும் நிலையில் கூட அவரது மூளை செய்யவல்லது என்பதை தங்களின் ஆய்வுகள் உறுதி செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பொதுவாக மனிதர்கள் தூங்கினாலும் அவர்களின் மனசாட்சி தூங்காது என்பார்கள் சமூகவியலாளர்கள். அறிவியலாளர்களின் இந்த ஆய்வின் முடிவுகளோ மனிதர்கள் தூங்கினாலும் அவர்களின் மூளைகள் விழிப்புற்றே இருக்கின்றன என்பதை காட்டியிருக்கின்றன.
தகவல்.தமிழ் பி.பி.சி.
----------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?