ஞாபகக் குறைவு[அல்சீமர்] நாள்...?
மூளையில் ஏற்படும் நோய்களில் ஒன்று 'டிமென்ஷியா'.
இதில் பாதிக்கப்பட்டவருக்கு 3 வகை தொந்தரவு இருக்கும்.
ஞாபகசக்தி,
புரிந்து கொள்ளும் தன்மை,
முடிவெடுக்கும் தன்மை
போன்றவற்றில் குறைவு ஏற்படுவது இயல்பு.
இதில் ஞாபகசக்தி குறைவது முக்கியமானது. இதன் தொடர்ச்சியாக பேசுவது, எழுதுவதுகூட என்னவென தெரியாமல் போக வாய்ப்பு உள்ளது.ஒரு செயலை செய்வதில் தடுமாற்றம் வரும். உதாரணமாக, வங்கிக்கு சென்று பணத்தை டிபாசிட் செய்ய, வீட்டில் தயாராகி, வாகனம் பிடித்து, வங்கி சென்று, படிவம் நிரப்பி, பணத்தை செலுத்துதல்... என பல படிநிலைகள் உள்ளன. இதில் சிலவற்றை மறந்து, செயல்படுவதில் தடுமாறலாம்.சாதாரணமாக ஒருவருக்கு சிறியஅளவில் ஞாபகமறதி இருப்பது பெரிய விஷயமல்ல. அதேசமயம் பெரியஅளவில் இருந்தால் அதற்கு 'டிமென்ஷியா' என்று பெயர். ஜப்பான் போன்ற முதியோர் அதிகமுள்ள வளர்ந்த நாடுகளில் இந்நோயாளிகள் அதிகம்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகனும் இப்பாதிப்புக்கு உள்ளானவரே.இந்நோய் திடுதிப்பென்று வந்துவிடுவதில்லை. மிகவும் மெதுவாக உருவாகி தீவிரத்தன்மை பெறும். இதற்கு பல மாதங்கள், ஆண்டுகள் கூட ஆகலாம்.
இப்பாதிப்பு ஏற்பட முதன்மையான காரணம், 'அல்சீமர்' எனப்படும் ஞாபக குறைவுதான். எனவேதான் இதுபற்றிய விழிப்புணர்வுக்காக, ஒவ்வொரு ஆண்டும் செப்.,21ம் தேதி 'உலக அல்சீமர் நோய் தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது.
'டிமென்ஷியா' ஏற்பட 60 முதல் 70 சதவீத காரணம் இதுவே.இதுதவிர ரத்தக்குழாய்களில் பலமுறை அடைப்பு ஏற்படுவது, இதனால் மூளையின் பல பகுதிகளில் தொந்தரவு ஏற்படுவதும் காரணம். ரத்தக்குழாய் அடைப்புக்கு ரத்தக்கொதிப்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவு, கொழுப்பின் அளவு அதிகரிப்பு காரணங்களாக உள்ளன.
புகைபிடிப்போர், அதிக மதுஅருந்துவோருக்கும் இப்பாதிப்பு ஏற்படும். அபூர்வமாக தலையில் ஏற்படும் காயங்களும் காரணமாக அமைகின்றன.'டிமென்ஷியா' பாதிப்பு ஏற்பட்டவருக்கு, 'இல்லாதது' எல்லாம் 'இருப்பது' போலவும் தோன்றும். வீட்டில் இல்லாத ஒருவரை இருப்பதாகக் கருதி பயம் கொள்வர்.
வேறு சிலருக்கு, பிறருடன் பழகும் தன்மை அல்லது ஆளுமைத் திறனில் (பெர்சனாலிட்டி) பாதிப்பு வரலாம்.
அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. பாரம்பரியம் காரணமாக ஒருவரது நெருங்கிய ரத்தஉறவு உள்ளவருக்கும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
ரத்தஅழுத்தம், சர்க்கரை, கொழுப்புச் சத்து அதிகமுள்ளவர், புகை, மதுப்பழக்கம் உள்ளவருக்கும் வாய்ப்புகள் அதிகம். வேலையே செய்யாது, உடல், மனரீதியான இயக்கம் இல்லாதவர்கள், மூளையை பயன்படுத்தாமல் உள்ளவர்களுக்கு இப்பாதிப்பு வருவதற்கு வாய்ப்பு அதிகம்.
'டிமென்ஷியா' வந்துவிட்டால் அதன் அறிகுறி மிகவிபரீதமாக இருக்கும். அன்றாட செயல்பாடு குறைவதால் வாழ்க்கை பாதிக்கும்
. காலையில் சந்தித்துப் பேசிய ஒருவரை, மாலையில் சந்தித்தால், புதிதாக சந்திப்பது போல பேசுவர்.தாம் இருக்கும் இடம், பொருள் பற்றி பேசுவதற்கு வார்த்தை வராமல் தடுமாறுவர். எதிலும் தொடர்ச்சியாக கவனம் செலுத்த இயலாது. இதனால் செயல்பாடுகளில் முடிவெடுக்க இயலாமல் தவிப்பர். அவர்களுக்கு நன்கு தெரிந்த இடம்கூட தெரியாமல், அவர்கள் தொலைந்து போகவும் வாய்ப்பு உள்ளது.
தெளிவாக முடிவெடுக்க முடியாமல், தங்கள் தவறை நியாயப்படுத்தவும் நினைப்பர். அதனால் வீண்கோபம், சண்டை என குழப்பம் ஏற்படுத்துவர். சிலர் இவை எதுவுமே இன்றி, மிகவும் சாதுவாக மாறவும் வாய்ப்பு உள்ளது.இப்பாதிப்புக்கு காரணம், 50 வயதுள்ள ஒருவரின் மூளையின் செல்கள், 100 வயதுக்காரருக்கு உரியது போல மாற்றம் காண்பதே. வயதாவதை தடுக்க முடியாதது போல, 'டிமென்ஷியா' அல்லது 'அல்சீமர்' வருவதையும், அது அதிகரிப்பதையும் தடுக்க முடியாது.
இந்நோய் பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படாது. ஆனால் வயதாகும் போது, தற்காத்துக் கொள்ள இயலாமல் பாதிக்கப்பட்டவர் தடுமாறி விழலாம். நிமோனியா காய்ச்சல், சிறுநீர் குடலில் தங்கி கிருமிகள் ஏற்படுவது போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
நோயாளிகளின் நடவடிக்கைகளை கேட்டறிவது, அவரை உடலளவில் பரிசோதிப்பது மூலம் கண்டறியலாம்.
ஸ்கேன் போன்ற வேறு பரிசோதனைகள் மூலம் அறிய முடியாது. ஆனால் உடலில் அதற்கு காரணமாக வேறு ஏதாவது நோய் அல்லது பாதிப்புகள் இருப்பின் கண்டறியவே, ஸ்கேன் பரிசோதனையை மருத்துவர்கள் மேற்கொள்வர். அவற்றை சரிசெய்வது மூலம் இந்நோய் பாதிப்பை சரிசெய்ய முடியும்.'டிமென்ஷியா' அல்லது 'அல்சீமர்' நோயை முழுமையாக சரிசெய்ய மருந்துகள் இல்லை.
மூளையில் 'அசிடைல் கோலின்' என்ற தாதுப்பொருளை அதிகரிக்க மருந்துகள் உள்ளன. இதனால் ஞாபகசக்தியில் முன்னேற்றம் காண வாய்ப்பு உண்டு.இந்நோயாளிகளை உளவியல் நிபுணரின் உதவியுடன் பராமரிக்க வேண்டும்.
இவர்களை அன்புடன் அரவணைத்துச் செல்வது முக்கியம். மறதியால் தொலைந்து போவதை தடுக்க, கையில் முகவரியுடன் கூடிய பித்தளை காப்பை அணிவிக்கலாம்.ஒரே நேரத்தில் பல வேலைகளை கொடுக்கக் கூடாது. வாகனங்களை ஓட்டவும், பெண்களை சமையல் செய்ய அனுமதிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
இவர்கள் நன்கு துாங்குவதற்கு மருந்து கொடுப்பதை தவிர்த்து, லேசான உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் இவர்களை பாதுகாக்க முடியும்.
நன்றி:தினமலர். -டாக்டர் ஸ்.மீனாட்சிசுந்தரம்
நன்றி:தினமலர். -டாக்டர் ஸ்.மீனாட்சிசுந்தரம்
91 வயதிலும் ஞாபக சக்தி கலைஞருக்கு அதிகம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஞாபகசக்தி அதிகரிக்க...
வல்லாரை கீரையைச் சட்னியாக அரைத்துச் சாப்பிடலாம். அதிலுள்ள Asiaticosides, மூளைச் சோர்வு தராமல் அறிவைத் துலங்கவைக்கும் என்று நவீன அறிவியல் நம் பாரம்பரியப் புரிதலுக்குச் சான்று அளிக்கிறது. கொத்துமல்லி சட்னி அரைப்பதுபோல் கொஞ்சம் மிளகாய் வற்றல், கொஞ்சமாக புளியைச் சேர்த்து சட்னியாக அரைத்து தோசைக்குச் சாப்பிடலாம். வல்லாரை தோசை, வல்லாரை சூப் இன்றைக்கு பாரம்பரிய உணவகங்களில் பிரபல உணவும்கூட.
'பிரமி’ - பாரம்பரிய மருத்துவத்தின் பிரபலமான ஞாபகசக்தி மருந்து. மறதியை நீக்கவும், ஞாபகசக்தியை அதிகரிக்கவும் இதில் உள்ள Baccosides பயன் அளிப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இது, நீரோடைப் பக்கம் நிற்பதால் 'நீர்ப் பிரமி’ என்றும் அழைக்கப்படும்.
சித்த மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படும் வாலுளுவை அரிசி எனும் மூலிகையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில், மறதிக்கு மருந்து எடுக்கும் முயற்சி இன்றும் ஆய்வில் உள்ளது. நீதி வழங்கும் முன் அலசி ஆராய(!) அந்தக் கால நீதிபதிகள் இதில் இரண்டு அரிசி எடுத்து வாயில் போட்டுக்கொள்வார்களாம்.
DHA - ஞாபகமறதி நீக்க பயன்படும் சத்து மீனில் இருந்தும், ஃபிளாக்ஸ் விதையில் இருந்தும் இதை உணவில் அன்றாடம் பெற்றுக்கொள்ள முடியும்.
வல்லாரையோ, பிரமியோ எதுவாக இருந்தாலும் நாம் எடுக்கும் முயற்சியில்தான் பயன் அளிக்குமே தவிர, சுவர் ஏறிக் குதித்து படம் பார்த்துவிட்டு குப்புறப் படுத்துத் தூங்கும் பிள்ளைக்கு, சந்தனக் காப்பு அரைத்துக் குளிப்பாட்டினாலும் எதுவும் நினைவில் நிற்காது!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------