தினமும் 10 தொலைபேசி மிரட்டல்கள்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் முதலாவது அரசு வக்கீலாக ஆஜராகியவர் ஆச்சாரியா. 
பாஜக, அதிமுகவினர் அளித்த நெருக்கடியால் அந்த பதவியில் இருந்து விலகியதாக அவர் தனது சுய சரிதையில் குறிப்பிட்டு பரபரப்பை கிளப்பியிருந்தார்.
 இந்நிலையில் இந்து நாளிதழுக்கு ஆச்சாரியா அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியுள்ளதாவது: 
"என்னுடைய சொந்த ஊர் உடுப்பி பக்கம், ஒரு அழகான கிராமம். சென்னை சட்ட கல்லூரியில், சட்டம் பயிலுவதற்காக 1953-ல் மங்களூருவில், ‘மெட்ராஸ் மெயில்' ரயிலேறி சென்னை சென்ட்ரல் போய் இறங்கினேன். புதிய ஊர், புதிய மனிதர்கள், பல வித்தியாசமான கலாச்சாரங்கள் எனக்கு நிறையக் கற்றுக்கொடுத்தது அன்றைய மெட்ராஸ். 
உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த அனந்த நாராயணன் எனக்கு அப்போது சட்ட‌க் கல்வி போதித்தார். 
ஐஸ்ஹவுஸ் வெங்கடேஸ்வரா விடுதியில் தங்கியிருந்தேன். அடிக்கடி கடற்கரைக்குப் போவேன். இப்போதெல்லாம் மெட்ராஸை நினைத்தால் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்குதான் நினைவுக்கு வருகிறது. அங்கிருந்து வரும் யாரும் அதைப் பற்றியே விசாரிக்கிறார்கள். 
சமீபத்தில் பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாயிடம் பேசிக்கொண்டிருந்தபோதுகூட, "சென்னை பக்கம் போயிடாதீங்க சார். ஜெயலலிதா ஆதரவாளர்கள் உங்கள் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார்கள்" என்று கிண்டல் அடித்தார். 
எவ்வளவு திறமையான வழக்கறிஞராக இருந்தாலும் தீர்ப்பை 100 சதவீதம் சரியாகக் கணிக்க முடியாது.
 வழக்குகளும் வாழ்க்கை மாதிரிதான்.
 நிறைய ஆச்சரியங்களும் எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்தவை. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைப்பது உறுதி என்று ஊகித்தேன். 
அது நடந்தது. 
ஜெயலலிதா வழக்கிலிருந்து விலகுமாறு பாஜக மேலிடமும் கர்நாடக அரசும் என்னை ராஜினாமா செய்யுமாறு அழுத்தம் கொடுத்திருந்தாலும், நாகரிக‌த்தின் அடிப்படையில் அவர்கள் பெயரை குறிப்பிடவில்லை. ஜெயலலிதா தரப்பை எதிர்த்து வழக்காடும் அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்யும்படி பாஜக மேலிடத் தலைவர்கள் சிலர் எனக்கு தொலைபேசி மூலமாகவும் நேரிலும் நெருக்கடி கொடுத்தார்கள். அப்போதைய கர்நாடக பாஜக அரசும்கூட (சதானந்த கவுடா முதல்வர்), "உங்களுக்கு எதற்கு வீண் சிக்கல்? 
அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அட்வகேட் ஜெனரல் பதவியைத் தொடருங்கள். 
தேவைப்பட்டால் வேறு சில வசதிகளும் ஏற்பாடு செய்கிறோம்" 
-என அனுதாபம் காட்டுவதுபோல் மிரட்டியது. 
நான் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஜெயலலிதாவின் வழக்கில் அரசு வழக்கறிஞராகத் தொடர்ந்தேன். 
இதனால் என் மீது அவர்களுக்குக் கடுங்கோபம் ஏற்பட்டது. 
ஜெயலலிதாவின் வழக்கு காலத்தில் எனக்கு தினமும் 10 தொலைபேசி மிரட்டல்களாவது வரும். 
கண்டபடி திட்டுவார்கள். 
ஒருகட்டத்தில், கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், லோக் ஆயுக்தா நீதிமன்றத்திலும் என் மீது அவதூறு வழக்குகளைத் தொடுத்தார்கள். 
நீதிமன்ற வளாகத்தில் அவதூறான துண்டறிக்கைகளைப் பரப்புவது, சுவரொட்டிகளை ஒட்டுவது, சாலையில் காரை இடிப்பது போன்று வருவது... இப்படிப் பல வகைகளிலும் தொல்லைகள் வரும். 
எனக்கு மன உளைச்சல் தந்தது இவையெல்லாம் கூட இல்லை, 
ஜெயலலிதா தரப்பில் தினமும் மனு மேல் மனு போட்டு வழக்கை இழுத்தடித்தார்கள். 
ஒரு வருஷத்தில் முடிய வேண்டிய வழக்கு முடிவே இல்லாமல் நீண்டது. அதனால்தான், நிம்மதி இழந்து ராஜினாமா செய்தேன்.
 நான் கருணாநிதியின் ஆதரவாளர் என்று கூறுவதாக வெளியாகும் செய்திகள், நானே கேள்விப்படாத பொய்யாக இருக்கிறது. 
கருணாநிதியை இதுவரைக்கும் டிவியில் மட்டுமே பார்த்திருக்கிறேன். அன்பழகனின் வழக்கறிஞர்கள் என்னைச் சந்திக்க முயன்றிருக்கின்றனர். ஆனால், நான் மறுத்துவிட்டேன். பணம், சொத்து, பதவி, புகழ் எல்லாவற்றையும்விட எனக்கு தர்மமும் என்னுடைய கொள்கையும் முக்கியம். ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.
 நான் ஒருபோதும் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் இருந்ததில்லை; ஆதரவாகவும் செயல்பட்டதில்லை. 
அரசு வழக்கறிஞராக என் கடமையைச் செய்தேன். 
அவ்வளவுதான். 
எனக்கு எதிர்த் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்களைப் பற்றிக் கருத்து சொல்வது சரியாக இருக்காது. ஆனால், ஒரு விஷயம் சொல்லலாம். சொத்துக்குவிப்பு வழக்கை ஜெயலலிதா அணுகிய முறை தவறு.
 அவர் இத்தனை வருஷங்கள் வழக்கை இழுத்தடித்திருக்கக் கூடாது. 
அவர் தவறாக வழிநடத்தப்பட்டதாகவே நான் நினைக்கிறேன். 
2013-ல் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்த‌ம் மேற்கொள்ளப்படும் முன்பே இந்த வழக்கை முடித்திருந்தால், இதே தீர்ப்பு வந்திருந்தால்கூட ஜெயலலிதா இப்போது சட்டப்பேரவை உறுப்பினராகத் தொடர்ந்திருக்க முடியும்." 
இவ்வாறு ஆச்சாரியா கூறியுள்ளார். 
வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னர் ஒருமுறை ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடியவர். 
தற்போது உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வாதாடி ஜாமீன் பெற்றுத் தந்திருக்கிறார்.
 ஒரு மூத்த வழக்கறிஞரே ஒரே வழக்கில் இப்படி எதிராகவும், ஆதரவாக வாகவும் வாதிடுவதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, "இது தவறு. எதிர்கால தலைமுறைக்கு தவறான முன்னு தாரணமாக அமைந்துவிடும். என்னைப் பொறுத்தவரை எல்லாவற்றையும்விட வழக்கறிஞர்க‌ளுக்கு முக்கியம் தர்மம். 
தான் உண்மை என்று நம்பும் விஷயத்தின் மீதான உறுதியான பிடிப்பு" என்றும் ஆச்சாரியா கூறியுள்ளார். 
மேலும், வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் சிறிதளவேனும் தொழில் தர்மத்தையும் தார்மீக நெறியையும் கடைப்பிடித்து, அறத்தைக் காக்க வேண்டும்.
 இந்திய ஜனநாயகத்தில் நீதித் துறையும் தன்னுடைய மாண்புகளை இழந்துவிட்டால், எளிய மனிதனின் இறுதி நம்பிக்கையாக இங்கு என்ன இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் ஆச்சாரியா.


=========================================================================


 "மின் கொள்முதலில் ஊழல்!"
----------------------------------------------------  ''தமிழகத்தில் மின் உற்பத்தி குறித்தும், புதிதாகத் தொடங்கப்படும் மின் உற்பத்தித் திட்டங்கள் எப்போது உற்பத்தியைத் தொடங்கும் என்றும் தமிழக அரசின் மின் துறை அமைச்சர் ஒரு நீண்ட அறிக்கையினைக் கடந்த 29-11-2014 அன்று வெளியிட்டிருக்கிறார்.


இதற்கிடையே 'தனியாரிடம் செய்யும் மின் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது;
 இதுகுறித்து விசாரித்து, மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வ நாதனை, முதல்வர் பன்னீர்செல்வம் நீக்க வேண்டும்' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டியளித்துள்ளார். 
மேலும் அவர், 'நெய்வேலி மற்றும் கூடங்குளம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து, மின்சாரத்தை கொள்முதல் செய்ய, யூனிட்டுக்கு 3 ரூபாய் விலை கொடுக்கும் போது, தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யும் மின்சாரத்துக்கு, யூனிட்டுக்கு 15.14 ரூபாய் விலை கொடுக்கக் காரணம் என்ன? 
தமிழக மின்துறை செய்யும் கொள்முதலில், பெரும் ஊழல் நடந்துள்ளது' என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.

இந்தத் தகவலுக்கு மற்றுமோர் ஆதாரமாக, நடப்பு நிதியாண்டில், மின்சாரம் வாங்குவதற்கான செலவாக ரூ.27 ஆயிரத்து 147 கோடியை மின் வாரியம் மதிப்பிட்டுள்ளது. இதில் மத்திய மின் நிலையங்கள், காற்றாலை மற்றும் சூரியசக்தி மின் நிலையங்கள், வெளி மாநில மின் விற்பனை நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இருந்து வாங்கும் விலையைவிட குறிப்பிட்ட நான்கு தனியார் மின் நிலையங்களுக்கு மட்டும் அதிகப்பட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதனால் மின் வாரியத்துக்குக் கொள்முதல் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. 

மத்திய மின் நிலையங்களான நெய்வேலி, கல்பாக்கம், வல்லூர், தேசிய அனல் மின் கழகத்தின் ராமகுண்டம் மற்றும் கூடங்குளம் அணு மின் நிலையம் ஆகியவற்றில் இருந்து சராசரியாக ஒரு யூனிட் ரூ.2.94 மற்றும் ரூ.3.85 என்ற விலைக்கு வாங்கத் திட்டமிட்டுள்ளது.

 காற்றாலை, சூரிய சக்தி, உயிரி தொழில் நுட்பம் போன்ற தனியார் மின் நிலையங்களிலிருந்து ரூ.4.26க்கும், தனியார் மின் விற்பனை நிறுவனங்கள் மற்றும் சுயதேவை மின் உற்பத்தி தனியார் நிறுவனங்களிடமிருந்து ரூ.4.76க்கும் மின்சாரம் வாங்கப்படுகிறது.
இந்த நிலையில், தனியார் மின் நிறுவனங்களான சாமல்பட்டி, மதுரை பவர் கார்ப்பரேஷன், பிள்ளை பெருமாள்நல்லூர் மின் நிறுவனம் மற்றும் ஜி.எம்.ஆர். ஆகிய நான்கு நிலையங்களில் இருந்து ஒரு யூனிட்டுக்கு அதிகப்பட்சமாக ரூ.15.14 என்ற விலையில் மின்சாரம் வாங்கப்படுகிறது.
 4 நிறுவனங்களிடம் இருந்து மொத்தம் ரூ.1,208 கோடிக்கு வெறும் 798 மில்லியன் யூனிட் மட்டும் வாங்கப்படுகிறது. 
ஸ்.டி.சி.எம்.எஸ்., லேன்கோ மற்றும் பயனிர் ஆகிய நிறுவனங்களிடமிருந்து யூனிட்டுக்கு ரூ.5.14க்கு மின்சாரம் வாங்கப்படுகிறது. இந்த நிறுவனங்களில் இருந்து 2,865 மில்லியன் யூனிட் மின்சாரத்தை ரூ.1,473 கோடிக்கு வாங்க மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 
நடப்பு நிதியாண்டில் மொத்தம் 65 ஆயிரத்து 870 மில்லியன் யூனிட் மின்சாரம், ரூ.27 ஆயிரத்து 147 கோடியே 5 லட்சத்துக்கு வாங்குவதாக தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்துக்கு மின்வாரியம் விவரங்களை அளித்துள்ளது. 
தமிழக மின் வாரியத்தின் மொத்த வருவாயில் சுமார் 55 சதவிகிதத்தை மின்சாரம் வாங்குவதற்கே செலவிடுவதால்தான், இழப்பு அதிகரித்து வருகிறது. 
தனியார் நிறுவனங்களிலிருந்து மின்சாரம் வாங்குவதற்கு, ஒழுங்கு முறை ஆணையத்தில் மின்வாரியம் முறைப்படி அனுமதி பெற்று நியாயமான விலை நிர்ணயித்து வாங்க வேண்டும். 

ஆனால் ரூ.5.50க்கு மேல் தனியாரிடம் மின்சாரம் வாங்கினால் நட்டம் அதிகரிக்கும் என்று ஒழுங்கு முறை ஆணையம் எச்சரித்த நிலையிலும், 
இன்னும் கூறவேண்டுமேயானால் இந்த நான்கு தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்யக் கூடாது என்று ஒழுங்கு முறை ஆணையம் 30-3-2012ல் வெளியிட்ட ஆணையிலே தெரிவித்த போதும்,
 கடந்த இரண்டாண்டுகளாக குறிப்பிட்ட அந்த நான்கு நிறுவனங்களிடமிருந்து எந்த அத்தியாவசியமும் இல்லாத நிலையில்,
 அதிகப்பட்சமாக ரூ.15 என்ற அளவுக்கு தொகை கொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. 
கடந்த 2013 ஏப்ரல் முதல் 2014 மார்ச் வரை சுமார் 22 ஆயிரத்து 90 கோடி ரூபாய்க்கு மின்சாரம் வாங்கப்பட்டதில், தனியாரிடமிருந்து மட்டும் 16,280 கோடி ரூபாய்க்கு மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது.

மற்றவர்களிடம் எல்லாம் மின்சாரத்தைக் குறைந்த விலையில் வாங்கும் மின் வாரியம், தனிப்பட்ட இந்த நான்கு பேரிடமிருந்து மட்டும் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவதின் காரணம் என்ன?

 இதுபற்றி திரும்பத் திரும்ப இந்த அரசின் மீது புகார் கூறப்பட்ட போதிலும், தமிழக அரசோ, முதலமைச்சரோ, அந்தத் துறை அமைச்சரோ அதைப்பற்றி பதிலே அளிக்கவில்லையே; 
பதிலே அளிக்காமல் இருப்பதில் இருந்தே, அதிலே ஏதோ தவறு நடப்பது ஊர்ஜிதமாகிறதா அல்லவா?'' 

========================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?