திங்கள், 9 மார்ச், 2015

"கொக்கோ+ கோலா'= எமன்.கேரளாவில் இருந்து அடித்து விரட்டப்பட்ட கொக்கோ கோலா 300 கோடி ருபாய் மூலதனத்தில் 71.3 ஏக்கரில் பெருந்துறையில்அமைய இருக்கும் ஆலை நிர்வாகம் 05-03-2015 அன்று கொடுத்துள்ள பத்திரிக்கை செய்திக்கு மறுப்பு...
இன்றைய சில நாளிதழ்களிலும் கொக்கோ- கோலா ஆலை நிர்வாகம் தெரிவித்து உள்ளதாக கூறி செய்திகள் வந்துள்ளன.
coke“1. உலகத் தரம் வாய்ந்த நாங்கள், நிலத்தடியில் இருந்து நீரை எடுத்து பயன்படுத்தப் போவதில்லை. 
சிப்காட் தொழில்பேட்டைக்கு வரும் காவிரி ஆற்று நீரைத்தான் எடுத்துப் பயன்படுத்துவோம்.
 எக்காரணம் கொண்டும் நிலத்தடிநீரை ஆலை தனது தயாரிப்புக்கு பயன்படுத்தாது.
2. ஆலையில் வெளிவரும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை ஆலையை சுற்றி உள்ள எந்த பகுதிக்கும் திருப்பி விட மாட்டோம்.
அதை எங்களது விவசாய நிலங்களில் உள்ள பயிர்களுக்கு பயன்படுத்தப் போகிறோம். 
எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை
3.தேவையற்ற பதட்டத்தைப் போக்க எவ்வித ஒளிவுமறைவுமின்றி வெளிப்படையாக பதிலளிக்க தயாராக உள்ளோம்...
-” என தெரிவித்து உள்ளனர் எனக்கூறி பணத்தை வாங்கிக்கொண்டு பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.
கொக்கோ- கோலா ஆலை நிர்வாகம் தெரிவித்து உள்ளதில் உள்ள அப்பட்டமான பொய்கள். 
 இதோ அவர்களை நோக்கி சில கேள்விகள்:
1.அ). இங்கு நிலத்தடியில் இருந்து நீங்கள் விரும்பினால் கூட நீரை எடுத்து பயன்படுத்த முடியாது. 
காரணம் இப்பகுதியில் உள்ள அனைத்து நீராதாரங்களும் உங்களைப் போன்ற ’உலகத் தரம் வாய்ந்த’ நிறுவங்களால் ஏற்கனவே மாசுபடுத்தப்பட்டு கிட்டத்தட்ட சாகும் தருவாயில் உள்ளது.
1.ஆ). ”சிப்காட் தொழில்பேட்டைக்கு வரும் காவிரி ஆற்று நீரைத்தான் எடுத்துப் பயன்படுத்துவோம்” என நீங்கள் கூறியுள்ளீர்கள். 
ஆனால் இந்த காவிரி தண்ணீரைக் கொண்டு வரும் புது திருப்பூர் மேம்பாட்டு நிறுவனத் (New Tirupur Area Development Corporation Limited (NTADCL))தை நடத்தும் பன்னாட்டு நிறுவனமான பெக்டெல்(Bechtel ) தனது நோக்கமாக தெரிவித்து உள்ளதில் ”இத் திட்டத்தின் மூலம் (Position Tamil Nadu as the premier location for textile (knitwear export) industry.) தமிழகத்தை பின்னலாடை துறையில் ஏற்றுமதியை மிகவும் அதிகரித்து மிக உயர்ந்த இடத்திற்க்கு கொண்டு செல்வது . அதாவது உள்ளூர் தொழிலான பின்னலாடை தொழிலை அபரிதமாக வளர்ச்சி அடைய செய்து அதன் மூலம் ஏற்றுமதியை அதிகரித்து அன்னிய செலாவணியை பெற்று தமிழகத்தை முன்னேற்றுவது மற்றும் பணம் பெற்றுக் கொண்டு திருப்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்வது மற்றும் கழிவுநீர் அகற்றுவது” என அறிவித்து உள்ளது.
இதில் உங்களது நிறுவனம் எதை ஏற்றுமதி செய்து அன்னிய செலாவணியை பெற்றுக் கொடுத்து எமது தமிழகத்தை மிக உயர்ந்த அந்தஸ்துக்கு(Position Tamil Nadu as the premier location) கொண்டு செல்லப் போகிறது. 
அடிப்படையில் புது திருப்பூர் மேம்பாட்டு நிறுவன நோக்கத்திற்க்கும், உங்களது செயல்பாட்டுக்கும் எந்த பொருத்தமும் இல்லை.
நோக்கம் என்று சொல்வதெல்லாம் மக்களை ஏமாற்ற சொல்வதற்க்கு சொல்லப்படுவது என நீங்கள் சொன்னால், நோக்கம் என்று எங்களை எப்போதும் எதுவும் கட்டுப்படுத்தாது என்றால், அது காகிதத்தில் உள்ளது மட்டும்தான் என நீங்கள் கூறினால் உங்களுக்கு அரசு அனுமதி கொடுத்தது சரிதான்.
1.இ). தமிழகத்தில் காவிரி ஆற்றின் பிரச்சினை ஏதாவது உங்களுக்கு தெரியுமா?
 பல நூறு ஆண்டுகளாக காவிரி ஆற்றில் சுமார் 400 டி.எம்.சி வரை பெற்று வந்த தமிழகம் (15 மாவட்ட குடிநீர் -25 லட்சம் ஏக்கர் விவசாயம்), 2007 -இல் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பால் 192 டி.எம்.சி என சுருங்கியது.
அந்த 192 டி.எம்.சி நீரும் கர்நாடக அரசு அங்கு உள்ள அணைகளில் தேக்கி வைக்க முடியாத நிலையில்தான் தமிழகத்திற்க்கு திறந்து விடப்பட்டு வருகிறது. 
தமிழகத்தில் காவிரி வடிகாலாக மட்டுமே மாற்றப்பட்டு உள்ளது.இதனால் காவிரி டெல்டா பாசனம் 25 லட்சம் ஏக்கரிலிருந்து தற்போது 14 லட்சம் ஏக்கர் என சுருங்கியும், முப்போகம் என்பது ஒரு போக சாகுபடியாகவும் மாற்றப்பட்டு விட்டது. 
இந்நிலையில் உங்களது கொள்ளை லாபத்திற்க்காக எங்களின் வாழ்வாதாரமான காவிரி தண்ணீரையே எடுத்து, அதை விசமாக மாற்றி எங்களுக்கு பல பெயர்களில் விற்க முனைவது அறமா?
 நேர்மையா?
கோக் நிறுவனம் விசத்தை விற்கிறதா?
 எனக் கேட்கலாம். 
ஆம் . 
அது கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பே நிரூபனம் ஆனதால் டெல்லி பாராளுமன்ற வளாக கேண்டீனிலும் (மோடி சில நாள் முன்பு சாப்பிட்டாரே அங்குதான்), சென்னை அண்ணா பல்கலைகழக வளாகத்திலும் கோக், பெப்சி விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளது.
1.ஈ). நீங்கள் ஆலை அமைக்க அரசு ஒதுக்கப்பட்டுள்ள பகுதியை சுற்றி, இந்தியா விடுதலை பெற்றதாக சொல்லப்படும் காலத்தில் இருந்து நிலத்தடி நீர்மட்டம் உயர அவினாசி-அத்திக்கடவு திட்டம் வேண்டும் என கூறி இப்பகுதி மக்கள் 67-ஆண்டுகளாய் போராடி வருவது உங்களுக்கு தெரியுமா?
நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி குடிநீருக்கும், கால்நடைகளின் குடிநீர் தேவையை கூட நிறைவு செய்யாத தமிழக அரசு, தனது தேர்தல் வாக்குறுதியாக 1977-முதல் அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றுவோம் எனக் கூறும் அ.இ.அ.தி.மு.க.அரசு, தண்ணீரையே எடுத்து விற்பனை பண்டமாக்கும் உங்களுக்கு அனுமதி கொடுத்தது எப்படி?
 1.உ). சிப்காட் நில எடுப்பு நட்ந்த போது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நிலம் ஒரு ஏக்கர் ரூ.60,000/= முதல் 1,00,000/= வரை கொடுத்து எங்களிடம் அரசு கையகப்படுத்தியது.
 இன்றைக்கு அந்த நிலத்தின் பணமதிப்பு சுமார் 4,00,000/=(சுமார் 4 லட்சம்). விவசாய நிலம் சமப்படுத்தி சாலை அமைத்து, சாக்கடை வசதி செய்து பல்வேறு வசதிகள் செய்த பின்பு இன்று ஒரு ஏக்கர் நிலம்சுமார் 10,00,000/=(சுமார் 10லட்சம்) ஆகிறது.

ஆனால் உங்களுக்கு மட்டும் தமிழக அரசால், ஒரு ஏக்கர் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிலத்தை, ஒரு ஏக்கர் நிலம் ரூ.1.00/= வீதம் 71 ஏக்கர் நிலம் ரூ.71.00/= க்கு தாரை வார்க்கப்பட்டு உள்ளதே எப்படி?

இப்படித்தான் தொழில் வளர்ச்சி அடைகிறதா கொக்கோ- கோலா மூலம் தமிழகம்?

நீங்கள் அரசுக்கும், சுற்றுச்சூழல் அமைச்சருக்கும் ’காட்டிய அன்பிற்காகவா’ சுற்றுச்சூழல் அமைச்சர் கொக்கோ- கோலா ஆலையை எதிர்த்து போராடும் தனக்கு வாக்களித்த மக்களுக்கு மறைமுகமாக பல்வேறு நெருக்கடி கொடுத்து வருகிறார்?
2. அ). “ஆலையில் வெளிவரும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை ஆலையை சுற்றி உள்ள எந்த பகுதிக்கும் திருப்பி விட மாட்டோம்.
அதை எங்களது விவசாய நிலங்களில் உள்ள பயிர்களுக்கு பயன்படுத்தப் போகிறோம்.
 எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை ”
இப்படி சொல்வது அமெரிக்காவின் கொக்கோ- கோலா ஆலையான உங்களுக்கு புதியதாக இருக்கலாம். 
ஆனால் இப்படி சொல்லிக் கொண்டு நேர்மாறாக செயல்பட்டு வருவதைக் கண்ட எங்களுக்கு பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இப்படி பதில் சொல்லும் 100 ஆவது நிறுவனம் நீங்கள்.
எல்லோராலும் கேள்வி கேட்க முடிந்த உள்ளூர் சாயப்பட்டரை நிறுவங்களே, இதை விதிப்படி செய்யாமல் எண்ணற்ற தில்லுமுல்லுகளை செய்ததால்தான், சிப்காட் பகுதியை சுற்றியுள்ள 15 கிலோ மீட்டர் தூரம் முழுக்க அனைத்து நிலத்தடி நீராதாரங்கள் கெட்டுப் போய், குளங்கள் எல்லாம் விசமாக மாறி விட்டன.பலமுறை இந்த அயோக்கியத்தனத்தை கையும் களவுமாக பிடித்துக் காட்டினாலூம் மீண்டும். மீண்டும் இது தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
உள்ளூர் முதலாளிகளே அரசையும், அதிகாரிகளையும், அரசியல் தலைவர்களையும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு, அனைத்து தவறான வேலை செய்து வரும் போது, உலகத்தை ஒட்ட சுரண்டும் அமெரிக்காவின் அதிபரை தீர்மாணிக்கும் நிலையில் உள்ள அமெரிக்காவின் கொக்கோ- கோலா நிறுவனம் செய்யும் தவறை ஒழுங்குபடுத்த உங்களிடம் யார் வர முடியும்?

2. ஆ). நீங்களோ காவிரி நீரை எடுத்து பயன்படுத்தப் போவதாக தெரிவித்து உள்ளீர்கள். அப்படி எனில் வாங்கப்பட்ட நிலத்தில் 10 ராட்சச போர் உங்களால் போடப்பட்டு இருப்பது எதனால்?
ஆலையில் வெளிவரும் கழிவுநீரை ஆலையை சுற்றி உள்ள எந்த பகுதிக்கும் திருப்பி விட மாட்டோம் எனச் சொல்லிக் கொண்டு அந்த ராட்சச போர்களில் கழிவுநீர் விடப்படும் என்பதுதானே உண்மை. 
இப்படி கழிவுநீரை ராட்சச போர்களில் விடும் ’திரு(ட்டு)பணியை’ தமிழகத்தில் பல ஆலைகள் செய்து எங்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு உள்ளது என்பது எதார்த்தம்.
2. இ). ”ஆலையில் வெளிவரும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை”என்று நீங்கள் கூறுவதில், கழிவுநீரை 0% சுத்திகரிக்கப்படும் என கூறுகிறீர்கள் என புரிந்து கொள்ள முடிகிறது.
0% சுத்திகரிக்கப்படும் நீரை மீண்டும் உங்கள் ஆலையின் மூலப் பொருளாக பயன்படுத்துவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது. 
இப்படி இந்தியாவில் உள்ள உங்களது 40 மேற்பட்ட ஆலைகளில் ஏதாவது ஒன்றில் ஆவது பயன்படுதியது உண்டா?

2. ஈ). ”ஆலையில் வெளிவரும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை” என்று நீங்கள் கூறுவதில், கழிவுநீரை 0% என சுத்திகரிக்கப்படும் என கூறுகிறீர்கள். அப்படியெனில் உங்களால் எங்கள் வாழ்வு அழிக்கப்பட்டு பாதிக்கப்பட்டோம் என கேரளா பிளாச்சிமாடா மக்கள் 10 ஆண்டு காலம் இடையறாது போராடி உங்களை விரட்டியது ஏன்?

அமெரிக்காவின் கொக்கோ- கோலா ஆலை 200 கோடி ருபாய், கேரளா பிளாச்சிமாடா பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடாக வழங்கவும், விவசாய நிலங்களை மேம்பாடு செய்து தர வேண்டும் என அரசு உத்திரவிட்டது ஏன்?
கடந்த 8 மாதத்திற்க்கு முன் ”ஆலையில் வெளிவரும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை” பொறுத்துக் கொள்ள முடியாமல் வாரணாசியில் உள்ள உங்களது கொக்கோ- கோலா ஆலை இழுத்து சீல் வைக்கப்பட்டது ஏன்?
 
2. உ).தாமிரபரணி ஆற்று நீரை 5 லட்சம் லிட்டெர் எடுப்பதாக 2005-இல் அனுமதி வாங்கி இன்று 20 லட்சம் லிட்டர் எடுத்து வரும் அமெரிக்காவின் கொக்கோ- கோலா ஆலை இயங்கும் நெல்லை கங்கை கொண்டான் சிப்காட் பகுதி மக்கள், அங்கு இன்னொரு அமெரிக்கா நிறுவனமான பெப்சியை அனுமதிக்க மாட்டோம் என கண்ணீர் விட்டு போராடி வருவது எதனால்?.
உங்கள் மேல் கொண்ட அன்பாலா?

இல்லை...இல்லை. அங்கு அவர்கள் வாழ்வாதாரம் அனைத்து அழிந்து நாசமாகி வருவதால்... இதை உங்களால் மறுக்க முடியுமா?
2. ஊ). தமிழகத்திலோ, அல்லது வேறு பகுதிகளில் உள்ள உங்களது ஆலை இயங்கும் பகுதிக்கு, இப்பகுதி மக்களையும், சுற்றுசூழல் ஆர்வலர்களையும் கூட்டிச் சென்று கொக்கோ- கோலா ஆலையை சுற்றியுள்ள பகுதிக்கும். அப்பகுதியில் உள்ள மக்களையும், நிலம், நிலத்தடி நீர் ஆகியவைகளை ஆய்வு செய்ய நேரில்அழைத்து சென்று காட்ட நிர்வாகம் தயாரா?
3.அ). “தேவையற்ற பதட்டத்தைப் போக்க எவ்வித ஒளிவுமறைவுமின்றி வெளிப்படையாக பதிலளிக்க தயாராக உள்ளோம்...” என தெரிவித்து உள்ளதைப் பற்றி
நீங்கள் வரும் முன்பே உங்களால் ஏற்படும் அபாயங்களை, பாதிப்புகளை, வாழ்வாதாரம் அழிப்புகளை அனைத்தும் நேரில் உணர்ந்து விட்டோம். உங்களின் சதி -சீர்குலைவு வேலைகள், மிரட்டல்கள், கொக்கோ- கோலா ஆலையை எதிர்த்த நெல்லை கங்கை கொண்டான் ஊராட்சி தலைவர் கம்சன் மர்ம மரணம், அடக்குமுறைகள் , அச்சுறுத்தல், விலைபேசி மயக்குதல் என அனைத்து நிலைமைகளையும் எப்படி எதிர்கொள்வது என அறிந்து வைத்து உள்ளோம்.
எங்களின் மண்ணில் நீங்கள்(கொக்கோ- கோலா ஆலை) வேண்டாம் என்று நாங்கள் சொன்னால், முடியாது என்ன செய்தாவது எப்படியும் வந்தே தீருவோம் என நீங்கள் முடிவு செய்தால் அதையும் எங்கள் உயிரைக் கொடுத்தாவது, மக்களை திரட்டி தடுத்தே தீருவது என தயாராகவே உள்ளோம்.
எங்களுக்கு பதட்டம் எதுவும் இல்லை. 
ஆதலால் உங்கள் விளக்கம் எதுவும் எங்களுக்கு தேவையில்லை. 
உங்களுக்கு எங்களது ஒன்றுபட்ட பதிலை டிசம்பர்-11, 2014 -இல் பெருந்துறை ஊராட்சி அலுவலகத்திலும், நேற்று(05-03-2015) பெருந்துறை-சென்னிமலை ஒன்றியத்தில் கடைகளை அடைத்து, தொழில்நிறுவனங்களை மூடியும், இரண்டு லட்சம் மக்கள் தனது ஒரு நாள் வருவாயை இழந்தும் உணர்வுப்பூர்வமாக சொல்லி விட்டோம்.

அமெரிக்காவின் கொக்கோ- கோலா நிறுவனமே, இனி உங்களிடம் பேச எங்களுக்கு வேறு செய்தி எதுவும் இல்லை...

இனி COCO COLA என்பதை...

இனி தமிழகத்திற்கு GOGO COLA... என மாற்றி விட்டோம்.

ஜெயலலிதாவின் அதிமுக அரசு முன்பு   மற்ற மாநிலங்களில் இருந்து விரட்டப் பட்ட ஸ்டெர்லைட்டை தமிழகத்திற்கு கொண்டுவந்து அழிவை தந்தது காணாது என்று இன்று கொக்கோ -கோலாவை பணத்தை வாங்கிக்கொண்டு தமிழகத்தை முற்றிலும் அழிக்க உள்ளது.அதையும் எதிர்த்து போராட மக்கள் தயாராகி விட்டார்கள்.

                                                                                                                                   -முகிலன் .
நன்றி:கீ ற்று.
=========================================================================