தொழில் வசதி. தமிழகம் 18 வது இடத்தில்

தொழில் தொடங்குவதற்கு ஏற்ற  வசதியான, தடைகள் அற்ற மாநிலங்களின் பட்டியலில் ஏற்கனவே 12வது இடத்தில் பின்தங்கியிருந்த தமிழ்நாடு 18வது இடத்திற்கு போய் விட்டது. 
தெலங்கானா மாநிலம் 13வது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு வந்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் இருந்த ஆந்திராவும் முதலிடத்தை பிடித்துள்ளது. நாட்டில் தொழில் வளர்ச்சியை பெருக்குவதற்காகவும், அந்நிய முதலீட்டை ஈர்க்கவும் பல்வேறு சீர்திருந்த நடவடிக்கைகளை மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம்  மேற்கொண்டு வருகிறது. 

அந்த அமைச்சகத்தின் கீழ் உள்ள  தொழிலக கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை சார்பில் மாநிலங்களில் மேற்கொள்ள வேண்டிய  340 அம்ச தொழில் சீர்திருத்த  செயல் திட்டங்களை அறிவித்தது. 

இந்த திட்டங்களை மாநிலங்கள் எவ்வாறு செயல்படுத்தி புதிய முதலீடுகளை ஈர்த்துள்ளது என்பது குறித்து ெதாழிலக கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை, உலக வங்கி குழுவுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதற்காக 1-7-2015 முதல் 30-6-2016 வரை மாநிலங்களில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், தொடங்கப்பட்ட தொழில்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில், மாநிலங்களில் சிறப்பான நடவடிக்கைக்கு ஏற்ப மதிப்பெண்கள் அளிக்கப்பட்டன. 


அதன்படி, நாட்டிலுள்ள 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவை 7,124 வகையான சீர்திருத்தங்களை மேற்கொண்டதாக தந்த புள்ளிவிவரங்கள், ஆதாரங்களின் அடிப்படையில்  ஆய்வு செய்த  முடிவுகளை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று டெல்லியில் வெளியிட்டார். 

அந்த ஆய்வின்படி, தொழில் வளர்ச்சியில் 2015ம் ஆண்டு 32 சதவீதமாக இருந்த தேசிய சராசரி இப்போது 48.93 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

ஆனால். இந்த முன்னேற்றம் ஏற்கனவே தொழில் வளர்ச்சியில் பின்தங்கியிருக்கும்  தமிழகத்தில்  இல்லை. 

தொழில் தொடங்க உகந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் வெறும் 62.80 சதவீதம் மட்டுமே பெற்று 12வது இடத்தில் இருந்து 18வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட  தெலங்கானா மாநிலம் 98.78 சதவீதம் பெற்று ஆந்திர மாநிலத்துடன் முதலிடத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளது. 


ஆந்திரா கடந்த ஆண்டு 2வது இடத்தை பெற்றிருந்தது. குஜராத் 98.21 சதவீதம் பெற்று 3வது இடத்தையும், மத்திய பிரதேசம் 97.01 சதவீதம் பெற்று 5வது இடத்தையும், மகாராஷ்டிரா 92.86 சதவீதத்துடன் 10வது இடத்தையும் பிடித்துள்ளது. இதில் குஜராத் கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 மிகவும் பின்தங்கிய மாநிலங்களாக கருதப்படும் பீகார் 21வது இடத்தில் இருந்து 16வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.   


அதேபோல் தமிழகத்தை விட சிறிய மாநிலங்களான உத்தரகாண்ட், சட்டீஸ்கர்,  அரியானா, பஞ்சாப், இமாச்சல் பிரதேசம் உட்பட பல மாநிலங்கள் தமிழகத்தை விட பல இடங்கள் முந்தியுள்ளன.

புதிய தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகம் இல்லை என்று தொழில் முனைவோர் அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா  சீதாராமன் நேற்று வெளியிட்ட ஆய்வு முடிவுகள் அதனை உறுதிபடுத்தியுள்ளது. 


ஆய்வின்படி, தொழில் தொடங்க உகந்த மாநிலங்களாக தெலங்கானா, ஆந்திரபிரதேசம், குஜராத், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், அரியானா,  ஜார்கண்ட்,  ராஜஸ்தான்,  உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப் ஆகியவை விளங்குகின்றன. 


அதே சமயம், தொழில் தொடங்க உகந்தவையாக மாறி வரும் மாநிலங்களாக கர்நாடகா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், பீகார் ஆகியவை உள்ளன. 

திமுக ஆட்சிக்காலத்தில் 3 வது இடத்தில் தமிழகம் இருந்தது. மோடி முதல்வராக  குஜராத் முதலிடம்.

தற்போது தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்களில் ஆய்வு நடத்தி மார்க் போட்ட ராங்க் பட்டியலில்  99.09 மதிப்பெண்களுடன்  ஆந்திர  பிரதேசமும், அதிலிருந்து பிரிந்த தெலங்கானாவும் போட்டி போட்டு முதலிடத்தை பங்கு போட்டுக்கொண்டன. 
இதுவரை முதலிடத்தில் இருந்த குஜராத் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. 
இப்பட்டியலில் தமிழகம் 62.80 மதிப்பெண் பெற்று 18வது இடத்தை பிடித்துள்ளது.  கடந்தாண்டு 12வது இடத்தில் இருந்தது. இப்போது மேலும் 6 இடங்கள் பின் தங்கியுள்ளது.
இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலம் தமிழகம் தான் என்று  முதல்வர், அமைச்சர்கள் உள்பட பலரும் தொடர்ந்து கூறி வந்தனர். 
ஆந்திராவும், கர்நாடகமும் நம்மிடம்  இருந்து தான் மின்சாரத்தையே வாங்குகிறார்கள் என  சட்டசபையில் முதல்வரே பெருமிதத்துடன் கூறினார். 
தமிழகத்திடம் மின்சாரத்தை விலை கொடுத்து வாங்கும் ஆந்திராவுக்கும், புதிதாக உருவான தெலங்கானாவுக்கும்  பறந்து வரும் முதலீட்டாளர்கள், தமிழகத்திற்கு வரவில்லை.

தங்கள் மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்காக முதல்வர்களே கோட்டும் சூட்டும் அணிந்த சிஇஓ க்களாக மாறி வெளிநாடுகள் வரை சென்று தொழிலதிபர்களை சந்தித்து  முதலீடுகளை திரட்டுகின்றனர். 


தமிழக அரசும் அதுபோன்ற முயற்சியாக கடந்த 2015ல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது. 
இதில் 1 லட்சம் கோடி  முதலீடுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 2.42 லட்சம் கோடிக்கு முதலீடுகளை ஈர்த்தது மிகப்பெரிய சாதனையாக ஆளும்கட்சி தரப்பில் வர்ணிக்கப்பட்டது.  

அப்படி எந்த முதலீடும் வரவில்லை. இது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் குரல் எழுப்பியும் பயன் இல்லை.   தொழில் சீர்திருத்தங்களுக்கான செயல்திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தியுள்ள விதத்தை  மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரமே அம்பலப்படுத்தி விட்டது.   அரசு நிர்வாகத்தில் உள்ள கோளாறு தான் முதலீட்டாளர்களை தமிழகத்திற்குள் வரவிடாமல் தடுக்கிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ளமுடிகிறது.

ஒரு மாநிலத்தின்  வளர்ச்சிக்கு வேளாண்மை, உற்பத்தி, சேவை ஆகிய மூன்றும் சிறந்து விளங்கவேண்டும்.  

ஒரு தொழிற்சாலை தொடங்குவதற்கு அனுமதி விரைவாக கிடைப்பதை  உறுதி செய்யவேண்டும். முதலிடத்தை பிடித்துள்ள புதிய மாநிலமான தெலங்கானா அரசு, தொழிற்சாலைகளுக்கு அனுமதி பெறும் உரிமை(Right to Clearence),  தெலங்கானா மாநில தொழில் திட்டங்கள் அனுமதி மற்றும் சுய சான்றளிப்பு சட்டம், தொழிற்சாலைகள் தொடங்க நிலவங்கி  உள்பட பல்வேறு தொலைநோக்கு  அம்சங்களுடன் தொழிற்கொள்கையை உருவாக்கி செயல்படுகிறது.

 விண்ணப்பம் மீது முடிவெடுப்பதில் தாமதப்படுத்தும் அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் வீதம் அபராதமே வசூலிக்கப்படுகிறது என்பதால் எந்த கோப்பும்  தேங்குவதில்லை. 


அதனால் தான் உள்ளூர் மட்டுமின்றி பன்னாட்டு முதலீட்டாளர்களும் தெலங்கானாவுக்கு படையெடுக்கின்றனர். தொழில் துறை ஊக்குவிக்கப்பட்டால்  தான் வேலை வாய்ப்பை அதிகரிக்க முடியும். தமிழகத்தில் 86 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலையில்லாமல் காத்திருக்கின்றனர்.  

நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, முதலீட்டாளர்கள் முதல்வரை நேரடியாக  சந்தித்து பேசி பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளும் வாய்ப்பு, அடிப்படை  கட்டமைப்பு  வசதிகளை போர்க்கால அடிப்படை செய்து கொடுப்பதில் மாநில அரசின்  கவனம் முழுமையாக திரும்பவேண்டும். வேலைவாய்ப்பு பெருகினால் தான் பொருளாதார  வளர்ச்சியும் சாத்தியம். 

தற்போது வாங்கியுள்ள 63 மதிப்பெண் போதுமா என்பதை ஒரு மாணவனாக சுய மதிப்பீடு செய்து கொண்டால், பக்கத்து இருக்கை  மாணவர்களை பார்த்து நாம் வெட்கப்படத்தானே வேண்டும். 

தனது செயல்பாட்டை ஆளும் அரசு மாற்றிக்கொள்ளாத பட்சத்தில் முதலிடத்திற்கு அல்ல...மீண்டும் 12வது  இடத்தை பிடிப்பது கூட சாத்தியமில்லை.
========================================================================================
ன்று,
நவம்பர்-02.

  • தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் இறந்த தினம்(1903)

  • பிபிசி நிறுவனம் தொலைக்காட்சி சேவையை துவக்கியது(1936)

  • பாகிஸ்தான், பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது(1953)

  • பெங்களூர் நகரம் பெங்களூரு என பெயர் மாற்றப்பட்டது(2006)

=======================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?