62 வயது இளைஞன்

கமல் ரகசியம்

‘காலேஜ்.... டீனேஜ் பெண்கள்...எல்லோருக்கும் என் மீது கண்கள்...’- சகலகலா வல்லவனில் கால்நூற்றாண்டுக்கு முன்பு பாடிய கமல், இப்போதும் அதே ஹைபிட்ச்சில் தாராளமாகப் பாடக்கூடிய தகுதி கொண்டவர்தான். இப்போதும் அவரது இளமையிலோ, அழகிலோ பெரிதாக வித்தியாசங்கள் எதுவும் இல்லை.

தன்னுடைய வாழ்வின் 62-வது வருடத்தைத் தொடங்கியிருக்கும் நிலையிலும் அவரது கேசம் நரைக்கவில்லை; உதிரவில்லை. முகத்தில் சுருக்கங்கள் இல்லை... தொப்பை இல்லை, உடலில் தளர்வு இல்லை.

தனிப்பட்ட வாழ்விலும், சினிமா வாழ்விலும் அவர் சோர்ந்து போக ஆயிரம் காரணங்கள். ஆனால், இன்னும் பல விஸ்வரூபமெடுக்கும் முனைப்பு அவரிடம் அதிகமாகிக் கொண்டேதான் இருக்கிறது.எப்படி... இப்படி?கமல்ஹாசனின் ஃபிட்னஸ் டிரெயினர் ஜெயக்குமார் அதன் ரகசியம் உடைக்கிறார்.

“கமல் சினிமாவை எந்த அளவு நேசிக்கிறாரோ... அதேபோல தன் ஆரோக்கியத்தையும் நேசிப்பவர். ஆரம்ப காலத்தில் வெளியே உடற்பயிற்சி களுக்காக ஜிம் செல்லும் பழக்கம் இருந்தது. பின்னர் தன் வீட்டிலேயே குட்டியாக ஜிம் அமைத்துக் கொண்டார்.

‘மருதநாயகம்’ ஆரம்பித்தபோது என்னைப்பற்றி கேள்விப்பட்டு அழைத்தார். ‘மருதநாயகம்’ ஒரு மாபெரும் வீரனைப்பற்றிய கதை என்பதால் அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ற கட்டுடலை கொண்டுவர வேண்டும் என்பதற்காக தன்னுடனேயே கூட்டிச் சென்றார். அவருக்கு உடற்பயிற்சியின்மீது அதிக அக்கறை வந்த காலம் அதுதான் என்று நினைக்கிறேன்.

‘மருதநாயகம்’ நின்று போன பின்னரும் அவர் உடற்பயிற்சியை விடவில்லை. இன்னும் தீவிரமாக உடற்பயிற்சிகளைச் செய்ய ஆரம்பித்தார். அதன்பிறகு, வெளிப்புறப் படப்பிடிப்பு களுக்குச் சென்றால் தன் அறைக்குப் பக்கத்து அறையை எனக்காக புக் செய்துவிடுவார். அதிகாலை 4 மணிக்கெல்லாம் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்துவிடுவோம்.

ஒரு படத்துக்காக எடையைக் குறைப்பதோ, ஏற்றுவதோ அவரைப் பொறுத்தவரை கடினமான வேலை கிடையாது. காரணம், தான் சொல்வதைக் கேட்கும் நிலையில் தன் உடலை ஃபிட்டாக வைத்திருப்பார். திடீரென்று எடையைக் குறைக்கும்போது முகம், கழுத்துப்பகுதி, சருமத்தில் பல நடிகர்களுக்கு சுருக்கங்கள் விழுந்து தொங்க ஆரம்பித்துவிடும். ஆனால், கமலிடம் அந்த வித்தியாசமே தெரியாது. அதற்குக் காரணம், கமல் அதை மருத்துவரீதியாக, முறையாகச் செய்வதுதான். 
படிப்படியாகத்தான் எடையைக் கூட்டவோ, குறைக்கவோ செய்ய வேண்டும். உடல்மாற்றம் உள்ளுறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும். உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, எடைப்பயிற்சி, கார்டியோ பயிற்சி கள்(Cardio exercises) மற்றும் வலுவூட்டும் பயிற்சிகளை இணைத்து செய்யும் போதுதான் உடல் வடிவம் பெறும். இதுதான் பாதுகாப்பானதும் கூட. இதை தெளிவாகப் புரிந்துவைத்திருக்கிறார்.

‘ஆளவந்தானில்’ நந்து கதாபாத்திரத்துக்கு உடம்பு நன்றாக ஏற்ற வேண்டும்; மற்றொரு கதாபாத்திரத்துக்கு சாதாரண எடை இருந்தால் போதும். இரண்டுக்கும் தனித்தனி பிரிவாகப் பிரித்துக் கொண்டு, அதற்கேற்றவாறு பயிற்சி கள் செய்தார். தனக்கு நிறைய தெரிந்திருந்தாலும் ஃபிட்னஸ் டிரெயினர் சொல்வதையும் ஒழுங்காகப் பின்பற்றுவார்.

சந்தோஷம், கஷ்டம் எது வந்தாலும் அவர் ஒரேமாதிரிதான் நடந்துகொள்வார். கடினமான நேரங்களில் மனதை திசை மாற்றுவதற்கு உடற்பயிற்சிகள் செய்வது, தூங்கச் சென்றுவிடுவது போன்ற தந்திரங்களையும் கையாள்வார்.

‘விஸ்வரூபம்’ படப்பிடிப்பில் தீவிரவாத தாக்குதல் காட்சிக்காக பலகோடி செலவுகளில் செட் போடப்பட்டிருந்தது. அப்போது வந்த பயங்கரமான மழையில் செட் முழுவதும் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போய்விட்டது. அவரது சொந்தப் படம் அது. எல்லோரும் திகைத்துப் போய் நின்றுகொண்டிருந்தோம்.

5 நிமிடம் அதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் என்னிடம் திரும்பினார். ‘எக்ஸர்சைஸ் பண்ணப் போலாமா?’ என்று கேட்டார். அங்கிருந்த அனைவருக்கும் இன்னும் அதிர்ச்சி யாகிவிட்டது. அவர் அப்படித்தான். மகிழ்ச்சியோ, துக்கமோ எல்லாமே அவருக்கு ஒர்க் அவுட்தான். ‘ஒர்க் - அவுட் செய்தால் மனதின் அழுத்தங்களும் கரைந்துவிடும்’ என்பார். கடந்த நான்கைந்து வருடங்களாக யோகா பயிற்சிகளும் எடுத்து வருகிறார்’’ என்கிற ஜெயக்குமார் கமலின் உணவுப்பழக்கம், தூக்கம் பற்றிச் சொல்கிறார். 
‘‘உணவை ரசித்து, மனம் ஒன்றி சாப்பிடுவார். புரதம், வைட்டமின்கள், நார்ச்சத்து அடங்கிய உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வார். மீனில் ஒமேகா 3 அதிகம் இருப்பதால் மீனை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்வார்.

அவருக்குக் கிடைக்காத உணவு களா? ஆனாலும் தனக்கென்று ஒரு உணவுக் கட்டுப்பாடு அவரிடம் இருக்கும். சுவைக்காக எதையும் சாப்பிடும் பழக்கம் இல்லை. கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளையும் எடுத்துக் கொள்வதில்லை. பிடித்த உணவு என்பதற்காக அளவைத் தாண்டி சாப்பிடுவதும் கிடையாது.

உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் போலவே, அவர் தூக்கத்துக்கும் பெரிய முக்கியத்துவம் கொடுப்பவர். என்ன வேலையாக இருந்தாலும் தூக்கத்தை விட்டுக்கொடுக்க மாட்டார். ‘உத்தமவில்லன்’ படப்பிடிப்பின்போது திடீரென்று அவரைக் காணவில்லை.

எல்லா இடங்களிலும் தேடினால், ஒரு சின்ன கூடாரத்துக்குள் சுருண்டு படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அதற்குள் சரியாக கை,கால்களை நீட்டி படுக்கக்கூட முடியாது. அதுபோல் அரைமணிநேரம் தூங்கி எழுந்து வந்துவிட்டால் அவரிடம் அப்படி ஒரு எனர்ஜி வந்துவிடும். வேலைகளுக்கிடையே குட்டித்தூக்கம் எனர்ஜியைக் கொடுக்கும் என்பதையும் அவரிடம் கற்றுக் கொள்ளலாம்.

பொதுவாக வயது ஏற, ஏற ஞாபகசக்தி குறையும் என்பார்கள். இந்த விஷயத்தில் கமல் நேர் எதிர். அவரது அபாரமான ஞாபகசக்தியைக் கண்டு நான் அசந்திருக்கிறேன். அதற்கு அவரது புத்தக வாசிப்பு காரணமாக இருகும் என்று நினைக்கிறேன். வீட்டில் ஒரு நூலகமே இருக்கிறது. செய்தித்தாள்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் என எதையும் விட்டு வைக்கமாட்டார். ஒரு நாளைக்கு ஒரு புத்தகமாவது படித்தால்தான் அந்த நாளே அவருக்கு முடியும்’’ என்கிறார்.
--இந்துமதி

நன்றி:குங்குமம் டாக்டர்.
========================================================================
=============



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?