இணையத்திற்குப் புதியவரா?

நீங்கள் ஆண்ட்ராய்ட் போன் அல்லது டேப்ளட் சாதனத்தைப் பயன்படுத்துபவராக இருந்தால், உங்களைப் பற்றி கூகுள் ஏற்கனவே பல தகவல்களைப் பின் தொடர்ந்து வரும் செயல்பாட்டினை மேற்கொண்டிருக்கும். அப்படியா! என் அக்கவுண்ட்டை மூடிவிடவா? என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றும். மூடுவதற்கும் கூகுள் எளிய வழிகளைத் தரும். ஆனால், நாம் அக்கவுண்ட்டினை மூடிவிட மாட்டோம். ஏனென்றால், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நாம் அப்ளிகேஷன்களை இறக்க வேண்டும் எனில், நமக்கு கூகுள் அக்கவுண்ட் ஒரு கட்டாயத் தேவை ஆகும். 
எனவே, இந்தச் சூழ்நிலையில், நாம் நம்மைப் பற்றிய டேட்டாவினை, எப்படி கூகுள் நிறுவனத்திற்குக் குறைவாகக் கொடுக்கலாம் என்று பார்ப்போம். பல செயலிகள் வழியாக, பல இடங்களில் நம்மைப் பற்றிய தகவல்கள், கூகுள் நிறுவனம் பெறும் வகையில் கசிகின்றன. இருப்பினும், சில முக்கிய வழிகளை இங்கு காணலாம்.

கூகுள் நமக்குத் தருபவை எல்லாம் இலவசமே. ஏனென்றால், கூகுள் என்னும் தொழில் நுட்ப அரக்கன், விளம்பரம் வழி பெரும் வருமானமே அதற்கு எக்கச்சக்கமாகும். இந்த விளம்பரங்கள் வழியாகவே, உங்களுக்கான விளம்பர வட்டம் கட்டப்படுகிறது. இணையத்தைச் சுற்றி வருகையில், இந்த விளம்பரங்களை ஒதுக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கூகுள் தளத்தின் விளம்பர செட்டிங்ஸ் பக்கத்தில் (https://www.google.com/settings/u/0/ads) நீங்கள் சில நகாசு செட்டிங்ஸ் அமைப்பை மேற்கொண்டு, நீங்கள் தரும் தகவல்கள் துல்லிதமாகவும், ஆர்வம் கொண்டுள்ள விளம்பரங்கள் மட்டும் இருப்பதாகவும் ஏற்படுத்தலாம். 
கூகுள் நிறுவனத்தின் முதன்மை வர்த்தகம் தேடுதல் தான். அதில் என்ன செய்யலாம் என்று அடுத்து பார்க்கலாம். கூகுள் நீங்கள் செல்லும், பார்க்கும் அனைத்து தளங்கள் குறித்த தகவல்களைப் பதிவு செய்து வைத்துக் கொள்கிறது. பெர்சனல் கம்ப்யூட்டராக இருந்தாலும், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் ''கூகுள் நவ்” செயலியாக இருந்தாலும், தேடுதல் கட்டத்தில் என்னவெல்லாம் டைப் செய்கிறீர்கள் என்பதைக் கூகுள் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக, கூகுள் இந்த தகவல்கள் எல்லாம் எளிதாகக் காணும்படி, நம் அக்கவுண்ட் ஹிஸ்டரி பக்கத்தில் மேல் பகுதியில் வைத்துள்ளது. இங்கு, இவற்றை சேவ் செய்திடாமல் வைத்துக் கொள்ள செட்டிங்ஸ் பகுதியில் வழி தரப்பட்டுள்ளது. எனவே, நாம் கூகுள் எடுத்து வைத்துள்ள தகவல்களை சேவ் செய்திடாமல் நீக்கிவிடலாம். அல்லது தேர்ந்தெடுத்த சிலவற்றை மட்டும் பதியும்படி அமைத்துக் கொள்ளலாம்.

ஜிமெயில்
நாம் ஜிமெயில் செயலியைப் பயன்படுத்துகையில், கூகுள் சர்வர்கள் வழியாக நாம் அனுப்புவது அனைத்தையும் ஒரு காப்பி எடுத்து, கூகுள் வைத்துக் கொள்கிறது. மின் அஞ்சல் செயலி ஒன்றின் செயல்பாட்டின் அடிப்படையே இதுதான். ஆனால், கூகுள் அதற்கும் மேலாக ஒரு படி சென்று, நமக்கு விளம்பரங்களை அனுப்புவதற்காக, நம் அஞ்சல்களை ஸ்கேன் செய்து தகவல்களைத் திரட்டி வைத்துக் கொண்டு செயல்படுத்துகிறது. நாம் அனுப்பும் டெக்ஸ்ட்டை மட்டுமல்ல; படங்களையும் ஸ்கேன் செய்கிறது. இவ்வாறு கூகுள் செயல்படுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், நம் அக்கவுண்ட்டிலிருந்து ஜிமெயில் அக்கவுண்ட்டை நீக்குவதுதான் ஒரே வழி.

தொடர்புகள் (Contacts)
ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைப் பயன்படுத்துவதில் நாம் பெறும் மிகப் பெரிய வசதி, நம் தொலைபேசி தொடர்புகளை எளிதாக, ஒரு சாதனத்திலிருந்து இன்னொன்றுக்கு மாற்றிக் கொள்வதுதான். இது எப்படி சாத்தியமாகிறது என்றால், நம் தொடர்புகள் அனைத்தும் கூகுள் அக்கவுண்ட்டுடன் ஒருங்கிணைக்கப்படுவதுதான். மொபைல் போனிலேயே, நம் தொடர்புகளின் மின் அஞ்சல் முகவரிகளும் தாமாக சேவ் செய்யப்படுவதும் இப்படித்தான். நாம் நீக்க வேண்டும் என எண்ணினால், ஒரு முயற்சியில், ஒரு தொடர்பினை மட்டுமே நீக்க முடியும். ஆனால், இந்த சாதனங்களில், நாம் நம் தொடர்புகளை சேவ் செய்து வைத்துக் கொள்வதுதான் சிறந்த வழியாகும்.
பெரும்பாலான ஆண்ட்ராய்ட் இயக்கும் சாதனங்களில், உங்கள் போன் தொடர்புகளை, உங்கள் சிம் கார்டிற்கு மாற்றுவது எனில், People என்னும் அப்ளிகேஷன் சென்று, அதில் Settings தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின்னர், Export Contacts to SIM என்பதனைக் கிளிக் செய்திட முகவரிகள் அனைத்து தகவல்களுடன் மாற்றப்படும். ஒரு சில ஆண்ட்ராய்ட் சாதனங்களில், இந்த வழிமுறைகள் சற்று மாறுபடலாம்.

கூகுள் காலண்டர்
இதில் நாம் அமைக்கும் நிகழ்வுகள் அனைத்தும் கூகுள் தளத்தினால் ஒருங்கிணைக்கப் படுகின்றன. இங்கு மட்டும், இதில் உள்ளவற்றை முற்றிலுமாக நீக்க முடியாது. கூகுள் காலண்டருடன் அனைத்து தொடர்புகளையும் நீக்கினால்தான் அது முடியும்.

கூகுள் ட்ரைவ்
ஜிமெயில் சர்வரில், நம் மெயில்கள், தொடர்புகள் அனைத்தும் சேமிப்புக் கிடங்கில் வைக்கப்படுவது போல, ட்ரைவ் செயலிக்கான சர்வரிலும் சேமிக்கப்படுகிறதா என்பது இன்னும் தெளிவாக அறியத் தரப்படவில்லை. ஆனால், ட்ரைவ் பயன்படுத்தும் சர்வரில் சேர்த்து வைக்கப்படும் ஆவணங்கள், படங்கள், விடியோக்கள் அனைத்தும், எந்த நேரமும் கூகுள் நிறுவனம் அறியக் கிடைக்கும் வகையில்தான் பதியப்படுகின்றன. நீங்கள் உங்கள் பைல்களை அழிக்கும்போதும் அழித்த பின்னர், ட்ரேஷ் பெட்டியிலிருந்து நீக்கும் போதும், அவை மறைக்கப்படுகின்றன. நிச்சயமாய், அவை கூகுளின் சர்வரிலிருந்து உடனடியாக, அறவே நீக்கப்படுவதில்லை. ஆனால், உங்கள் அக்கவுண்ட்டினை வேறு யாரேனும், பின் நாளில் அணுகினால், அவர்களுக்கு நீங்கள் நீக்கியவை நிச்சயமாகக் கிடைக்காது.

உலவும் இடம் (Location)
உங்கள் ஆண்ட்ராய்ட் சாதனம் இயங்கத் தொடங்கிய காலத்திலிருந்து, கூகுள் 'லொகேஷன்' என்னும் வசதி மூலம், நீங்கள் எங்கெல்லாம் செல்கிறீர்கள் என்பதனை அறிந்து பதிவு செய்கிறது. அந்த சாதனம் மூலம், கூகுள் மேப் பயன்படுத்துவதாக இருந்தால், இந்த டூல் தான் அடிப்படையை அமைக்கிறது. பெர்சனல் கம்ப்யூட்டரில் மேப் பயன்படுத்துகையில், லொகேஷன் டூலை நாம் இயக்காமலேயே, மற்றவை மூலம், கூகுள் நாம் இயங்கும் இடத்தை அறிந்து கொள்கிறது. இதனை நீங்கள் விரும்பவில்லை என்றால், இந்த செயல்பாட்டினை, ஆண்ட்ராய்ட் சாதனத்தில் முடக்கிவிடலாம். 

கூகுள் ப்ளே
ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர்கள், கூகுள் ப்ளே பயன்படுத்தாமல் இருக்க முடியாது. பல செயலிகள் இதன் வழியாகவே நமக்குக் கிடைக்கும். கூகுள், நீங்கள் இந்த ஸ்டோர் சென்று பெறும் அனைத்தையும் பட்டியலிட்டுத் தன்னிடம் வைத்துக் கொள்ளும். இது நாம் ஸ்டோரைப் பயன்படுத்த ஒப்புக் கொள்ளும் ஒப்பந்தத்தில் ஒரு நிபந்தனையாகும். ஆனால், வெளிப்படையாக இது தெரிவதில்லை. இதற்கு நீங்கள் உடன்பாடில்லை என்றால், ப்ளே ஸ்டோரினைப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் ஒரே வழி. ஆனால், அது சரியான வழி அல்ல. 
ஏனென்றால், இந்த ப்ளே ஸ்டோரில் இருந்து நீங்கள் பெற்ற அனைத்து செயலிகளையும் நீக்க வேண்டும். பின் எந்த பயன்பாடும் உங்களுக்குக் கிடைக்காது.

யு ட்யூப்
யு ட்யூப் தள செட்டிங்ஸ் அமைப்புகள் https://www.google.com/settings/accounthistory என்னும் இடத்தில் கிடைக்கும். இங்கு நீங்கள் தேடிய விடியோக்களின் பட்டியல் கிடைக்கும் இவற்றை நீக்க நீங்கள் விரும்பினால், அவற்றைத் தேடி நீக்கிவிடலாம். இங்கேயே, உங்கள் தேடலைப் பதிவு செய்ய வேண்டாம் என கூகுளுக்குக் கட்டளை இடலாம். அதே போல, நீங்கள் தேடிப் பார்த்த விடியோக்களின் பட்டியலையும் அணுகி, நீக்க விரும்புவதை நீக்கிவிடலாம்.
மேலே தரப்பட்டுள்ள தகவல்களிலிருந்து, நீங்கள் கூகுள் சர்வர்களுக்கு, உங்களைப் பற்றிய தகவல்களை, அறிந்தோ அறியாமலோ, எந்த அளவிற்குத் தருகிறீர்கள் என்பதனைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள். 
கூகுள் நிறுவனம் தரும் எந்த வசதியை நாம் பயன்படுத்தினாலும், நம்முடைய விருப்பங்கள், நம்மைப் பற்றிய தகவல்கள், அதன் சர்வரில் சென்று அடைவதையோ, அவற்றைப் பயன்படுத்தி நம்மை கூகுள் அணுகுவதையோ மாற்ற இயலாது. விருப்பப் பட்டால், நம்மிடமிருந்து செல்லும் தகவல்களைக் குறைத்துக் கொள்ளலாம். கூகுள் சேவையே, அதில் உள்ள நம் அக்கவுண்ட்டினைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கும் டூல்களைத் தருகிறது. 
ஆனால், இதற்கு நாம் முயற்சி எடுத்து, செட்டிங்ஸ் அமைத்துத் தொடர்ந்து கண்காணிக்கும் வேலையையும் மேற்கொள்ள வேண்டும். ஆண்ட்ராய்ட் சாதனங்கள், ஜிமெயில், கூகுள் மேப்ஸ், யு ட்யூப் போன்றவை எல்லாம், தகவல்களைச் சேகரிக்கும் டூல்களைத் தாங்களாகவே இயக்கித் தங்கள் பணியைத் தொடர்கின்றன. நாம் இதனை அறிந்து, ஒவ்வொரு செட்டிங்ஸ் பக்கமும் அணுகி, இவற்றைத் தடுக்கலாம். 
ஆனால், அவ்வாறு தடுக்கும் வேளைகளில், சில வசதிகளை இழக்க வேண்டியதிருக்கும். தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தினால், தகவல்கள் தொடர்ந்து செல்வது நிறுத்தப்படும்.
                                                                                                          நன்றி:தினமலர் கணினி மலர்.
=========================================================================================

ன்று,
ஜூன்-23.
  • உகாண்டா, போலந்து தந்தையர் தினம்

  • கிரிஸ்டோபர் ஷோல்ஸ், தட்டச்சு இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்(1868)

  • பன்னாட்டு ஒலிம்பிக் அமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது(1894)

  • முன்னாள் குடியரசுத்தலைவர் வி.வி.கிரி இறந்த தினம்.(1980)
========================================================================================
வி.வி.கிரி
வி.வி.கிரி என்றழைக்கப்பட்ட வராககிரி வேங்கடகிரி, அன்றைய மதராஸ் பிராந்தியம், கஞ்சம் மாவட்டம், பெர்தம்பூரில், ௧௮௯௪ ஆக., ௧௦ல் பிறந்தார். 
தெலுங்கை தாய்மொழியாக கொண்ட இவர், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளர்.
மதராஸ் பிராந்தியத்தில், ராஜாஜி அமைத்த, காங்கிரஸ் அரசில், 1937ல், தொழில் மற்றும் தொழிலாளர் அமைச்சராக இருந்தார். 
சுதந்திரத்திற்கு பின், இலங்கை நாட்டிற்கான உயர் ஆணையராக நியமிக்கப்பட்டார்.கேரளா, கர்நாடகா, உ.பி., மாநிலங்களின் கவர்னராக பணியாற்றியவர். 
1967-ல், நாட்டின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 
ஜனாதிபதியாக இருந்த, ஜாகிர் ஹுசைனின் மரணத்தால், 1969-ல், நாட்டின் நான்காவது ஜனாதிபதியானார், வி.வி.கிரி; 
பாரத ரத்னா விருது பெற்றவர்.
இவர், 'தொழில் நிறுவனங்களின் உறவுகள், இந்திய தொழில் நிறுவனங்களில், உழைப்பாளர் பிரச்னைகள்' என்ற தலைப்புகளில் புத்தகங்கள் எழுதி உள்ளார். 
1980 ஜூன், 23ல் காலமானார்.
=======================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?