தேவை ஒரே குரல்

இந்தியத் தொழில்துறையைக் கடுமையாக அச்சுறுத்திவரும் மத்திய அரசின் புதிய ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிராகப் பல்வேறு திசைகளிலிருந்தும் எதிர்ப்புக்குரல்கள் எழுந்துவருகின்றன.
 ஜிஎஸ்டி யால் தமிழ் உள்ளிட்ட பிராந்திய சினிமாக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் என்று அச்சம் தெரிவித்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

ஜிஎஸ்டி வரியிலிருந்து பிராந்திய மொழித் திரைப்படங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று அவர் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார். 

ஜிஎஸ்டி-யில் திரைப்படங்களுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பைக் கமல் எதிர்த்துக் குரல் கொடுத்திருப்பது பலரையும் கவனிக்கச் செய்துள்ளது. 

கமலின் இந்தக் கருத்துக்கு பதிலளிப்பதாகக் கருதிக்கொண்டு அருண்ஜெட்லி இவ்வாறு கூறியிருக்கிறார்: 
“ஊடகங்கள் மூலமாக ஜிஎஸ்டிக்கு எதிராக அழுத்தம் தந்தாலும் பயனில்லை...”.

இதற்கு பதிலாக கமல் இப்படிச் சொல்லியிருக்கிறார்: “இது அழுத்தம் தருவதல்ல, மாறாக, துன்பத்தில் இருக்கும் பிராந்திய சினிமாவின் கோரிக்கை. ஜிஎஸ்டி வரி விதிப்பால் பிராந்திய சினிமா அழிந்துவிடுமோ என்ற அச்சம் தோன்றியிருக்கிறது. மத்திய அரசு விதித்திருக்கும் இந்த ஜிஎஸ்டி வரியால் திரைப்படத்துறை பெரிதும் பாதிக்கப்படப்போகிறது. 

சினிமா என்பது சூதாட்டமல்ல... அது ஒரு கலை. இந்தத் துறையை நம்பி ஏராளமானோர் உள்ளனர். சினிமாவைச் சரியாகவும் தவறாகவும் பயன்படுத்திய அரசியல்வாதிகளும் உண்டு. தேசிய அளவில் வெளியாகும் பாலிவுட் - இந்திப் படங்களுக்கு நிகராக இந்த ஜிஎஸ்டி வரியை மாநிலப் படங்களுக்கு விதிக்கக் கூடாது. 
அதேநேரத்தில், ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இந்திய சினிமாவுக்கும் வரி விதிப்பதும் சரியல்ல. இதனால் வேற்றுமையில் ஒற்றுமை எனும் நமது கலாச்சாரம் கடும் பாதிப்புக்குள்ளாகும். பிராந்திய மொழிப் படங்களின் வளர்ச்சியும் பின்தங்கிவிடும்.
இந்தியாவின் பலமே பிராந்திய மொழிப்படங்கள்தான். 
எனவே,சினிமா டிக்கட்டிற்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரிவிதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிடுவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும். 
இதனை 12 சதவீதமாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கமல்ஹாசன் கூறியிருக்கிறார். 

வரியைக் குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். 

கமலஹாசனுக்கு உள்ள தெளிவும் ஜி.எஸ்.டி  வரி யால் வரப்போகும் ஆபத்தை புரிதலும் மற்ற திரையுலக புள்ளிகளுக்கு இல்லை என்றே தெரிகிறது.அல்லது தெரிந்தும் தங்களின் கருப்புப்பண இருப்பாள் மத்திய அரசை எதிர்க்க பயமா என்றும் புரியவில்லை.கமலை தவிர யாரும் குரலை உரக்க எழுப்பவில்லை.இதுவரை. 

கமலைத் தொடர்ந்து இன்னும் பல பிரபலங்களும் உரத்துப் பேசவேண்டும்... ஒரே குரலில்!
                                                                                                                                                                                             சோழ. நாகராஜன்
===========================================================================================================================================
மீண்டும் அரபு பிரதேசம்  எரிகிறது.

கத்தாருடனான ராஜீய உறவுகளை சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் துண்டித்த நிகழ்வும் ஈரான் நாடாளுமன்றம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவமும் வளைகுடா பிரதேசத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் புதனன்று காலை மிகப்பெரும் பயங்கரவாதத் தாக்குதல் அரங்கேறியது.

ஐந்து ஆண்கள், ஒரு பெண் என ஆறு பேர் கொண்ட பயங்கரவாதக் கும்பல் துப்பாக்கிகளோடும், பயங்கர வெடிப்பொருட்களோடும் ஈரான் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு தாக்குதலை நடத்தினர். இதில் 19 பேர் கொல்லப்பட்டனர். 
43 பேர் காயமடைந்தனர். 

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஈரான் நாடாளுமன்றமும், டெஹ்ரான் மாநகரமும் பதற்றத்தின் பிடியில் சிக்கியிருந்தன.அதே வேளையில் டெஹ்ரானிலிருந்து 15 மைல் தொலைவில் அமைந்துள்ள, ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா கோமேனியின் கல்லறை பகுதியிலும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஈடுபட்டனர்.
ஈரான் பயங்கரவாதத் தாக்குதல்

பின்னர் நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட ஆறு பயங்கரவாதிகளும், ஈரானிய பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக உறுதி செய்யப்பட்டது.ஈரான் மட்டுமின்றி வளைகுடா பிரதேசம் முழுவதிலும் மிகப்பெரும் அதிர்வலைகளை இத்தாக்குதல் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலுக்கு உடனடியாக ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்பதாக அறிவித்தனர்.

அரபு பிரதேசத்தில் அடுத்தடுத்து நடந்துவரும் அரசியல் சதிராட்டங்களில் கத்தார் உடனான சவூதி அரேபியா உள்ளிட்ட ஏழு நாடுகளின் உறவு துண்டிப்பும், அதைத் தொடர்ந்து ஈரான் நாடாளுமன்றம் மீதான துணிகரத் தாக்குதல்களும் மிகவும் கவனிக்க வேண்டிய நடவடிக்கைகளாக மாறியுள்ளன. 

குறிப்பாக ஈரான் நாடாளுமன்றம் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றிருப்பது அரபு பிரதேசம் முழுவதும் மிகப்பெரும் சந்தேகத்தையும் எதிர்ப்பலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் அசாத்திற்கு எதிராக அமெரிக்காவால் தூண்டிவிடப்பட்டு சவூதி அரேபியாவால் நிதியும் ஆயுதமும் வழங்கப்பட்டு, கொடிய ஐஎஸ் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டு வரும் மிகக்கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களுக்கு ரஷ்யாவோடு சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்த அரபு நாடு ஈரான் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கான சிரியாவின் முயற்சியில் பெரும் உதவி செய்தது ஈரான் அரசு என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்தப் பின்னணியில் தற்போது ஐஎஸ் பயங்கரவாதிகள் ஈரானை குறி வைத்திருக்கிறார்கள் என்று சர்வதேச ஊடகங்கள், இந்தப் பிரச்சனையின் ஒரு கோணத்தை முன்வைக்கின்றன.

ஆனால் ஈரான் மீதான தற்போதைய கடும் தாக்குதலில் புவி அரசியல் ரீதியாக பல்வேறு கோணங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.அரபு பிரதேசம் என்பது எண்ணெய் வளம் மிக்க பூமி. அதிலும் குறிப்பாக வளைகுடா நாடுகள் எண்ணெய் உற்பத்தியில் முதன்மை இடம் வகிக்கின்றன. 

எண்ணெய் வளத்தை முற்றாக கபளீகரம் செய்யும் நோக்கத்துடன் ஒட்டுமொத்த வளைகுடா பிரதேசத்தையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர அமெரிக்கா முயற்சிக்கிறது. அதன் விளைவாகவே பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை உற்பத்தி செய்ததும், ஆப்கானிஸ்தான், இராக், லிபியா, சிரியா உள்ளிட்ட நாடுகளில் மிகப்பெரும் போர்களை கட்டவிழ்த்துவிட்டதும் கவனிக்கத்தக்கது.
ஆனால் அரபு பிரதேசத்தில் அமெரிக்காவின் நோக்கங்களுக்கு மிகப்பெரும் தடையாக இருப்பது ஈரான் மிகப்பெரும் சக்தியாகும். 

ஈரானின் எண்ணெய் வளம் மற்றும் இயற்கை எரிவாயு வளம் அந்நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாத்து வருகிறது. ரஷ்யா, சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் வர்த்தக உறவில் இருந்து வரும் ஈரான், அரபு தேசங்களில் அமெரிக்காவுக்கு எதிராக விடாப்பிடியாக குரல் கொடுக்கும் முதன்மையான நாடாக இருந்து வருகிறது.அதுமட்டுமல்ல, ஈரான் என்பது இஸ்லாமியர்களில் ஷியா பிரிவு மக்கள் அதிகம் வசிக்கும் நாடு ஆகும். 

சவூதி அரேபியா உள்ளிட்ட சில நாடுகள் சன்னி பிரிவு முஸ்லிம் மன்னர்களின் ஆதிக்கத்தில் இருந்து வருகின்றன. இந்நிலையில் ஒட்டுமொத்த அரபு பிரதேசத்திலும் சன்னி பிரிவு ராஜீயத்தை மிகப்பெருமளவில் கட்டமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சவூதி அரேபியா செயல்பட்டுகிறது.
இதை தனது அரசியல் பொருளாதார நோக்கங்களுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. 

அரபு நாடுகளில் சன்னி மற்றும் ஷியா பிரிவு மக்களிடையே தீராத மோதலையும் பயங்கரவாதத்தையும் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியே சன்னி பிரிவு மத அடிப்படை வாதிகளை பிரதானமாகக் கொண்ட ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு. 

இந்தப் பிரிவினைகளின் அடிப்படையிலும் ஈரான் மீது ஐஎஸ் அமைப்பு குறி வைத்திருக்கிறது.எனினும் நேற்றுவரை வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரும் சவூதி அரேபியாவின் கூட்டணியில்தான் இருந்தது. இப்போது அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேற முடியாது. அதுமட்டுமல்ல அரபு நாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய அனைத்து கொடிய தாக்குதல்களும் கத்தார் மண்ணிலிருந்துதான் நடத்தப்பட்டுள்ளன.

சிரியா மீதும் இராக் மீதும் ஆப்கானிஸ்தான் மீதும் குண்டு மழை பொழிந்த அமெரிக்க விமானங்களில் பெரும்பாலானவை அமெரிக்க மத்திய ராணுவ கமாண்ட் பிரிவிலிருந்துதான் செலுத்தப்பட்டுள்ளன. இந்த ராணுவப் பிரிவு கத்தாரில் தான் அமைந்திருக்கிறது. வளைகுடா பிரதேசத்தில் அமெரிக்காவின் மிகப்பெரும் ராணுவத் தளங்கள் சவூதி அரேபியாவிலும் கத்தாரிலும்தான் இருக்கின்றன என்பதும் கவனிக்கத்தக்கது. 

ஆனாலும் கூட கத்தார், திடீரென சுயேட்சையான வெளியுறவுக் கொள்கை குறித்து பேசத் துவங்கியது. அமெரிக்காவுக்கும் சவூதிக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவே கத்தார் உடனான உறவுகள் துண்டிப்பு என்ற அறிவிப்பு.

கத்தார் மற்றும் ஈரான் மீதான இரு வெவ்வேறான தாக்குதலின் பின்னணியில் கடந்த மே 21ம்தேதி சவூதி தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற அமெரிக்க - அரபு ஒத்துழைப்பு மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்று நூறு நாட்களைத் தாண்டியுள்ள நிலையில், அவர் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக தேர்வு செய்தது சவூதி அரேபியாவைத்தான். மே 21 அன்று ரியாத்தில் நடைபெற்ற மாநாட்டில் டொனால்டு டிரம்ப் பங்கேற்று ஈரானுக்கு எதிராக வெறித்தனமான பேச்சினை அரங்கேற்றினார். ஈரானை தனிமைப்படுத்துவதற்கு அனைத்து அரபு நாடுகளும் அமெரிக்காவுக்கு உதவி செய்ய வேண்டுமென்று அவர் கொக்கரித்தார். 

ஏற்கெனவே சவூதி மன்னரும் பாதுகாப்பு அமைச்சரும் அடுத்தடுத்து ஈரானுக்கு எதிராக தொடர்ந்து விஷம் கக்கி வருகிறார்கள். ஆனால் மேற்படி ரியாத் மாநாட்டில் பங்கேற்ற கத்தார், ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கத்துடன் கருத்து வெளியிட்டதாக பரபரப்புச் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் ஈரானுக்கு ஆதரவாக எந்தவொரு சிறு அசைவும் அரபுநாடுகளிடையே ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்துடன்தான் கத்தாருக்கு எச்சரிக்கை விடும் விதத்தில், டிரம்ப்பின் உத்தரவின் பேரில் சவூதி அரேபியாவும், இதர நாடுகளும் கத்தாருடனான ராஜீய உறவை துண்டித்துள்ளன.

ஆனால் இந்த இரண்டு நடவடிக்கைகளும் உடனடியாக தீரும் பிரச்சனைகள் அல்ல. மாறாக அரபு பிரதேசத்தின் அரசியலில் பலவிதமான அணி சேர்க்கைகள் உருவாவதற்கு வித்திட்டுள்ளன. பயங்கரவாதிகளை ஏவிவிட்ட சவூதி அரேபியாவே, தனது சக நாடான, கத்தார் மீது பயங்கரவாத முத்திரை குத்தியிருப்பது அந்நாட்டின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே ஈரான் - கத்தார் - துருக்கி என்ற விதத்தில் புதிய அணி சேர்க்கை உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.இவை அனைத்தும் மேலும் மேலும் பதற்றத்தை தீவிரப்படுத்தும் அரபு நாடுகள் முழுவதிலும் அச்சமும் போர் பீதியும் சூழும் என்றே தெரிகிறது. 

இந்தப் பதற்றத்தை தணிக்கும் விதத்தில் அமெரிக்காவோ சவூதியோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என்பது, கத்தாருக்கு எதிராக - ஈரானுக்கு எதிராக கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டரில் விஷத்தனமான கருத்துக்களை வெளிப்படுத்திவருவதிலிருந்து தெரிகிறது. 

மொத்தத்தில் மீண்டும் அரபு பிரதேசம் அமெரிக்காவின் கைவண்ணத்தால் எரிகிறது.
=======================================================================================================================================

ன்று,
ஜூன்-09.
  • வால்ட் டிஸ்னியின் முதல் டொனால்ட் டக் வரைகதை வெளிவந்தது(1934)
  • வடமேற்கு சீனாவில் ஜப்பானியரின் ஆக்கிரமிப்பை சீனக் குடியரசு அங்கீகரித்தது(1935)
  • தங்கனீக்கா குடியரசானது(1962)
==============================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?