பெட்ரோல் விலை உயர்வு ,சில உண்மைகள்,
நாள் தவறினாலும் நாட்டில் பெட்ரோல் விலை உயர்வு மட்டும் தவறுவதில்லை, அதற்கு அரசு கூறும் காரணங்கள் சரியானதுதானா? இதோ ஒரு பார்வை. | |
பெட்ரோலிய கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேசச் சந்தையில் தொடர்ந்து ஏறிவருவதையும் அதனைக் காரணமாகக்காட்டி இந்திய அரசு பெட்ரோலின் விலையை அடிக்கடி ஏற்றிவருவதும் அதன் தொடர் விளைவாக அனைத்துப்பொருட்களின் விலையும் தாறுமாறாக ஏறிவருவதும் நமது அன்றாட அனுபவமாக இருந்து வருகிறது.இதே பிரச்சனையை வியட்நாம் அரசு எவ்வாறு அணுகி வருகிறது என்பது ஒருமக்கள் நல அரசுக்கும் முதலாளிகளுக்கு ஆதரவான அரசுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை படம் பிடித்துக்காட்டுகிறது. கச்சா எண்ணெய்யைத் தூய்மைப்படுத்துவதற்கான வசதிகள் இல்லாத ஒரு நாடு வியட்நாம் என்ற உண்மையையும் சேர்த்துப்பார்த்தால் இந்த வேறுபாட்டைத் துல்லியமாகப் புரிந்து கொள்ளலாம். கச்சா எண்ணெய்யின்விலை ஒரு பீப்பாய் 101 டாலர் என்ற அளவை எட்டியவுடன் மக்களின் மீது சுமை ஏறாமல் பாதுகாப்பதற்காக வியட்நாம் அரசு இரண்டு முடிவுகளை எடுத்தது. ஒன்று, பெட்ரோல் விற்பனையாளர் களுக்கு லிட்டருக்கு 600 டாங் அளவுக்கு இழப்பீட்டை நேரடியாக வழங்கியது. விலையை நிலைப்படுத்து வதற்கான நிதி என்ற ஒன்றும் அந்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் வாங்கும் போதும் நுகர்வோர் அளிக்கும் விலையில் 300 டாங் இந்த நிதிக்கு செல்கிறது. வியட்நாம் அரசு எடுத்த மற்றொரு முக்கிய நடவடிக்கை வரிக்குறைப்பு .இறக்குமதி செய்யப்படும் தூய்மைப்படுத்தப்பட்ட பெட்ரோலின் மீதான வரி (பூஜ்யம் ) என்ற அளவுக்குக் குறைக்கப்பட்டு விட்டது.பெட்ரோலுக்கு முதலில் 20 சதம் வரி விதிக்கப்பட்டு வந்தது. இது பின்னர் 6 சதமாகவும் தற்போது 0 சதமாகவும் குறைக்கப்பட்டு விட்டது. இதேபோல டீசலுக்கு விதிக்கப்பட்ட வரி 15 சதத்திலிருந்து 2 சதமாகவும் பின்னர் 0 சதமாகவும் குறைக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலையில் ஏறக்குறைய சரிபாதியளவுக்கு வரிகள் விதிக்கப்படுகின்றன என்பது மட்டுமல்ல; இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் மீது 5 சதம் வரியினையும் கடந்த ஆண்டில் விதித்துள்ளது. இவ்வளவு கடுமையான வரிச்சுமையை ஏற்றியுள்ள மத்திய அரசு சில வாரங்களுக்குள்ளாகவே பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.5.50 என்ற அளவில் உயர்த்தியுள்ளது. வரிகளைக்குறைக்குமாறு இடதுசாரிகள் தொடர்ந்து எழுப்பிவரும் கோரிக்கைகள் இரக்கமற்ற முறையில் நிராகரிக்கப்படு கின்றன. ஏறிவரும் கச்சா எண்ணெய்யின் விலையைக் காரணமாகக்காட்டி கடந்த பத்தாண்டுகளில் 200 சதம்முதல் 300 சதம் வரை வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. இப்போதே பெட்ரோலியப்பொருட்களின் மீது பெரிய அளவில் மானியம் வழங்குவதாக அரசு பீற்றிக்கொள்கிறது. ஆனால் உண்மை நிலை முற்றிலும் வேறாக உள்ளது.ஒட்டு மொத்த பெட்ரோலியத்துறை, அரசுக்கு வரியாக ரூ.100-ஐ செலுத்தினால் இதற்கு பதிலாக அரசு வழங்கும் மானியம் ரூ.25 மட்டுமே.பெட்ரோலின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை அரசு கைவிட்டவுடன் மாதா மாதம் பெட்ரோலின் விலை கணிசமான அளவில் ஏற்றப்படுகிறது மக்கள் நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கும் வியட்நாம் அரசு பெரும் தொகையை மானியமாக வழங்கி வருவதுடன் பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகளை முற்றிலும் நீக்கி விட்டது. இதன் காரணமாக 2010 துவக்கத்திலிருந்து கணக்கிட்டால் பெட்ரோலியப் பொருட்களின் விலை அந்நாட்டில் 2.8 சதவீதம் அளவுக்கே அதிகரித்துள்ளது. ஆனால் 2009 மே மாதத்தில் ஐ.மு. கூட்டணி அரசு பதவி யேற்றவுடன் பெட்ரோலியப்பொருட்களின் விலை 45 சதவீதம் ஏறியுள்ளது. சர்வ தேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் உள்நாட்டுச்சந்தையில் விலையேற்றம் தவிர்க்கமுடியாதது என்று இந்திய அரசு கூறுவது எவ்வளவு தவறானது என்பதை வியட்நாமின் அனுபவம் அம்பலப்படுத்தியுள்ளது நன்றி;பீப்பிள் டெமாக்ரசி, | |