தமிழீழம் ஒரு நம்பிக்கை
முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தக் காலகட்டத்தை புலம்பெயர்ந்த தமிழர்கள் எப்படிப் பார்க்கின்றனர்?
முள்ளிவாய்க்கால் படுகொலை புலம்பெயர் தமிழர்களின் லட்சியத்திற்கு மேலும் உறுதியளித்துள்ளது. குறிப்பாக அயல்நாடுகளில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் இரண்டாம் தலைமுறையினர் மேற்கு நாடுகளில் தாராளவாத ஜனநாயக வழிமுறைகளில் வளர்க்கப்பட்டவர்கள். 2009 முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளைப் பார்த்து அவர்கள் மிகவும் அதிர்ச்சி யடைந்துள்ளனர். அதன் பலனாக ஈழத்தமிழ் தேசம் உருவாவதைப் பார்க்க ஆர்வத்துடன் உள்ளனர்.
இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் வாய்ப்புண்டா?
இலங்கையில் நடக்கும் தேசிய பிரச்னைக்குத் தீர்வு சுதந்தரமான ஈழத்தமிழர்களுக்கான நாட்டை உருவாக்குவது என்பதை சர்வதேச சமூகம் உணரும்போது சுதந்தரமான தமிழ் ஈழம் பேச்சுவார்த்தை மூலம் உருவாகும் என்று நாங்கள் நம்புகிறோம். சமீபகால வரலாற்றில் இதற்கு முன்னுதாரணங்கள் உள்ளன. செக்கோஸ்லோவாக்கியாவை செக் குடியரசு என்றும், ஸ்லோவாக்கியா என்றும் பிரித்ததையும் மலேசிய கூட்டமைப்பிலிருந்து சிங்கப்பூரை பிரித்ததையும் நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விருப்பம் இருந்தால் வழி நிச்சயம் இருக்கிறது. தமிழர்களின் தாயகத்தை ஏற்றுக்கொள்ளும் விருப்பம் சிங்கள ஆட்சியாளர்களிடம் இல்லாதது மட்டுமல்ல; தமிழர் அடையாளத்தையே இலங்கையில் அழிக்க அவர்கள் விரும்புகிறார்கள்.
நாடு கடந்த அரசுக்கு இலங்கையில் உறுப்பினர்கள் இல்லை. அந்நாட்டில் உள்ள மக்களுக்காக உருவாக்கப்படும் அரசு என்கிற முறையில் இது ஒரு சவாலாக இருக்காதா?
இது ஒரு சவால்தான். இருந்தாலும் நாட்டுக்கு வெளியிலான அரசுகள் தங்கள் நாடுகளுக்கு வெளியே செயல்பட்டுதான் சுதந்தரத்தைப் பெற்றிருக்கின்றன. லிதுவானியா, லாத்வியா, எஸ்டோனியா ஆகியவை தங்கள் தாயகத்துக்கு வெளியே இருந்து போராடி வெற்றிபெற்றவை. சுதந்தரத்துக்கு முன்பு அவர்களது நாட்டில் அவர்களுக்கு எந்த தளமும் இல்லை. சர்வதேச அரசியல் சூழ்நிலை கனிந்தபோது சுதந்தர நாடுகளை உருவாக்கிக்கொண்டார்கள். மேலும் எங்களது அரசை நாடு கடந்த அரசாக உருவாக்கியிருக்கிறோம். நாட்டுக்கு வெளியே இருக்கும் அரசாக அல்ல. எங்கள் செயல்பாடுகள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் அபிலாஷைகளின் அடிப்படையில் மட்டுமல்லாமல், இலங்கைக்குள் வாழும் ஈழத்தமிழர் களின் அபிலாஷைகளின் அடிப்படையிலும் செயல்படுவதாக இருக்கும்.
நாடு கடந்த அரசு அமைப்பதற்கான முன்னுதாரணம் என்ன?
இது ஒரு புதிய கருத்தாக்கம். இந்த கருத்தாக்கம் சிலகாலமாகப் பேசப்பட்டு வந்தது. இதில் தேசங்கள் அடிப்படை உறுப்புகளாகப் பேசப்பட்டன. ஆனால் நாங்கள் முன்வைத்து தற்போது உருவாகிக்கொண்டிருப்பது வித்தியாச மானதாகும். இது ஒரு புதிய குடிமை அரசியலைக் கொண்டிருக்கிறது. இது ஒரு புதிய மாதிரியாகும். எங்களால் உருவாக்கப்பட்டிருக்கும் அரசு, ஒடுக்கப்பட்ட ஒரு தேசத்துக்கு தங்கள் அரசியல் விருப்பங்களை சர்வதேச அளவில் பேசுவதற்கு உதவும் கருவியாகும். ஐ.நா. சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளைக் கொண்ட தற்போதைய சர்வதேச உலக அமைப்பானது தற்போது இருக்கும் நாடுகளுக்கே சார்பானதாகும். இதில் ஒடுக்கப்பட்ட தேசங்களுக்கும் மக்களுக்கும் இடமில்லை. தற்போதைய சர்வதேச அமைப்பு தோற்றதற்கு சாட்சிதான், உலகில் பல்வேறு இடங்களில் நிலவும் ஆயுதப் போராட்டங்களாகும். தமிழர்கள், குர்தியர்கள், பாலஸ்தீனர்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட தேசியங்களுக்கு ஒரே வழி நாடுகடந்த அரசு என்கிற வலிமையான மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்பு வதாகத்தான் ஒருவேளை இருக்கக்கூடும்.
தெற்கு சூடானின் சுதந்தர கொண்டாட்டங்களுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். உலக நாடுகள் உங்கள் அரசை எப்படிப் பார்க்கின்றன?
அங்கீகாரம் என்பது இரண்டு வடிவங்களில் வருகிறது. ஒன்று வெளிப்படையான அங்கீகாரம். இன்னொன்று வெளிப்படையாக சொல்லப்படாத அங்கீகாரம். இதை நான் வெளிப்படையாகச் சொல்லப்படாத அங்கீகாரம் என்று கருதுகிறேன். வெளிப்படையான அங்கீகாரம் உலகின் புவிசார் மாறுதல்களைச் சார்ந்தது.
இந்தியாவிடமிருந்து நீங்கள் எதிர்பார்ப்பது?
ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கான ஒரே வழி சுதந்தரமான இறையாண்மை உள்ள தமிழீழம் உருவாவதுதான். இந்தியாவிடமிருந்து நாங்கள் விரும்புவதெல்லாம் சுதந்தரமான இறையாண்மை கொண்ட தமிழ் ஈழத்துக்கு அங்கீகாரமே. நாடுகள் எப்படி முடிவுகள் எடுக்கும் என்பது பற்றிய அரசியலை நாங்கள் அறியாதவர்கள் அல்ல. உள்ளூர்ச் சூழல்கள் நாடுகளின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன என்பதை நாங்கள் அறிவோம். இந்திய மக்களும் தமிழ்நாட்டில் இருக்கும் சகோதரர்களும் எங்கள் நீதிக்கான போராட்டத்தில் இணைந்து இந்திய அரசை வரும் காலத்தில் எங்களுக்கு ஆதரவளிக்கச் செய்வார்கள் என்று நம்புகிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் உங்கள் அரசில் எப்போது பங்கேற்பார்கள்?
எந்த நாட்டில் இருந்தாலும் தமிழ் அகதிகள் இந்த முயற்சியில் இணைக்கப்படுவார்கள். அகதிகளுக்கு பேச்சுரிமை போன்ற அடிப்படை உரிமைகள் உள்ளது என்பது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட விஷயமாகும். இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அகதிகளும் நாடு கடந்த அரசில் பங்கேற்பார்கள் என்று நம்புகிறேன்.
இறுதிகட்ட தோல்விக்கு முன்பாக புலிகள் தலைமையால் உங்களுக்கு குறிப்பிட்ட பணி அளிக்கப்பட்டதா?
அப்படி ஒன்றும் இல்லை.
தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் ஆதரவு முக்கியத்தலைவர்களான வைகோ, நெடுமாறன், கொளத்தூர் மணி போன்றவர்கள் உங்கள் அரசை எப்படிப் பார்க்கிறார்கள்?அவர்கள் ஆதரவு எப்படிப்பட்டது?
எங்களுடைய வழக்கமான உறவுகளுக்கு இந்த அரசின் அமைப்பையும் அதன் நோக்கத்தையும் தெரியப்படுத்தியிருக்கிறேன். தமிழ்நாட்டில் எங்களுக்கு ஆதரவு இருப்பதை நான் உணர்கிறேன். அத்துடன் தமிழ் ஈழத்துக்கான போராட்டமானது ஈழத்தமிழர்களால் மட்டுமல்லாமல் உலக தமிழர்களாலும் எடுத்துச் செல்லப்படவேண்டியது. கடந்த 30 ஆண்டுகளாக செய்ததுபோலவே தமிழக மக்கள் எமது அரசுக்கும் ஆதரவு அளிப்பார்கள். இந்த நேரத்தில் முத்துக்குமாரின் தியாகத்துக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாடு கடந்த தமிழ் ஈழ அரசு, விடுதலைப் புலிகளின் சார்பான அமைப்பாக இந்திய நிர்வாகத்தால் உணரப்படுவதாகத் தெரிகிறதே?
நாடு கடந்த தமிழீழ அரசு என்பது புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களால் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு. வெளிப்படையாக தேர்தல்கள் நடத்தப்பட்டன. சுதந்தரமான தேர்தல் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டன. அரசியல் சாசனக் குழு அமைத்து அரசியல் சாசனம் வரையப்பட்டது. ஒவ்வொரு இரண்டு வாரத்துக்கும் ஒருமுறை அமைச்சரவை கூடி அரசின் கொள்கைகளை நடைமுறைப் படுத்துவது பற்றி முடிவுகளை எடுக்கிறது. இப்போது நாங்கள் உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இதுபோன்ற பல நடைமுறைகள் நாங்கள் சுதந்தரமான தனித்து இயங்கும் அமைப்பு என்பதை நிரூபிக்கின்றன
நன்றி;என்.அசோகன்,[தி சண்டே இந்தியன்]