கருப்புப் பணக் கும்பலா சூரப்புலி மோடியா ?
மண்டியிட்டது யார் ?
மோடி அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை, பல மாதங்களாக மிகவும் இரகசியமாகத் திட்டமிடப்பட்டு, கருப்புப் பணக் கும்பலுக்கு எதிராக ஏவப்பட்ட ‘துல்லிய’ தாக்குதல் என்றும், இதன் காரணமாக கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் அதனை மாற்ற முடியாமல் முழித்துக் கொண்டிருப்பதாகவும் ஒரு கருத்து திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. ஆனால், இந்த நடவடிக்கையின் பிறகு நாட்டில் நடப்பதென்னவோ பா.ஜ.க.வும் அதன் துதிபாடிகளும் கூறிவருவதற்கு நேர் எதிராக இருக்கிறது.
பொதுமக்கள் தாம் உழைத்து சம்பாதித்த பணத்தை மாற்றுவதற்குத் தெருவில் நிற்கிறார்கள். ஊரை அடித்து வாயில் போட்ட கருப்புப் பணக் கும்பலோ தமது பணத்தை நோகாமல் மாற்றி வருகிறது.
கிரிமினல் குற்றச் சட்டத்தை விரிவுபடுத்திக் கொண்டே செல்வதற்கான வாய்ப்பைக் குற்றவாளிகளே ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள் என்பார் காரல் மார்க்ஸ். அதனை மெய்யாக்கி வருகிறார்கள் இந்தியாவின் கருப்புப் பண முதலைகள். அவர்கள் தம்மிடமுள்ள கருப்புப் பணத்தை வெள்ளையாக்க ஒவ்வொரு நாளும் புதுப்புது வழிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். அதனைத் தடுப்பது என்ற பெயரில் மோடி அரசு ஒவ்வொரு நாளும் விதவிதமான கட்டுப்பாடுகளை அறிவித்து, அசடு வழிந்து நிற்கிறது.
கருப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு மோடி அவிழ்த்துவிட்ட துல்லிய தாக்குதல் ஒரு புதிய கருப்புப் பணச் சந்தையை உருவாக்கியிருப்பதை இன்று நாம் நேருக்கு நேர் காண்கிறோம். ஆடிட்டர்கள், வங்கி மேலாளர்கள், அரசு அதிகாரிகள், நகைக் கடைக்காரர்கள், கந்துவட்டி கும்பல்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், ஏற்றுமதி/இறக்குமதி நிறுவனங்கள், ஹவாலா கும்பல்கள், தனியார் போக்குவரத்து நிறுவனங்கள், திரையரங்கு, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், தனியார் மருத்துவமனைகள், கோவில்கள், மடங்கள் எனப் பலரும் கருப்பை வெள்ளையாக்கித் தரும் இந்த இலாபகரமான தொழிலில் இறங்கியுள்ளனர். இந்தப் புதிய கருப்புத் தொழிலைப் பயன்படுத்திக் கொண்டு, தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், சினிமா நட்சத்திரங்கள், டாக்டர்கள், இஞ்சினியர்கள், வக்கீல்கள் உள்ளிட்ட கருப்புப் பணக் கும்பல், தங்களிடம் உள்ள கணக்குக் காட்டமுடியாத பணத்தை 25% முதல் 70% வரை கமிசன் கொடுத்து வெள்ளையாக மாற்றிவருகின்றனர்.
மோடியின் அறிவிப்பு வந்த மறுநிமிடமே, கருப்புப் பணக் கும்பல் பறந்து சென்று தட்டியது நகைக் கடைகளின் கதவுகளைத்தான். சென்னை, மும்பய் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அறிவிப்பு வெளியான நாளன்று இரவு எட்டு மணிக்கு மேல் களைகட்டத் தொடங்கிய தங்க நகை வியாபாரம் நள்ளிரவைத் தாண்டியும் ஜாம்ஜாமென்று நடந்தது. மும்பை, பூனே, நாசிக், கோவா ஆகிய நான்கு நகரங்களில் அன்றைக்கு இரவு மட்டும் 36 கோடி ரூபாய் அளவிற்கு தங்கம் விற்பனையானது. மும்பை நகரில் மட்டும் 16 கோடி ருபாய் அளவிற்குத் தங்கம் வாங்கப்பட்டிருக்கிறது. இது அதற்கு முந்தைய நாள் தங்க விற்பனையான 69 இலட்சத்தை விட 23 மடங்கு அதிகமாகும். நகைக் கடைகளுக்கு அடுத்து, கோவில்களும், பூசாரிகளும், மடங்களும்தான் கருப்புப் பணக் கும்பலை இரட்சித்தன.
நாட்டின் மிகப் பெரிய கந்துவட்டிக் கும்பலான மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பணத்தை மாற்றுவதும் துரிதமாக நடைபெறுகிறது. மகளிர் சுய உதவிக் குழுகளில் உள்ள பெண்கள் அனைவருக்கும் தலைக்கு 2 இலட்ச ருபாய் தரப்பட்டு, அவர்களது வங்கிக் கணக்குளில் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தப் பரிமாற்றத்திற்கு 10 ஆயிரம் ருபாய் கமிசனாக அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது.
வங்கி மேலாளர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு, பொதுமக்களின் பெயர்களில் செல்லாத நோட்டுக்கள் வங்கிகளின் வழியாகவே மாற்றப்படுகின்றன. வங்கிகளில் சேமிப்புக் கணக்குத் தொடங்கக் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் முதல் சிம் கார்டு வாங்குவதற்காகப் பெட்டிக் கடையில் கொடுத்த ஆவணங்கள் வரை அனைத்தும் களவாடப்பட்டு, மக்கள் மாற்றியது போல் போலியான கோப்புகளை உருவாக்கி, இந்த தகிடுதத்தம் நடைபெறுகிறது.
ஊழல், லஞ்சத்தில் புதிய எல்லைகளைத் தொட்டிருக்கும் ஜெயா-சசி கும்பலோ எவ்வித சிரமமும் அலைச்சலுமின்றி, டாஸ்மாக், போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களைப் பயன்படுத்தியே காரியத்தைச் சாதித்துக் கொள்கிறது. மோடியின் அறிவிப்பு வந்த மறுநொடியே அரசு போக்குவரத்துக் கழகங்கள், பயணிகளிடமிருந்து 500, 1000 நோட்டுக்களை வாங்குவதை நிறுத்திவிட்டன. ஆனால், போக்குவரத்துக் கழகத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட பணம் முழுவதும் 1,000, 500 ரூபாய் கட்டுக்களாகவே சென்றன. வசூலான சில்லறைப் பணம் முழுவதும் எங்கு போயிருக்கும் என விளக்கத் தேவையில்லை.
தமிழகம் முழுவதும் உள்ள எட்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு வரும் வருமானம் 20 கோடி ருபாய்க்கும் அதிகம். டாஸ்மாக்கின் தினசரி வருமானம் கிட்டதட்ட 70 கோடி ருபாய். நாளொன்றுக்கு 90 கோடி ரூபாய், நவம்பர் 8 முதல் டிசம்பர் 30 வரை 52 நாட்கள், இதைப் பெருக்கினால் கிடைப்பது கருப்பு வெள்ளையான விவரம்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாகப் பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்தைக் குறைப்பதாகக் கூறிக் கொண்டு பெட்ரோல் நிலையங்கள், பேருந்துகள், ரயில்வே நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் செல்லாத நோட்டுக்களைப் பயன்படுத்தலாம் என அறிவித்தது, மோடி அரசு. ஆனால், அச்சலுகையே கருப்புப் பணத்தை மாற்றுவதற்கான பல புதிய வழிகளைத் திறந்துவிட்டது.
மராட்டிய மாநிலத்தில் திரையரங்குகளில் பழைய நோட்டுக்களை வாங்கலாம் என அம்மாநில அரசு அறிவித்தது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட திரையரங்கு முதலாளிகள், படம் பார்க்க யாரும் வராமல் காத்து வாங்கிய திரையரங்குகள் எல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுவதாகக் கணக்கு காட்டிக் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றித் தரும் தொழிலைத் தொடங்கினர்.
வார நாட்களில், பயணிகள் யாரும் இல்லாமல், வெறுமனே கூரியர் சர்வீஸ்களாகப் போய்வரும் தனியார் ஆம்னி பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிவதாகக் கூறித் தனியார் போக்குவரத்து முதலாளிகள் செல்லாத நோட்டுகளை வங்கிகளில் கட்டுகிறார்கள்.
சினிமா நட்சத்திரங்கள் ஹவாலா பேர்வழிகள் மூலம் தங்களது கறுப்புப் பணத்தை அமெரிக்க டாலர்களாக மாற்றிக் கொண்டுள்ளனர். தனியார் சுயநிதிக் கல்லூரி முதலாளிகள் தமது ஆசிரியர்களின் கணக்கிலும், தொழில் அதிபர்கள் தமது ஊழியர்கள், தொழிலாளர்களின் கணக்கிலும் பல மாதச் சம்பளத்தை முன்பணமாகச் செலுத்தி பல கோடி ரூபாய் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கியிருக்கின்றனர்.
மோடி, தனது அரசின் சாதனையாகச் சொல்லிக்கொள்ளும் ஜன்தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகள், மிகவும் வெளிப்படையாகவும் அரசிற்குச் சவால்விடும் வகையிலும் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கப் பயன்படுத்தப்படுகிறது. பணமே இல்லாமல் முடங்கிக் கிடந்த இவ்வங்கி கணக்குகளில் 64,000 கோடி ருபாய் அளவிற்கு பணம் கொட்டப்பட்டிருப்பதை அரசே ஒப்புக் கொண்டுள்ளது. 2.5 லட்சம் ருபாய்க்கும் அதிகமாக உள்ள வங்கிக் கணக்குகள் கண்காணிக்கப்படும் எனச் சவடால் அடித்தது மோடி அரசு. கருப்புப் பணக் கும்பலோ தமது பணத்தை 2 இலட்சம் ருபாய்களாகப் பிரித்து ஜன்தன் திட்ட வங்கிக் கணக்குகளில் செலுத்தி, மோடியின் முகத்தில் கரியைப் பூசியது. குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக, அந்தக் கணக்குகளில் செலுத்தப்பட்ட தொகையை மாதம் பத்தாயிரத்துக்கு மேல் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என அறிவிக்கிறார், மோடி.
இவையெல்லாவற்றையும் விட, கருப்புப் பணத்தின் காவலர்களான ஆடிட்டர்கள், மிகத் தந்திரமான முறையில் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திக்கொண்டே கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றி, மோடிக்கு பெப்பே காட்டிவருகின்றனர். புதிது புதிதாக நிறுவனங்கள் தொடங்குவது அல்லது ஏற்கெனவே நட்டமடைந்து திவாலான பழைய நிறுவனங்களைத் தூசிதட்டி திரும்ப எழுப்பி, அவற்றிற்கு மாநிலம் முழுவதும் கிளைகளைத் தொடங்கி, ஒவ்வொரு கிளைக்கும் ஊழியர்கள், இயக்குநர்கள் என நியமித்து, அவர்களுக்குச் சம்பளம், நிறுவனத்தை நடத்தியதன் மூலம் வந்த வருமானம், ஏற்பட்ட செலவு எனப் புகுந்து விளையாடுகின்றனர்.
இவை மட்டுமன்றி, அடகு வைத்த நகைகளை மீட்பதற்கு, விவசாயக் கடனைக் கட்டுவதற்கு எனப் பல வழிகளில் கருப்புப் பணம் வெள்ளையாக மாற்றப்படுகிறது.
கள்வன் பெரிதா, காப்பான் பெரிதா என்ற இந்தக் கண்ணாமூச்சி ஆட்டத்தில், கைப்புள்ள வடிவேலு கணக்காகச் சட்டை கிழிந்து நிற்கும் மோடி, “நீங்களாகவே வந்து கருப்புப் பணத்தை வங்கிகளில் செலுத்திவிட்டால், அபராதத்தோடு 50 சதவீதம்தான் வரி; நாங்களாகச் சோதனை நடத்திப் பிடித்தால், அபராதத்தோடு சேர்த்து 85 சதவீத பணத்தைப் பறிமுதல் செய்துவிடுவோம்” என வருமான வரிச் சட்டத்தில் திடீர் திருத்தங்களைக் கொண்டுவந்தார்.
இந்தத் திருத்தத்தைக் கருப்புப் பணக் கும்பலுக்கு எதிரான இறுதி எச்சரிக்கையாகப் பிதற்றுகிறார்கள், மோடியின் ஆதரவாளர்கள். ஆனால், உண்மையில் கருப்புப் பணக் கும்பலுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இன்னொரு சலுகைதான் இது. வெளிச் சந்தையில் 70 சதவீதம் வரை கமிசன் கொடுத்து கருப்புப் பணத்தை மாற்றியவர்களிடம் 50 சதவீதம் “வரி”யைப் பெற்றுக் கொண்டு அரசே அவர்களின் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கித் தரும் கேவலமான புரோக்கர் வேலைதான் இந்தத் திருத்தம். 200 சதவீதம் வரை வரி விதிப்போம் என வீராப்பு பேசிய மோடி, 50 சதவீதம்தான் வரி என இறங்கிவந்து கருப்புப் பண பேர்வழிகளிடம் பேரம் நடத்துகிறார். சாதாரண பொதுமக்களின் கைகளில் மை வைத்து அவமானப்படுத்தும் இந்தக் கும்பல், பணம் வந்த வழியைக் கேட்க மாட்டோம் என கருப்புப் பணக் கும்பலிடம் மண்டியிட்டு நிற்கிறது.
மோடியின் இப்பண மதிப்பு நீக்க நடவடிக்கையைப் புனிதப் போராகச் சித்தரிக்கிறது இந்துமத வெறிக் கும்பல். ஆனால், போர் தொடங்கும் முன்பே மோடி குப்புற வீழ்ந்துவிட்டார் என்பதைத்தான் நள்ளிரவு நகைக்கடை வியாபாரம் தொடங்கி வருமான வரிச் சட்டத் திருத்தம் வரையிலான நடப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.
– அழகு
___________________________________
நன்றி:"புதிய ஜனநாயகம்", டிசம்பர் 2016
___________________________________
நன்றி:"புதிய ஜனநாயகம்", டிசம்பர் 2016
___________________________________