கமல்ஹாசனுக்கு பயந்த அதிமுக பினாமி அரசு?


கமல்-அதிமுக அரசு அமைச்சர்கள் மோதலில் கமல்ஹாசன் கூறிய ஊழல் குற்ற சாட்டுக்கு ஆதாரம் இருக்கானு எந்த கெட்ட நேரம் பார்த்து அமைச்சர்கள் கேட்டார்களோ.

கோபமான கமல் ஊரே ஊழல்,ஊழல்னு நாறி கிடைக்கையில் உனக்கு ஆதாரம் ஒரு கேடானு ரசிகர்களை பக்கம் கையை காட்டி அரசு தளத்தின் முகவரியையும் கொடுத்துவிட்டார்.

முதலுக்கே வந்த மோசம் கமல்ரசிகர்கள் ஊழல் புகார்களை அனுப்ப ஆரம்பித்தால் அரசு இணையத்  தளமே முடங்கி விடுமென யோசித்த மத்திய பாஜக அரசின் நிக் தகவல்மையம்  அதிமுக அமைச்சர்கள் பெயரை மட்டும் விட்டு விட்டு மற்ற அத்துணை தகவலைகளையும் இரவோடிரவாக நீக்கி விட்டது.
தமிழ் நாடு அரசு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்போது யார் அமைச்சர்,எந்த துறை,அவரின் முகவரி,மின்னஞ்சல் முகவரி என தகவல் ஒன்றும் கிடையாது.

வாயை கொடுத்து வாங்கிக்கட்டி இப்படி தலைமறைவாக என்ன கட்டாயம் அதிமுகவினருக்கு  வந்தது?
கமல்ஹாசன் பேசினால் அவர் பாட்டுக்கு பேசி விட்டு போகட்டும் மக்கள் தங்கள் மறதி வியாதியில் அதை மறந்து விடுவார்கள் என்று என்கடன் ஊழல் செய்து கிடப்பதே என்று தொழிலைக் கவனிக்காமல் கமல் பாட்டுக்கு எதிர் பாட்டு பாடியதால் வந்துதானே இவை எல்லாம்.

அது  கருவாட்டுக்கடை  என்று யாராவது சொன்னால் சும்மா இராமல் அதற்கு முகவரி கேட்டால் கிளம்பும் நாற்றம்தான் பதில்.

மோடி -ஜெட்லீயின் மாட்டு  பொருளாதாரம்.
தாராளமயக் கொள்கைகள் கொண்ட ஆட்சியின் கீழ் விவசாயம் என்பது சிறு குறு மற்றும் மத்தியத் தர விவசாயிகளுக்கு இலாபமற்ற தொழிலாக இல்லை. 

அத்தகைய விவசாயிகளுக்குக் கால்நடை செல்வம் மூலம் கிடைக்கும் வருமானம் வருவாய் இடைவெளியைச் சரிக்கட்டப் பயன்பட்டது. கால்நடை செல்வங்களை வளர்ப்பது மட்டுமே சிறு விவசாயிகளுக்குப் பெரிய அளவிற்கு இலாபத்தைத் தராது. 

ஆனால் விவசாயமும் கால்நடை செல்வம் வளர்ப்பும் இணைத்துச் செய்யும் பொழுது ஓரளவு பயனைத் தரும். எனவே விவசாயமும் கால்நடை செல்வம் வளர்ப்பும் இணைந்து சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய அடிப்படையாக அமைந்தது.

தற்பொழுது கால்நடை விற்க - வாங்க விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் காரணமாக விவசாயிகள் தமது கால்நடைகளை விற்க இயலாது. அரசாங்கம் இதற்குத் தடை இல்லை என்று சொன்னாலும் நடைமுறை அதற்கு எதிராக உள்ளது. பயன்பாடு முடிவடைந்த கால்நடைகளைச் சிறு விவசாயிகள் விற்பது என்பது சாத்தியமற்றதாக மாறியுள்ளது. 

இது சிறு விவசாயிகளின் வாழ்வுக்கு மரண அடி தரும் செயலாகும். 
இதன் விளைவாக விவசாயிகள் தமது கால்நடைகளைச் சட்டத்திற்கு அப்பாற்பட்டு அடிமாட்டு விலைக்கு விற்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சந்தையில் விற்பதன் மூலம் தமது கால்நடைகளுக்குப் பொருத்தமான மற்றும் சிறந்த ‘விலை பெறும்’ நன்மை விவசாயிகளுக்கு மறுக்கப்படுகிறது.

இந்தக் கடுமையான விதிகள் மூலம் ஏராளமான கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் மட்டுமல்லாது எழுத்து மூலமான பல்வேறு அனுமதிகளை அதிகாரிகளிடமிருந்து பெற வேண்டிய நிர்ப்பந்தம் விவசாயிகள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

 இதனால் ஊழல் தலைவிரித்தாடுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதிகள் காரணமாக உருவாகியிருக்கும் பாதகமான சூழல் என்னவென்றால் பயன்பாடு முடிவடைந்த எந்த வருவாயும் தர இயலாத கால்நடைகளை விவசாயி தொடர்ந்து பராமரிக்க வேண்டும். 
தனது சொற்ப வருமானத்தைப் பயனற்ற வகையில் செலவிட வேண்டும். 

இதன் காரணமாக விவசாயி தன்னிடம் உள்ள பால் கறக்கும் அல்லது உழவுக்குப் பயன்படும் கால்நடைகளைப் பராமரிப்பது பாதிக்கப்படும். மேலும் பால் தரும் புதிய கால்நடைகளை வாங்கவும் இயலாது. இதன் காரணமாகப் பால் உற்பத்தி பாதிக்கப்படும். மேலும் உழவு பணிகளும் பாதிக்கப்படும்.

மோடி அரசாங்கத்தின் முதன்மை பொருளாதார ஆலோசகர் நிதி அமைச்சகத்திற்கு இது தொடர்பாக எழுதியுள்ளதை இங்குக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்:‘

‘கால்நடைகளின் பொருளாதாரம் என்பது தமது வாழ்நாளின் இறுதி கட்டத்தில் அவற்றின் (நிதி)மதிப்பு எவ்வளவு என்பதில்தான் அடங்கி உள்ளது என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும். இப்பிரச்சனையில் இந்த நிதி மதிப்பு என்பது பயன்பாடு முடிவடைந்த கால்நடைகளின் மதிப்பு ஆகும். சமூகக் கொள்கைகள் கால்நடைகளின் இந்த மதிப்பை வீழ்ச்சி அடையச் செய்தால் கால்நடைகள் வளர்ப்பு என்பது இலாபம் குறைந்த தொழிலாக மாறும். (தவறான) சமூகக் கொள்கைகள் இறுதியில் சமூக நன்மைகளை அதிகமாகப் பாதிக்கும் ஆபத்துக்கு இட்டுச்செல்லும்.’’ ‘‘பயனற்ற கால்நடைகள் எண்ணிக்கை அதிகரிக்கும். அவற்றைப் பராமரிக்கும் சுமை உருவாகும். 

அவ்வாறு பராமரிக்காவிட்டால் அவை சாலைகளில் சுற்றித் திரியும். சாலைகளில் திரியும் கால்நடைகளுக்கு வாய் மற்றும் கால்களில் நோய் உருவாகும். இந்த நோய்கள் பரவும். ஆரோக்கியக் கேடுகளை உருவாக்குவது மட்டுமல்ல; அதன் விளைவாகச் சமூக நலச் செலவுகள் அதிகமாகும்.’’ (https://www.pressreader.com/india/business-standard/20170607 /281977492591135)
இது மோடி அரசாங்கத்தின் முதன்மை பொருளாதார ஆலோசகர் எழுத்து மூலமாகக் கூறிய கூற்று! 

எனவே கால்நடைகள் விற்பனை குறித்த புதிய விதிகள் பெரும்பாலான விவசாயிகளுக்கு மிகப்பெரிய பொருளாதார அழிவை உருவாக்குவது என்பது தெளிவு.

விவசாயிகளின் கால்நடை விற்பனை என்பது இறைச்சி மற்றும் தோல் தொழில் சந்தையுடன் சங்கிலி போன்ற தொடர்பு உடையது ஆகும். இந்தச் சந்தைச் சங்கிலிப் பிணைப்பில் ஏற்படும் எந்த ஒரு முறிவும் இறைச்சி மற்றும் தோல் தொழில்களைக் கடுமையாகப் பாதிக்கும். 

அவற்றின் ஏற்றுமதியும் பாதிக்கும். குறிப்பாக இத்தொழில்களில் பணிபுரியும் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும்.1999-2001ம் ஆண்டுகளில் இந்தியா 3.1 லட்சம் டன் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்தது. 2013-15ல் இது 21 லட்சம் டன்னாக உயர்ந்துவிட்டது.

உலக மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 5ரூ லிருந்து தற்பொழுது 21ரூஆக உயர்ந்துள்ளது. இந்தத் தொழில் சுமார் 2.2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக ஒரு மதிப்பீடு கூறுகிறது. இதில் ஒரு பகுதி பெரிய நிறுவனங்களாக இருந்தாலும் ஏராளமான சிறு நிறுவனங்களும் உள்ளன. 

மேலும் உள்ளூர் சந்தை தேவையைப் பூர்த்தி செய்யும் சிறு மாட்டிறைச்சி வணிகர்களும் பெருமளவு உள்ளனர். இந்தச் சிறு வணிகர்களும் அவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களும் கால்நடை விற்பனை தடையால் கடுமையாகப் பாதிக்கப்படுவர். 

இதே போலக் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகும் இன்னொரு தொழில் தோல் பொருட்கள் உற்பத்தி தொழிலாகும். இறைச்சிக்குப் பிறகு மிகவும் மதிப்புள்ளது மாட்டின் தோல் ஆகும். இத்தோல்தான் காலணிகள் மற்றும் பல்வேறு ஆடைகளுக்கு மூலப்பொருளாக உள்ளது.
தோல் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. 

இத்தொழிலில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். கால்நடை விற்பனை தடையால் மூலப்பொருள் கிடைப்பது குறையும். இதன் காரணமாகத் தோல் பொருள் உற்பத்தி செலவு அதிகமாகும். இது நமது ஏற்றுமதியை மட்டுமல்ல; வேலை வாய்ப்புகளையும் கடுமையாகப் பாதிக்கும்.மத்திய அரசின் இந்தத் தவறான விதியால் விரைவில் பால் உற்பத்தி தொழிலும் கடுமையாகப் பாதிக்கும் ஆபத்து உருவாகும். 

இதனை ஒரு விவசாயியின் கூற்று மூலமாக நாம் புரிந்து கொள்ள இயலும். பிரிஜ்லால் எனும் விவசாயி ஹரியானாவில் பஹாதுர்கார் எனும் ஊரில் வசிக்கும் 57 வயதானவர். தினமும் 20லிட்டர் பாலை விற்பதன் மூலம் தனது வருவாய் இடைவெளியைப் பூர்த்தி செய்துகொள்கிறார். 
ஆனால் தற்பொழுது அவரை கவலை சூழ்ந்துள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவரிடம் உள்ள இரண்டு பசுக்கள் பால் தருவதை நிறுத்திவிடும். ஒரு வயதான எருமையும் அவரிடம் உள்ளது. ஹரியானாவில் மாடு விற்பனைக்குக் கடும் தடை உள்ளது. குஜராத் மற்றும் ஜம்மு, காஷ்மீருக்குப் பிறகு கடுமையான சட்டங்கள் உள்ள மாநிலம் பா.ஜ.க. ஆட்சி செய்யும் ஹரியானா ஆகும். 

எனவே தமது வயதான எருமை மாட்டைப் பிரிஜ்லால் விற்க முடியவில்லை. பக்கத்து மாநிலமான உ.பி.யிலும் யோகி ஆதித்யநாத் முதல்வரான பிறகு மாடு விற்பனை சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. எனவே அங்கேயும் பிரிஜ்லால் தனது வயதான எருமையை விற்க முடியவில்லை.இந்த எருமை மாடு பால் தருவதை நிறுத்தி ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. 
பிரிஜ்லால் குடும்பத்திற்கு இந்த வயதான எருமையால் எவ்விதப் பலனும் இல்லை.

வருவாயும் இல்லை. எனினும் கடந்த ஆறு மாதங்களாகப் பிரிஜ்லால் இந்த எருமை மாடுக்கு உணவு அளித்துப் பராமரித்து வருகிறார். இந்தச் சூழல் தொடர்ந்தால் அந்த எருமை மாட்டின் மரணத்திற்காகக் காத்திருப்பதைத் தவிர வேறு வழி பிரிஜ்லாலுக்கு இல்லை.

 ‘‘என்னிடம் ஒரு எருமை, இரண்டு பசுக்கள், இரண்டு கன்றுகள் உள்ளன. இவற்றின் தீவனத்திற்கு மட்டும் ஒரு நாளைக்கு ரூ 200 செலவாகிறது. இவற்றை வாங்க நான் செலவிட்ட ரூ1.37 இலட்சத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 
நான் பால் விற்பனையில் எவ்வளவு சம்பாதிக்கிறேனோ அது முழுதும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வீணாகிவிடும்.’’ எனத் தனது நிலையை வருத்தத்துடன் விவரிக்கிறார் பிரிஜ்லால். இதுதான் பெரும்பாலான சிறு விவசாயிகளின் நிலை! இதனால் விவசாயிகள் புதிய மாடுகளை வாங்குவது பாதிக்கும். இது கடுமையான பால் உற்பத்தி வீழ்ச்சிக்கு இட்டுச்செல்லும்.

விலங்குகள் சந்தை என்பது மாநில உரிமைகளின் கீழ் வருகிறது. அரசியல் சட்டம் மாநிலங்களுக்கு இது தொடர்பான உரிமையை அளித்துள்ளது. விலங்குகள் வதை தடுப்பு சட்டம் நாடாளுமன்ற உரிமையின் கீழ் வந்தாலும் இச்சட்டத்தின் கீழ் மாநிலங்களைக் கட்டுப்படுத்தும் விதிகளை உருவாக்கும் உரிமை மத்திய அரசாங்கத்துக்கு இல்லை. 

எனவே மாநில உரிமைகள் மீது மத்திய அரசாங்கம் அப்பட்டமான தாக்குதலைத் தொடுக்கிறது எனும் கேரள அரசாங்கத்தின் குற்றச்சாட்டில் உண்மை உள்ளது. 
கர்நாடகா போன்ற வேறு சில மாநிலங்களும் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

மோடி அரசாங்கம் 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 31ரூ வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைத்தது. தனது தேர்தல் வாக்குறுதிகளை மோடி அரசாங்கம் நிறைவேற்ற முடியவில்லை. 
வெளி நாடுகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியனின் வங்கி கணக்கிலும் ரூ15 இலட்சம் போடுவேன் என்று மோடி சொன்னார். 
இது குறித்துப் பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவிடம் கேட்ட பொழுது இது ஒரு ‘தேர்தல் ஜும்லா’ என்று கூறினார். 

அதாவது தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகளைக் கவர்ந்திடக் கூறும் வெற்று வாக்குறுதிகளைப் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று அமித்ஷா கூறினார்.எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைத்த விவசாயிகளின் விளைச்சலுக்கு ஆகும் செலவைவிட 50ரூ கூடுதலாகக் குறைந்தபட்ச ஆதார விலை விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்குத் தரப்படும் என்று மோடி பிரச்சாரத்தில் கூறினார்.
ஆனால் அவ்வாறு 50ரூ கூடுதலாக விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்குத் தரமுடியாது என மோடி அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் பகிரங்கமாகக் கூறியது. 

தான் ஆட்சியில் அமர்ந்தால் விவசாயிகளின் தற்கொலை உடனடியாகத் தடுக்கப்படும் என்று மோடி வாய்ச்சவடால் அடித்தார். ஆனால் விவசாயிகள் தற்கொலை தடுக்கப்படவில்லை. 

மாறாக மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகளுக்குத் தற்கொலை செய்யும் தர்மசங்கடமான பணியைப் பா.ஜ.க. ஆட்சி வைக்கவில்லை! 

ஏனெனில் அதற்குப் பதிலாக அவர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டது.தான் பிரதமரானால் ஒரு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவேன் என்றார் மோடி.

ஆனால் கடந்த ஆண்டு தொழிலாளர்கள் அதிகமாகப் பணிபுரியும் எட்டுத் தொழில்களில் 2 இலட்சம் பேருக்குக் கூட வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வேலைவாய்ப்புகள் வேகமாகச் சுருங்கி வருகின்றன எனப் பல புள்ளிவிவரங்கள் தெளிவாக்குகின்றன. 

அரக்கத்தனமான முறையில் அமல்படுத்தப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக 100 பேர் உயிர் இழந்தது மட்டுமல்ல; (இவர்கள் செய்த ஒரே பாவம் வங்கிகளில் தமது சொந்தப் பணத்தை மாற்ற வரிசையில் நின்றதுதான்!) இந்தியப் பொருளாதாரத்தை இந்த நடவடிக்கை சீரழித்துவிட்டது என்பதைப் பல ஆய்வுகள் நிரூபிக்கின்றன. 
எனினும் மோடியின் நிதி அமைச்சர் இதனை மறுத்தவண்ணம் உள்ளார். எனினும் உண்மையை எவர் மறைக்க முடியும்?

பொருளாதாரத் துறையில் பா.ஜ.க. அரசாங்கம் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. 
இதனைத் திசை திருப்பும் சூழ்ச்சியாகவே கால்நடைகள் விற்பனை திருத்த விதிகளை மோடி அரசாங்கம் வெளியிட்டதோ என நினைக்கத் தோன்றுகிறது. இந்துத்துவா நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இசுலாமியர்களையும் இந்துக்களையும் மோதவிடுவதும் தலித் மக்களையும் ஏனையோரையும் முரண்பட வைப்பதும் இந்த விதி திருத்தத்தின் நோக்கமாக இருக்கிறது. 

மாட்டிறைச்சி உண்ணும் உணவு உரிமை, குறைந்த விலையில் அதிக அளவு புரோட்டின் சத்து கொண்டுள்ள உணவு ஆகிய பிரச்சனைகளுக்கு அப்பால் பொருளாதார வளர்ச்சியில் இது கடுமையான சீர்குலைவை விளைவிக்கும்.

வேலை இழப்பையும் ஏற்றுமதி வருவாயையும் பாதிக்கும். மாநில அரசாங்கங்களின் உரிமையும் பறிக்கப்படும். ஏற்கெனவே மோசமடைந்துள்ள மத மோதல்கள் மேலும் தீவிரமாகும்.எனவே மத்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து மிகப்பரந்த மக்களை அணி திரட்டுவது அவசியமாகிறது. 

இறைச்சி மற்றும் தோல் தொழிலில் பணியாற்றும் பெரும்பாலான இசுலாமிய உழைப்பாளிகள் பாதிக்கப்படுவது மட்டுமல்ல; 

பொருளாதார சீர்குலைவால் பெரும்பாலான இந்துக்களும் பாதிக்கப்படுவர். எனவே திரளான மக்கள் இயக்கத்தை உருவாக்கி மோடி அரசாங்கத்தின் இத்தகைய செயல்களை தடுப்பது அவசியமாகிறது.
                                                                                                                                                                         -பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா
====================================================================================================================================

ன்று,
ஜூலை-21.

  • பெல்ஜியம் தேசிய தினம்
  • ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது(1954)
  • லிபிய-எகிப்தியப் போர் ஆரம்பமானது(1977)
  • நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இறந்த தினம்(2001)
====================================================================================`

கமல்ஹாசனுக்கு பயந்த அதிமுக பாஜக  அரசு?




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?