நூலிழை வேறுபாடு.
இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணத்தையொட்டி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்ததாக பா.ஜ.க. ஆதரவாளரான மாரிதாஸ் என்ற யூடியூபர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவு.
மாரிதாஸ் என்ற யூடியூபர் கடந்த டிசம்பர் 9ஆம் தேதியன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணத்தையொட்டி கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில் தமிழ்நாடு காஷ்மீராக மாறி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக பாலகிருஷ்ணன் என்பவர் மதுரை மாநகரக் காவல் துறையில் புகார் அளித்ததையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டு தேனி மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை எதிர்த்து, மாரிதாஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மாரிதாஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "நான் சமூக சிந்தனையுடன் பல்வேறு விஷயங்கள் தொடர்பான ஆவணங்களைச் சேகரித்து அது சம்பந்தமான பொதுவான எனது கருத்துகளை பேஸ்புக், ட்விட்டர், யு டியூப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவுசெய்து வருகிறேன். இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி இந்திய முப்படைத் தளபதி இறந்தது குறித்து யாரும் தேவையின்றி கருத்துகலைப் பதிவிட வேண்டாம் என ட்விட்டரில்
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் என் மீது வழக்குப் பதிவுசெய்து கைதுசெய்துள்ளனர். என் மீது வழக்குப் பதிவுசெய்வதிலும் கைது நடவடிக்கையிலும் சட்டத்தைப் பின்பற்றவில்லை. எனவே என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
அந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பாக திங்கட்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆஜராகி, "அவரது ட்விட்டரில் முப்படைத் தலைமைத் தளபதி குறித்த கருத்துகளின்போது தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இதைப் பார்த்தால் தவறாக நினைப்பார்கள். மாநிலத்தின் நேர்மை குறித்தே கேள்வியெழுப்பியுள்ளார். எந்த அடிப்படையில் இந்தக் கருத்தைப் பதிவுசெய்தார் என விசாரிக்கவேண்டியுள்ளது" என்ற வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "சுப்பிரமணிய சுவாமியும் இது போன்ற கேள்வியை எழுப்பயிருந்தாரே, அவர் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டதா, ஜெயலலிதா மரணத்தின் போதும் இதுபோன்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டனவே" என்று கூறினார்.
பிறகு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மாரிதாஸ் கைதுசெய்யப்பட்டதால், அவரது கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்பட்டிருக்கிறது" என்றார். புகார் அளித்த பாலகிருஷ்ணன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க அவகாசம் கோரினார். இதையடுத்து வழக்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மாரிதாஸ் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான பாலகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞர் "மாரிதாஸைப் பலர் பின்தொடர்கிறார்கள். இந்த வழக்கு இப்போது துவக்க நிலையில்தான் இருக்கிறது. இந்தத் தருணத்திலேயே இதனைத் தடைசெய்யக்கூடாது. இது விசாரணையைப் பாதிக்கும்" என்று தெரிவித்தார்.
அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இதுபோலப் பதிவிட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.
அனைத்துத் தரப்பினர் வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாரிதாஸ் மீது சட்டப் பிரிவுகள் 153 A (ஜாதி, மத, இனங்களுக்குள் முரண்பாடு ஏற்படுத்தும் வகையில் பேச்சாலும் எழுத்தாலும் செய்கையாலும் தூண்டி விடுதல்) , 504 (தனது கருத்தால் அல்லது பதிவால் சமூகத்தில் பிரச்னை ஏற்படும் என தெரிந்தே பதிவிடுதல்), 505 ( ii ) (ஜாதி, மத, இன வேறுபாடு ஏற்படுத்தி பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் தூண்டி விடுதல்), 505 ( i ) ( b ) (பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது செல்லாது என்று கூறி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு தவிர, மோசடியாக போலி மின்னஞ்சல் அனுப்பிய வழக்கிலும் மாரிதாஸ் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.
தனது பதிவு வில்லங்கம் எனத்தெரிந்து நீக்கியுள்ளார் குற்றவாளி ஆனால் நீதிபதி என்பவர் அதையே கண்டு கொள்ளவில்லை.ஏன் சுப்பிமணிசாமி மீது வழக்கு போடவில்லை.அதனால் இதை தள்ளுபடி செய்கிறேன் என்கிறார் சுவாமிநாத அய்யர்.
சுப்பிரமணியசாமி சதி வேலையா என்றுதான் கேட்டார்.ஆனால் மாரிதாசோ தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு காஷ்மீராகிறது என்று வன்ம்மாக பதிவிட்டு தி.மு.க ஆதரவாளர்கள் சதி என்பதுபோல் பதிவிட்டிருந்தார்.அதான் வழக்கே.
இவர்தான் காஞ்சி மடாதிபதி மரியாதை செலுத்துமளவு தமிழ்த்தாய் வாழ்த்து உயர்வானது அல்ல என்ற தீர்ப்பையும் வழங்கியவர்.பா.ஜ.க,,ஆர் எஸ்எஸ். ஆதரவு கூட்டங்களில் தீவிரமாக கலந்து கொள்பவர்.நீதிபதி என்பதை விட சங்கியாக வெளிப்படுவதில் பெருமிதம் கொள்பவர்.இவர் தீர்ப்பு இப்படி இருக்கம் எனத் தெரிந்துதான் ஆரம்பத்திலேயே வழக்குரைஞர்கள் இவர் வழக்கை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்அதை புறந்தள்ளியே இவர் வழக்கை விசாரித்தார்.
எனவேதான் மாரிதாசு மேல் போர்ஜரி வழக்கு இரண்டாவதாகப் பதிவு செய்யப்பட்டதாம்.
சுவாமிநாத அய்யர்.
---------------------------------
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சந்திரசேகர், எவெங்கட்ஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
இந்தப் படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவிருந்து பின்னர் நவம்பர் 25ஆம் தேதி வெளியானது. படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஆனால், நவம்பர் 24ஆம் தேதி மாலை படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இதனால் சிலம்பரசன் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது படத்தின் சாட்டிலைட் உரிமை, அதற்கான விலை திட்டமிட்ட அடிப்படை விலையைவிட குறைவாகக் கேட்கப்படுவதால் பைனான்சியருக்கு கடனை திருப்பிக்கொடுப்பதில் நெருக்கடி ஏற்பட்டது. அதனால் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப் பட்டதாக சுரேஷ் காமாட்சி தரப்பில் கூறப்பட்டது. திட்டமிட்டபடி படம் வெளியாக வேண்டும் என்பதில் சிலம்பரசன் உறுதி காட்டியதால் உஷா ராஜேந்தர் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணி உதவியை நாடினார். அவரது முயற்சியில் பைனான்சியர் உக்கம்சந்த், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
வெளீயிட்டுக்குத் தேவை 6 கோடி ரூபாய். தொலைக்காட்சி உரிமை 5 கோடி ரூபாய்க்கு கலைஞர் தொலைக்காட்சி வாங்கிகொள்ள தயாராக இருந்ததுடன் அதற்கான காசோலையும் வழங்கிய நிலையில், கூடுதலாகத் தேவைப்படும் ஒரு கோடி ரூபாய்க்கு உத்தரவாதம் தேவைப்பட்டது. அதற்கான உத்திரவாதத்தை உஷா, ராஜேந்தர் இருவரும் பைனான்சியர் உக்கம் சந்துக்கு வழங்கினார்கள். அதன்பின் படம் அறிவிக்கப்பட்ட அடிப்படையில் வெளியானது. தொலைக்காட்சி உரிமையை எட்டு கோடி ரூபாய்க்கு விஜய் தொலைக்காட்சி வாங்கியது. இதனால் உக்கம்சந்த்துக்கு உத்தரவாதம் கொடுத்த உஷா, ராஜேந்தர் இருவரும் விடுவிக்கப்பட்டனர். மாநாடு படம் அதன் எதிர்பார்ப்புக்கு மீறிய வணிகரீதியான வசூலை ஈட்டி வருகிறது.
இந்த நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமை தொடர்பாக படத்தின் பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மீது டி.ராஜேந்தர் வழக்கு தொடர்ந்துள்ளார். இது சம்பந்தமாக டி.ராஜேந்தர் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “படத்தின் சாட்டிலைட் உரிமை விற்காமல் இருந்ததால் டி.ராஜேந்தரை ரூ.5 கோடி பொறுப்பேற்றுக்கொண்டு, படம் ரூ.5 கோடிக்கு குறைவாக விற்றால் அதற்கான தொகையையும் டி.ராஜேந்தரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் பைனான்சியர் உத்தம் சந்த் கடிதம் எழுதி அதில் டி.ராஜேந்தரின் கையெழுத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார். அதன் பிறகே மறுநாள் படம் வெளியாகியுள்ளது.
படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் டி.ராஜேந்தரிடம் தெரிவிக்காமலேயே பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருவரும் படத்தின் சாட்டிலைட் உரிமையை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு விற்க முற்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக டி.ராஜேந்தர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கின் பேரில் பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரையுலக வியாபார வட்டாரத்தில் விசாரித்தபோது பிரச்சினைகளை முடித்து படத்தை வெளியிட கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன், உஷா ராஜேந்தர் ஆகியோர் பணம் கொடுத்ததாகக் கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அனைத்து பிரச்சினைகளையும் சுரேஷ் காமாட்சி எதிர்கொண்டார். டி.ராஜேந்தர் குடும்பம் கொடுத்த உத்தரவாதத்தை ரத்து செய்து கொடுத்த பின்னர் அந்த உரிமைக்குச் சொந்தம் கொண்டாடுவது தவறானது என்கின்றனர் திரைத் துறையினர்.
----------------------------