41,000 கோடி ரூபாய் ரகசியம்

 திமுக பொதுக்குழு தேர்தல் தொடர்பான வழக்கில், வருகிற நவம்பர் 21 ம் தேதியன்று உச்ச நீதிமன்றம் இறுதி உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், 'எடப்பாடியின் 41,000 கோடி ரூபாய் ரகசியத்தை விரைவில் வெளியிடுவோம்' என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அடுத்த திரியைக் கொளுத்தி இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளைக் கிளப்பி உள்ளது.

அதிமுக-வின் ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு இதுவரை எந்த முடிவும் கிடைக்கவில்லை. "இறுதி தீர்ப்பு தங்களுக்கு சாதகமாகவே இருக்கும்" என எடப்பாடி ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

இது ஓபிஎஸ் தரப்புக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தினாலும்,

* அப்படி ஒருவேளை எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டால், அவருக்கு எதிராக தங்களிடம் இருக்கும் சில அஸ்திரங்களை வீசுவது என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் பொன்னையன், பன்னீர் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பனிடம் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆடியோ குறித்து விளக்கமளித்த பொன்னையனோ "அது என்னுடைய குரல் இல்லை. மிமிக்ரி செய்து வெளியிடப்பட்டுள்ளது. என்னை வைத்து அரசியல் செய்கிறார்கள்" என்று விளக்கமளித்தார். 

ஆனால், இந்த ஆடியோ உண்மை தான் என்று நாஞ்சில் கோலப்பன் உறுதியாக தெரிவித்தார். இந்த விவகாரம் அப்போதைக்கு அமுங்கிப்போன நிலையில்,

* பொன்னையன் பேசும் மற்றொரு ஆடியோ தன்னிடம் இருப்பதாக கூறி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாஞ்சில் கோலப்பன் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

"எடப்பாடி முதல்வராக இருக்கும் போது தொண்டர்களுக்கு என்ன துரோகம் செய்தார் என்பதே அந்த ஆடியோ.

 அரசு பதவியில் இருந்த போது பொன்னையன் கொடுத்த விளக்கமே இந்த ஆடியோ.

* அவர்கள் மோதி பார்க்க முடிவெடுத்துவிட்டார்கள் என்றால் நாங்களும் மோதி பார்க்கத் தயாராகிவிடுவோம். தொண்டர்கள் எல்லாருக்கும் உண்மைத் தன்மை தெரிய வேண்டும் என நினைக்கிறோம்.

* அதிமுகவை அழிக்க வேண்டுமென யாரெல்லாம் செயல்படுகிறார்களோ அவர்களின் முகத்திரை கிழிக்கப்படும்" என்றார் நாஞ்சில் கோலப்பன்.


இந்த நிலையில், அடுத்த அதிரடியாக எடப்பாடி பழனிசாமி தொடர்புடைய 41,000 கோடி ரூபாய் ரகசியம் விரைவில் வெளியிடப்படும் என ஓபிஎஸ்-ஸின் ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகர் திரி கொளுத்தி இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளைக் கிளப்பி உள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரபாகர், "ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது அவரை முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் சந்தித்தனர். 

அப்போது மீதம் இருக்கும் காலத்தில் பழனிசாமி முதல்வராக இருக்கட்டும், அடுத்த முதல்வர் நீங்கள்தான் என ஓ.பன்னீர் செல்வத்திடம் கூறியவர் தங்கமணி.

* ஆட்சியை கவிழ்க்க டி.டி.வி. தினகரன் தீர்மானம் கொண்டு வந்த போது ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு அவர்கள் நன்றியுடன் இருந்ததில்லை.

* தங்களை காப்பாற்றிக் கொள்ள விரும்பும் சில பேர் இந்த கட்சியை கையில் வைத்திருப்பதன் மூலமாகத் தான் வழக்குகளில் இருந்து தப்பிக்க முடியும் என்ற நோக்கத்தில் ஒற்றை தலைமை என்ற உத்தியை பயன்படுத்துகின்றனர்.

* ஒருவரை ஒதுக்கி வைத்து விட்டு தான் மட்டுமே முடிவெடுக்க வேண்டும் என்று நினைக்கும் காரணத்தால் தான் இந்த கட்சி பிளவுபட்டுக்கொண்டே இருக்கிறது.

* வழக்கில் சிக்கி விடாமல் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பேரம் பேசிய உண்மைகள், யார் தி.மு.க.வுடன் ரகசிய உறவு வைத்திருக்கிறார்கள், யார் தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்கிறார்கள் என்பது பற்றி விரிவான விளக்கங்கள் வரும் மாதங்களில் தெரியவரும்.

நவம்பர் 21 ஆம் தேதிக்கு முன்பாகவே அந்த தகவல்கள் வெளிக்கொண்டு வரப்படும்.

* ஓ.பி.எஸ். அனுமதி அளித்தால் 41,000 கோடி ரூபாய் ரகசியத்தை விரைவில் வெளியிடுவேன். அப்போது வெட்ட வெளிச்சமாக இந்த நாட்டு மக்களுக்கு தெரியவரும்" என்றார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ள கருத்து எடப்பாடிக்கு சிக்கலாக்கி உள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பதிவில், " ரூ.41 ஆயிரம் கோடி ரகசியத்தை வெளியிடுவேன் என்று அதிமுகவின் ஓ.பி.எஸ் தரப்பினரான ஜேசிடி பிரபாகரன், எடப்பாடி பழனிச்சாமியை எச்சரிக்கும் பேச்சு ஊடகங்களில் வந்துள்ளது.

அவ்வளவு பிரம்மாண்டமான தொகை யாருடையது? 

அது ஏதாவது கணக்கிற்கு உட்பட்டதா?

 வருமான வரி செலுத்தப்பட்டதா? 

அரசு தலையிட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடர்ந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் இதே ரீதியில் வில்லங்கத்தை கிளப்பினால், அது எடப்பாடி பழனிசாமிக்கு இன்னொரு தலைவலியாகத்தான் மாறும்.

நன்றி: விகடன்

----------------------------------------------------------------------------





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?