சனாதனதர்மமும் ,ஆன்லைன் ரம்மியும்.

 ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்யும் நோக்கில், கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 21 அன்று தமிழக அரசு ஒரு அவசரத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தது.

அந்த சட்டத்தின்படி, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் 10,000 ரூபாய் அபராதமும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

பணம் வைத்து விளையாடும் நபர்களின் கணினி, கைபேசி, மற்றும் அது தொடர்பான பிற உபகரணங்கள் பறிமுதல்செய்யப்படும். தடையை மீறி விளையாடினால் 5,000 ரூபாய் அபதாரம் விதிக்கப்படும் என்றும், 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

* இதனையடுத்து இந்த தடைச்சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்டங்களை நடத்தும் சர்வதேச நிறுவனங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

"இது திறமையை வெளிப்படுத்தும் விளையாட்டு தானே தவிரம் சூதாட்டம் அல்ல" என்று அந்த நிறுவனங்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம்,

* "போதுமான காரணங்களின் அடிப்படையில் இந்தச் சட்டம் இயற்றப்படவில்லை; உரிய விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுக்குத் தடைவிதிக்க முடியாது.

* ஆகவே, உரிய விதிமுறைகளுடன் கூடிய புதிய சட்டம் கொண்டுவர வேண்டும்" என்று கூறித் தமிழக அரசின் சட்டத்தை ரத்துசெய்தது.

இந்த சூழலில், தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்தது.

* அதே சமயம், ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கி பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்துகொள்வதும், சிலர் திருட்டு, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதாக செய்திகள் வெளியானது.

* அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றில் பணியாற்றுபவர்கள், 'ஆன்லைன் சூதாட்டத்தில் விட்டதை எப்படியாவது பிடித்துவிட வேண்டும்' என பணம் கையாடல் செய்து மாட்டிக்கொள்வதும் தொடர்கதையானது.

இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்ய சட்டம் கொண்டுவர வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் அரசை வலியுறுத்தின.

இதனைத் தொடர்ந்து, ஆன்லைன் ரம்மியினால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இக்குழு ஆன்லைன் விளையாட்டுகள், அதனால் ஏற்படும் தீமைகள், ஏற்படும் நிதியிழப்பு என்னென்ன என்பது குறித்து ஆய்வு செய்தது மட்டுமில்லாமல், ஆன்லைன் விளையாட்டுகளில் பண பணப்பரிவர்த்தனை எந்தளவு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டது.

அதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 27 ஆம் தேதி அன்று, தனது அறிக்கையினை முதலமைச்சர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை அதே நாளில் அமைச்சரவையின் பார்வைக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து, ஆன்லைன் விளையாட்டுகளை தடை விதிப்பது குறித்து பொதுமக்களிடமும் தமிழ்நாடு அரசு கருத்து கேட்டது.

இதனையடுத்து, குழுவின் அறிக்கை, பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில், சட்டத்துறையின் ஆலோசனையுடன் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கக்கூடிய ஒரு வரைவு அவசர சட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த அவசர சட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டு, அதற்கு அமைச்சரவை ஒப்புதலும் அளித்தது.

அதனைத் தொடர்ந்து அந்த சட்டம் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் ஒப்புதலைப் பெறுவதற்காக அனுப்பப்பட்ட நிலையில்,

* 10 நாட்களுக்கு மேலாகியும் அவர் இன்னும் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளார்.

* ஏற்கெனவே தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 21 சட்டமுன்வடிவுகளில் 6 க்கு மட்டும் கடந்த ஜூலை மாத கடைசியில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.

ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசரச்சட்டம் இன்னமும் ஆளுநரின் ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ளதால், அந்த சட்டம் அமலுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


ஆளுநர் ரவி சனாதன ஆய்வு, ,திருக்குறள் ஆய்வு போன்ற மக்கள் நலப் பணிகளில் மூழ்கி மும்முரமாக இருப்பதால் இதுபோன்ற சில்லறை வேலைகளைக் கண்டு கொள்வதில்லை என கிண்டி பகுதிகளில் கூறுகிறார்கள்.



--------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?