அருணா ஜெகதீசன் அறிக்கை

ஸ்டெர்லைட் படுகொலை திட்டமிட்டது.

 தூத்துக்குடியில் 2018-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடந்தது. 

மே 22-ம் தேதி போராட்டம் கலவரமாக மாறியதால், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

 விசாரணை ஆணையம் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்தது. ஆணையத்தின் இறுதி அறிக்கை கடந்த மே மாதம் 18-ம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 

அதைத்தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் ஆணையத்தின் அறிக்கை 4 பகுதிகளாக நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள விபரங்கள்:-

 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் 100-வது நாளையொட்டி போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடுவதற்கு வாய்ப்புள்ளதாக முன்கூட்டியே தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

மே 13 முதல் 22-ம் தேதி வரை போராட்டத்தின் தீவிரத்தன்மை படிப்படியாக அதிகரித்திருந்தது. குழப்பம் விளைவிக்கும் நபர்களை அடையாளம் கண்டு முன்கூட்டியே கைது செய்திருந்தால் போராட்டம் கலவரமாக மாறியதைத் தடுத்திருக்க முடியும். 

ஆனால், அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இது காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தின் குறைபாடு, அலட்சியம் ஆகும். மாவட்ட ஆட்சியர் தனது கடமையில் இருந்து தவறி அலட்சியமாக செயல்பட்டுள்ளார்.

அடியாள்போல் பயன்படுத்தினர்: காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை. டிஐஜி மற்றும் உதவி எஸ்பி உத்தரவிட்ட துப்பாக்கிச்சூடு, ஐஜிக்கு கூட தெரியவில்லை.

 டிஐஜி தானாகவே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

 சுடலைக்கண்ணு என்ற காவலர் மட்டும் அபாயகரமான துப்பாக்கியால் 17 ரவுண்டுகள் சுட்டுள்ளார். 

அவரை 4 இடங்களில் வைத்து சுட வைத்துள்ளதன் மூலம், அவரை அடியாள்போல் காவல்துறை பயன்படுத்தியுள்ளது. 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். 

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் பின்னந்தலை மற்றும் முதுகு பகுதியின் வழியாக குண்டு துளைத்து, முன் வழியாக உள்ளுறுப்புகளை சிதைத்து வெளியே வந்திருக்கிறது. இடுப்புக்கு கீழே யாரையும் சுடவில்லை. துப்பாக்கிச்சூடு நடைபெறும்போது கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் பின்பற்றப்படவில்லை. 

காவல்துறையினர் வரம்பு மீறியும், அத்து மீறியும் செயல்பட்டிருக்கிறார்கள்.

போராட்டத்துக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு தெரியாது என்று கைது செய்யப்பட்டவர்கள் சாட்சியம் அளித்துள்ளனர். 

போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றபோதும், படித்த தகுதி வாய்ந்த இளைஞர்களைக் குறிவைத்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

அனைவரின் உயிரிழப்பும் முதலாவது துப்பாக்கி சூட்டில் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

 64 பேர் பலத்த காயமும், 40 பேர் லேசான காயமும் அடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 17 பேர் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்த் துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இறந்தவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.20 லட்சம் போக, எஞ்சியத் தொகையை வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். 

ஏற்கெனவே வழங்கிய ரூ.5 லட்சம் போக, எஞ்சியத் தொகையை வழங்க வேண்டும். கலவரத்தின்போது நிகழ்ந்த ஜஸ்டின் செல்வமிதிஷின் இறப்பை இந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்துபோன 13 நபர்களுக்கு இணையாக பாவித்து அவரது குடும்பத்தாருக்கு அரசு தரப்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். 

அவரது தாயாருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பலத்த காயமடைந்த காவல்துறையைச் சேர்ந்த மணிகண்டனுக்கு மருத்துவ வசதிக்கான நிவாரணம் வழங்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் போன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஆணையத்தின் பரிந்துரையை தமிழக அரசு ஏற்று உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில், “ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது. 

விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, உள்துறை மற்றும் வருவாய் துறைகளின் மூலம் சம்பந்தப்பட்டஅதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆணையத்தின் ஆலோசனைகள் ஏற்று தொடர்புடைய துறைகளால் பொருத்தமான ஆணைகளை வழங்குவதற்காக விரிவாக ஆய்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தபோது முதல்வராக இருந்த பழனிசாமி, “துப்பாக்கிச் சூடு நடந்ததை டிவியை பார்த்துதான் தெரிந்து கொண்டேன். தற்காப்புக்காகத்தான் போலீஸார் சுட்டிருப்பார்கள் என நினைக்கிறேன். சமூக விரோதிகள் ஊடுருவியதுதான் வன்முறை அதிகரித்ததற்கு காரணம்” என்று தெரிவித்தார். 

துப்பாக்கிச் சூடு சம்பவத்தை ஒரு முதல்வர் டிவியை பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று கூறியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

ஆணையத்தின் அறிக்கையில், “துப்பாக்கிச் சூட்டை ஊடகங்களில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று அன்றைய முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். 

ஆனால், அப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன், உளவுத் துறை ஐஜி சத்தியமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடி நிலவரங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் முதல்வருக்கு நிமிடத்துக்கு நிமிடம் தெரிவித்ததாக வாக்குமூலம் கொடுத்தனர்.. 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை ஊடகங்களில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று அவர் கூறியது தவறானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ரஜினிகாந்த் போன்ற பிரபலங்கள் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும்' - துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார். ஆறுதல் கூறிய பின் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், `ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம்' என்றார்.

 பின்னர், சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், ‘ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் புகுந்த சமூக விரோதிகள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

காவல் துறையினர் மீது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தியதால்தான் வன்முறை வெடித்தது. தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டால் தமிழகம் சுடுகாடாகத்தான் மாறும்’ என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆணையம் சார்பில் ரஜினிக்கு சம்மன் அளிக்கப்பட்டது. 

இதற்கு ரஜினிகாந்த் எழுத்து மூலம் அளித்த பதிலில், “ஸ்டெர்லைட் ஆலை வன்முறை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. வன்முறையை ஏவிவிட்டது சமூக விரோதிகளாக இருக்கலாம் என்றுதான் நினைத்தேன். அப்படி எந்த சமூக விரோதியையும் எனக்கு தெரியாது” என்று தெரிவித்தார். 

இதுதொடர்பாக ஆணையத்தின் அறிக்கையில், “சமூக விரோதிகளால்தான் கலவரம் உண்டானது என்று, தான் கூறியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என ரஜினி கூறினார். ரஜினிகாந்த் போன்ற பிரபலம் ஒரு கருத்தைத் தெரிவிக்கும்போது அவர் கூறும் தகவலின் ஆதாரத்தை உறுதி செய்திருக்க வேண்டும். பிரபலங்கள் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும்.தேவையின்றி வாய்க்கு வந்த்தைப் பேசக்கூடாது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

------------------------------------------------------------------------------

ஜெயலலிதா மரணம்.

ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில், சசிகலா உள்ளிட்ட 4 பேர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, இவர்கள் மீதான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையின் பரிந்துரைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள்:

  • 2016 செப்டம்பர் 22-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே ஜெயலலிதாவுக்கு அதிக காய்ச்சல் இருந்துள்ளது. மருத்துவர் சிவக்குமார் பரிந்துரையின்படி பாராசிட்டமால் எடுத்துக் கொண்டுள்ளார்.
  • போயஸ் கார்டனில் மயங்கி விழுந்த ஜெயலலிதாவை தாங்கிப் பிடித்த சசிகலாவும், பணியாளர்களும் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
  • சுயநினைவின்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
  • ஜெயலலிதாவுக்கு கட்டுப்பாடற்ற நீரழிவு நோய், மாறுபட்ட ரத்த அழுத்தம், தைராய்டு, உடல் பருமன், எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி போன்ற உபாதைகள் இருந்துள்ளன.
  • 2016 செப்டம்பர் 27-ஆம் தேதி காவிரி நதிநீர்க் கூட்டம் நடைபெற்றபோது புகைப்படம் எடுக்க ஜெயலலிதா அனுமதித்த போதும், ராமலிங்கம் IAS அதனை தடுத்துள்ளார். அன்று இரவே ஜெயலலிதாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
  • 2016 அக்டோபார் 11-ம் தேதி அமெரிக்க மருத்துவர் ஸ்டூவார்ட் ரஸ்ஸலால் பரிந்துரைக்கப்பட்ட ஆஞ்சியோ சிகிச்சை ஜெயலலிதாவுக்கு செய்யப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
  • ஆஞ்சியோகிராம் செய்வதற்கு அடிப்படைத் தேவையான ரத்தத்தில் கிரியேடினின் அளவு சரியாக இருந்தும், ஏன் ஒத்திவைக்கப்பட்டது 
  • என்ற காரணத்தை விளக்கவில்லை.
  • ஆஞ்சியோவை ஒத்திவைக்க லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீகே தொலைபேசியில் பரிந்துரைத்ததாகவும், மருத்துவர் பாபு ஆபிரகாம் முரண்பட்ட தகவலை ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.
  • இந்த முடிவை மாற்றுவதற்கான உரிமை அமெரிக்கா மருத்துவரைத் தவிர, ஆர்.1-ன்னும் (சசிகலா ) பெற்று இருந்தார்.
  • நெருக்கடியின் போது முடிவு எடுக்கும் திறன் பெற்றவர்கள், கார்டியோ அறுவை சிகிச்சையை தொடராமல் தவறு இழைத்து இருக்கலாம்.
  • இது அமெரிக்கா மருத்துவரின் கருத்துப்படி மறைந்த முதல்வரின் உயிரை காப்பாற்றும் விளைவை ஏற்படுத்தி இருக்கலாம்.
  • சசிகலா வெளியேற்றப்பட்டு, 2012-ல் மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்ததிலிருந்து அவர்கள் இருவருக்கும் இடையே சுமுக உறவு இல்லை.
  • சசிகலாவைக் குற்றம்சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது.
  • ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11.30 என மருத்துவமனை அறிவித்தது. ஆனால் அவர் இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ஆம் தேதி மதியம் 3 மணி முதல் 3.50-க்குள் இருக்கும்.
  • 2016 டிசம்பர் 4 ஆம் தேதி மதியம் 3 மணி முதல் 3.30 மணிக்குள் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவை ஜெயலலிதாவின் மருமகன் ஜெ தீபக் அனுசரித்துள்ளார்.
  • வி.கே.சசிகலா, சிவக்குமார், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, அவர்கள் 4 பேரையும் விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும்.
  • மருத்துவர் பாபு ஆபிரகாம் ஆஞ்சியோ தொடர்பாகவும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள் தொடர்பாகவும் முரண்பட்ட தகவலை பதிவு செய்திருப்பதால் அவர்

    விசாரிக்கப்பட வேண்டும்.
  • ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என செய்தியாளர் சந்திப்பில் பொய்யான தகவலை தெரிவித்த அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் சி ரெட்டி விசாரிக்கப்பட வேண்டும்.

  • --------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?