சந்திரயான்-1 மாதவன் நாயர்,



இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உள்பட 4 விண்வெளி விஞ்ஞானிகள் அரசுப் பணிகளில் நீடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இஸ்ரோவின் துணை நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ் விதிகளை மீறி தனியார் நிறுவனமான தேவாஸூக்கு எஸ் பாண்ட் அலைவரிசை ஒதுக்கியதான குற்றச்சாட்டு காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாதவன் நாயர் தவிர, இஸ்ரோ முன்னாள் அறிவியல் துறை செயலர் பாஸ்கரநாராயணா, ஆன்ட்ரிக்ஸ் முன்னாள் மேலாண்மை இயக்குநர் கே.ஆர்.ஸ்ரீதரமூர்த்தி, இஸ்ரோ செயற்கைக்கோள் மைய முன்னாள் இயக்குநர் கே.என். சங்கரா ஆகியோரும் அரசுப் பணிகளில் நீடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாதவன் நாயர் இஸ்ரோ தலைவராக இருந்தபோதுதான் ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம் தேவாஸூடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்தியாவின் முக்கிய விண்வெளி சாதனையாகக் கருதப்படும் சந்திரயான்-1 திட்டத்தில் மாதவன் நாயர் முக்கியப் பங்காற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பத்ம விபூஷண் விருது பெற்றுள்ள அவர், இப்போது பாட்னா ஐஐடி நிர்வாகக் குழு தலைவராக இருக்கிறார்.
உயர்நிலைக் குழு அறிக்கை: இந்த ஒப்பந்த முறைகேடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய உயர்நிலை அதிகாரக் குழு அறிக்கை அளித்தது. அதனை மற்றொரு குழு ஆய்வு செய்து உறுதி செய்தது. அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
முன்னதாக எஸ் பாண்ட் அலைவரிசை முறைகேடு பிரச்னை வெளியானபோது, கடந்த மே 31-ல் 5 நபர் அடங்கிய உயர்நிலைக் குழு விசாரணைக்கு பிரதமர் உத்தரவிட்டார்.
மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை முன்னாள் ஆணையர் பிரத்யுஷ் சின்ஹா தலைமையிலான இக்குழுவினர், ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்தம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
முறைகேடு என்ன? இஸ்ரோ நிறுவனம் அனுப்பும் செயற்கைக்கோள்களில் இருந்து பெறப்படும் அலைவரிசைகள் பல்வேறு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும். இந்த அலைவரிசைகளை வர்த்தக ரீதியாக விற்பனை செய்ய அமைக்கப்பட்டது இஸ்ரோவின் துணை நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ்.
இந்த நிறுவனம் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகியவற்றுக்கு அதிக விலைக்கு அலைவரிசைகளை ஒதுக்கியது. அதே நேரத்தில் தனியார் நிறுவனமான தேவாஸூக்கு குறைந்த விலையில் அலைவரிசை ஒதுக்கப்பட்டது.
இந்த விவகாரம் வெளிவந்ததை அடுத்து இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிட்ட பிரதமர், இது தொடர்பான விசாரணைக்கும் உத்தரவிட்டார்.



"தன் மீதான நடவடிக்கை விதிகளை மீறிய செயல். இந்த நடவடிக்கையை எடுத்தவர்கள் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்று செயல்பட்டுள்ளனர் என மாதவன் நாயர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியது: இந்த நடவடிக்கையால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. ஏனென்றால் இப்போது நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள நாங்கள் நால்வருமே எங்கள் துறையில் சர்வதேச அளவில் நம்பகத்தன்மை பெற்றவர்களாகவே இருக்கிறோம். இந்தியாவின் முக்கிய விண்வெளி சாதனையான நிலவுக்கு சந்திரயானை அனுப்பியது எங்கள் முயற்சிதான் என்பதை நாடு மறந்துவிட முடியாது. இதற்கு அரசு எங்களுக்கு அளித்த கெüரவம்தான் இந்த நடவடிக்கையா? இந்த முடிவை எடுத்தவர்கள் குறித்து மிகுந்த பரிதாபம் கொள்ளத்தான் முடியும். இது மிகவும் அவமானகரமான செயல்.
 இப்போது இஸ்ரோ தலைவராக உள்ள கே.ராதாகிருஷ்ணன்தான் இந்த விஷயத்தில் அரசை தவறாக வழி நடத்தியுள்ளார். அவருக்கு எந்த விதிகளும், கட்டுப்பாடுகளும் தெரியாது. இப்போதைய நவீன தொழில்நுட்பம் பற்றியும் அறிந்திராத அவர், இஸ்ரோவையே அழித்து வருகிறார் என்று கூறிய மாதவன் நாயர், விஞ்ஞானிகள் மீது தவறான நடவடிக்கை எடுத்துள்ள அரசு, இந்த விஷயத்தில் நிர்வாகத்துறையில் இருந்தவர்களை கண்டுகொள்ளாதது ஏன்? 


மும்பை தாக்குதல் வழக்கில் சிக்கி சிறையில் உள்ள பயங்கரவாதி கூட நீதிமன்றத்தில் பலமுறை மேல்முறையீடு செய்யும் சுதந்திரம் உள்ளது. நாங்கள் என்ன அந்த பயங்கரவாதியை விட மோசமானவர்களா? ராணுவ ஆட்சியில் கூட மக்கள் விசாரிக்கப்படுவார்கள். எங்கள் மீதான நடவடிக்கை அதனைவிட மோசமானது. இந்த விவகாரம் தொடர்பாக எந்த விசாரணையும் நடத்தவில்லை. யாருக்கும் குற்றப்பத்திரிகை வழங்கப்படவில்லை. இவை எல்லாம் இல்லாமல் மத்திய அரசு எப்படி எங்களுக்கு தண்டனை விதிப்பதுபோன்ற நடவடிக்கையை எடுக்க முடியும் என்றுமாதவன் நாயர் கேள்வி எழுப்பினார்.
______________________________________________________________________________________________


 ரூ.300 கோடி சொத்தை ரூ.30 கோடிக்கு ?
-----------------------------------------------------------------
இந்து என்.ராம் - ரமேஷ் ரங்கராஜன் மீது நில அபகரிப்பு புகார் - அஇஅதிமுக முன்னாள் எம்பி போலீசில் மனு ரூ.300 கோடி சொத்தை ரூ.30 கோடிக்கு பெற முயற்சி ஆவணங்கள் திருடியதாகவும் ராம் மீது குற்றச்சாட்டு விவரம் :-


"சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 300 கோடி ரூபாய் மதிப்புள்ள 400 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயல்வதாக, இந்து நாளிதழ் நிர்வாகி என்.ராம் மற்றும் ரமேஷ் உள்ளிட்டோர் மீது, அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி தமிழ்நாடு காவல்துறை தலைவர் கே.ராமானுஜம் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஜே.கே.திரிபாதியிடம், இது தொடர்பாக கே.சி.பழனிச்சாமி, தனித்தனியாக மனுக்களை வழங்கியுள்ளார். ", தி இந்து நாளிதழை நடத்தும் கஸ்தூரி -சன்ஸ் நிறுவனத்திற்கு உட்பட்ட, ஸ்போர்ட்டிங் பாஸ்ட் டைம் என்ற நிறுவனத்தையும் அதற்கு சொந்தமான நிலங்களையும், 2004ம் ஆண்டு, 30 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.
மாமல்லபுரம் அருகே உள்ள 400 ஏக்கர் பரப்புள்ள அந்த நிலங்களின் மதிப்பு சில நாட்களில், ரூ.300 கோடி ரூபாயாக உயர்ந்து விட இதை அறிந்து கொண்டு, இந்து நிர்வாகிகள், என்.ராம், ரமேஷ், ரங்கராஜன் உள்ளிட்டோர் ரூ.300 சொத்தை, ரூ.30 கோடிக்கு திரும்ப தருமாறு, வற்புறுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

300 கோடி ரூபாய் சொத்தை, தர மறுப்பதால், ராம், ரமேஷ் உள்ளிட்டோர், காவல்துறையில் தம் மீது பொய்யான புகார் கொடுத்து, கைது செய்ய வைத்ததாகவும், குண்டர்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், கே.சி.பழனிச்சாமி, கூறியுள்ளார். மேலும் சொத்து தொடர்பான ஆவணங்களை ஆள் வைத்து, திருடிச் சென்று விட்டதாகவும், ராம், ரமேஷ் மீது பழனிச்சாமி புகார் தெரிவித்துள்ளார். இந்த சொத்துக்கள் தொடர்பாக வழக்கு விசாரணை நடந்து வருவதாகவும், நிலத்தின் உரிமை தம்முடைய பெயரில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, இந்து நிர்வாகிகள் என்.ராம், ரமேஷ், ரங்கராஜன் உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, காவல்துறையில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளார். இந்த புகார் மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தும்படி ஆணையர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?