இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

திங்கள், 21 மார்ச், 2016

3 மாத வட்டி விகிதம் ,

ஏழை எளியோருக்கு வங்கி கணக்கு வேண்டும் என்று ஆட்சிக்கு வந்தவுடன் முழங்கினார் பிரதமர் மோடி. ஜன் தன் என்று பெயர் வைத்தார். 

முன்வைப்புத் தொகையே இல்லாமல் கணக்கைத் துவங்கலாம் கடன் பெறலாம் என்றார். வங்கியில் கொஞ்சம் பணம் இருந்தால் நல்லதுதானே என ஏழை மக்கள் எண்ணியிருக்கலாம். 
29 கோடி கணக்குகள் துவக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. 
முன்வைப்புத் தொகையே தேவையில்லை என்று சொல்லப்பட்டாலும் 30,000 கோடி ரூபாய் வைப்புத்தொகை திரட்டப்பட்டுள்ளது.

இப்போது பொது வருங்கால வைப்பு நிதி, கிசான் விகாஸ் பத்திரம், தேசிய சேமிப்புத் பத்திரம் போன்றவற்றில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. 
வங்கியில் பணத்தைப் போட்டு வருகிற வட்டியில் கடைசிக் காலத்தில் கஞ்சி குடிக்கலாம் என்று வயது முதிர்ந்தவர்கள் கண்ட கனவையும் மோடி அரசு தகர்த்துள்ளது. 

பெண் குழந்தைகள் பாதுகாப்பு நிதிக்கான வட்டி விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது.
பொது வைப்பு நிதி மீதும் வரி போடத் தீர்மானிக்கப்பட்டது. நாடு முழுவதும் எடுத்த பலத்த எதிர்ப்பு காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டது. 

இப்போது சிறுசேமிப்புக்கான வட்டியில் கை வைத்திருக்கிறார்கள். 

பொது வைப்புநிதிக்கு தற்போது 8.7 விழுக்காடு வட்டி கிடைக்கிறது. ஏப்ரலிலிருந்து 8.1 விழுக்காடாகக் குறைக்கப்படுகிறது. 

இதனால் ஒரு லட்சம் ரூபாய் வைப்புநிதியில் உள்ளவருக்கு 10 ஆண்டுகளில் ஏற்படும் இழப்பு 12,400 ரூபாயாக இருக்கும். இதே அளவு தொகையை கிசான் விகாஸ் பத்திரத்தில் முதலீடு செய்தவருக்கு 10 ஆண்டுகளில் 18,373 ரூபாயும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு உள்ளவருக்கு 10 ஆண்டுகளில் 8,198 ரூபாயும் இழப்பு ஏற்படும்.

ஆனால் வங்கிகள் இந்த இழப்பையெல்லாம் முதலாக்கிக் கொண்டு வட்டி ஈட்டலாம் என்று நினைக்கின்றன. மேலே குறிப்பிட்ட மூன்று வகையில் பார்த்தால் கூட வட்டிக்குறைப்பின் மூலம் சுமார் ரூ.40,000 கோடி வங்கிக்குப் போகிறது. 

அதனை கூடுதல் வட்டிக்கு வீட்டுக்கடன், வாகனக்கடன் என்று மக்களுக்கு திருப்பிக்கொடுத்து வட்டி ஈட்டுவதற்கு வங்கிகள் முயல் கின்றன. இதற்கு அரசு துணைபோகிறது. 
இன்னொருபக்கம் சிறுசேமிப்பின் மூலம் திரட்டப்படும் தொகையில் பெருமளவு மாநில அரசுகளுக்கு நிதியாகக் கிடைத்துவந்த வாய்ப்பும் அரிக்கப்படுகிறது.

உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, இந்தியா ஓரளவு தப்பித்ததற்கு காரணம் பொதுத்துறை நிறுவனங்களும், இந்திய மக்களின் சேமிப்பு பழக்கமும் ஆகும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்தனர்.

ஆனால் மோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களை அழிப்பதோடு மக்களின் சிறுசேமிப்பு பழக்கத்தையும் மட்டுப்படுத்த முயல்கிறது.

ஏழை எளிய நடுத்தர மக்களின் உழைப்பில் வியர்வையில் பிழிந்தெடுத்த பணத்தை வங்கியில் செலுத்தி ஆண்டு முழுவதும் நிம்மதியாக இருந்துவிட முடியாது. 

பெட்ரோலுக்கும் டீசலுக்கும் 15 நாட்களுக்கு ஒரு முறை விலை நிர்ணயிப்பது போல சிறுசேமிப்புக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை வட்டி விகிதம் மாறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்துவதோடு, சிறுகச்சிறுக சேமிப்பவர்களுக்கு பெரும் ஏமாற் றத்தைத் தரும். 

எல்லா வகையிலும் மோடி அரசுஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கையை வஞ்சிப்பதிலேயே குறியாக இருக்கிறது.  

இவைகளை மறைக்கவே தேசபக்தி, பசுவதைத்தடை, மாட்டுக்கறி என திசைதிருப்பப்படுகிறது.
=======================================================================================
இன்று,
மார்ச்-21.
  • உலக  காடுகள் தினம்
  • உலக  இலக்கிய தினம்
  • பஹாய் காலண்டர் அறிமுகம் (1844)
  • டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள், கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றப்பட்டது(1917

=======================================================================================
கலைஞர் கருணாநிதி ,
சிறு குறிப்புகள்.
தமிழ்நாட்டின் நிரந்தரத் தலைப்புச் செய்தி... கலைஞர் கருணாநிதி! ஆட்சிக் கட்டிலில் இருந்தாலும் எதிரணியில் தொடர்ந்தாலும் புகழ்க் கடலில் மூழ்கி,விமர்சன முத்தெடுத்து வெளியே வருபவர். பொது வாழ்வில் தலைமுறைகள் தாண்டியும் வலம் தமிழ்த் தேனி.
டி.எம்.கருணாநிதி என்றுதான் ஆரம்ப காலத்தில் தன்னை அழைத்துக்கொண்டார் (திருவாரூர் முத்துவேலர்), பிறகு, மு.கருணாநிதி என்று கையெழுத்துப் போட்டார் இப்போது மு.க!.
’ஆண்டவரே’ என்றுதான் எம்.ஜி.ஆர். இவரை அழைப்பார். பிற்காலத்தில் `மூக்கா’ என்றும் அழைத்திருக்கிறார். `மூனாகானா’ என்று அழைப்பது சிவாஜியின் ஸ்டைல். இன்று கருணாநிதியின் மனைவி, மகன்கள், பேரன் பேத்திகள் உட்பட அனைவருமே `தலைவர்’என்றுதான் சொல்கிறார்கள்!.
தினமும் டைரி எழுதும் பழக்கம்கொண்டவர் அல்ல கருணாநிதி. ஆனாலும், அவருக்கு எல்லாம் நினைவில் அப்படியே இருக்கும். `என்னுடைய மூளையே எனக்கு ஒரு டைரி’ என்பார்!.
தினமும் இரவுத் தூக்கம் சி.ஐ.டி.காலனி வீட்டில்தான். அதிகாலை எழுந்ததும் கோபாலபுரம் போவார். காலை உணவு அங்கு. முரசொலிக்கோ, தலைமைச் செயலகமோ போய்விட்டு மதிய உணவுக்கு சி.ஐ.டி. நகர். சிறு தூக்கத்துக்குப் பிறகு, மீண்டும் கோபாலபுரம். அங்கிருந்து அறிவாலயம் செல்வார். இரவுச் சாப்பாட்டுக்கு டி.ஐ.டி நகர் போய்விடுவார். கருணாநிதியின் ஒருநாள் இதுதான்!.
அதிகாலையில் எழுந்ததும் அண்ணா அறிவாலயம் சென்று நடைப் பயிற்சி செய்யும் வழக்கத்தை வைத்திருந்தார் கருணாநிதி. முதுகு வலி ஆபரேஷனுக்குப் பிறகு வாக்கிங் நின்றுவிட்டது! கருணாநிதிக்கு யோகா கற்றுக்கொடுத்தவர் டி.கே.வி.தேசிகாச்சார்.`நாராயண நமஹ’ என்பதற்குப் பதிலாக, `ஞாயிறு போற்றுதும்’ என்று இவர் சொல்வார். `இரண்டும் ஒன்றுதான்’ என்று தேசிகாச்சாரும் சொல்லி ஒப்புதல் வழங்கி இருக்கிறார்!.
கருணாநிதிக்குப் பிடித்தலை சங்கு மார்க் வேட்டிகள்.`இதுதான்யா திருப்தியா இருக்கு’ என்பார்!.
ஆரம்ப காலத்தில் அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிட்டவர். செரிமானத்தில் பிரச்னை இருந்தால், சைவமே பெரும்பாலும் சாப்பிடுகிறார்.நித்தமும் ஏதாவது ஒருவகைக் கீரை இருக்க வேண்டும். மற்றபடி இட்லி,சோறு,சாம்பார் வகையறாக்கள் விருப்பமானவை!.
தி.மு.க. தேர்தல் செலவுக்கு எதிர்பாராத வகையில் 11 லட்சம் ரூபாய் வசூலித்துத் தந்ததைப் பாராட்டி, அண்ணா அணிவித்த மோதிரத்தைக் கழற்றியதே இல்லை.தங்க சங்கிலிகளை எப்போதுமே அணிந்ததில்லை!.
சின்ன வயதில் ஆர்வமாக விளையாடியது ஹாக்கி. திருவாரூர் போர்டு ஹைஸ்கூல் ஹாக்கி டீமில் இருந்திருக்கிறார். இப்போது கிரிக்கெட் பார்ப்பதில்தான் அதிக ஆர்வம்!.
ஏதாவது ஒன்றைப் படித்தால், அதை அப்படியே ட்விஸ்ட் செய்வதில் தனித்திறமை உண்டு. `வீரன் ஒருமுறைதான் சாவான்... கோழை பலமுறை சாவான்’ என்பது புகழ்பெற்ற பொன்மொழி. அதை கருணாநிதி, `வீரன் சாவதே இல்லை....கோழை வாழ்வதே இல்லை’ என்று மாற்றிப் பிரபலப்படுத்தினார்!.
கோபாலபுரம் வீட்டில் செயல்மணி, அறிவாலயத்தில் நீலமேகம் ஆகிய இருவரும் தான் கருணாநிதிக்கு உதவியாளர்கள். இருவருக்கும் வயதாகி விட்டதால், புதிதாக நித்யா என்ற இளைஞர் நியமிக்கபட்டு இருக்கிறார்!.
ஆரம்ப காலத்தில் மறவன் மடல் என்று எழுதி வந்த கருணாநிதி, அண்ணா மறைவுக்குப் பிறகுதான் `உடன்பிறப்பே’ என்று தலைப்பிட்டு கடிதங்கள் எழுத ஆரம்பித்தார். `கடிதங்கள் எழுதுவதால்தான் என் மனவருத்தங்கள் குறைகின்றன’ என்பர்!.
பதில் அளிக்க இயலாத கேள்விகளுக்கு எதிர்க்கேள்வி போடுவது அவரது பாணி. `ஆண்டவனை ஏற்றுக்கொள்கிறீர்களா?’ என்று ஒரு முறை கேட்கப்பட்டது. `அது பிரச்னை அல்ல. ஆண்டவன் நம்மை ஏற்கிறானா என்றுதான் பார்க்க வேண்டும்’ என்று திருப்பி அடித்தார்!.
கருணாநிதி 40-க்கும் மேலான படங்களுக்கு கதை-வசனம் எழுதியிருக்கிறார். இதில் அவருக்கு அதிகம் பிடித்த வசனம்,`மனச்சாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது!.
ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’என்றுதான் என் கல்லறையில் எழுத வேண்டும் என்று கருணாநிதி தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்!.
பூஜை அறை மாதிரியான மாடத்தில் கருணாநிதியின் அப்பா முத்துவேலர், அம்மா அஞ்சுகம், முதல் மனைவி பத்மாவதி ஆகியோரின் படங்கள் இருக்கின்றன.முக்கியமான நாட்களில், அங்கு வணங்கி விட்டுத்தான் வெளியில் புறப்படுவார்!.
சிறுகதை, நாவல், நாடகங்கள், கவிதைகள்,திரைக்கதை,வசனங்கள்,பாடல்கள் கார்ட்டூன் என எதையும் விட்டுவைத்ததில்லை கருணாநிதி.`ஆளும் திறமை இட்து மூளை... காவியமும் கற்பனையும் வலது மூளை. பரவலாக மனிதனுக்கு இரண்டில் ஒன்றுதான் மேன்மையாக இருக்கும். இரண்டும் மேன்மையாகச் செயல்படுவது கலைஞருக்குத்தான்’ என்றார் நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி!.
’தென்றலைத் தீண்டியதில்லை, ஆனால், தீயைத் தாண்டியிருக்கிறேன்’ கோயில் கூடாது என்பதற்காக அல்ல, அது கொடியவர் கூடாரமாக ஆகிவிடக்கூடாது `வீழ்வது நாமாக் இருப்பினும்,வாழ்வது தமிழாக இருக்கட்டும்’- கருணாநிதி எழுதிய இம் மூன்றும் தமிழகத்தில் அதிக முறை சொல்லப்பட்ட வாக்கியங்கள்!.
12 முறை எம்.எல்.ஏ. 5 முறை முதலமைச்சர், 10முறை தி.மு.க. தலைவர் என்பது மாதிரியான சாதனை இதுவரை யாரும் செய்ததில்லை. இனியும் முடியுமா என்பது சந்தேகம்!.
புழல் ஏரி உடைவது மாதிரி இருக்கிறது என்ற தகவல் கிடைத்தும்,அதைச் சரிப்படுத்துவதற்கான ஆலோசனைகளைக் கொடுத்துவிட்டு, நள்ளிரவு 2.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கவலையுடன் உட்கார்ந்திருந்த சம்பவம் அவரது அதிகப்படியான் அக்கறையை உலகத்துக்குச் சொன்னது!.
படுக்கையில் உட்கார்ந்து பரீட்சை அட்டை வைத்து எழுதுவதுதான் அவரது வழக்கம்.உயரத்துக்காக இரண்டு தலையணைகளை அடுக்கிவைத்துக் கொள்வார். இன்றுவரை மை பேனாவைத்தான் பயன்படுத்துவார்!.
கோபாலபுரம், சி.ஐ.டி. நகர், தலைமைச் செயலகம், அறிவாலயம்,முரசொலி ஆகிய ஐந்து இடங்களிலும் அன்றைய செய்தித்தாள்கள் மொத்தமும் கருணாநிதிக்காகத் தனியாகக் காத்திருக்கும்!.
கடற்கரை மணலில் உட்கார்ந்து காற்று வாங்கிய படி பேசுவதுதான் கருணாநிதிக்குப் பிடிக்கும். அது முடியாததால், மாமல்லபுரம் ஜி.ஆர்.டி. ஹோட்டலில் கடலைப் பார்த்த அறையில் அடிக்கடி தங்குகிறார்!.
கருணாநிதிக்குப் பிடித்த தமிழ்க் காப்பியம் சிலப்பதிகாரம், பிடித்த புராணம் மகாபாரதம். எப்போதும் மேசையில் வைத்திருப்பது திருக்குறள்!.
தனிமை பிடிக்காது. எப்போதும் நண்பர்கள் புடைசூழ இருக்க வேண்டும் என்பது கருணாநிதியின் ஆசை!.
============================================================================================