வெயிலை சமாளிப்பது....,?
சித்திரை மாதம்,அக்னி நட்சத்திரம் இவைகள் வரும் முன்னரே வெயில் கொளுத்த துவங்கிவிட்டது. வெளியில் தலைகாட்ட முடிவதில்லை.
ஆனால் வெளியில் செல்லாமல் நமது பணிகளை முடிக்க முடியாது.
கோடை வெயிலை சமாளிப்பது பற்றி நாம் அறிந்து கொள்ளலாம்.
வெயிலின் தாக்கத்தால் நான்கு வகை பாதிப்புகள் ஏற்படும்.
அவை உஷ்ணத்தால் சருமம் சிவந்து தடித்துப் போதல், உடலில் நீர்வற்றிப்போகும் தன்மை, வெப்பத்தால் வரும் களைப்பு, அதிகபட்ச வெப்பதாக்குதலால் ஏற்படும் மயக்கம். இவற்றில் இருந்து தப்பிக்க, பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயில் தாக்கும் அளவிற்கு வெளியே செல்லக்கூடாது. அந்த நேரத்தில் வெளியே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டால் தேவையான முன்னெச்சரிக்கைகளை கையாளவேண்டும். ஒரு மனிதனின் உடலில் இருந்து சராசரியாக அரை லிட்டர் தண்ணீர் வியர்வையாக வெளியேறும். கோடை வெயிலால் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையின் அளவு அதிகரிக்கும். அளவு அதிகரித்து நிறைய வியர்வை வெளியேறினால், உடலில் இருக்கும் தண்ணீர் வேகமாக வற்றிப்போகும்.
அப்போது உடலில் ஏற்படும் பாதிப்பைதான், டீஹைட்ரேஷன் என்ற நீர்ச்சத்து வற்றிப் போகும் தன்மை என்கிறோம். அதனால் கோடைக்காலத்தில் வழக்கமாக குடிக்கும் நீர் போதாது. அதிகமான அளவு நீரை ஒரே நேரத்தில் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக பருகவேண்டும். சோடியம், பொட்டாசியம் போன்ற உப்புகள், உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் சீராக இயங்குவதற்கு தேவைப்படுகிறது. உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளியேறும்போது அத்தகைய உப்புகளும் வெளியேறி, உடலை துவண்டுபோகச் செய்யும்.
இது ஆபத்தின் அறிகுறி என்பதால் கோடைகாலத்தில் உப்பு சேர்த்த கஞ்சி தண்ணீர், இளநீர், மோர், பழ வகைகள் சாப்பிடவேண்டும்.
பீர், மது, காபி, குளிர்பானங்கள் போன்றவை டீஹைட்ரேஷனை தடுக்காது.
மாறாக டீஹைட்ரேஷன் பாதிப்பை அதிகரிக்கவே செய்துவிடும்.
முதல் அறிகுறி: தாகம், வாய் வறண்டுபோதல், உமிழ்நீர் வற்றுதல்.
இரண்டாவது அறிகுறி: தாகம் மிகவும் அதிகரிக்கும். நாக்கு வறட்சி, கண் வறட்சி, சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல் போன்றவை ஏற்படும்.
சிறுநீர் வெளியேறுதல் 24 மணி நேரத்தில் மூன்று தடவையாக குறைந்து, அடர்த்தியான மஞ்சள் நிறமாகவோ, தவிட்டு நிறமாகவோ வெளியேறும்.
இறுதிகட்ட அறிகுறி கடுமையானது.
மனநிலை மாற்றம், பயம், படுத்தாலும் தீராத தலைசுற்று, நாடித்துடிப்பு குறைவு, சிறுநீர் இல்லாமை, நினைவிழப்பு போன்றவை தோன்றும்.
இது ஆபத்தான கட்டமாகும். வெயிலால் சருமத் தடிப்பு அல்லது வெந்து போதல் (சன் பர்ன்) ஏற்படும் விஷயத்தில் இந்தியர்கள் கொடுத்துவைத்தவர்கள்.
நமது சருமம் தடிமனானது. நிறமும் நமக்கு பாதுகாப்பானது. வெள்ளைக்காரர்களின் சருமம் வெயில் காலத்தில் சன் பர்ன் மூலம் அதிகம் பாதிக்கப்படும். சரும புற்றுநோய்கூட வெள்ளைக்காரர்களுக்கு ஏற்படும்.
நமது உடலை, உடை அணிந்து மூடுகிறோம்.
உடலில் மூடப்படாத பகுதியைதான் சூரிய கதிர் நேரடியாகத் தாக்கி, சரும காயத்தை ஏற்படுத்துகிறது. சூரியனில் இருந்து அல்ட்ரா வயலெட் கதிர் வெளியேறுகிறது. இதனை ஓசோன் மண்டலம் தடுத்து வடிகட்டி அனுப்பும். தற்போது ஓசோன் மண்டலம் பாதிக்கப்பட்டு அல்ட்ரா வயலெட் கதிர் நேரடியாக சருமத்தை தாக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.
இது சருமத்தையும், கண்களையும் பாதிக்கும். கோடையில் காலை 11 முதல் பிற்பகல் 3 மணிவரை அல்ட்ரா வயலெட் கதிர் அதிகபட்சமாக வெளியேறும். கோடைகாலத்தில் சூரியன் மேகத்திற்குள் மறைந்திருந்தாலும், அதில் இருந்து வெளிப்படும் கதிர் அளவு குறையாது. பாதிப்பும் குறையாது.
சரும காயம் ஏற்பட்டால் கைமருத்துவம் பார்க்காமல் டாக்டரை சந்தித்து சிகிச்சை பெறவேண்டும்.
கொளுத்தும் வெயிலிலும் வெளியே சென்றாகவேண்டிய நிலையில் இருப்பவர்கள், சூரிய கதிர் நேரடியாகபடும் இடங்களை மூடும் வகை மெல்லிய பருத்தி ஆடைகளை அணிந்து செல்லலாம்.
அல்ட்ரா வயலெட் கதிர்கள் கண்களையும் தாக்கும்.
அதனால் அந்த கதிர்களை தடுக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் கண்ணாடிகளை அணியவேண்டும். காரில் அதிக தூரம் பயணிக்கும்போதும், கார் கண்ணாடிகளில் சன் ஸ்கிரீன் பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.
மனித உடலில் சீதோஷ்ண சமன்பாடு எப்போதும் இருந்து கொண்டிருக்கவேண்டும்.
கோடை காலத்து வெளி வெப்பத்தால், உடல் சீதோஷ்ண சமன்பாடு சீரற்றுபோகும்.
அப்போது அதிக நேரம் வெயில் நேரடியாக பட்டால், வெப்ப தாக்கம் எனப்படும் ஹீட் ஸ்டிரோக் என்ற வெப்பத்தால் வரும் அதிமயக்கம் ஏற்படும். இது ஏறத்தாழ மாரடைப்பைப் போன்றது.
இதை உடனடியாக கவனித்து சிகிச்சை பெறாவிட்டால் கிட்னி, இதயம், மூளை போன்றவற்றின் செயல்பாடு முடங்கும்.
சோடியம், பொட்டாசியம் தொடர்ந்து குறையும்போது அதிகபட்ச சோர்வு, மனக்குழப்பம், சுவாசத்தடை, நாடித்துடிப்பு குறைந்து போகுதல் போன்றவை உருவாகும்.
நமது உடலை சூட்டில் இருந்து பாதுகாக்க உடலுக்குள்ளே ஒரு இயற்கை குளிரூட்டும் கட்டமைப்பு இருக்கிறது. அதில் வியர்வை குறிப்பிடத்தக்கது. வியர்வை வெளியே வந்து ஆவியாகும்போது உடல் குளிர்ச்சியடையும். இதன் மூலம் உடலுக்குள் சீதோஷ்ண சமன்பாடு உருவாகும்.
ஆனால் கோடையில், உடலில் நீர்வற்றிப்போனால் உடலில் வியர்வையை உருவாக்கும் கட்டமைப்பு தற்காலிகமாக தன் செயலை நிறுத்திவிடும்.
அதனால் உடல் சீதோஷ்ண சமன்பாடு தாறுமாறாகி, உடலுக்குள் உஷ்ணம் அதிகரித்து, ஹீட் ஸ்ட்ரோக் உருவாகிறது. இதற்கு உடனடியாக சிகிச்சை பெறாவிட்டால் உயிருக்குகூட ஆபத்து ஏற்படலாம். இதனை தவிர்க்க நேரடியாக வெயில்படும் அளவிற்கு வெளியே செல்லக் கூடாது.
அப்படி செல்லும் நிலை ஏற்பட்டால் குடை, தொப்பி போன்றவைகளை பயன்படுத்தவேண்டும். சிறுவர்களும், வயதானவர்களும் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும்.
குண்டான உடல் வாகு கொண்டவர்களின் உடல் சுற்றளவு அதிகமாக இருக்கும். அதனால் வெயில் அவர்கள் மீது படும் சுற்றளவும், வியர்வை வெளியேறும் சுற்றளவும் அதிகரிப்பதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அவர்களுக்கு அதிகமாக இருக்கும்.