அரசுக் கல்வியைத் தூக்கிலிடும் மோடி !
காட்ஸ் ஒப்பந்தம்
மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் புதிய கல்விக் கொள்கையானது நமது நாட்டின் கல்வி மீது அரசு தொடுத்திருக்கும் புதியதொரு தாக்குதலாகும். அதனைப் பற்றி விரிவாகப் பார்க்கும் முன், முதலில் நாம் சட்டங்கள், கொள்கைகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன, ஏன் உருவாக்கப்படுகின்றன, யாருடைய நலனுக்காக உருவாக்கப்படுகின்றன என்பது குறித்துப் பார்க்க வேண்டும். அரசின் கொள்கைகள் எல்லாம், அவை எதைப் பற்றியதாக இருந்தாலும் மிக நல்ல கொள்கைகள் என்றும்; ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவதில்தான் தவறு இருப்பதாகவும் நம்மிடையே ஒரு தவறான கருத்து திட்டமிட்டுப் பரப்பப்பட்டிருக்கிறது. இதன் மூலம், அரசின் கொள்கை முடிவுகளை அரசியல்ரீதியில் ஆராய்வதில் இருந்து நம்மைத் திசை திருப்பி, அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதை மட்டுமே கவனிக்க வைக்கிறார்கள். கொள்கைகள் என்ன சொல்கின்றன என்பதைக் கூர்ந்து கவனிக்கும் போதுதான், அதற்குப் பின்னால் உள்ள அரசின் உண்மையான நோக்கத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
1980 முதல் நான் பல்வேறு அரசு கமிசன்களிலும், கமிட்டிகளிலும் பங்கு வகித்துள்ளேன். அவற்றில் நான் பெற்ற அனுபவங்களின் மூலம் தெரிந்து கொண்டது என்னவென்றால், அரசின் அனைத்துக் கொள்கை முடிவுகளும், சட்டங்களும், மக்கள் விரோதக் கண்ணோட்டத்திலிருந்தே உருவாக்கப்படுகின்றன என்பதுதான். பல மக்கள் விரோதச் சட்டங்கள், மிகத் திறமையான முறையில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை நான் பார்த்துள்ளேன். அவை எதனை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டனவோ, அவை அச்சுப் பிசகாமல் அப்படியே நிறைவேற்றப்பட்டுள்ளன.
1985-86 ஆம் ஆண்டுகளில் நவீன தாராளவாதக் கொள்கைகளை இந்தியாவில் புகுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றபோது, அதற்கு ஏற்ற வகையில் தற்போது நடைமுறையில் உள்ள கல்விக் கொள்கையானது உருவாக்கப்பட்டது. அப்போது நவீன தாராளவாதக் கொள்கைகளை வடிவமைத்தவரான மன்மோகன் சிங், பிரதமர் அலுவலகத்தின் நிதி ஆலோசகராக, உலக வங்கியால் நியமிக்கப்பட்டிருந்தார். இதே காலகட்டத்தில்தான் கல்வித் துறையானது, மனிதவள மேம்பாட்டுத் துறை எனப் பெயர் மாற்றப்பட்டது. இவ்வாறு பெயர் மாற்றம் செய்வது என்பது வெறுமனே ஒரு துறையின் பெயரை மாற்றி வைக்கிறார்கள் என்பதல்ல; அந்தத் துறை சம்பந்தமான அரசின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதையே இந்தப் பெயர் மாற்றம் காட்டியது.
1986 கல்விக் கொள்கை மூலம் பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்து மட்டத்திலும் நவீன தாராளவாத கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. முறைசார்ந்த பள்ளிக் கல்விக்குப் பதிலாக முறை சாராக் கல்வி என்ற பெயரில் பகலில் வேலை செய்யும் குழந்தைத் தொழிலாளர்களுக்கும் அவர்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் மற்ற குழந்தைகளுக்கும் மாலை நேரத்தில் தினமும் இரண்டு மணி நேரம் மட்டும் படிக்க வசதி ஏற்படுத்தித் தரும் திட்டத்தைச் செயல்படுத்தியது, அரசு. இந்த முறையில் ஆசிரியர் இருக்க மாட்டார்; அதற்குப் பதிலாக மிகமிகக் குறைந்த சம்பளம் வாங்கும், எவ்விதக் கல்வித் தகுதியும் தேவைப்படாத ‘பயிற்சியாளர்’ என்பவர் மாணவர்களுக்குப் ‘பயிற்சி’ அளிப்பார். வீட்டு வேலை செய்யும் பெண் குழந்தைகள் மதிய வேலையில்தான் ஓய்வாக இருப்பார்கள் என்பதால், பெண்களுக்கான கல்வி நிலையங்கள் மதியம் இரண்டு மணி நேரம் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் நவீன தாராளவாதத்துக்கு ஏற்ற வகையில், இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராகக் குழந்தைத் தொழிலாளர் முறையுடன் மைய அரசு சமரசம் செய்து கொண்டது.
அடுத்ததாக, உயர்கல்வியில் கல்லூரிகளின் செயல்திறனைப் பொறுத்து சில கல்லூரிகள் தன்னாட்சி உரிமை உடைய நிறுவனங்களாக்கப்படும் என அரசு அறிவித்தது. இங்கே தன்னாட்சி என்பதன் பொருள் அரசுக் கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீட்டை நிறுத்திவிட்டு, சுயநிதிக் கல்லூரிகளாக மாற்றுவதன் மூலம் அவற்றைத் தனியார்மயப்படுத்துவதாகும்.
1991-இல் உலகமயமாக்கல் என்ற பெயரில், உலக மூலதனத்தின் தடையற்றை கொள்ளைக்கு இந்தியப் பொருளாதாரம் திறந்துவிடப்பட்டபோது, உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் இந்திய பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் சக்திகளாக மாறின. கல்வி, சுகாதாரம், மக்கள் நலத் திட்டங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், மானியங்கள் – என அனைத்து செலவீனங்களுக்குமான நிதி ஒதுக்கீடுகளை நிறுத்தும் வகையில் பொருளாதாரக் கட்டுமானங்களை மறுசீரமைத்தால் மட்டுமே இந்திய அரசு தொடர்ந்து இயங்குவதற்கான கடன்கள் வழங்கப்படும் என்று உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் நிபந்தனை விதித்தன. இதனை இந்திய அரசு ஏற்றுக் கொண்டது. அதற்குப் பிறகு கல்விக்கான நிதி ஒதுக்கீடு படிப்படியாகக் குறைக்கப்பட்டது.
1991-இல் நாடு முழுவதும் மொத்தம் 8 இலட்சம் அரசுப் பள்ளிகள் இருந்தன. தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையோ மிகவும் சொற்பம்தான். அப்போது அரசுப் பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை 37 இலட்சம். இவற்றைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்று உலக வங்கி உத்தரவிட்டது. 1993 முதல் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களுக்குப் பதிலாக ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களைப் பணியமர்த்தும் முடிவை அரசு எடுத்தது.
1990-களின் மத்தியில் உலக வங்கியின் ஆணைக்கிணங்க ஒரேயொரு அறையில் எல்லா வகுப்பு மாணவர்களையும் அமரவைத்து, ஒரேயொரு ஆசிரியர் அனைத்துப் பாடங்களையும் நடத்தும் ஓராசிரியர் பள்ளிகள் துவங்கப்பட்டன. ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி ஆசிரியர்களை வைத்துள்ள தனியார் பள்ளிகளில் வசதி படைத்தவர்கள் தங்களது குழந்தைகளைச் சேர்த்துப் படிக்க வைக்கும் அதே வேளையில், வசதியில்லாதவர்கள் எல்லா வகுப்புகளுக்கும், எல்லாப் பாடங்களுக்கும் ஒரே ஆசிரியர் என்ற ஓராசிரியர் பள்ளியில் தங்களது குழந்தைகளைச் சேர்க்கும் நிலையை உலக வங்கியின் உத்தரவுப்படி, மைய அரசு திட்டமிட்டு உருவாக்கியது.
1997-இல் கொண்டுவரப்பட்ட பழங்குடியினருக்கான கல்வி உத்தரவாதச் சட்டம், கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் கூட அரசுப்பள்ளிகள் இயங்கலாம் எனக் கூறியது. அதில் வேலை செய்யும் ஒப்பந்த ஆசிரியர்களுக்கு எவ்வித கல்வித் தகுதியும் தேவையில்லை எனவும் கூறியது. பின்னர் இதே சட்டம், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பொருந்தும் வகையில் “சர்வ சிக்சா அபியான்” என்ற பெயரில் கொண்டுவரப்பட்டது.
2010-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட கல்வி உரிமைச் சட்டம், தனியார் பள்ளிகளில் வசதியற்ற மாணவர்களைச் சேர்த்து அவர்களுக்கு அரசே கல்விக் கட்டணம் செலுத்தும் முறையைக் கொண்டு வந்ததன் மூலம், இனி அரசுப் பள்ளிகளே தேவையில்லை, இருக்கும் அரசுப் பள்ளிகளும் வெகு விரைவில் மூடப்படும் என்ற அரசின் கொள்கை முடிவை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
பள்ளிக் கல்வியில்தான் இவ்வாறு என்றில்லை; உயர்கல்வியிலும் இதற்குச் சற்றும் குறையாத அளவிற்கு நவீன தாராளவாதக் கொள்கைகள் மூலம் பெரும் சீரழிவுகளை உருவாக்கியுள்ளனர். இதற்கு முந்தைய பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் 2000-மாவது ஆண்டில் யுனெஸ்கோ மாநாடு ஒன்றில் உரையாற்றிய அப்போதைய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி, “உயர்கல்வி என்பது தனிநபருக்கு மட்டுமே பலனளிக்கக் கூடியது, சமுதாயத்திற்கு அல்ல; இதனால் அதற்கான கட்டணங்களை மாணவர்கள் கொடுத்துத்தான் தீர வேண்டும்” எனக் கூறினார். “கல்வி என்பது ஒரு வணிகப் பொருள். அதனை வாங்கும் மாணவர்கள் வாடிக்கையாளர்கள். வாடிக்கையாளர்கள் பொருளுக்கான விலையைக் கொடுத்து, அதனை வாங்கிச் செல்ல வேண்டும்: அதில் அரசு தலையிடக் கூடாது” என 1990 முதல் உலக வங்கி கூறி வந்ததையே முரளி மனோகர் ஜோஷி இந்திய அரசின் கொள்கையாக யுனெஸ்கோ மாநாட்டில் தெரிவித்தார்.
அதே 2000-மாவது ஆண்டில்தான் இந்தியாவின் மிகப்பெரிய ‘கல்வியாளர்களான’ முகேஷ் அம்பானி, குமாரமங்கலம் பிர்லா ஆகிய இருவரும் இணைந்து தயாரித்த “அம்பானி-பிர்லா” அறிக்கை பிரதமரின் பொருளாதார ஆலோசனை சபையில் தாக்கல் செய்யப்பட்டது. நாடு முழுவதும் எழுந்த மாணவர்கள் – ஆசிரியர்களின் எதிர்ப்புகளையும் மீறி, “அம்பானி-பிர்லா” அறிக்கையின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அந்த அறிக்கை அரசின் கொள்கைகளில் மூன்று முக்கிய திருத்தங்களைக் கோரியது. “முதலில் கல்வி என்பது சமூக நலனுக்கானது அல்ல, அது சந்தைக்கானது. இரண்டாவது, அரசு விரும்பினால் ஆரம்பக் கல்விக்கான நிதி உதவிகளைத் தொடரலாம். ஆனால், இடைநிலைக் கல்விக்கான நிதி உதவிகளைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும். அதேசமயம், உயர் கல்விக்கான நிதி உதவிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். ஏனென்றால், உயர் கல்வியைத் தங்களது கையில் எடுத்துக் கொள்ள உலகச் சந்தை தயாராக உள்ளது. மூன்றாவதாக, அவ்வாறு உயர் கல்வியை உலகச் சந்தை எடுத்துக் கொள்ளும் போது, அதன் அத்தனை துறைகளையும் சந்தையே தீர்மானிக்கும். அதாவது, கல்விக்கான கட்டணம் மட்டுமல்ல; பாடத்திட்டம், பயிற்று முறை, பட்டங்கள் வழங்குவது, கல்லூரிகளின் வடிவம் – என அனைத்தையும் சந்தையின் தேவைகளே தீர்மானிக்கும்; சமூகத்தின் தேவைகள் அவற்றை தீர்மானிக்காது” என “அம்பானி-பிர்லா” அறிக்கை தெளிவாகக் கூறியது. இந்த அறிக்கையானது, இந்தியக் கல்விக் கட்டுமானத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, அது நமது நாட்டின் அறிவுக் கட்டுமானத்தின் மீதான தாக்குதலாகும்.
“அம்பானி-பிர்லா” அறிக்கை வெளியான அதே சமயத்தில்தான், இந்திய அரசு கல்வித்துறையில் “பொதுத்துறை – தனியார் கூட்டு” என்ற வடிவம் புகுத்தப்பட்டது. பொதுத்துறை – தனியார் கூட்டு என்றால் இரண்டு வடிவங்களும் இணைந்து செயல்படுவது என்று பொருள் கொள்ளக்கூடாது. இதன் உண்மையான பொருள் பொதுத்துறையைத் தனியார் கொள்ளையடிப்பது என்பதாகும். இந்த வடிவத்தைத் தாங்கள் கொண்டு வரப்போவதாக பா.ஜ.க. தனது தேர்தல் வாக்குறுதியிலேயே கூறியிருந்தது. அதனை நிறைவேற்றுவதற்காக பா.ஜ.க. ஆட்சிப்பொறுப்பை ஏற்ற உடனேயே, பிரதமர் அலுவலகத்தில் பொதுத்துறை – தனியார் கூட்டிற்கென ஒரு புதிய பிரிவே உருவாக்கப்பட்டது.
பா.ஜ.க.விற்குப் பின், 2004-ஆம் ஆண்டு காங்கிரசு ஆட்சி அமைந்த பிறகும் கூட பிரதமர் அலுவலகத்தில் இதே பிரிவு, அதில் வேலை பார்த்த அதே அதிகாரிகளுடன் தொடர்ந்து இயங்கியது. 2007-ஆம் ஆண்டில் திட்டக் கமிசனின் தலைவராக இருந்த அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், “இனி கல்வித் துறையில் கொண்டுவரப்படும் அனைத்துத் திட்டங்களும் பொதுத்துறை-தனியார் கூட்டு என்ற வடிவத்திலேயே கொண்டுவரப்படும்” என அறிவித்தார்.
பொதுத்துறை-தனியார் கூட்டு எவ்வாறு பொது சொத்துக்களை, அரசின் நிதி ஒதுக்கீடுகளைத் தனியார் முதலாளிகள் தின்று தீர்க்க உதவுகிறது என்பதை விளக்கப் பல உதாரணங்களைக் கூற முடியும். 2005-ஆம் ஆண்டில் கல்வித் துறைக்கான மத்திய அலோசனைக் குழுவில் நான் இருந்தபோது, மனிதவள மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி என்னிடம் ஒரு ஆவணத்தை கொடுத்தார். அது, அந்த வருடத்தில் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட வருமான வரிவிலக்கின் காரணமாக அரசுக்கு எவ்வளவு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய மனிதவள மேம்பாட்டுத் துறை ஏற்படுத்தியிருந்த ஒரு கமிட்டியின் அறிக்கை. அதன்படி 2004-05- ஆம் ஆண்டில் மட்டும் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட வருமான வரிவிலக்கின் காரணமாக 5,000 கோடி ருபாய் அரசிற்கு வருமான வரி இழப்பு ஏற்பட்டிருந்தது. 2004-05-ஆம் ஆண்டுகளில் இருந்ததைவிட, தற்போது பள்ளிக் கல்வியிலும், உயர் கல்வியிலும் தனியார்மயம் பல மடங்கு அதிகரித்துள்ளதால் அரசிற்கு ஏற்படும் இழப்பும் முன்பைவிட பல மடங்கு அதிகமானதாக இருக்கும் என்பது நிச்சயம்.
கல்விக்கான நிதி ஒதுக்கீடைப் படிப்படியாக வெட்டி வருவதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரசுக் கல்வி நிறுவனங்களும் சுயநிதிக் கல்வி நிறுவனங்களாக மாற வேண்டிய சூழலை அரசு உருவாக்கியுள்ளது. இவ்வாறு சுயநிதிக் கல்வி நிறுவனங்களாக மாறும் போது, அதில் சந்தை மதிப்புள்ள படிப்புகள் மட்டுமே வழங்கப்படும். உதாரணத்திற்கு, தமிழ் இலக்கியம் குறித்த பட்டப் படிப்புகளுக்கு சந்தையில் எவ்வித மதிப்பும் இல்லை. இதன் காரணமாக, தமிழ் இலக்கியம் என்ற துறையே அனைத்துக் கல்லூரிகளிலுமிருந்தும் நீக்கப்பட்டுவிடும். “2009-ஆம் ஆண்டு முதல் அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும் ஓவியம், இசை, விளையாட்டு உள்ளிட்ட வகுப்புகளை ரத்து செய்துள்ள” கல்வி உரிமைச் சட்டம், நடுநிலைப்பள்ளிகளில் தற்போதுள்ள வகுப்புகள் பாதியாகக் குறைக்கப்படும் என்றும் கூறியிருக்கிறது.
இந்தப் பின்னணியிலிருந்து நாம் உயர்கல்வியை “காட்ஸ்” ஒப்பந்தத்திற்குத் தாரை வார்ப்பது குறித்துப் பார்க்க வேண்டும். இதற்கு ஏற்பத்தான் மைய அரசின் புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
அனில் சடகோபால், “உலக வர்த்தகக் கழகமும் காட்ஸும் நிர்பந்தமாகக் கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கை-2015, நாட்டை மறுகாலனியாக்கும் வட்டத்தை நிறைவு செய்கிறது” (Recolonization of India: Circle is closing faster through New Education Policy dictated by WTO & GATS) என்ற தலைப்பில் ஆற்றிய உரை.
நன்றி:வினவு.
==========================================================================================
இன்று,
மார்ச்-06.
- கானா விடுதலை தினம்(1957)
- ஈரானும் ஈராக்கும் எல்லை தொடர்பான உடன்பாட்டிற்கு வந்தன(1975)
- உமர் கயாம், ஈரான் நாட்காட்டியை அமைத்து முடித்தார்(1079)
==========================================================================================