344 மருந்துகளுக்குத் தடை எதற்கு?



 இந்தியாவில்தான் உலகிலேயே கூட்டு மருந்துப்பொருட்களை நோய்க்கு எடுத்துக்கொள்ளும் வழக்கம் அதிகம் உள்ளது. 
மேலும் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை எந்த வித கட்டுப்பாடுமில்லாமல் அதிகம் டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுவதும்,பயன்படுத்துபவர்களும் இந்தியாவில்தான் . 

இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு, ஆன்ட்டி பயாடிக் மருந்துகளில் சிவப்பு பட்டை ஒன்றை உருவாக்கியது. 
இதன் பிறகு சமீபத்தில் மத்திய அரசு பிறப்பித்த அடுத்த உத்தரவினால் 344 வகை கூட்டு மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன. 


கூட்டு மருந்துகள் கொண்ட வலி நிவாரணிகள், ஒவ்வாமை மருந்துகள், நீரிழிவு மருந்துகள், ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் ஆகியவையே. இவற்றை தொடர்ந்து பயன்படுத்தினால் பக்க விளைவுகள் ஏற்படும்; அதோடு ஆன்ட்டிபயாடிக்கிற்கு எதிரான உணர்வை உடலில் ஏற்படுத்துவதாலும் இவை தடை செய்யப்படுகின்றன. 

குரோசின் கோல்ட் அண்ட் ஃப்ளூ, டிகோல்ட் டோட்டல், சுமோ, ஆப்லோக்ஸ், கேஸ்ட்ரோஜில், செரிகாஃப், நிமுலிட், காஃப்னில், டோலோ கோல்ட், டிகாஃப், பென்சிடில், கோரக்ஸ், விக்ஸ் ஆக்‌ஷன் 500, டெக்ஸ்
ஆரஞ்ச், குளுகோநார்ம், ஸ்டாப்க்யூர் எல்இசட் போன்றவை இதில் சில!

இந்தத் தடையால், மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களில் எளிதாகக் கிடைக்கும் இருமல் மருந்துகள் இனி கிடைக்கப்போவதில்லை. 
காரணம், அதில் உள்ள முக்கிய உட்பொருளான கோடின்தான். 
அரை நூற்றாண்டு காலமாக இந்திய மருத்துவத்துறையில் இருமல் மருந்துகளில் பயன்பட்டு வந்த கோடின் உட்பொருள் கொண்ட இருமல் மருந்துகள் மத்திய அரசின் சுகாதாரத்துறை தடை உத்தரவால் இனி கிடைக்காது.
 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிமோனியா, காசநோய் போன்றவை உலகின் பெரும் உயிர்க்கொல்லி நோய்களாக இருந்தன. காசநோயினால் ஏற்படும் உடல்வலி மற்றும் இருமல் போன்றவற்றுக்கு மருத்துவர்கள் போதைப்பொருளை பரிந்துரைக்க வேண்டியிருந்தது. 
அந்த காலகட்டத்தில் இதற்கு உதவியது, மார்பின்தான். 
1832ம் ஆண்டு கோடின் மருந்தை பிரெஞ்ச் வேதியியலாளரான பியர் ரோபிக்யுட் என்பவர் கண்டறிந்தார். 
இதனை உட்கொள்ளும் நோயாளிகளின் மூச்சினை மெல்ல இயல்பாக்கி உறக்கம் கொள்ளச் செய்தது இது. ஓபியத்திலிருந்து செயற்கையான முறையில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட முக்கியமான மருந்துப்பொருளாக அன்று கோடின் திகழ்ந்தது. 
எந்த அளவு நோயாளிக்கு உதவியதோ, அதே அளவு பக்கவிளைவுகளும் இருந்தன. இதன் போதைக்கு அடிமையாக்குவது, 
அயர்வு உணர்ச்சியைத் தூண்டுவது என்பவை இருந்தன. இன்று சாதாரணமாகப் பயன்படுத்தும் ஹெராயினிலும் இதே பிரச்னைகள் இருந்தன.
 
ஜலதோஷம் வந்தவுடன், காற்று செல்லும் வழிகளைக் காக்கும் இயற்கையான பாதுகாப்பு முறைகளின் அடிப்படையில் தொண்டையில் எரிச்சல் தோன்றி இதன்பிறகே இருமல் தோன்றுகிறது. 

மேல் காற்றுக்குழாய்களிலிருந்து ஜலதோஷ வைரஸ் தொண்டைக்கு வந்த பின்னரே இருமல் தொடங்குகிறது. இருமல் மருந்து வைரஸை அழிக்கிறது; 
அல்லது இருமல் மூலம் சளியினை வெளியேற்றுகிறது. கோடின் ஒருமுறை உட்கொண்டுவிட்டால் அது தொடர்ந்து உடலில் மார்ஃபினை  உருவாக்குகிறது. அதனால் அபாயகரமான அளவு ரத்த அளவு அதிகரிக்கிறது. 

குழந்தைகளுக்கு சுயநினைவற்ற நிலை ஏற்படுகிறது; 

அல்லது மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவைக் குறைக்கிறது. 
இருமல் மருந்தினை அதிகளவு பயன்படுத்தும்போது மாயக்காட்சிகள், தலைசுற்றல், மருந்துக்கு அடிமையாதல் போன்றவை ஏற்படுவதாக மருத்துவமனை ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. 
மேலும் இவற்றை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களில் பெற முடியும். 
அமெரிக்க மருந்துகள் கட்டுப்பாட்டுக் கழகம், ‘டெக்ஸ்ட்ரோமெத்தார்பன் அல்லது டிஎக்ஸ்எம் (50களில் கோடின் மருந்துக்கு மாற்றாக மேம்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்ட ஒரு மருந்துப் பொருள்) தவறாக பயன்படுத்தப்படும்போது குமட்டல் அல்லது வாந்தி, இதயத்துடிப்பு கூடுதலாவது, ரத்த அழுத்தம் அதிகரிப்பு, உடல் வெப்பம் அதிகரிப்பு, உடலில் அமிலம் அதிகம் உருவாவது, உணர்வின்மை போன்றவை ஏற்படும்’ என்று கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

குறிப்பிட்ட நோய்க்கு என நாம் சாப்பிடும் மாத்திரையில் அந்நோய் தவிர்த்து மற்ற நோய்களுக்குமான மருந்து இருக்கும்போது அவை உடலில் சென்று பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன. நோய்க்குத் தனி மருந்து என்பதை விட, கூட்டு மருந்தாக சந்தையில் கிடைப்பவைதான் அதிகம். 


தற்போது தடை வளையத்தில் சிக்கியிருக்கும் பென்சிடில் இருமல் மருந்தினை இந்தியாவில் விற்பனை செய்வதன் மூலம் அபோட் நிறுவனம் தனது 1 பில்லியன் வருமானத்தில் 3 பங்கைப் பெறுகிறது என்பதிலிருந்தே அதன் லாபத்தை நீங்கள் யூகிக்க முடியும். 
இந்தியா பல ஆண்டுகளாகவே மருந்துகளைக் கையாள்வது குறித்து எந்தவித பகுத்தறிவும் இன்றி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  மருத்துவர்கள் நோயாளிக்கு குறிப்பிட்ட அளவு மருந்துகளை சீட்டில் எழுதித் தரவில்லையெனில், அவர் தகுதியான மருத்துவர் அல்ல என்று மக்கள் நினைக்கிறார்கள்.  மக்களின் இந்த உளவியல் மனப்பான்மையினால் மருந்துகளில் குறையும் பணத்தை மருத்துவர் தன் ஆலோசனைக்கு வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிறது. 
மேலும் சளியை வெளிக்கொண்டுவருவது, இருமலை அடக்குவது என இருவேறுபட்ட மருந்துகள் உள்ளன. 
ஆனால் மக்கள், இருமல் மருந்து ஒன்றே என நினைக்கிறார்கள். 

‘தடை செய்யப்பட்ட மருந்துகளின் மூலக்கூறுகளை பட்டியலிடுவதை விட எதை அரசு அனுமதிக்கிறது என்பதை அதன் பலன் மற்றும் ஆற்றல் அடிப்படையில் பட்டியலிட்டு வெளியிடவேண்டும் .

 இந்தியா முழுவதும் 6000 கூட்டு மருந்துப்பொருட்கள் பல்லாண்டுகளாக மத்திய அரசின் இடையீடின்றி மாநில அரசின் சட்டங்களினாலே நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்து வருகின்றன. 
மத்திய அரசின் தடையுத்தரவு வரும் வரை மாநிலங்களில் இவை அனுமதிக்கப்பட்ட பொருட்களாகவே இருந்தன. 
மருந்து நிறுவனங்கள் தனி மருந்துகளைத் தயாரிப்பதை விட கூட்டு மருந்துகளைத் தயாரிப்பதில் லாபம் இருப்பதை கண்டுபிடித்து பயன்படுத்திக்கொண்டன.
கூட்டு மருந்துப் பொருட்களை அமெரிக்க, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய அனுமதி இல்லை. 
இருமலை நமது மரபு வழியின்படி அணுக முடியும். வீட்டிலேயே தயாரிக்க முடியும் மருந்தாக வெந்நீரில் தேன் கலந்து பருகுவது இருமலினால் ஏற்படும் பாதிப்புகளை வெகுவாகக் குறைக்கும். 
மேலும் இதற்கான பாதிப்புகளைக் குறைக்க தனி மருந்துகளும் உள்ளன. 
நாம் சரியான முறையில் மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை மற்றும் ஆலோசனை பெறுதலே இதற்கான சரியான தீர்வாக அமையும்.
இந்தியா இந்த கூட்டு மருந்துகள் விசயத்தில் ரொம்பத் தாமதமாகவே நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனாலும் இதை எதிர்த்து சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் நீதிமன்றத் தடைக்கு விண்ணப்பம் செய்துள்ளன.
மக்களின் உடல் ஆரோக்கியத்தில் அரசுக்கு மட்டுமல்ல,நீதிமன்றத்துக்கும் கண்டிப்பாக அக்கறை இருக்க வேண்டும் .மத்திய அரசு காலம் தாழ்த்தியாகிலும் எடுத்த முடிவுக்கு தடை வழங்குவது தவறு.
மக்கள்  நலனுக்கு கேடு விளைவிக்கும் செயலாகும் அது.





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?