இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

செவ்வாய், 8 மார்ச், 2016

அதிமுக மகளிர் தினம்போராட்டம்.

 கலக்கப்போவது யாரு?
உலகமெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.மகளிர்கள் எல்லா வகையிலும் வெற்றிகளைக் குவிக்க பலர் வாழ்த்தியுள்ளனர்.
இங்கு தமிழகத்தில் மகளிர் தின் வாழ்த்து சொல்ல கிளம்பினால் அதிமுகவில் நடக்கும் உரிமைப் போரில் மகளிர் வர்க்கப் போராங்கனை [அதாவது போராடும் வீராங்கனை] முன்னாள் முதல்வர் ஜெயலலிதா [நான் குறிப்பிடுவதுசரிதானா?தேர்தல் ஆணையம் அரசின் செயல்பாடுகளை முடக்கி வைத்த பின்னர் அவரை எப்படி கூப்பிடுவது.முன்னாள் என்றா பொம்மை முதல்வர் என்றா]வின் உடன் பிறவா சகோதரி சசிகலாவுக்கும் அதிமுகவின் மற்றொரு முன்னாள் முதல்வரான ஒ.பன்னீர் செல்வத்துக்கும் நடக்கும் கடை கட்டம் எட்டியுள்ள அதிகார உரிமைகைப்பற்றல் போர் தான் நினைவுக்கு வருகிறது.
இன்று மகளிர்  தினமாக  இருப்பதால் சசிகலா வெல்ல வாழ்த்துகிறோம்.
ஆடவர் தினம் கொண்டாடப்பட்டால் வாழ்த்துக்களை ஒ.பன்னீர் செல்வத்துக்கு மாற்றி விடலாம்.ஆனால் அதற்கு வழியில்லை.
இனி போராட்ட வரலாறு.

அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரனால் அறிமுகமாகி ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா மூலம் அமைச்சரானவர். 

கட்சிக்கு வந்தவுடன் இவருக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஜெயலலிதா முதல்வர் பதவி இழந்தபோது திடீரென ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. சசிகலா டி.டி.வி.தினகரனை தற்காலிக முதல்வராக்க பார்த்தார். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டதால் சசிகலா அதிர்ச்சியானார்.
முதல்வர் பதவி வழங்கப்பட்டதால் ஓ.பன்னீர் செல்வம் சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை ஓவர்டேக் செய்ய ஆரம்பித்தார். ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்கி அவரின் அசைக்க முடியாத சக்தியாகவும் திகழ தொடங்கினார். 

ஒரு கட்டத்தில் தேனி தொகுதி எம்பியாக இருந்த டி.டி.வி.தினகரனுக்கும் வக்கீல் ஜோதிக்கும் இடையே டெல்லியில் வைத்து தகராறு ஏற்பட்டது. வக்கீல் ஜோதியின் வழியாக இது முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் பின்புலத்தில் பன்னீர்செல்வம் இருந்தார். 
இதையடுத்து டி.டி.வி.தினகரன் ஓரம் கட்டப்பட்டார். மேலும் தனக்கு எதிராக இருந்த, சசிகலாவின் தீவிர ஆதரவாளர் தங்க தமிழ் செல்வனையும் பன்னீர் செல்வம் காலி செய்தார். ெஜயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்ததால் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கட்சியில் பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. நிதி அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. 
இதனால், ஜெயலலிதாவின் அடுத்த நிலைக்கு ஓ.பன்னீர் செல்வம் உயர்ந்தார். கட்சிக்கு நிதியை வசூல் செய்வது, கட்சி பிரச்னைகளை தீர்ப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வந்தார்.

ஓ.பன்னீர் செல்வத்தை 2வது முறையாக முதல்வர் ஆக்கியது சசிகலாவுக்கு பிடிக்கவில்லை. ஆட்சி அதிகாரத்தால் சசிகலாவை, பன்னீர் செல்வம் ஓரம் கட்டினார். 

தினகரனை முதல்வர் ஆக்க முயற்சியில் ஈடுபட்டதால் சசிகலா கட்சியை விட்டு நீக்கப்பட்டார். பின்னர், சசிகலா கட்சியில் சேர்க்கப்பட்டார். அண்மையில் சென்னையில் நடந்த பொதுக்குழுவுக்கு சசிகலாவை முதல்வர் அழைத்து வரவில்லை. பொதுக்குழுவில் சசிகலாவுக்கு எதிராக பி.எச்.பாண்டியன், கே.பி.முனுசாமி ஆகியோரை தூண்டிவிட்டு ஒ.பன்னீர் செல்வம் பேசவைத்தார். 
அதன் பின்னர் சசிகலாவால் அவர்கள் பதவி பறிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சசிகலாவிடம் எதுவும் பேசாமல் ஜெயலலிதாவிடம் நேரடியாக பேச ஆரம்பித்தார். 
தொடர்ந்து சசிகலாவை ஓ.பன்னீர் செல்வம் புறக்கணிக்க ஆரம்பித்தார். மேலும், தன்னுடைய சமுதாயத்தை சேர்ந்தவர்களை தனக்கு கீழே உருவாக்கி அவர்களுக்கு உதவ ஆரம்பித்தார். தனக்கு என்று கட்சியில் ஒரு ஆதரவு வட்டத்தை ஏற்படுத்தி கொண்டார். 
அதிமுகவிலும் அசைக்க முடியாத சக்தியாகவும் ஓ.பன்னீர் செல்வம் வலம் வந்தார்.
ஓ.பன்னீர் செல்வம் கேரளாவில் வாங்கியுள்ள சொத்துக்கள் தொடர்பாக கேரள முதல்வர், ஜெயலலிதாவுக்கு ஒரு அறிக்கை தயார் செய்து அனுப்பினார். 
முதல்வர் அலுவலகத்துக்கு சென்ற அந்த பைல் ஜெயலலிதா கைக்கு செல்லாமல் மீண்டும் ஓ.பன்னீர் செல்வம் கைக்கே வந்தது. அந்த அளவுக்கு முதல்வர் அலுவலகத்திலும், கட்சி அலுவலகத்திலும் தனக்ெகன்று ஆட்களை நியமித்து ெதளிவாக காய் நகர்த்தி வந்தார். 
இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வத்துக்கு அடுத்த நிலையில் இருந்த நத்தம் விஸ்வநாதனுக்கு அதானி குழுமம் மூலம் வில்லங்கம் ஏற்பட்டது. ஆனால், நத்தம் விஸ்வநாதன் தப்பித்தார். அதானியின் சூரிய மின்சக்தி நிறுவனத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டு முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரியாமல் காய்நகர்த்தி வந்தார். 
அதானி குழுமம் மூலம் நத்தத்துக்கு   பெரிய அளவில் பணம் கைமாறியதாக தெரிகிறது. 
 இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன் குறித்து சசிகலாவிடம் ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து ஐவர் அணியினர் குறித்த தகவல்களை சேகரிக்க சசிகலா உத்தரவிட்டார். ஐவர் அணி என்ன எல்லாம் செய்கிறார்கள் என்ற தகவல் சேகரிக்கப்பட்டு முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கப்பட்டது. 

இதில், ஐவர் அணியில் இடம் பெற்றிருந்த வைத்தியலிங்கம் மட்டும் தப்பித்தார். தொடர்ந்து தனித்தனியாக கட்சி பெயரை சொல்லி கொள்ளை அடிக்க தொடங்கினர். நத்தம் விஸ்வநாதன், ஓ.பன்னீர் செல்வத்தை விட சீனியர் என்றாலும், முதல்வருக்கு அடுத்த நிலையில் இருந்ததால் பன்னீர் செல்வத்தை தனது குருவாக நத்தம் விஸ்வநாதன் நினைத்து செயல்பட்டார்.
 ஓ.பன்னீர் செல்வம் தமிழகம் முழுவதும் தனக்கு ஆதவாளர்களை எம்எல்ஏக்களாக்க ஒரு பட்டியலையும் தயார் செய்தார். ஐவர் குழுவில் இருந்த மற்றொரு அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கு மண்டலத்தை தனக்கு என்று ஆக்கி கொண்டார். 
அதாவது, தர்மபுரியில் இருந்து கோவை வரை ஒரு முதல்வர் போலவே செயல்பட்டார். இந்த மண்டலத்திலும் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அவரே முன்னிலைப்படுத்தப்பட்டு வந்தார். 
மேலும், தன்னை இளவரசிக்கு நெருக்கமானவர் போலக் காட்டிக் கொண்டார்.
மேலும், இவர் தான் அமைச்சர்களிடம் கட்சி நிதியை வசூலித்து கார்டனுக்கு கொண்டு போய் வழங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. 
இதை வைத்து தன்னை அசைக்க முடியாத சக்தியாக நினைத்து வலம் வந்தார். மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, செங்கோட்டையனை வளரவிடவில்லை. இந்த நிலையில் ஐவர் அணியில் இடம் பெற்றிருந்த வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி தவிர 3 பேரையும் முதல்வர் ஜெயலலிதா ஒரம் கட்டினார். 
வேட்பாளர் நேர்காணலில் கூட இவர்களை அழைக்கவில்லை. சில தினங்களுக்கு முன்னர் ஒ.பன்னீர் ெசல்வத்தின் ஆதரவாளர்கள் ரகசிய ஆலோசனை நடத்தினார். இதில் ஓ.பி.எஸ்சுக்கும் ஆதரவாளர்களுக்கும் தேர்தலில் போட்டியிட சீட் கொடுவில்லை என்றால் தனது சமுதாயத்தை சேர்ந்தவர்களை ஒன்று திரட்டி அதிமுகவினரை தோற்கடிக்கவும், சுயேட்சையாக வேட்பாளர்களை களம இறக்கவும் முடிவு செய்யப்பட்டது.
 ஒ.பன்னீர் செல்வத்துடன், பதவி இழந்த சில அமைச்சர்களும் சேர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதல்வர் ஜெயலலிதா சசிகலா பேச்சை கேட்டுக்கொண்டு செயல்படுகிறார். கட்சிக்கும், சசிகலாவுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும். முதல்வர் சொன்னபடிதான் நடந்தார். 

தற்போது ஓ.பி.எஸ்.செய்தது தப்பு என்றால், அது ஜெயலலிதா செய்த தப்பாகத்தான் கருத வேண்டும். அண்ணன் மீது எந்த தவறும் இல்லை என்று ஒ.பன்னீர் செல்வத்தின்  ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
இதனால் ஓ.பி.எஸ்-சசிகலா மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 
இறுதியில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்பது குறித்து தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்புகளை உருவாகியுள்ளது. 

இந்த விளையாட்டில் கடைசியில் ஜெயிக்க போவது ஓ.பன்னீர் செல்வமா அல்லது சசிகலாவா என்ற பரபரப்பு கட்சினரிடையே தற்போது ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிமுகதொண்டர்கள் தங்களுக்குள் லட்சக்கணக்கில்  பணம் கட்டி சூதாட்டத்திலும் ஈடுபட்டு வருவதாக பரவலாக பேச்சு உள்ளது.பணம் கட்டியவர்களில் அமைச்சர்கள்,ச.ம.உ,க்களும் உள்ளனராம்.
 ======================================================================================

இன்று,
மார்ச்-08.
1702: இங்கிலாந்து. ஸ்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றுக்கு இரண்டாம் மேரியின் சகோதரி ஆன் ஸ்டுவர்ட்  அரசியானார்.
1817:நியூயோர்க் பங்குச் சந்தை திறக்கப்பட்டது.
1921: ஸ்பெய்ன் பிரதமர்; எடுராடோ டேட்டோ இராடியர், நாடாளுமன்றக் கட்டிடத்தில் வைத்து கொல்லப்பட்டார்.
1924: அமெரிக்காவின் உட்டா மாநில சுரங்க விபத்தல் 172 பேர் பலி.
1942: இந்தோனேஷியாவில் ஜப்பானிய படைகளிடம் டச்சு படைகள் சரணடைந்தன.
1974: பிரான்ஸில் சார்ள்ஸ் டி கோல் விமான நிலையம் திறக்கப்பட்டது.
2004: ஈராக்கில் புதிய அரசியலமைப்பில் அந்நாட்டு ஆட்சிக் கவுன்ஸில் கையெழுத்திட்டது.
மகளிர் தின வரலாறு
மகளிர் தினத்தின் சுருக்க வரலாற்றினைப் பின்வருமாறு இனங்காட்டலாம். வரலாற்றுக் காலம் முதல் பெண்கள் போகப்பண்டங்களாகவும், அடிமைகளாகவும், உரிமையற்றவர்களாகவும் காணப்பட்ட நிலையிலிருந்து படிப்படியாக மீண்ட நிலை இந்நிகழ்வின் பின்னணிக்கு அடிப்படையாக அமைகின்றது. 1789ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் (அரசனின் ஆலோசனைக் குழுக்களில்) என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின்போது பாரீஸில் பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்!. 
ஆணுக்கு நிகராக பெண்களுக்கு இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் வேண்டும் என்றும் வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணி நேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்!. 

ஆர்ப்பாட்டக்காரர்களைச் சமாதானம் செய்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மன்னர் வாக்களித்தார். ஆனால், அது அவரால் இயலாமற்போகவே மன்னர் லூயிஸ் முடிதுறந்தார். இதனால் ஐரோப்பிய நாடுகளிலுள்ள பெண்களும் கிளர்ச்சியை ஆரம்பித்தனர். 
இக்கட்டத்தில் இத்தாலியிலும் பெண்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முயன்று தங்களுக்கு வாக்குரிமை கேட்டுப் போராட ஆரம்பித்தனர். கிரீஸ் நாட்டில் ‘விஸிஸ்ட்ரடா என்பவரின் தலைமையில், ஆஸ்த்ரியா, டென்மார்க், ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டபோது, ஆளும் வர்க்கம் அசைந்துகொடுக்கத் தொடங்கியது. 
பிரான்ஸ் நாட்டில் புருஸ்லியனில் 2வது குடியரசை நிறுவிய லூயிஸ் ப்ளாங்க், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவும், அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடமளிக்கவும் ஒப்புதல் அளித்தார். 
அந்த நாள் மார்ச் 8, 1848 ஆகும். உலகப் பெண்களின் போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்த அந்த நாளே, “மகளிர் தின”மாக அமைய அடிப்படை வித்தாக அமைந்தது!. 

உலகநாடுகள் அனைத்திலும் பரவிய இப்போராட்டங்களின் விளைவாக, 1910ல் பணிக்குச் செல்லும் பெண்களுக்கான சர்வதேச மாநாடு கோபன்ஹேகனில் நடைபெற்றது. 
இம்மகாநாட்டில் ஜெர்மனியின் சோசலிச ஜனநாயக கட்சியின் மகளிர் அணித்தலைவியான க்ளாரா ஜெட்கின் (CLARA ZETKIN) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடும் ஒரு யோசனையை முன்வைத்தார். பெண்கள் தங்கள் உரிமைகளைக் கோர சர்வதேசம் முழுதும் ஒரு தினத்தை மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். 
17 நாடுகளிலிருந்து அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் அந்தத் திட்டத்தை ஏகமனதாக வரவேற்றனர். 
இதைத் தொடர்ந்து 1911 ஆண்டு க்ளாரா ஜெட்கினால் 19 மார்ச்சில் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 
ஜெர்மனில் The Vote for Women மற்றும் ஆஸ்திரேலியாவில் Women”s Day என்ற பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டு பெண்கள் உரிமைகள், பாராளுமன்றத்தில் பெண்கள், உட்பட பல கட்டுரைகளை வெளியிட்டன. எல்லாப் பத்திரிகைகளுமே பெண்களுக்கு பாராளுமன்றத்தில் தங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தின. 
1911ல் சர்வதேச மகளிர் தினத்திற்கு கிடைத்த வெற்றி எட்டுத் திக்கிலும் பரவியது. அந்த வெற்றியைத் தொடர்ந்து 1848ல் பிரான்ஸ் மன்னர் ப்ளாங்க், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புக்கொண்ட நாளான மார்ச் 8யை, நினைவுகூரும் வகையில், 1913 முதல் மகளிர் தினத்தை மார்ச் 8க்கு மாற்றியமைத்து. ஆனாலும் அது உத்தியோக பூர்வமானதாக இருக்கவில்லை. 
இது குறித்து 1917 மார்ச் 8ம் தேதி ரஷ்யாவில் உள்ள சென்பீட்டர்ஸ் நகரில் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. இப் போராட்டத்தில் அலெக்ஸ்சாண்ட்ரா கொலன்றா என்ற ரஷ்யப் பெண்ணிலைவாதியும் கலந்து கொண்டார். 
இப்போராட்டத்தையடுத்து 1921ம் ஆண்டு மார்ச் 8ம் தேதியே சர்வதேச பெண்கள் தினமாக அதிகார பூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 

முதல் இடம் பிடித்த பெண்கள்

* இந்தியாவின் முதல் பெண் தூதர் - சி.பி. முத்தம்மா

* சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் - சரோஜினி நாயுடு

* இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி

* முதன் முதலாக  ஞானபீட விருது பெற்றவர் - ஆஷாபூர்ணா தேவி


* முதன் முதலாக பாரத ரத்னா விருது பெற்றவர் - இந்திரா காந்தி

* ஆங்கிலக் கால்வாயை முதன் முதலாக நீந்தி கடந்த பெண் - ஆர்த்தி சாஹா

* இந்தியாவில் அசோக சக்ரா விருது பெற்ற முதல் பெண் - நிர்ஜா பனோட்

* இந்தியாவில் முதல் ஐபிஎஸ் அதிகாரி - கிரண் பேடி

* இந்தியாவில் முதல் பெண் ஏர் வைஸ் மார்ஷல் - பி. பண்டோபாத்யாயா

* உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி - லீலா சேத் (ஹிமாச்சல்)

* முதல் பெண் நீதிபதி - அண்ணா சாண்டி

* முதல் பெண் முதலமைச்சர் - சுசீதா கிரிபாலனி

* ஆசிய விளையாட்டில் முதல் தங்கம் வென்ற இந்திய பெண் - கமலிஜித் சாந்து

* ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் - கர்ணம் மல்லேஸ்வரி (2000)

* முதல் பெண் விமானி - சுசாமா

* முதல் பெண் தபால் நிலைய தலைமை அதிகாரி - கன்வால் வர்மா

* கிரிக்கெட் விளையாட்டில் முதல் பெண் நடுவர் - அஞ்சலி ராஜகோபால்

* ஆங்கிலப் படையுடன் போரிட்டு வென்ற பெண் - ராணி வேலு நாச்சியார்

* புக்கர் விருது பெற்ற இந்தியப் பெண் - அருந்ததி ராய்

* இராணுவத்தில் பதக்கம் பெற்ற முதல் பெண் - பீம்லா தேவி

======================================================================================

 மின்னஞ்சல்என்றழைக்கப்படும் இந்த செலவில்லாத துரிதமான கடிதப் போக்குவரத்தின் தந்தையாக விளங்கிய ரே டொம்லின்சன் தனது 74ஆவது வயதில் கடந்த சனிக்கிழமை காலமானார். 

மின்னஞ்சல் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளுக்கான '@' குறியீடு என்பவற்றைக் கண்டுபிடித்தவர் இவர். 
அமெரிக்காவில் பிறந்து மாஸாசுசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம்பெற்ற டொம்லின்சன், அர்பாநெட் சிஸ்டம்  முறையில், வலைப்பின்னல் இணைப்பால் ஒன்றிணைக்கப்பட்டுள்ள ஒரு கணினியிலிருந்து இருந்து இன்னொரு கணினிக்குக் கடிதங்களை அனுப்பும் முறையை 1971ஆம் ஆண்டு முதன்முதலாக கண்டுபிடித்தார். 

பின்னர் @ குறியீட்டுடன், தொலைவிலுள்ள ஏனைய கணினிகளுக்கு அந்தத் தகவல்கள் போய்ச்சேரும் புதிய தொழில்நுட்பத்தையும் வடிவமைத்தார். 

அயராத உழைப்பு மற்றும் தன்னடக்கத்தின் அடையாளமாக விளங்கிய அவரது மறைவுக்கு உலகின் பலநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான இணையதளவாசிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

கூகுளின் 'ஜிமெயில்' குழுமமும் ரே டொம்லின்சனின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளது. 

========================================================================================