அம்பானி – மோடி இணைந்து வழங்கும்

ரிலையன்ஸ் ஜியோ!

“ஜியோ என்பது இளைஞர்களால், இளைஞர்களுக்காக நடத்தப்படும் புதிய தலைமுறைக்கான சேவை” என்று முகேஷ் அம்பானி செப்டெம்பர் 1-ஆம் தேதி அறிவித்தபோது, பங்குச் சந்தையில் ஒரு சூறாவளி வீசியது. அம்பானியின் வாயில் கிளம்பிய வார்த்தைகள் அவரது காதைச் சென்றடையும் முன்னரே, முதலாளித்துவ ஊடகங்கள் தங்களது வாசகர்களிடம் காதில் அதைக் கொண்டு சேர்த்தன. அம்பானி உதிர்த்த ஒவ்வொரு சொல்லுக்கும் ஏழெட்டு விதமான பொருள் விளக்கங்களையும் கடைவிரித்தன. சமூக வலைத்தளங்களில் அனல் பறந்தது. இலவசங்களுக்கு எதிராகக் குடுமி அவிழச் சாமியாடும் நடுத்தர வர்க்கத்தினர் அம்பானி வழங்கும் இலவசங்களைப் பெறுவதற்காக, பாய் – தலையணையுடன் ஜியோ அலுவலக வாசலில் இடம் பிடித்துக் கொண்டிருந்தனர்.
ரிலையன்ஸ் ஜியோ அறிமுக விழா
இந்தி நடிகர் ஷாருக்கான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், முகேஷ் அம்பானியினு குடும்பம் பங்கேற்க, பிரம்மாண்டமாகவும் ஆடம்பரமாகவும் நடத்தப்பட்ட ரிலையன்ஸ் ஜியோவின் அறிமுக விழா.
முதலில் “அனைத்தும் இலவசம்” என்றனர் அம்பானி கம்பெனியினர். பின்னர் “குரல் அழைப்புகள் இலவசம், இணைய டேட்டாவுக்கு மட்டும் காசு” என்றனர், பின்னர் “டேட்டா இரவில் மட்டும்தான் இலவசம்” என்றனர், பின்னர் “இரவு எனப்படுவது அதிகாலை 2 மணிக்குத் துவங்கி காலை ஐந்து மணிக்கு முடியும்” என்றனர். மெல்ல மெல்ல சுருதி இறங்கியது. “கூட்டிக் கழித்துப் பார்த்தால் குரல் அழைப்புகள் இலவசம் என்று சொல்லி விட்டு, அதை டேட்டாவுக்கு வசூலிக்கும் தொகையில் ஈடுகட்டிக் கொள்கிறான்” என்றும், “செல்போன் சேவையை இலவசமாக கொடுத்து விட்டு பெட்ரோல் விலையைக் கூட்டி விட்டான்” என்றும் சமூக வலைத்தளங்களின் “140 எழுத்து” விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இந்த உண்மை உலகுக்குத் தெரியவருவதற்குள் பங்குச்சந்தையில் ஏர்டெல் ரூ.13,000 கோடிகளையும், ஐடியா 3000 கோடிகளையும் இழந்திருந்தன.
அம்பானி தொடுக்கும் இலவச யுத்தம்!
ஜியோவின் வருகை, செல்பேசித் துறையில் ஒரு மாபெரும் கழுத்தறுப்புப் போட்டியைத் துவங்கி வைத்துள்ளது. முகேஷ் அம்பானியின் ‘இலவசப் போரை’ச் சமாளிக்க, அவரது தம்பி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தைக் கையகப்படுத்தி இருக்கிறது. விலைக் குறைப்பால் போட்டி நிறுவனங்களை அழித்தொழித்துவிட்டு மொத்தச் சந்தையையும் தனியாளாக தின்று தீர்த்து விடவேண்டும் என்கிற வெறியில், “இன்னும் ஒரே ஆண்டுக்குள் பத்து கோடி இணைப்புகளை வழங்கவும், அடுத்த சில ஆண்டுகளில் தொண்ணூறு சதவீத சந்தையைக் கைப்பற்றவும்” ஜியோவின் உயரதிகாரிகளுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாக அறிவித்துள்ளார் முகேஷ் அம்பானி.
reliance-jio-modi
இந்தியப் பிரதமரையே தனது விளம்பரத் தூதராகப் பயன்படுத்திக் கொண்டு வெளிவந்த ரிலையன்ஸ் ஜியோவின் விளம்பரம்
தனது மொத்த நிதிக் கையிருப்பான 24,000 கோடியில் நாலில் மூன்று பங்கை (18,000 கோடி) முதலீடாக இறக்கியுள்ளார் முகேஷ் அம்பானி. மிகக் குறுகிய காலகட்டத்தில் மிக அதிக முதலீட்டுடன் துவங்கப்பட்ட தொழில் இதுதான் என்கிறது முதலாளித்துவ உலகம். நாடு முழுவதும் தொழில்நுட்ப மற்றும் அலைக்கற்றை உட்கட்டமைப்புடன் துவங்கப்பட்ட முதல் நிறுவனம் ஜியோ. கடந்த ஆறு ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கிலோமீட்டர் தொலைவுக்கான கண்ணாடி இழைக் கம்பிகளை (Fibre Optic Cables) பதித்துள்ள ரிலையன்ஸ், சுமார் 30,000 கோபுரங்களையும் நிர்மாணித்துள்ளது.
இந்த வேகத்தைத் தொழில்முனைவு சாகசம் என வர்ணிக்கும் ஊடகங்கள், இதற்கு பின் உள்ள சட்ட விதிமீறல்களையும், ஊழல் முறைகேடுகளையும், அரசின் கள்ளத்தனமான ஆதரவையும் மொத்தமாக மூடி மறைக்கின்றன. உஜ்ஜயினி, நாசிக், நாக்பூர், கொச்சி உள்ளிட்டுப் பல நகரங்களில் ரிலையன்ஸின் செல்பேசி கோபுரங்களுக்கு மக்களிடையே கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. இது தொடர்பான வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த ராஜஸ்தான் மாநில உயர்நீதி மன்றம், ரிலையன்சின் செல்பேசி கோபுரங்களை அகற்றுமாறு உத்தரவிட்டது. இவையனைத்தையும் விதிகளுக்குப் புறம்பாக முறியடித்துள்ளார் முகேஷ் அம்பானி.
இந்திய தொலைதொடர்புத் துறையைக் கைப்பற்ற முகேஷ் அம்பானி செய்து வரும் முயற்சிகளின் முழு பரிமாணத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்றால், 2010 ஆண்டு அரசு நடத்திய மூன்றாவது மற்றும் நான்காவது அலைக்கற்றை ஏலம் என்கிற கண்ணாமூச்சி ஆட்டத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
2ஜி = 1,76,000,00,00,000 என்றால், 4ஜி = 000000000000000?
reliance-jio-orissa-q
ரிலையன்ஸ் ஜியோவின் சிம் கார்டை வாங்குவதற்காக ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஷ்வரில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் கூட்டம்.
“ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியை நாம் மறந்திருக்க மாட்டோம். 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பாக சி.ஏ.ஜி. அறிக்கை மேற்படித் தொகையை முன்வைத்த போது, வடக்கே அண்ணா ஹசாரே, ஆர்.எஸ்.எஸ்., பாபா ராம்தேவ் தொடங்கி தெற்கே ஜெயலலிதா வரையிலான உத்தமர்கள் சத்தியாவேசம் கொண்டு சாமியாடினர். “திராவிட இயக்கம் என்றால் ஊழல், ஏலம்தான் ஊழலை ஒழிக்கும் வழி” என்ற இரண்டு தத்துவங்கள் 2ஜி ஊழலின் வழியாக கண்டுபிடிக்கப்பட்டன.
பின்னர், இந்த ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி என்பது சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையில் 22,000 கோடியாகவும், 30,000 கோடியாகவும் மாற்றி மாற்றி எழுதப்பட்டதெல்லாம் தனிக்கதை. யோக்கியமான முறை எனச் சொல்லப்பட்ட ஏல முறை எப்படி நடந்தது என்பதற்கு வருவோம்.
2010 ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் மன்மோகன் அரசின் கீழ் மூன்று மற்றும் நான்காம் தலைமுறை அலைக்கற்றை ஏலங்கள் ஒன்றன்பின் ஒன்றாக குறுகிய இடைவெளியில் நடந்தன. நான்காம் தலைமுறை அலைக்கற்றையை ஏலம் எடுப்பவர்கள், அதனை இணைய இணைப்பு (data) வழங்குவதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; செல்பேசி இணைப்புகள் வழங்க (voice) பயன்படுத்தக் கூடாது என்று ஏல அறிவிப்பில் கறாராகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
reliance-jio-caption-13ஜி அலைக்கற்றையை ஏலமெடுப்பதற்கு ஏர்டெல், வோடாஃபோன், ஐடியா, ஏர்செல் போன்ற நிறுவனங்கள் தம் நிதிக் கையிருப்பில் பெரும்பகுதியைச் செலவிட்டன. 4ஜி என்பது இணைய சேவைக்கு மட்டுமானது என்று கூறப்பட்டிருந்த காரணத்தால், இந்நிறுவனங்கள் அந்த ஏலத்தில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. எனவே, மொத்தமுள்ள 22 சேவை பிராந்தியங்களில் (Service Circles) ஏர்டெல் 15 பிராந்தியங்களிலும், வோடஃபோன் 5 பிராந்தியங்களிலும் 4ஜி உரிமத்தை ஏலம் எடுத்தன.
இந்நிலையில், முன்பின் கேள்விப்பட்டிராத இன்ஃபோடெல் ப்ராட்பேண்ட் சர்வீசஸ் லிமிடெட் (IBSPL) என்கிற தனியார் நிறுவனம், இந்தியாவின் அனைத்து சேவைப் பிராந்தியங்களிலும் 4ஜி அலைக்கற்றைக்கான உரிமம் கோரி விண்ணப்பித்தது. செல்பேசி சேவை வழங்கிய முன் அனுபவமோ, அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளோ இல்லாத இந்த நிறுவனத்தைச் சுருக்கமாக “உப்புமா கம்பெனி” என்றும் அழைக்கலாம்.
4ஜி ஏலத்தில் பங்குபெறும் நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச தகுதி மிகவும் தளர்வாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததால், வெறும் 2.5 கோடி ரொக்க மதிப்பும், 14 லட்ச ரூபாய் ஆண்டு வருமானமும் கொண்ட மேற்படி உப்புமா கம்பெனி, சுமார் 12,847 கோடி ரூபாய் மதிப்புள்ள அலைக்கற்றையை ஏலத்தில் வென்றது.
இங்கே 2ஜி வழக்கை சற்று நினைவு படுத்திக் கொள்வோம். அதில் சி.பி.ஐ. வைத்துள்ள குற்றச்சாட்டுகளில் முக்கியமானது “தகுதியற்ற உப்புமா கம்பெனிகளுக்கு ஆ.ராசா அலைக்கற்றைகளை ஒதுக்கிக் கொடுத்தார்” என்பதாகும். ஐ.பி.எஸ்.பி.எல். என்பது ஒரு உப்புமா கம்பெனி மட்டுமல்ல, அதன் புரமோட்டரான ஹிமாச்சல் புயூச்சரிஸ்டிக் கம்யூனிகேசன்ஸ் என்கிற நிறுவனம், தொண்ணூறுகளில் சுக்ராம் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த போது நடந்த முதற்பெரும் தொலைத்தொடர்புத் துறை ஊழலில் கையும் களவுமாக பிடிபட்ட நிறுவனமாகும்.
reliance-jio-caption-24ஜி ஏலம் முடிந்த மறுநாளே ஐ.பி.எஸ்.பி.எல் நிறுவனத்தை முகேஷ் அம்பானி கையகப்படுத்தினார். அலைக்கற்றையை ஏலம் எடுத்த கம்பெனியை வேறொரு கம்பெனி விலைக்கு வாங்குவது என்ற உத்தி 2ஜி-யிலும் கையாளப்பட்டது. அங்கே அது ஊழல் என்று அழைக்கப்பட்டது என்பதையும் இங்கே நினைவில் கொள்க. தான் நேரடியாக களத்தில் இறங்காமல், தனது பினாமியை இறக்கிவிட்டதன் மூலம், அலைக்கற்றை ஏலத்தில் போட்டி ஏற்பட்டிருந்தால் அரசுக்கு கிடைத்திருக்கக்கூடிய பல்லாயிரம் கோடிகளைச் சுருட்டினார் அம்பானி. இந்த 4ஜி ஊழலுக்கு எத்தனை சைபர் போடலாம் என்பதை குருமூர்த்திஜி அல்லது சு.சாமிஜி என்ற இரண்டு உத்தமர்கள் மட்டும்தான் சொல்ல முடியும்.
இந்த ஏலத்தில் பங்கேற்பதற்கு ஐ.பி.எஸ்.பி.எல். நிறுவனம் கொடுத்த வங்கி உத்திரவாதப் பத்திரமே போர்ஜரி செய்யப்பட்டது என்று தனது 2014 ஆண்டு வரைவறிக்கையில் சி.ஏ.ஜி. குற்றம் சாட்டியிருக்கிறது. வங்கி வேறொரு நிறுவனத்துக்கு வழங்கியிருந்த உத்திரவாதப் பத்திரத்தில் அந்நிறுவனத்தின் பெயரை வெள்ளை மை வைத்து அழித்து விட்டு, அதன்மீது ஐ.பி.எஸ்.பி.எல். நிறுவனத்தின் பெயர் கையால் எழுதப்பட்டிருந்தது. அதாவது கொஞ்சமும் அச்சமின்றி போர்ஜரி வேலை வெளிப்படையாக செய்யப்பட்டிருந்தது.
2ஜி வழக்கில் சி.பி.ஐ. முன்வைக்கும் இன்னொரு வாதம், ஒதுக்கப்படும் அலைக்கற்றையை இரட்டைப் பயன்பாட்டுக்கு அனுமதிப்பதில் ஆ.ராசா பாரபட்சமாக நடந்து கொண்டதன் மூலம் சாகித் பல்வாவுக்குச் சாதகமாக செயல்பட்டார் என்பதாகும். ஆனால், 4ஜி அலைக்கற்றையை இணைய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என 2010-இல் ஏலம் விட்டு, பின்னர் 2013-இல் அதை இணையம் மற்றும் செல்பேசி சேவை இரண்டுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மன்மோகன் அரசு மாற்றியது. இவ்வாறு மாற்றியதன் மூலம் அரசுக்கு ரூ.22,842 கோடி இழப்பு ஏற்பட்டதாக 2014-ஆம் ஆண்டின் சி.ஏ.ஜி. வரைவறிக்கை குறிப்பிடுகிறது.
“முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்கிற முறையில் எல்லோருக்குமான சமமான போட்டி வாய்ப்பு (Level playing Ground) மறுக்கப்பட்டது” என்பது 2ஜி வழக்கின் இன்னொரு குற்றச்சாட்டு. 2010-இல் நடந்த 4ஜி ஏல விதி களின்படி செல்பேசி இணைப்புகளுக்கான உரிமத்தை ஏலம் எடுத்த மற்ற நிறுவனங்கள் அரசுக்கு 4 சதவீதக் கட்டணம் செலுத்தின. ஏல விதிகளை 2013-இல் மாற்றியதன் மூலம், டேட்டாவுக்கான அலைக்கற்றை பயன்பாட்டுக் கட்டணமான, ஒரு சதவீதத்தைக் கட்டிவிட்டு அதையே செல்பேசி அழைப்புகளுக்கும் பயன்படுத்திக் கொண்டார் அம்பானி.
காங்கிரசின் ஊழலுக்கு மோடி வழங்கிய ஆதரவு!
reliance-jio-dominationசி.ஏ.ஜி. வரைவு அறிக்கையின் அடிப்படையில் அலைக்கற்றை ஏலத்தில் 40,000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டி, ரிலையன்ஸ் செய்த முறைகேடுகளை விசாரிக்கக் கோரி உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார் பிரசாந்த் பூஷன். 2014 தேர்தலில் காங்கிரசைத் தோற்கடிப்பதற்கு 2ஜி ஊழலைப் பயன்படுத்திக் கொண்ட பாரதிய ஜனதா, இந்த 4ஜி ஊழலில் காங்கிரசுக்கு ஆதரவாக வரிந்து கட்டிக் கொண்டு உச்ச நீதிமன்றத்தில் வாதாடியது.
கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதியன்று தீர்ப்பளித்த நீதி பதிகள், பினாமி நிறுவனத்தைப் பயன்படுத்தி அலைக்கற்றையை அபகரித்தது, வங்கி உத்தரவாதப் பத்திரங்களில் மோசடி செய்தது உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்தனர். பாரபட்சம் என்ற காரணத்தை சொல்லி, 122 உரிமங்களை 2ஜி வழக்கில் ரத்து செய்து, மறு ஏலம் நடத்தச் சொன்ன உச்சநீதி மன்றம், அம்பானிக்கு கட்டணத்தில் பாரபட்சமாக சலுகை காட்டப்பட்டிருப்பது பற்றி தான் முடிவெடுக்க முடியாதென்றும், அதை விசாரிக்க வேண்டியது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம்தான் என்றும் தீர்ப்பு கூறியது. அதுமட்டுமல்ல, வங்கி உத்தரவாதப் பத்திரத்தில் செய்யப்பட்டிருக்கும் போர்ஜரி பற்றி மத்திய நிதியமைச்சகம்தான் முடிவு செய்யவேண்டும் என்றும் கூறி பிரசாந்த் பூசணின் வழக்கை மொத்தமாகத் தள்ளுபடி செய்தது.
இதுதான் ரிலையன்ஸ் ஜியோவின் சுருக்கமான ஊழல் வரலாறு. இருப்பினும் அம்பானியின் கடைமுன் காத்திருக்கும் நடுத்தர வர்க்க கனவான்களைக் கேட்டால், “அம்பானி அயோக்கியன் என்பது எங்களுக்கும் தெரியும். திருடிய காசுதானே, இலவசமாக கொடுக்கும்போது அதை நாம் பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?” என்று பதில் சொல்வார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்களாக இருப்பார்கள் என்பதை விசாரித்துப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.
எலி ஏன் அம்மணமாக ஓட வேண்டும்?
reliance-jio-modi-brand“இலவசம் என எதுவும் இருக்கக் கூடாது – குடி தண்ணீர் உள்ளிட்ட அனைத்துக்கும் ஒரு விலை இருக்க வேண்டும்” என்பது தனியார்மய சகாப்தத்தில் முதலாளித்துவத்தின் தத்துவம். அவ்வாறிருக்க மொபைல் சேவையை இலவசமாக அளிக்கும் தரும சிந்தனை முகேஷ் அம்பானிக்கு ஏன் வர வேண்டும்?
பெருநகரங்களில் ஷாப்பிங் மால்களில் உள்ள வைஃபை (கம்பியில்லா) இணைய இணைப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இப்படி இலவசமாக வழங்கும் நிறுவனம், தனது இணைய இணைப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர், என்ன பொருளைத் தேடுகிறார், என்னென்ன பொருட்களின் விலைகளை ஒப்பிட்டுப் பார்க்கிறார் – என்பன போன்ற விவரங்களை வடிகட்டி, அந்த மாலில் உள்ள கடைகளுக்கு உடனுக்குடன் விற்பனை செய்கிறது. இதன் மூலம் மாலில் உள்ள கடைக்காரர்கள், குறிப்பிட்ட வாடிக்கையாளர் தங்கள் கடைக்குள் நுழைவதற்கு முன்பாகவே அவரது பர்சைக் காலி செய்வதற்கான திட்டத்துடன் தயாராக இருக்கின்றனர்.
ஒரு ஷாப்பிங் மாலில் நடக்கும் விவர (data) ஜேப்படியை நாடு முழுக்க விரிவுபடுத்தினால், அதற்குப் பெயர்தான் ரிலையன்ஸ் ஜியோ!
ரிலையன்ஸ் ஜியோ தனது செல்பேசி சேவையை 4ஜி அலைக்கற்றையில் செயல்படும் VoLTE (வோல்ட்) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் வகையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த முறையில் இணையம் மற்றும் தொலைபேசி அழைப்புகள் அனைத்துமே இணைய நெறிமுறையின் (Internet protocol – IP) அடிப்படையிலேயே செயல்படும். சுருக்கமாகச் சொன்னால், ஜியோவின் செல்பேசி சேவை மூலம் நீங்கள் பேசுவது, குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் அனுப்புவது, முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தள செயல்பாடுகள் அனைத்தும் மின் தரவுகளாக (data packets) மாற்றப்பட்ட பின்னரே கடத்தப்படுகின்றது. இவற்றைப் பதிவு செய்து சேமிப்பது எளிது. மேலும், பரிமாறிக் கொள்ளப்படும் செய்திகளை இடைமறிப்பதும், ஆய்வு செய்வதும் சேவை வழங்கும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மிகவும் எளிது.
‘டேட்டா”தான் புதிய எண்ணெய் !
reliance-jio-caption-3“ரிலையன்சைப் பொருத்தமட்டில் டேட்டாதான் புதிய எண்ணெய்” என்றார் முகேஷ் அம்பானி. இந்த வாசகம் அம்பானியின் கண்டுபிடிப்பல்ல. சுமார் பத்தாண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் கணித வல்லுநர் கிளைவ் ஹம்பி வெளியிட்ட கருத்து. தகவல் தொழில்நுட்ப யுகத்தின் தாரக மந்திரமே இந்த வாசகம். கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும்போது அதிலிருந்து பல்வேறு பயன்பாட்டுக்கான பொருட்கள் கிடைப்பதைப் போல, ஒரு வாடிக்கையாளரின் டிஜிட்டல் தரவுகளைச் சலித்துப் பிரித்து வகைப்படுத்தி விற்பதன் மூலம் அதனைப் பணம் காய்ச்சி மரமாகப் பயன்படுத்த முடியும் என்பதே இதன் பொருள்.
தம்மிடம் குவியும் டிஜிட்டல் டேட்டாக்களைக் கொண்டு ரிலையன்சால் என்ன செய்து விட முடியும்? ஆழ்தரவுப் பொட்டல ஆய்வு முறை (Deep packet inspection) ஒன்றைத் தங்கள் நிறுவனம் பின்பற்றுவதாக பத்திரிகை ஒன்றிடம் பீற்றிக் கொண்ட ரிலையன்ஸ் ஜியோவின் உயரதிகாரி ஒருவர், அதன் தொழில்நுட்ப சாத்தியங்கள் மலைக்கச் செய்வதாக உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஆய்வின் மூலம் ஜியோ செல்பேசி சேவையைப் பயன்படுத்துபவர்களின் பேச்சு, செயல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் பதிவு செய்து, சேமித்து, பிரித்து ஆராய முடியும்.

ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் பயன்படுத்தும் பழைய தொழில்நுட்பத்திலும் உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் வசதி உள்ளது. எதிர்க்கட்சியினரையோ, ‘பிரச்சினைக்குரியவர்களாக’ அரசால் கருதப்படும் நபர்களையோ ஒட்டுக் கேட்பதுதான் தற்போதுள்ள நடைமுறை. ஆனால், ஜியோவின் மூலம் கைபேசியை அல்லது இணையத்தை ஒருவர் பயன்படுத்தினால், அவரது எல்லாவிதமான நடவடிக்கைகளையும் பேச்சுகளையும் டிஜிட்டல் தரவுகளாக பதிவு செய்து வைத்துக் கொள்ளும்.
“வைத்துக் கொள்ளட்டுமே, நாம் என்ன பாராளுமன்றத்திற்கு குண்டு வைப்பது பற்றியா பேசப்போகிறோம்?எதற்குப் பயப்பட வேண்டும்?” என்று சிந்திக்கும் அளவுக்கு நீங்கள் அப்பாவியாக இருப்பீர்களேயானால், கேளுங்கள். உங்கள் வருமானம், கடன், சொத்து, உங்கள் வர்த்தக இரகசியங்கள், நீங்கள் வாங்கும் பொருட்கள் பற்றிய விபரம், உங்கள் மாதாந்திர மளிகை சாமான் பட்டியல், உங்கள் காதல், உங்கள் பிள்ளைகளின் கல்வி, உங்கள் குடும்பத்தினரின் நோய்கள், உங்கள் அரசியல் கருத்து, உங்களுக்கு விருப்பமான இசை, சினிமாக்கள் – என அனைத்து தரவுகளும் அம்பானியின் கையில் இருக்கும். மொத்தத்தில் “நான் – எனது” என்று ஒரு மனிதன் சொல்லிக் கொள்ளத்தக்க அனைத்தும், உங்களுக்கு மட்டுமே சொந்தமான உங்கள் தரவுகள் அனைத்தும் அம்பானிக்கு சொந்தமாகி இருக்கும். வேறு வார்த்தைகளில் சொன்னால் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் அம்பானியின் உடைமையாகியிருப்பீர்கள்.
“செயலி சார்ந்த பயன்பாட்டுச் சூழல்” (App based ecosystem) ஒன்றைப் படைக்கவுள்ளாதாக அறிவித்துள்ளார் அம்பானி. அதன் பொருள், நமது அனைத்துப் பயன்பாடுகளும், செயல்களும், அன்றாட நடவடிக்கைகளும் அம்பானி வழங்கியுள்ள சில செயலிகளின் மூலமே நடக்கும் – வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், செயலிகளே நமது தேவைகளையும் அவற்றைப் பூர்த்தி செய்யும் வழிவகைகளையும் நமக்கு வழங்கும். செயலிக்கு அப்பாற்பட்ட சொந்தத் தேர்வுகள் என எதுவும் இருக்க முடியாது – இருக்கக் கூடாது என்பது அம்பானியின் திட்டம். அதாவது, இந்தியாவின் மொத்த நுகர்வுச் சந்தையையும் அம்பானி தனது பிடிக்குள் கொண்டு வர முடியும்.
விளம்பரத் தூதர் மோடியின் கனவை நனவாக்குகிறார், விளம்பரதாரர் அம்பானி!
reliance-jio-anil-ambani-sunil-mittal
ரிலையன்ஸ் ஜியோ உருவாக்கியிருக்கும் கழுத்தறுப்புப் போட்டியால் ஆடிப்போயுள்ள தரகு முதலாளிகள் (இடமிருந்து) ரிலையன்ஸ் இன்ஃபோகாம் நிறுவனத் தலைவர் அனில் அம்பானி, ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில் பாரதி மிட்டல்.
இதனை வெறும் வணிகச் சந்தைக்கான ஆயுதம் என்று மட்டும் நினைக்க வேண்டாம். இன்னின்ன நபர்கள் இன்னின்ன கொள்கை உள்ளவர்கள், அதிலும் இவர்களெல்லாம் தீவிரமானவர்கள் என்று தரம் பிரித்து அவர்களை அரசுக்கு அடையாளம் காட்ட முடியும். அரசியல் எதிரிகளின் பலவீனங்களை அறிந்து அவர்களை முடக்கவும், அழிக்கவும் முடியும். உங்களது விருப்பங்கள், தெரிவுகள், ஆசைகள், எதிர்காலத் திட்டங்கள், உங்கள் நண்பர்கள் மற்றும் எதிரிகள் என சகலத்தையும் ரிலையன்ஸ் ஜியோ அறிய முடியும். மீப்பெரும் மின்தரவு ஆய்வு (Big Data Analysis) எனச் சொல்லப்படும் இந்த ஆய்வின் மூலம், நீங்கள் குறிப்பான ஒரு தருணத்தில் எடுக்கவிருக்கும் முடிவு என்னவாக இருக்கும் என்பதையும் ஏறத்தாழ கணிக்க (Artificial Inteligence) முடியும்.
அம்பானி என்ற முதலாளி இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையையே கட்டுப்படுத்த முடியும், நாட்டு மக்கள் அனைவரையும் வேவு பார்க்க முடியும் என்பது மோடிக்குத் தெரியாததல்ல. நாட்டு மக்களை தனது அடிமைகளாக மாற்றுவதற்கு முன், மோடியே தனது அடிமைதான் என்பதை நாட்டு மக்களுக்கு அறிவித்தார் அம்பானி. செப்டம்பர் 2-ஆம் தேதி ஆங்கில நாளேடுகளின் ஜியோ விளம்பரத்தில் பிரதமர் மோடி இடம்பெற்றிருந்ததை அனைவரும் காறி உமிழ்ந்தனர். ஆனால், மோடி கவலைப்படவில்லை.
மோடியின் “டிஜிட்டல் இந்தியா” என்ற கனவை நனவாக்குவதே தனது லட்சியம் என்று அந்த விளம்பரத்தில் அறிவித்திருந்தார் அம்பானி. விளம்பரதாரர்கள்தான் தமது கனவை நனவாக்கிக் கொள்ள விளம்பரத் தூதர்களைப் பயன்படுத்துவார்கள். தன்னுடைய விளம்பரத்தூதரின் கனவை நனவாக்கும் பொறுப்பை அம்பானி எதற்காக ஏற்க வேண்டும்?
“படுக்கையறையைத் தாளிடுவது அடிப்படை உரிமையல்ல” – மோடியின் அட்டார்னி ஜெனரல்!
reliance-jio-caption-4ஏனென்றால், “டிஜிட்டல் இந்தியா” என்பது மோடி கூட்டுக்கனவு. சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்கும் நோக்கத்தில், தேசிய ஊடக ஆய்வு மையம் (National Media Analytics Centre) அமைப்பது, இந்திய மக்கள் அனைவரிடமிருந்தும் கட்டாயமாக மரபணு மாதிரிகளைத் திரட்டுவது (DNA profiling)என்பன போன்ற திட்டங்களை உள்ளடக்கிய மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவின்படி, ஒவ்வொரு இந்தியனும் ஒரு எண் (டிஜிட்). அந்த எண்ணின் (அதாவது குடிமகனின்) நடவடிக்கைகள் குறித்த அத்தனை தரவுகளையும் கண்காணிப்பில் வைக்கும் ஏற்பாடுதான் டிஜிட்டல் இந்தியா.
ஆதார் அட்டைக்கு எதிரான வழக்கில், குடிமக்களின் கருவிழி மற்றும ரேகைகளைப் பதிவு செய்வதென்பது அவர்களுடைய தனியுரிமையில் (Right to Privacy) தலையிடுவதாகும் என்று அரசுக்கு எதிரான வாதம் உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போது, “இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி குடிமக்களுக்கு தனியுரிமை கிடையாது” என்றார் மோடி அரசின் அட்டார்னி ஜெனரல். அதாவது, அரசாங்கம் குடிமக்கள் அனைவரையும் குற்றப் பரம்பரையாக நடத்தலாம், உங்கள் முகநூலை வேவு பார்க்கலாம், படுக்கையறையை எட்டிப் பார்க்கலாம்; அதுமட்டுமல்ல, அம்பானியும் உங்கள் தனிப்பட்ட தரவுகளை யாருக்கும் விற்கலாம் என்பதே இதன் பொருள். இவற்றையெல்லாம் தடுப்பதற்குரிய சட்டப் பாதுகாப்புகள்கூட இல்லாத நிலையில், மோடியின் டிஜிட்டல் இந்தியா என்ற கனவு, இந்தியர் களின் கொடுங்கனவாக மாறிவிடும் என்று பல அறிவுத்துறையினரும், டிஜிட்டல் தொழில்நுட்ப வல்லுநர்களும் ஏற்கனவே எச்சரித்திருக்கின்றனர்.
கேளுங்கள்! இணையப் பயன்பாட்டில் சீனாவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் அமெரிக்காவை விஞ்சி உலகின் முதல் இடத்தை அடுத்த ஆண்டில் பிடிக்கப்போகிறது. இந்தச் சூழலில்தான் இந்தியச் சந்தையை ஏகபோகமாகப் பிடிக்கப் பார்க்கிறது ரிலையன்ஸ் ஜியோ. பாசிசம் என்பதற்கு முசோலினி அளித்த விளக்கத்தை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். “பாசிசம் என்பதை கார்ப்பரேடிசம் என்ற சொல்லால் அழைப்பதே மிகவும் பொருத்தமானது. ஏனென்றால், பாசிசம் என்பது தனியார் குழும முதலாளித்துவத்தின் அதிகாரம், அரசு அதிகாரம் ஆகியவற்றின் ஒன்றிணைவைக் குறிக்கிறது” என்றான் முசோலினி.
இது பனியாவின் ஏகபோகமும் பார்ப்பன பாசிசமும் இணைந்த கொடுங்கனவு. ஜியோ என்ற இந்திச் சொல்லுக்கு வாழ்ந்துகொள் என்று பொருள். அடிமை வாழ்க்கையை இந்தியர்களுக்கு வழங்குகிறார் அம்பானி – இலவசமாக!
பின்குறிப்பு:
அனானிமஸ் ஹேக்கர்ஸ் எனும் இணையதளம் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் செயலிகளின் மூலம் களவாடப்படும் நமது தனிப்பட்ட தகவல்கள் சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விளம்பர நிறுவனங்களுக்கு விற்கப்படுவதை சமீபத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறது. மோடி கூட்டுக்கனவு மெய்ப்படத் தொடங்கிவிட்டது.
                                                                                                                                              – சாக்கியன்
_____________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2016
_____________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?