திங்கள், 17 அக்டோபர், 2016

மருந்துகள்....... பிரச்னைகள்.....

நல்ல மருந்து கசக்கத்தான் செய்யும்! 
நீரிழிவு, இதயநோய்கள் போன்றவற்றைக் கட்டுப்பாடாக வைக்கவும், பின்விளைவுகளைக் குறைக்கவும் உதவக்கூடிய ஏராளமான மருந்துகள் இப்போது கிடைக்கின்றன.  மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய தேவையையும் இம்மருந்துகளே குறைக்கின்றன.
வாழ்க்கை முழுக்கவே சிகிச்சை பெற வேண்டிய ஒரு குறைபாடாகவே நீரிழிவு உள்ளது. சில நீரிழிவாளர்களுக்கு உணவுக்கட்டுப்பாடும் முறையான உடற்பயிற்சியும் மட்டுமே போதுமானதாக இருக்கிறது. 
ஆனால், பலருக்கு மருந்துகள் இல்லாமல் நீரிழிவைக் கட்டுப்படுத்த முடியாத நிலையே நிலவுகிறது. இந்த மருந்துகள் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன? 
டாக்டரிடம் தயக்கமில்லாமல் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
மருத்துவர் அளிக்கிற ப்ரிஸ்க்ரிப்ஷனை அப்படியே மருந்துக்கடையில் கொடுத்து மாத்திரைகள் வாங்கி கண்ணை மூடிக்கொண்டு விழுங்க வேண்டிய அவசியமில்லை.
 மருத்துவரிடம் நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் பற்றி விளக்கமாகக் கேட்டு தெளிவடைய வேண்டியது அவசியம்.

நீரிழிவுக்காக அளிக்கப்படும் மருந்துகளைத் தவறாது எடுத்துக்கொண்டாலே பல பிரச்னைகளைத் தவிர்த்து விட முடியும்.*நீரிழிவு நிர்வாகத்தை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். 

முறையான உணவு, உடற்பயிற்சி, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ரத்த குளுக்கோஸ் சோதனை போன்றவற்றோடு, மருந்துகளும் எடுத்துக்கொள்ளப்படும்போது நீரிழிவு கட்டுப்பாடு நல்ல நிலையை அடைகிறது.நீரிழிவு என்பது ஒருமுறை பெட்ரோல் நிரப்பி வண்டியை இயக்கி, பின்னர் நிறுத்தி விடுவதுபோல அல்ல. 

வண்டி ஒழுங்காக ஓடுகிறதா, எரிபொருள், காற்று போன்றவை போதுமான அளவு இருக்கிறதா, அவ்வப்போது சர்வீஸ் செய்யப்படுகிறதா என்று தினமும் கண்காணித்தால்தான் பயணம் இனிதாகும். இதுபோலவே நீரிழிவுப் பயணமும் தொடர்ச்சியான கவனத்துக்கு உட்பட்டதே!மருத்துவர் சொல்லைத் தட்டாதே!

‘நலமாகத்தானே இருக்கிறோம்... நமக்கு எதற்கு இவ்வளவு மருந்து மாத்திரைகள்...’ என நினைத்து ப்ரிஸ்கிரிப்ஷனை கடைப் பிடிக்காமல் இருப்பது மிகுந்த அபாயத்தை அளித்துவிடக் கூடும். ஆகவே, கவனம்!மாற்று மருத்துவ மருந்துகளை அலோபதி மருந்துகளோடு உட்கொள்ளும் எண்ணம் இருந்தால், அதையும் மருத்துவரிடம் ஆலோசித்த பிறகே பின்பற்றுங்கள். 

சிலருக்கு இப்படி கலப்பு மருந்து சாப்பிடும்போது பிரச்னைகள் ஏற்படலாம்.

மருந்து எடுத்துக்கொள்ளுதல், உணவுப்பழக்கம், உடற்பயிற்சி போன்றவற்றை நம் அன்றாடச் செயல்கள் போலவே வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதை எக்ஸ்ட்ரா விஷயமாகவோ, சுமையாகவோ கருத வேண்டாம். 

மருந்துகளை ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் உட்கொண்டு, அதற்கேற்ப உணவும் முறையாகச் சாப்பிட்டு, உடற்பயிற்சியும் செய்துவந்தால், மருந்து வேலை செய்யும் திறன் சிறப்பாக இருக்கும்.

மருத்துவர் சந்திப்பு அவசியம்சிலபல மாதங்களுக்குப் பிறகோ, ஆண்டுகளுக்குப் பிறகோ, சிலருக்கு நீரிழிவு மருந்துகளின் செயல்திறன் குறையக்கூடும். அதனால் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மருத்துவரைச் சந்திப்பது அவசியமாகிறது. அப்போதைய சூழலுக்கு ஏற்ற மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.

உடல்நலம் குன்றினாலும் நீரிழிவு மருந்துகள் வேண்டும்!பொதுவாக, உடல்நலம் சரியில்லாத போது ரத்த சர்க்கரை  அளவும் அதிகரித்துவிடும். ஏதேனும் பக்க விளைவுகள், அசெளகரியங்கள் இருந்தால் உடனே மருத்துவருக்குத் தெரியப்படுத்துங்கள். ஆனால், அவருடைய ஆலோசனை இன்றி, நீரிழிவு மருந்துகளை நிறுத்திவிட வேண்டாம்.


ரத்த சர்க்கரை அளவீடுகள், தாழ்நிலை அல்லது உயர்நிலை சர்க்கரைக்கான அறிகுறிகள், இன்ன பிற பக்கவிளைவுகள் (வாந்தி, குமட்டுதல், சரும மாறுபாடுகள்) - இவை நம் உடலில் மருந்து எப்படி வேலை செய்கின்றன என்பதற்கான அறிகுறிகள்தான். இவற்றையும் மருத்துவருக்குத் தெரிவியுங்கள்.

மருந்துகளைப் பத்திரப்படுத்துங்கள்!எந்தச் செயலிலும் ஓர் ஒழுங்கு தேவைதானே? 

இது மருந்துகளுக்கு மிகவும் பொருந்தும். மதியம் உட்கொள்ள வேண்டிய மருந்துகள் இருப்பின் அவற்றை கையோடு எடுத்துச் செல்வது அல்லது அலுவலகத்திலும் ஸ்டாக் வைப்பது போன்று திட்டமிட வேண்டும். அனைத்து ப்ரிஸ்க்ரிப்ஷன்களையும் ஒரே இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். 
மருந்துகள் எப்படியெல்லாம் மாற்றப்பட்டிருக்கின்றன என மருத்துவரும் அறிந்துகொண்டு, அதற்கேற்ப திட்டமிட இவை உதவும். 

மறக்க மாட்டோம் என்கிற நம்பிக்கை வரும் வரையிலும், மருந்து நேரங்களை மொபைல் போனில் ரிமைண்டர் வைத்துக் கொள்ளலாம். ஒரு வாரத்துக்கு முன்பே ஆர்டர் செய்வோம்!

கடைசி நேரக் குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக மாதம் ஒரு முறை மருந்துகள் வாங்கிக் கொள்வது நல்லது. 

அதோடு, மருந்துகள் தீர்வதற்கு ஒரு வாரம் முன்பே ஆர்டர் செய்துவிடுவது அவசியம். 
ஒரு நாள்... ஏன் ஒரே ஒரு வேளை மருந்து எடுத்துக்கொள்ளாமல் இருப்பதுகூட விளைவுகளை உண்டாக்கும்!

தினமும் ஒரு 180 மி.லி.கேன் / பாட்டில் குளிர்பானம் அருந்துவது டைப் 2 நீரிழிவு  அபாயத்தை 22 சதவிகிதம் அதிகரிக்கிறது.

                                                                                                                                       
                                                                                                                                                    -தாஸ் 
நன்றி:குங்குமம் டாக்டர்.
======================================================================================
ன்று,
அக்டோபர்-17. 

  • உலக வறுமை ஒழிப்பு தினம்

  • கவிஞர் கண்ணதாசன் இறந்த தினம்(1981)

  •  தெரசா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்(1979)

  • போட்ஸ்வானா மற்றும் லிசோதோ ஆகியன ஐநாவில் இணைந்தன(1966)

புதுக்கோட்டையிலிருந்து ‘திருமகள்’ என்னும் ஓர் இலக்கியப் பத்திரிகை வெளிவந்துகொண்டு இருந்தது. மாதம் இருமுறை வெளிவந்த அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர், பதினேழே வயதான ஓர் இளைஞர்.
அவர் அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியரானதே ஒரு கதை. அந்தப் பத்திரிகைக்கு விளம்பரம் சேகரிக்கும் வேலையில் போய்ச் சேர்ந்தார் அவர். ஒருநாள், பத்திரிகை ஆசிரியர் லீவில் இருந்தார். முதலாளி விளம்பர அதிகாரியைக் கூப்பிட்டு, ஏதாவது எழுதுமாறு பணித்தார்.
எழுத்து தாகம் கொண்ட அந்த இளைஞர், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, ஐ.என்.ஏ. படையைப் பற்றி அருமையான ஒரு தலையங்கம் தீட்டிவிட்டார். அது முதலாளிக்கு மிகவும் பிடித்துவிட்டது. அன்றே அவரைத் தம் பத்திரிகைக்கு ஆசிரியராக ஆக்கிவிட்டார். அந்த இளைஞரின் பெயர் முத்தையா.
இப்போது அவர் பெயர் முத்தையா அல்ல; கண்ணதாசன்.
ராமநாதபுரம் ஜில்லாவில் உள்ள சிறுகூடல் பட்டியில், தந்தைக்கு எட்டாவது பிள்ளையாகப் பிறந்த முத்தையா, எட்டாவது வரைதான் படித்தார். இவரது உடன்பிறந்தவர்கள் ஆறு சகோதரி கள், மூன்று சகோதரர்கள். படத் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன், கண்ணதாசனின் தமையன்.
‘பள்ளிக்கூடத்தை விட்டவுடன் அஜாக்ஸ் ஒர்க்ஸில் ‘டெஸ்பாட்சிங் பாயா’கப் பணியாற்றி வந்தேன். வாரம் ஐந்து ரூபாய் கூலி. என் அண்ணா, ஏ.எல்.எஸ். அங்கே பிரதம காஷியர். சின்ன வயதிலிருந்தே எனக்கு எழுத்து தாகம் உண்டு. அஜாக்ஸ் கம்பெனியிலேயே உட்கார்ந்துகொண்டு கதை எழுதுவேன். ‘கிரகலட்சுமி’ என்ற பத்திரிகையில் ‘நிலவொளியிலே’ என்ற தலைப்பில் எழுதிய கதைதான் என் முதல் கதை.
அஜாக்ஸ் ஸ்தாபனத்தில் வேலை பிடிக்காமல் விட்ட பிறகு, சில காலம் எந்த வேலையும் செய்யவில்லை நான். பட்டினத்தார் சமாதியில் போய் உட் கார்ந்திருப்பேன். அங்கேயேதான் தூக்க மும். அதன் பிறகுதான் திருமகள் பத்திரி கையின் ஆசிரியரானேன்.
ஆனால், அதிலும் ஓராண்டுக் காலம்தான் நீடித் தேன். பின்னர் சென்னைக்கு வந்து ‘திரை ஒலி’ என்ற பத்திரிகையில் சில காலம் இருந்தேன். அதன் பின், மாடர்ன் தியேட்டர்ஸார் நடத்திய சண்டமாருதம் பத்திரிகைக்குப் போனேன். சண்டமாரு தம் சரியாக நடக்கவில்லை. பத்திரிகையை நிறுத்திவிட்டார்கள். அவர்களுடைய கதை இலாகாவில் என்னை எடுத்துக் கொண்டார்கள். இப்படித்தான் இலக் கிய உலகிலிருந்து சினிமா உலகுக்கு நான் வந்தேன்.”
இன்று தமிழ்நாட்டில் பிரபல கவிஞ ராக விளங்கி வரும் கண்ணதாசன், அந்தக் காலத்தில் அதிகமாக எழுதியது கதைகள்தான். கவிதை இரண்டாம் பட்சம்தான். மாடர்ன் தியேட்டர்ஸில் இவர் கதைகள்தான் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
‘நீங்கள் முதன்முதலில் பாட்டு எழுதிய படம் எது?’
”டைரக்டர் ராம்நாத். அவர்தான் என்னை ஏற்றுக்கொண்டார். ஜூபிட ரின் ‘கன்னியின் காதலி’யில் ஆறு பாட்டு என்னுடையது. ‘கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்பதுதான் என் முதல் பாட்டு!”
‘கண்ணதாசன்’ பஸ்ஸில் பிறந்தவர். ! 
திருமகள் பத்திரிகைக்குக் கடிதம் எடுத்துக்கொண்டு போகிறபோது, தம்மை எப்படி அறிமுகப்படுத்திக் கொள்வது என்று புரியாமல் குழம்பினார் அவர்.
‘வெறும் முத்தையா என்றால் மதிப்பிருக்காது என்று தோன்றியது. கவிஞன் என்பவனுக்கு ஒரு தனிப் பெயர், ‘கவிதைப் பெயர்‘ தேவை என்று பட்டது. பஸ்ஸில் போகும் போது யோசித்தேன். எட் டாவது மகன் கண்ணன். நானும் எட்டாவது மகன்.
ஏன் கண்ணன் என்றே வைத்துக்கொள்ளக்கூடாது? 
அது, நல்ல பெயர்தான். ஆனால், வெறும் கண்ணனா? அந்தக் காலத்தில் பிரபல மான கவிஞர்கள் எல்லோரும் ஏதாவது தாசனாகவே இருந்தார்கள் – பாரதி தாசன், கம்பதாசன்… அவ்வளவுதான்! கண்ண தாசன் பிறந்துவிட்டான்.’
கல்லக்குடி போராட்டத்தில் சிறை சென்றுள்ள கண்ணதாசன், சிறைச்சாலையிலிருந்தே திரைப்படத்துக்குக் கதை எழுதித் தந்திருக் கிறார். அப்படி அவர் எழுதி வெளிவந்த படம் தான், ‘இல்லறஜோதி’.
1954 வரை கவிஞராகவும், அரசியல்வாதியாகவும் மட்டுமே இருந்த கவிஞர், ‘தென்றல்’ பத்திரிகை மூலம் தமிழ் மக்களுக்குப் பத்திரிகை ஆசிரியராக அறிமுகம் ஆனார்.
அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி போட்டவர், சினிமாத் துறையில் முழு மூச்சுடன் இறங்கினார். சொந்தமாகப் படம் தயாரித்தார். முதல் படம் ‘மாலை யிட்ட மங்கை’ நல்ல வெற்றி தந்தது. தொடர்ந்து பல படங்கள். சிவகங்கைச் சீமை, கவலையில்லாத மனிதன் எல்லாம் தோல்விகள்.
‘இது ஒரு தொழிலே இல்லை. மற்ற தொழிலில் சம்பளம் கொடுப்பவன் முதலாளி, சம்பளம் வாங்குபவன் தொழிலாளி. இதில் நேர்மாறு. இந்த அவல நிலைக்குக் காரணம் ஜனங்கள் தான். நட்சத்திர மோகம் குறைந்தால்தான் சினிமாத் தொழில் உருப்படும்!’ என்கிறார் கண்ணதாசன்.
இவரே எழுதியதில் இவருக்கு மிகவும் பிடித்த சினிமாப்பாட்டு – 
‘போனால் போகட்டும் போடா!’
‘இளையராஜா கொடுத்து வச்சவன்..!’
‘அமெரிக்கா போவ தற்குச் சில நாட்களுக்கு முன்பு, இளையராஜாவின் இசையமைப்பில் நான்கு பாடல்கள் எழுதித் தருவதாக ஒப்புக்கொண்டிருந்தார் கவிஞர். பிரசாத் ஸ்டூடியோ வில் அவர் மூன்று பாடல் கள் எழுதி முடித்த பிறகு கிளம்பிவிட்டார்.
காரில் திரும்பிக்கொண்டிருந்த அவர், ‘இளையராஜா கொடுத்து வச்சவன். ஏன்னா, அமெரிக்கா போய்த் திரும்பினப்புறம் நான் பாட்டு எழுதமாட் டேன்’ என்று கூறினார். கவிஞர் அமெரிக்காவிலி ருந்து திரும்பி வரவும் இல்லை; கவிதை எழுதித் தரவும் இல்லை!”
                                                                                                                                –  இராம.கண்ணப்பன்
======================================================================================

=