தமிழக தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு காரணம் யார் ?
தமிழகத்தின் உரிமைக்கு எதிராக முல்லைப்பெரியாறு அணையில் கேரளாவின் துரோகம், காவிரியில் தொடரும் கர்நாடகவின் வஞ்சகம், கர்நாடக அரசியல் கட்சிகளின் பிழைப்புவாத அரசியல், இனவெறி அமைப்புகளின் காட்டுமிராண்டித்தனம், ஆர்,எஸ்,எஸ்.கும்பலின் திட்டமிட்ட கலவரம், தமிழக நலனுக்கு எதிராக அநீதி இழைக்கும் மத்திய மோடி அரசு, உச்சநீதிமன்றத்தின் கட்டைப்பஞ்சாயத்து தீர்ப்புகள், ஆகிய அனைத்தும் அணிவகுத்து நிற்பது உண்மைதான். இருப்பினும் நாம் விடைதேட வேண்டிய வேறு சில கேள்விகளும் இருக்கின்றது!
நீர் பற்றாக்குறையுள்ள நம் மாநிலத்தில் இயற்கையாக உள்ள நீர்நிலைகளை தமிழகஅரசு முறையாகப் பராமரிக்கிறதா? பருவகாலங்களில் கிடைக்கும் மழைநீரைத் திறமையாகப் பயன்படுத்தும் வகையில், அறிவியல் பூர்வமான திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த நம் மாநிலஅரசு என்ன முயற்சிகள் எடுத்துள்ளது? காவிரியில் கர்நாடகாவையும், முல்லைப் பெரியாறில் கேரளாவையும் எதிர்த்து போர்க்குரல் எழுப்புவதற்கு ஓட்டுக்கட்சிகள் தகுதியானவர்கள்தானா? தமிழகத்தின் பெரும்பான்மையான மக்களான விவசாயிகளின் உயிர்நாடியான தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் தகுதி தமிழக அரசுக்கு இருக்கிறதா?
தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் 4௦ சதவீத பரப்பளவில்தான், அதாவது 13௦ லட்சம் ஏக்கரில்தான் விவசாய நிலங்கள் உள்ளது. இதில், ஆற்றுக் கால்வாய்கள் மூலம் பாசனம் பெறுவது 2௦ லட்சம் ஏக்கர். ஏரிகள்-குளங்கள் மூலம் பாசனம் பெறுவது 15 லட்சம் ஏக்கர். கிணறுகள் மூலம் பாசனம் பெறுவது 4௦ லட்சம் ஏக்கர். ஆக மொத்தம் 75 லட்சம் ஏக்கர்தான் நீர்ப்பாசன வசதியுடைய நிலங்கள்! மீதி 55 லட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்கள்தான்!
பாசன வசதிபெற்ற 75 லட்சம் ஏக்கர் நிலங்களில், சுமார் 4௦ லட்சம் ஏக்கரில் அதிக அளவில் நெல்லும், மற்றும் கரும்பு, வாழை, தென்னை, போன்ற பணப்பயிர்களும், மீதியுள்ள 35 லட்சம் ஏக்கரில் பிற காய்கறிகளும், தானியங்களும் பயிரிடப்படுகின்றது! இவற்றுக்கு ஒரு ஆண்டு நீர் தேவை 1,5௦௦ டி.எம்.சி! இதுதவிர, வளர்ந்துவரும் தொழிற்சாலைகளுக்கும், குடிநீர் தேவைக்கும் 2௦௦ டிஎம்சி- யையும் சேர்த்தால், தமிழகத் தின் ஒரு ஆண்டுத்தேவை 1,7௦௦ டிஎம்சி! இதுதான் வேளாண்மைத்துறை அதிகாரிகளும், நீரியல் வல்லுனர்களும் ஆய்வு செய்து, தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கும் புள்ளி விவரங்கள்!
தமிழகத்தின் மொத்த நீர் தேவையான 1,7௦௦ டிஎம்சி-யில், காவிரியில் தமிழகத்தின் உரிமையாக கர்நாடக அரசு திறந்து விடவேண்டிய நீரின் அளவு வெறும் 192 டிஎம்சிதான். ஆனால், கர்நாடகா காவிரித் தண்ணீரை திறந்து விடாததால்தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த விவசாயமும் அழிந்து விட்டது போல ஓட்டுக்கட்சிகளும், மீடியாக்களும் ஊதிப்பெருக்குகின்றன! காவிரி நீர் போக மீதி 1,5௦௦ டிஎம்சிக்கு தமிழக அரசுதான் பொறுப்பு என்பதையும், தனது சொந்த மாநில மக்களின் நலனில் தமிழக அரசு எந்த அளவுக்கு அக்கறையுடன் நடந்து கொள்கிறது? என்பதையும் கேள்விக்குள்ளாக்காமல் திட்டமிட்டே திசைதிருப்பி வருகின்றனர்!
தமிழகத்தின் ஒரு ஆண்டின் சராசரி மழைப் பொழிவு 1,௦௦௦ மி.மீ.! இது 4,343 டிஎம்சி-க்கு சமம்! இயற்கையின் கொடையாக கிடைக்கும் இவ்வளவு நீர்வளத்தில் பாதியளவு நீரை சேமித்து வைக்கும் திறன் இருந்தால் கூட, இன்று நாம் அண்டை மாநிலங்களிடம் நீருக்காக கையேந்த வேண்டிய நிலை வந்திருக்காது. மழைநீரைத் தாங்கி தேக்கி வைத்திருக்கும் ஏரி-குளங்களை முறையாகப் பராமரிக்க வேண்டிய தனது கடமையை மாநில அரசு திட்டமிட்டே புறக்கணித்து வருவதால், 80 சதவீத மழைநீரை வீணாகக் கடலில் கலக்கவிட்டு, வெறும் 2௦ சதவீத நீரைத்தான் நாம் பயன்படுத்த முடிகிறது!
பொதுப்பணித்துறை ஆவணங்கள் தமிழகத்தில் 39,242 ஏறி-குளங்கள் இருப்பதாகக் கூறுகிறது. ஆனால் இதில் 1௦௦௦-க்கும் மேற்பட்டவை கிரிமினல் அரசியல்வாதிகளாலும், ரியல் எஸ்டேட்டு முதலாளிகள், மற்றும் கிரானைட் கொள்ளையர் களாலும் முற்றாக அழிக்கப்பட்டு விட்டன! சுமார் 2௦௦ ஏரிகள்-குளங்களை தின்று விழுங்கிதான் இன்றைய சென்னை மாநகரம் பிரம்மாண்டமாக நிற்கிறது! மதுரை-மாட்டுத்தாவணி பேருந்து நிலையமும், வானளாவிய அதிகாரமுள்ள சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையும் ஏரிகளை அழித்து கட்டப்பட்டதுதான்! திருச்சி கொட்டப்பட்டு குளத்தை மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு தமிழக அரசு இலவசமாக கொடுத்த செய்தி சமீபத்தில் அம்பலமானது! இருக்கும் பல குளங்களும் அதிகாரிகளுடன் துணையுடன் முறைகேடான ஆவணங்கள் மூலம் பட்டா நிலங்களாக மாற்றப்பட்டுள்ளது. மீதி குளங்கள் நகராட்சி, பேரூராட்சியின் குப்பைக் கிடங்குகளாக சீரழிந்து கிடக்கிறது!
குளங்களைத் தூர்வார ஜப்பானிடம் வாங்கிய 4௦௦ கோடி ரூபாய் கடனுக்கு கணக்கு காட்டுவதற்காக ஓரிரு குளங்களின் கரையை உயர்த்தியதைத் தவிர, ஏரி-குளங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு துரும்பைக் கூட அசைக்கவில்லை!
பாலாறு தோல்கழிவுகளின் குப்பையாகவும், நொய்யல் ஆறு சாயப்பட்டறையின் கழிவுநீர் குட்டையாகவும் மாறிப்போனதற்கு ஆந்திர அரசைக் குற்றம் சுமத்த முடியுமா? தாமிரபரணியின் ஆற்றுநீரை கோக் கம்பெனி கொள்ளையடிக்க அனுமதித்ததும், போராடிய மக்களை அடித்து உதைத்து சிறையில் தள்ளியதற்கும் கர்நாடகா அரசைக் காரணம் சொல்ல முடியுமா? பெரியாற்று நீரைக் கொள்ளையடிக்க பெப்சிக் கம்பெனிக்கு அனுமதி வழங்கியதற்கும், நியூட்ரினோ ஆய்வகத்திற்காக தினமும் 12 லட்சம் லிட்டர் தண்ணீரை பெரியாற்றிலிருந்து உறிஞ்சிக் கொள்வதற்கும் கேரளா அரசா உத்தரவிட்டது? நீர்தேக்க அணைகளில் மேடிட்டுக் கிடக்கும் மண்ணை அகற்றி அணைகளை ஆழப்படுத்தாமல் இருப்பதற்கு கன்னடரும், மலையாளியும் தடை போட்டார்களா? நம் ஆற்றுமணலைக் கடத்திச் சென்று அண்டை மாநிலங்களில் விற்று கோடிகோடியாக சம்பாதித்தது தெலுங்கனா? கன்னடனா? மலையாளியா? தண்ணீருக்கே உத்தரவாதமில்லாத இடத்தில் வெறும் கால்வாயை மட்டும் வெட்டி கொள்ளையடிப்பவன் மராட்டியனா?
இவ்வளவு அக்கிரமங்களையும் செய்தவர்கள் எல்லாமே பச்சைத் தமிழர்கள்! இன்று ஒட்டுக்கட்சிகளின் பெருந்தலைகளாக உலா வருபவர்களில் பலரும் இவ்வகை பச்சைத் தமிழர்கள்தான். தமிழ், தமிழன், தமிழக உரிமை என்று கழுத்து நரம்பு புடைக்க முழங்கும் இனவாதத் தலைவர்கள் கூட மேற்கண்ட கிரிமினல் தமிழர்களைப் பற்றி வாய் திறப்பதில்லை! அண்டை மாநிலத்தவரின் அக்கிரமங்களுக்கு எதிராக துடித்து எழும் இவர்களின் முறுக்கு மீசை, அதையே தனது இனத்தான் செய்வதைக் காணும்போது தொங்கி விடுகிறது! இதுதான் இவர்களின் “இனமான உணர்வு”!
தமிழக மக்களின் வாழ்வாதாரம் விவசாயம்! விவசாயத்தின் உயிர்நாடி தண்ணீர்! ஓடும் மழைநீரை தாங்கி நிறுத்தி, மண்ணுக்குள் கசியச்செய்து நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்குவது ஏரிகளும், குளங்களும்தான்! ஏரி-குளங்களை அழிப்பதன் பொருள் விவசாயத்தையே ஒழித்துக்கட்டுவதுதான்! தொடர்ச்சியாக தமிழத்தை ஆண்டுவரும் கட்சிகள் இதைத்தான் செய்து வருகின்றன. நமது ஆறுகளை கோக்-பெப்சி கம்பெனிகளுக்கு அடிமாட்டு விலையில் நீண்டகாலக் குத்தகைக்கு விடும் தமிழக அரசு, தண்ணீர்கேட்டுப் போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்துப் பேசக்கூட மறுத்து அவமதிக்கிறது! நமது ஆற்று நீரையே பாட்டிலில் அடைத்து தனக்கு ஒட்டுப்போட்ட மக்களுக்கே 1௦ ரூபாய்க்கு விற்று கொள்ளையடிக்கிறது!
ஆறுகளை மட்டுமல்ல, கால்வாய் பாசனத்தையே தனியார்மயமாக்க திட்டம் வகுத்திருக்கிறார்கள். தமிழக அரசின் “விவசாயிகள் நிர்வகிக்கும் பாசனமுறைச் சட்டம்-2000” (FARMER’S MANAGEMENT IRRIGATION SYSTEM ACT)- “பாசனக்கால்வாய்களை இனி விவசாயிகளே பராமரித்துக் கொள்ளவேண்டும். இதற்கென ஒவ்வொரு பாசனப்பரப்பிலும் உள்ள விவசாயிகளை ஒரு சங்கமாக்கி, அதன் நிர்வாகிகளிடம் அனைத்து நிர்வாகமும் ஒப்படைக்கப்படும். பாசனம் பெறும் விவசாயிகளிடம் ஒரு ஹெக்டேருக்கு 250 முதல் 500 ரூபாய்வரை கட்டணம் வசூலிக்கப்படும். தேவைப்பட்டால் சிறப்புக் கட்டணமும் வசூலித்து, பாசனக் கால்வாய்களை விவசாய சங்கங்களே பராமரித்துக் கொள்ளவேண்டும். தொழில்நுட்ப உதவிகள் செய்வதும், கண்காணிப்பதும் மட்டுமே அரசு அதிகாரிகள் வேலை!” என்று கூறுகிறது.
உலகவங்கியின் வழிகாட்டுதலில் செயல்படுத்தப்பட இருக்கும் இச்சட்டம், அமுலானால் சிறுகுறு விவசாயிகள் தங்கள் நிலத்தை விட்டு நிரந்தரமாக விரட்டியடிக்கப் படுவார்கள்! நம் விளை நிலங்களை பன்னாட்டுக்கம்பெனிகளும், புதுவகைப் பணக்கார்களும் கைப்பற்றிக் கொள்வார்கள்! இறுதியில், உணவுக்காக அந்நிய நாடுகளிடம் கையேந்தி நிற்கும் நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்! நாடு முழுவதும் இதுபோன்ற பல்வேறு அழிவுத் திட்டங்களை மத்திய அரசும் அமுல்படுத்தி வருகிறது.
ஆறுகள், ஏரி-குளங்களை, அழிப்பதோடு மட்டும் இவர்கள் நிற்கவில்லை. மீத்தேன், கெயில், சிறப்புப் பொருளாதார மண்டலம், போன்ற ‘வளர்ச்சித் திட்டங்களு’க்காக நமது விளைநிலங்களையும் நேரடியாகப் பறித்துக் கொள்கிறார்கள்!
இவ்வாறு, விவசாயிகளையும், விவசாயத்தையும் வேரடி மண்ணோடு ஒழித்துக்கட்டத் துடிக்கும் இம்மக்கள் விரோதிகளா நமது விவசாயத்தைக் காப்பாற்றப் போகிறார்கள்? தன் மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளை, ஆறுகளை காப்பாற்ற வக்கற்ற அரசுக்கு, அண்டை மாநிலங்களிடம் நம் உரிமையைக் கேட்டுப் பெறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? விவசாயத்தை ஒழித்துக் கட்டும் எதிரிகளிடமே “விவசாயத்தைக் காப்பாற்று” என்று போராடினால் நமக்கு நியாயம் கிடைக்குமா?
விவசாயத்தைக் காப்பாற்றும் பொறுப்பும், தகுதியும் நமக்குத்தான் உண்டு. எனவே நமது நீர்நிலைகளை இந்த எதிரிகளிடமிருந்து நாம் கைப்பற்றிக் கொள்ள வேண்டும்! ஏரி-குளங்கள் மீதான ஆக்கிரமிப்புகளை விவசாயிகளே நேரடியாக இடித்து தள்ளவேண்டும்! நீர்நிலைகளின் மீது விவசாயிகளின் உரிமையை நிலைநாட்டவேண்டும்! இதுதான் மக்கள் அதிகாரம்! இதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதுதான் நம்முன் உள்ள ஒரேவழி. போராட்டம் இல்லாமல் வாழவே முடியாது என்பதுதான் காலத்தின் கட்டாயம்!
– மாறன்,
நன்றி:வினவு.
=======================================================================================
இன்று,
அக்டோபர் -08.
- இந்திய விமானப் படை தினம்
- பெரு கடற்படை தினம்
- கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தினம்(1959)
- இந்திய விமானப்படை நிறுவப்பட்டது(1932)
- ஜெர்மனி, மேற்கு போலந்தை இணைத்துக் கொண்டது(1939)
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகே உள்ள செங்கப் படுத்தான்காடு (சங்கம்படைத் தான்காடு) என்ற கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் (1930) பிறந்தார். தந்தை நாட்டுப் புறக் கவிஞர்.
உள்ளூர் சுந்தரம் பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத் தில் 2-ம் வகுப்பு வரை படித்தார்.
குடும்பத் தொழிலான விவசாயம் மட்டுமின்றி, உப்பளம், நாடகம், மாம்பழ வியாபாரம், இட்லி கடை என 10-க்கும் மேற்பட்ட தொழில்களில் ஈடுபட்டுவந்தார்.
சிறு வயதிலேயே கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். இவரது பாடல்களில் கிராமிய மணம் கமழ்ந்தது. கருத்துச் செறிவும் கற்பனை வளமும் படைத்த இவரது பாடல்களை ‘ஜனசக்தி’ பத்திரிகை வெளியிட்டுவந்தது.
விவசாய சங்கம், பொதுவுடைமைக் கட்சியில் ஈடுபாடு கொண்டிருந்தார். 1952-ல் பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார். பின்னர் அவர் நடத்திய ‘குயில்’ இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். தனக்கு தமிழ் கற்பித்த குரு பாரதிதாசன் வாழ்க என்று எழுதிவிட்டுதான் கடிதம் எழுதத் தொடங்குவாராம்.
பொதுவுடைமை சித்தாந்தங்களைப் பரப்ப அயராது பாடுபட்டார். ஏராளமான தத்துவப் பாடல்களை எழுதியுள்ளார். ‘படித்த பெண்’ திரைப்படத்துக்காக 1955-ல் முதன்முதலாக பாடல் எழுதினார். இதன் மூலம் திரைப்படத் துறையில் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்தார்.
1959 வரை எம்ஜிஆர் நடித்த 7 திரைப்படங்கள், சிவாஜி கணேசனின் 11 திரைப்படங்கள் உட்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினார். 180 திரைப்படப் பாடல்கள் மட்டுமே எழுதியுள்ளார். ஆனால், அவை அனைத்துமே காலத்தால் அழியாதவையாகத் திகழ்கின்றன. இயற்கை, சிறுவர், காதல், மகிழ்ச்சி, சோகம், நாடு, சமூகம், அரசியல், தத்துவம், பாட்டாளி வர்க்கம் ஆகியவை இவரது பாடல்களின் கருப்பொருளாக இருந்தன.
இவரது பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. ‘சின்னப் பயலே சின்னப் பயலே’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’, ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே’, ‘எல்லோரும் இந்நாட்டு மன்னரே’, ‘செய்யும் தொழிலே தெய்வம்’ ஆகியவை குறிப்பிடத்தக்க பாடல்கள்.
எளிய தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகள், வாழ்வியல் தத்துவங்களை வெளிப்படுத்தியவர். பாடுவதிலும் வல்லவர். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இவரது நெருங்கிய நண்பர்.
மக்கள் கவிஞர் என்ற பட்டம், பாவேந்தர் விருது உள்ளிட்ட பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 29 வயதில் (1959) மறைந்தார்.
குறுகிய காலமே வாழ்ந்த இவர், அதற்குள் பல்லாண்டு காலம் வாழ்ந்து நிகழ்த்தவேண்டிய சாதனைகளை நிகழ்த்திவிட்டார்.
இவரது பாடல்கள் தொகுப்பு 1965-ல் வெளிவந்தது.
இவரது நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் பட்டுக்கோட்டையில் 2000-ல் மணிமண்டபம் அமைக்கப்பட்டது.