விவசாயிகள் போராட்டமும் ஏச்சு .ராஜாவும்
தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்ட பிரதேசமாக மாறி வருகிறது.
60, 70களில் ஓங்கி ஒலித்த ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்கிற கோஷம் மீண்டும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. எல்லாவிஷயங்களிலும் தமிழகம் முற்றாக புறக்கணிக்கப்படும் நிலை உருவாகி வருகிறது.
தண்ணீர் பிரச்னை என்பது இங்கு பூதாகரமாக வடிவெடித்து நிற்கிறது. எதிர்காலத்தை நினைத்தால் என்ன ஆகுமோ என்ற பயம் ஏற்படுகிறது.
திண்டுக்கல் நகர பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் கை கழுவும் இடத்திற்கு மேல் ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.
அதில் ‘‘நம் தாத்தாக்கள் காலத்தில் நதிகள், ஆறுகளில் தண்ணீரைப் பார்த்தோம்’ நம் அப்பாக்கள் காலத்தில் ஏரி, குளம், கிணறுகளில் தண்ணீரைப் பார்த்தோம்.
நம் காலத்தில் பாட்டில்களில் தண்ணீரைப் பார்க்கிறோம்.
இனி எதிர்காலத்தில்.....’’ என எழுதப்பட்டிருந்தது. இந்த அபாயம்தான் இப்போதே நம்மை துரத்தத் தொடங்கிவிட்டது.
தமிழ்நாட்டை இயற்கையும் வஞ்சித்து விட்டது. இங்கு எல்லா வளமும் இருக்கிறது.
இந்த வளங்கள் எல்லாம் நின்று, நிலைத்து, நீடித்து இருக்க தேவையான அடிப்படை வளமான நீர்வளம்தான் இல்லை.
தமிழ்நாட்டில் ‘தாமிரபரணி’ நதியைத்தவிர வேறு எந்த நதியும் உற்பத்தியாகவில்லை.
தாமிரபரணியும் நெல்லைச் சீமையில் தென்பொதிகை மலையில் உருவாகி, அந்த மாவட்டத்துக்குள்ளேயே பயணித்து கடலில் கலந்து விடுகிறது.
மற்றபடி நமக்கு ஜீவநதிகளாக விளங்கி வரும் காவிரி, வைகை, பாலாறு, சிறுவாணி உள்ளிட்ட நதிகளும் மற்ற ஆறுகளும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களில் உற்பத்தியாகித்தான் தமிழகம் வருகின்றன.
இருபதாம் நூற்றாண்டில் 70கள் வரையிலும், நல்ல மழை பொழிவு இருக்கும். எல்லா நதிகளிலும், ஆறுகளிலும் வருடம் 365 நாட்களும் தண்ணீர் உருண்டோடும்.
தஞ்சை டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் சம்பா, குறுவை, தாளடி என முப்போகம் விளையும்.
அதுமட்டுமல்ல ஏரி, குளம், குட்டை, கண்மாய், கிணறுகள் உள்ளிட்ட நீர் நிலைகள் எல்லாம் கூட நிரம்பி வழியும். ஆனால், காலப்போக்கில் மரங்கள் வெட்டப்பட்டு, பல பசுமையான வனப்பகுதிகள் அழிக்கப்பட்டதால் பருவ மழைகள் பொய்த்துப் போனது.
நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு போனது.
இதனால் விளை நிலங்கள் எல்லாம் விற்கப்பட்டு வீடுகளாக, கம்பெனிகளாக மாறிப்போயின. இருக்கிற விளை நிலங்களிலும், விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் அல்லல்பட்டு வருகின்றனர்.
5 ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகளாகட்டும், 50 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள பெரிய விவசாயிகள் ஆகட்டும் எல்லோருமே பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.
சரியான நேரத்தில் மழை பெய்யாமல், பயிர் செய்ய முடியாத அளவிற்கு வறட்சி நிலவி பாதிப்பு ஒருபுறம், காலம் தவறி மழைபெய்து, இருக்கிற பயிர்களை அழித்து, அவலத்துக்கு ஆளாக்கும் நிலை மறு புறம் என விவசாயிகள் படும் வேதனை சொல்லி மாளாது.
‘உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது’ என கிராமப்பகுதியில் சொல்வார்கள்.
அத்தகைய பரிதாப நிலைக்குத்தான் தமிழக விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
சமீப காலமாக, இந்த பரிதாப நிலை அதிகரித்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு நிலைமை முற்றிப்போய்விட்டது. தஞ்சை டெல்டா பகுதி உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுவரை 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் விளை நிலங்களில் பயிர்கள் கருகி உள்ளதை பார்த்து மரணம் அடைந்துள்ளனர்.
இவர்களில் சுமார் 82 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதி உதவியை தமிழக அரசு வழங்கி உள்ளது.
விவசாயிகள் தங்களின் துயரம் துடைக்கப்பட வேண்டும்.
விவசாயிகளின் நீராதர பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். விவசாயிகள் பெற்ற அனைத்துக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்.
மீத்தேன் திட்டம், ஹைட்ரோ – கார்பன் திட்டம் உள்ளிட்ட விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை கைவிட வேண்டும் என வலியுறுத்தி மாதக் கணக்கில் விவசாயிகள் போராடி வருகிறார்கள்.
தஞ்சை டெல்டா பகுதியில் தொடங்கிய விவசாயிகள் போராட்டம் தமிழகத்தில் பல பகுதிகளிலும் சாலை மறியல், ரயில் மறியல், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்று விரிவடைந்து வந்தது.
மாநில அரசு, தங்களால் முடிந்த அளவு நிவாரணம், கடன் உதவி என வழங்கி விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தது.
காவிரி நதி நீர் பிரச்னை, கடன் தள்ளுபடி உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்க வேண்டிய மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தமிழக விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பலர் தலைநகர் டில்லி சென்றனர்.
கடந்த 17 நாட்களுக்கும் மேலாக டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் நிலைமை நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருவதை வெளிப்படுத்தும் வண்ணம் கோவணம் அணிந்தும், மண்டை ஓடுகளுடனும், தூக்கு கயிறு மாட்டியும், எலிக்கறி, பாம்புக்கறி சாப்பிடும் நிலை ஏற்படும் என்பது உள்ளிட்ட அடையாளங்களுடனும் அவர்கள் போராடி வருகிறார்கள்.
தமிழக அரசியல்கட்சித் தலைவர்கள், நடிகர்கள், டில்லி சென்று விவசாயிகளை சந்தித்து ஆதரவை தெரிவித்ததுடன் விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்துச் சென்று ஜனாதிபதி, மத்திய அமைச்சர்களை சந்திக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆனால், மத்திய அரசு ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதறாகான எந்த உறுதிமொழியும் வழங்கவில்லை.
இந்த பிரச்னை மட்டுமல்ல, எந்தவொரு தமிழக பிரச்னையானாலும் மத்திய அரசு பாராமுகமாக நடந்து கொள்வது தொடர்கிறது.
டில்லியில் மத்திய ஆட்சிப் பொறுப்பில்பா.ஜ. கடசி தமிழர்களின் பிரச்னைகள் என்றாலே மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்தான் அணுகுகிறார்கள்.
தமிழக விவசாயிகளுக்கு மோடி அரசு உதவவில்லை என்றாலும் கூட தமிழக பாஜக வாய்ச்சொல் வீரர் ஏச்சு .ராஜா என்பவர் விவசாயிகள் போராட்டத்தை அசிங்கப்படுத்தி பேசிவருகிறார்.முதலில் அவருக்கு வாய்ப்பூட்டு போட்டால்தான் தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு உறுப்பினராவது அதிகரிக்க முடியும்.
மேடை நாகரிகம்,அரசியல் நாகரிகம் ,என்று ஒன்றுமே ஏச்சு . ராஜாவுக்கு கிடையாது.அசிங்கமான தனிமனித விமர்சனம் என்போதுதான் அவரது பேச்சு.
காவிரி பிரச்னை, பாலாறு, முல்லை பெரியாறு பிரச்னை, ஈழத்தமிழர் பிரச்னை, தமிழக மீனவர் பிரச்னை உள்ளிட்ட ஜீவாதார பிரச்னைகளில் கூட மத்திய அரசு தீவிரம் காட்டுவதில்லை.
மத்திய ஆட்சிக் கட்சியாக உள்ள காங்கிரசும், பா.ஜ.வும் இங்கே காலூன்றி வளர்ந்து ஆட்சி, அதிகாரத்தை பிடிக்க முடியாத நிலை இருப்பதால்தான். தமிழகத்தின், கோரிக்கைகளை மத்திய ஆட்சியினர் செவிமடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.
அதை உண்மை என நிரூபிக்கும் வகையில்தான் இப்போதைய பா.ஜ. அரசின் செயல்பாடுகளும் உள்ளன. 17 நாட்களுக்கும் மேல் போராடி வரும் விவசாயிகளை பிரதமர் மோடி அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக சொன்னாலே போராட்டம் முடிவுக்கு வந்துவிடும்.
ஆனால், பிரதமர் இந்த போராட்டத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
இத்தகைய நிலையை தொடரச் செய்வதன் மூலம் தமிழர்களின் அமைதி வழி, அறவழி போராட்டங்கள் வேறு வடிவம் எடுத்து மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தக் கூடிய அபாயத்தை அரசாங்கங்களே ஏற்படுத்தி விடக்கூடாது. எதற்கும் ஒரு எல்லை உண்டு.
=====================================================================================
உலக ஆட்டிச தினம்
உலக அளவில் ஆட்டிசம் எனும் குறைபாடு உடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நம் நாட்டில் 500 குழந்தைகளுக்கு ஒன்று என்ற கணக்கில் ஆட்டிசம் பாதிப்பு இருக்கலாம் என்று தோராயமாக கணக்கிடப்படுகிறது.
இக்குறைபாடு குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதால் இன்னமும் நிறையக் குழந்தைகள் கண்டறியப்படாமல் இருக்கலாம். எனவே உண்மை நிலவரம் இதை விடவும்கூடுதலாக இருக்கக் கூடும். அமெரிக்காவில் 68 குழந்தைகளுக்கு ஒருவர் ஆட்டிசம் உடையவராகக் கண்டறியப்படுகிறார்.
வெகு வேகமாக அதிகரிக்கும் இந்த எண்ணிக்கையை எதிர்கொள்ள முதலில் இக்குறைபாடு குறித்த விழிப்புணர்வை நம் சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும்.
ஆட்டிசம் குறித்த சில அடிப்படைகளை தெரிந்து கொள்வது அதற்கு உதவும்.
ஆட்டிசம் என்றால் ?
இது நரம்பியல் சார்ந்த ஒரு வளர்ச்சிக் குறைபாடு. ஆட்டிச நிலையாளர்கள் மற்றவர்களோடு தொடர்பு கொள்ளும் திறன் (Communication), சமூகத்தில் கலந்து பழகும் திறன்(Socialization) போன்றவற்றில் சிக்கல் கொண்டிருப்பர். மேலும் ஒரே மாதிரியான விஷயங்களைத் திரும்பத் திரும்பச் செய்வதில் பேரார்வம் உடையவர்களாகவும் இருப்பார்கள்.
இது ஒரு குடைச் சொல் (spectrum disorder) - இதில் பரவலான வளர்ச்சிக் குறைபாடு, ஆஸ்பெர்ஜர் சிண்ட்ரோம் என பல்வேறு வகைகள் உண்டு.
இக்குறைபாட்டின் பாதிப்பு - தீவிரத்தன்மையிலும்(severity) வேறுபாடுகள் உண்டு.
ஆட்டிசம் ஒரு ஒட்டிக் கொள்ளும் நோயா?
ஆட்டிசம் ஒரு நோயல்ல.
அது ஒருகுறைபாடு மட்டுமே. மேலும் அது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவ வாய்ப்பே இல்லை.
ஆட்டிச நிலைக்குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு இதரக் குழந்தைகளின் பங்களிப்பு முக்கியமானது. அவர்களுடன் கலந்து பழகுவதாலும், சேர்ந்து விளையாடுவது, படிப்பதுபோன்ற செயல்களாலும் (peer groupinteractionn)ஆட்டிசநிலைக்குழந்தைகளின் செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றத்தைக் காணமுடியும்.
இதற்கு இதரக்குழந்தைகளின் பெற்றோர்ஆட்டிசம் பற்றிய புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுதல் அவசியமாகும்.
ஆட்டிசத்திற்கு மருத்துவ ரீதியான பரிசோதனைகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே குழந்தையின் நடவடிக்கைகளை கூர்ந்துகவனிக்கும் பெற்றோர், உறவினர், ஆசிரி
யர்கள் ஆகியோரே இக்குறைபாட்டை கண்டறிய வேண்டும்.
கீழ்க்காணும் அறிகுறிகளில் ஒரு சில உங்கள் குழந்தையிடம் தென்படுவதாகத் தோன்றினால் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது.
அல்லது சென்னை முட்டுக்காட்டில் அமைந்துள்ளநிப்மெட்(NIPMED) நிறுவனத்திற்குச் சென்றால் குறைந்த செலவில்/இலவசமாக முழுமையான பரிசோதனைகளைச் செய்து கொள்ளவும் முடியும்,
பாதித்த குழந்தைகளை அடையாளம் காண்பது?
1. சக வயதுக் குழந்தைகளோடு கலந்துவிளையாடாமல் ஒதுங்கி இருப்பது.
2. கண்களைப் பார்த்து பேசுவதை தவிர்ப்பது.
3. பாவனை விளையாட்டுக்களில் ஆர்வமில்லாமல் இருப்பது. அல்லது ஒரே செயலை திரும்பத் திரும்ப செய்வது.
4.தினசரி செயல் பாடுகளில் மாற்றம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, அப்படியேதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளாமல் அழுது அடம் பிடிப்பது.
5. தனக்கு தேவையான பொருட்களை விரல் நீட்டி சுட்டாமல், பெரியவர்களின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று காட்டுவது.
6.சுழலும் பொருட்கள் மீதான ஆர்வம்.
7. பொருட்களை உரிய முறையில்கையாளாமல் வித்தியாசமாக பயன் படுத்துவது.
ஒரு கார் பொம்மையைத் தந்தால் அதை ஓடவிட்டுப் பார்க்காமல், கவிழ்த்துப்போட்டு அதன் சக்கரத்தை சுழல விடுவது.
8. பெயர் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்க்காமல் இருத்தல், சில வேளைகளில் காது கேட்கவில்லையோ என்று தோன்றும்.
9. பயம், ஆபத்து போன்றவற்றை உணராது இருப்பது.
10. சில செயல்களை சரியாகச் செய்ய முடிந்தாலும், சமூகப் புரிதல்கள் இல்லாமல் இருப்பது.
சிகிச்சை முறைகள் ?
இக்குறைபாட்டின் தன்மை, தீவிரம்முதலியவை ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும் என்பதால் நிபுணர்களின் பரிசோதனைக்குப் பின்னரே குழந்தைகளுக்கான சிகிச்சைகள் (தெரப்பி) தீர்மானிக்கப்பட வேண்டும்.
பொதுவாக வாழ்வியல் செயல்களைப் பயிற்றுவிக்கவும், சென்சரி சிக்கல்களைத் தீர்க்கவும் ஆக்குபேஷனல் தெரபி(Occupational Therapy) முக்கியமாக தேவைப்படும். மேலும் குழந்தைகளின் தேவையைப் பொறுத்து பேச்சுப் பயிற்சி (Speech Therapy), சிறப்புக் கல்வி முதலிய பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும்.
ஆட்டிச பாதிப்புள்ளவர்களுக்கு உணர்ச்சிகள் இருக்காதா?
இது ஒரு தவறான கருத்தாகும். ஆட்டிசக் குழந்தைகள் மற்றவர்களிடம் அன்பு செலுத்துவதில் ஒரு குறையும் இருக்காது. ஆனால் பேச்சு, தகவல் தொடர்பு போன்ற திறன் குறைவாக இருப்பதால் அன்பை வெளிக்காட்டும் விதம் நமக்கு புரியும்படியாக இல்லாமல் போகலாம்.
ஆட்டிசத்தை முற்றிலுமாக குணப்படுத்த வழியுள்ளதா?
ஆட்டிசம் என்பது நோய் அல்ல. அது ஒரு குறைபாடு.
எப்படி மனித உடலுக்கு சர்க்கரை குறைபாடு வந்தாலோ, இரத்தக்கொதிப்பு குறைபாடு வந்தாலோ 100 சதவீதம் குணப்படுத்த முடியாதோ, அதுபோலத்தான் ஆட்டிசமும்.
ஆனா லும் ஆட்டிசத்தின் பாதிப்புக்குள்ளான வர்களை தொடர் பயிற்சியின் மூலம் சராசரிக்கு நிகரான வாழ்வை வாழச் செய்ய முடியும்.
இன்று வரை உலகளவில் இக்குறைபாட்டை முழுமையாகக் குணப்படுத்தும் மருந்துகள் எதுவும் ஆய்வு பூர்வமாக கண்டறியப்படவில்லை.
போலியான விளம்பரங்களை நம்பி நேரம், பணம், குழந்தைகளின் உடல்நலம் போன்றவற்றை இழப்பது தேவையற்றது.
'தீக்கதிரி"ல் - எஸ். பாலபாரதி
====================================================================================
இன்று,
ஏப்ரல்-02.
- உலக ஆட்டிசம் தினம்
- உலக சிறுவர் நூல் தினம்
- இந்திய விடுதலை போராட்ட வீரர் வ.வே.சு.ஐயர் பிறந்த தினம்(1881)
- அமெரிக்காவின் முதல் திரையரங்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திறக்கப்பட்டது(1902)
- போக்லாந்து தீவுகளை அர்ஜெண்டீனா முற்றுகையிட்டது(1982)