இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

வெள்ளி, 7 ஏப்ரல், 2017

"குடி"மக்களின் நலனை விட

தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலும் அதைச் சுற்றி 500 மீட்டர் தொலைவிலும் உள்ள மதுபானக்கடைகளை உடனடியாக அகற்ற வேண்டுமென்று மார்ச் 31ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வாயம் வழங்கிய தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சாலை விபத்துகளுக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பது மது போதைதான் என்பது உண்மை. சாலை விபத்துகளை ஓரளவு கட்டுப்படுத்த இந்த தீர்ப்பு உதவியாக இருக்கும். 
இந்த தீர்ப்பினை தொடர்ந்து சாலையோரம் இருந்த கடைகள் மூடப்பட்டது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் என்ற பெயரில் மாநில அரசே மதுக்கடைகளை நடத்தி வரும் நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுக் காரணமாக ஏராளமான கடைகள் மூடப்பட்டன. 

அரசுக்கு பெரும் பகுதி வருவாய் மதுபானக்கடைகள் மூலமாகவே வருகிறது என்பதை வெட்கமின்றி ஒப்புக்கொள்ளும் அரசாக அதிமுக அரசுஇருப்பதால் மூடப்பட்ட கடைகளை குடியிருப்புப்பகுதிகளுக்கு மாற்ற அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். 

சாலையோரம் மதுபானக்கடைகள் இருப்பது ஆபத்தானது என்பதால்தான் உச்சநீதிமன்றம் தலையிட்டு கட்டுப்படுத்தியுள்ளது. 

குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகளை திறப்பது, சாலையோரக் கடைகளை விட ஆயிரம் மடங்கு ஆபத்தானது.டாஸ்மாக் கடைகளை ஒட்டுமொத்தமாக மூட வேண்டுமென்று பெண்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். 

குடியிருப்புப் பகுதிகளில் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் தன்னெழுச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.வரலாறு காணாத வறட்சியால் குடிநீர் கிடைக்காமல் பெண்கள் அல்லாடி வருகின்றனர்.

இதைதீர்ப்பதற்கு வக்கற்ற மாநில அரசு மதுபானக்கடைகளை திறக்க அதீத ஆர்வம் காட்டுவது வெட்கக்கேடானது.மறுபுறத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு நீர்த்து போகச் செய்யும் வகையில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் பெயர்களை மாநகர, நகர, மாவட்டசாலைகள் என்று பெயர் மாற்றி அதே இடத்தில்மதுபானக்கடைகளை மீண்டும் துவக்குவதற்கான வேலைகளிலும் மாநில அரசு ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

 சாலை விபத்துகளில் மக்கள் செத்து ஒழிந்தாலும் பரவாயில்லை எங்களுக்கு மதுபானக்கடையும் அதன்மூலம் வரும் வருவாயும்தான் முக்கியம் என்று கருதுகிற ‘மக்கள்நல அரசு’ மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது.உச்சநீதிமன்ற உத்தரவை பயன்படுத்தி டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க வேண்டும். 

எந்த காரணம் கொண்டுசாலையோரங்களிலோ குடியிருப்புப்பகுதிகளிலோ கல்வி நிலையங்கள், வழிபாட்டு தளங்கள் அருகிலோ மதுபானக் கடைகளை திறக்கக்கூடாது. 

அதே நேரத்தில் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாற்று அரசுப்பணி வழங்கப்பட வேண்டும். அவர்களை நட்டாற்றில் விட்டுவிடக்கூடாது. 

அரசு அலுவலகங்களில் வள்ளுவரின் படத்தை மாட்டி வைத்தால் மட்டும் போதாது. 
அவர் மதுவுக்கு எதிராக பாடிய குறள்களின் படி அரசு நிற்க வேண்டும்.
                                                                                                                                          நன்றி:தீக்கதிர் 

"குடி"மக்களின் நலனை விட அரசுக்கு வருமானம்தரும் குடிகாரர்களின் அழிவுக்கு வழி கோருவது அரசுக்கு ஏற்புடையதல்ல.பணம் வருகிறது என்பதற்காகவும்,சசிகலா மிடாஸ் மதுபான ஆலைக்கு வருமானம் குறையாக கூடாது என்பதற்காகவும்  தெருதோறும் மதுக்கடைகளை திறக்கும் அதிமுக அரசு பணத்துக்காக  ................ பகுதிகளை கூட திறந்து விடுமா என்ன?
                                                                                                                                       
==========================================================================================================================
ன்று,
ஏப்ரல்-07.
  • உலக  சுகாதார தினம்
  • பிரான்ஸ், மீட்டர் அளவு முறையை அறிமுகப்படுத்தியது(1795)
  • பிரான்சிடம் இருந்து  சிரியா விடுதலை பெற்றது(1946)
  • உலக சுகாதார நிறுவனம் ஐ.நா.வால் தொடங்கப்பட்டது(1948)
==========================================================================================
ஹைட்ரோ கார்பன் என்றால் என்ன?
ஹைட்ரோ கார்பன் என்ற வார்த்தை புதியதாக இருக்கலாம். 
ஆனால் அன்றாட வாழ்வில் நாம் தொடர்ந்து பயன்படுத்திவரும் பெட்ரோல், டீசல், நிலக்கரி, திரவ எரிவாயு(LPG) மற்றும் மீத்தேன் போன்றவை எல்லாமே  ஹைட்ரோ கார்பன்தான்.
இவையெல்லாம் இல்லாமல் இன்றைய சூழ்நிலையில் நமது வாழ்கையை நகர்த்தி செல்ல முடியுமா? உண்மையை சொல்ல வேண்டுமென்றால் முடியாது.
இந்த ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஏன் தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்தனர்? குறிப்பாக நெடுவாசலை தேர்ந்தெடுத்தது எதற்கு? இது தமிழகத்துக்கு எதிரான சதியா? இந்த கேள்விகளுக்கான பதிலை புரிந்துகொள்ள நாம் அடிப்படை அறிவியலை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்னும் எளிமையான முறையில் சொல்வதானால், ஒரு பாட்டிலில் சிறிதளவு நீரையும் எண்ணெயும் எடுத்துக்கொண்டு அதனை ஒரு மூடியால் மூட வேண்டும். சிறிது நேரத்தில் தண்ணீர் பாட்டிலின் அடிப்பகுதியிலும் அதற்கு மேல் எண்ணெயும் மீதமுள்ள இடைவெளியில் வாயுவும்(காற்று) இருக்கும். பாட்டிலை தலைகீழாக கவிழ்த்தாலும் இதேபோன்று மறுபடியும் கீழே தண்ணீர் எண்ணெய் காற்று என்ற வரிசையிலேயே இருக்கும்.
இதற்கு காரணம் அடர்த்தி அதிகமுள்ள தண்ணீர் புவியீர்ப்பு விசைக்கு உட்பட்டு கீழ் நோக்கி செல்கிறது. இதுபோலதான் பூமிக்கு அடியிலும் நிகழ்கிறது. இன்னும் இது குறித்து புரிந்துகொள்ள வேண்டுமென்றால் ஒரு பஞ்சை எடுத்துக்கொண்டால் அதில் பல நுண்ணிய துளைகள் இருக்கும். அதனை நீரில் முக்கி எடுத்தால் அதன் துளைகளினூடே தண்ணீர் அதனுள் புகும். அந்த பஞ்சு மீது அழுத்தம் கொடுக்கும்போது தண்ணீர் வெளியேறும்.
இதேபோலதான் பூமிக்கு அடியிலும் பல விதமான பாறைகள் உள்ளன கருங்கல்லால் ஆன பாறைகளுக்குள் தண்ணீர் புகுவது கடினம். ஆனால் மணற்பாறைகளினுள் எளிதாக தண்ணீர் புகுந்துவிடும். இந்த மணற்பாறைகள் ’நீர் உறிஞ்சும் பாறைகள்’ எனப்படும். இந்த நீர் உறிஞ்சும் பாறைகளுக்கு மேல் கருங்கல் பாறைகள் அமைந்துள்ளன.
எனவே கருங்கல் பாறைகள் பாட்டிலில் உள்ள மூடிபோல செயல்பட்டு மணற்பாறைகளிலிருந்து வெளியேறும் திரவங்களான பெட்ரோல், டீசல், மீத்தேன் போன்ற ஹைட்ரோகார்பன்கள் வெளியேறாமல் தடுக்கிறது.
இந்த வளங்களை வெளியே எடுக்க வேண்டுமானால் கருங்கல் பாறைகளுக்குள் ஆழ்துளைகளை இட்டு கீழே உள்ள வளங்களை வெளியே எடுக்க முடியும். சரி இந்த வளங்கள் நிலத்திற்கு அடியில் எங்குள்ளது என்பதை எப்படி கண்டுபிடிக்க முடியும்? இங்குதான் நமக்கு புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன.
அனைவருக்கும் தெரிந்த ஒரு உதாரணத்தை பார்க்கலாம், குழந்தை கருவில் இருக்கும்போது அதன் நிலையை தெரிந்துகொள்ள ’அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்’ எனப்படும் முறையில் வயிற்றின் மேல் வைக்கப்படும் கருவியின் மூலம் உள்ளே இருக்கும் குழந்தையின் நிலை அறியப்படுகிறது. இது எப்படி சாத்தியம்? கருவியிலிருந்து வெளிப்படும் ஒளி அதிர்வலைகள் வயிற்றுப் பகுதியிலிருக்கும் தோல் சதைகளினூடே சென்று பின்னர் எதிரொலிக்கப்படுகிறது. இதன்மூலம் குழந்தையின் பிம்பம் தெரிகிறது.
இதேபோல் உள்ள மற்றொரு தொழில்நுட்பம்தான் ’சீஸ்மிக் எதிரொலிப்பு’. இதன்மூலம் பூமிக்கடியில் சுமார் 10 முதல் 15 கிலோ மீட்டர் வரை சீஸ்மிக் அலைகள் சென்று எதிரொலிக்கப்படுகிறது.
இதன்மூலமாகவே ஹைட்ரோகார்பன் இருக்கும் இடங்கள் கண்டறியப்படுகிறது.
பூமியினடியில் துளையிடும்போது அதிநவீன தொழில்நுட்ப முறையில்தான் கையாளப்படும். அப்போது பூமிக்கடியில் உள்ள மீத்தேன் போன்ற வாயுக்கள் குழாய்களிலிருந்து வெளியேற வாய்ப்புகள் இல்லாமல் பாட்டிலில் உள்ள ஒரு மூடியைப் போல செயல்படும்.
இதேபோல்தான் நெடுவாசலிலும் ஹைட்ரோகார்பன் எடுக்கப்பட உள்ளது. 
===========================================================================================