ஏழுகோடிக்கு விலை போனதால் மாட்டிக்கொண்டவர்?

சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி கொடுத்த தகவல் காரணமாகவே, அமைச்சர் விஜயபாஸ்கர், வருமான வரித்துறை வலையில் வசமாக மாட்டியுள்ளார். 
குட்கா அதிபரிடம் பறிமுதல் செய்யப்பட்ட, பல கோடி மாமூல் பட்டியலில், அமைச்சர் பெயர் இருந்ததும், வருமான வரித் துறை அதிரடிக்கு ஆதாரமாகி உள்ளது. 
அமைச்சருக்கு வைத்த குறியில், அவரது துறையைச் சேர்ந்த மருத்துவ பல்கலை பெண் துணை வேந்தரும் தப்பவில்லை.

அதேநேரத்தில், தினகரனுக்கு ஆதரவாக அணி மாற, பணம் கைமாறியதால், ச.ம.க., தலைவர் சரத்குமார் வீட்டிலும், 'ரெய்டு' நடத்தப்பட்டு உள்ளது. 

இவர்கள் பதுக்கிய பணத்தை கண்டறிய, மாநிலம் முழுவதும், 38 இடங்களில் விடாப்பிடி சோதனை நடந்து வருகிறது.
'அமைச்சர் விஜயபாஸ்கர், என் மறைமுக தொழில் கூட்டாளி' என, சேகர் ரெட்டி கொடுத்த வாக்குமூலம் தான், அவரது வீட்டில் சோதனை நடத்த காரணமாகி உள்ளது.தமிழக வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:அரசு மணல் குவாரிகளை நடத்தும் உரிமம் பெற்றிருந்த, கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி வீட்டில், 2016 டிசம்பரில் வருமான வரி சோதனை நடந்தது. 

அதில், 132 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும், 177 கிலோ தங்கம் சிக்கியது.அவரது வீட்டில் கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில், தலைமைச் செயலராக இருந்த ராமமோகன ராவ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. பின், சேகர் ரெட்டி மற்றும் அவரது தொழில் பங்குதாரர்கள், சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, சேகர் ரெட்டியிடம், டிசம்பர், 8ல் வாக்குமூலம் பெற்றோம். அப்போது, 'எஸ்.ஆர்.எஸ்., மைனிங்' என்ற மணல், கிரானைட் சாம்ராஜ்ஜியத்தில், நான், சீனிவாசலு, ரத்தினம் ஆகிய மூவருடன், அமைச்சர் விஜயபாஸ்கர், சைலன்ட் பார்ட்னராக இருக்கிறார்' என்ற அதிர்ச்சி தகவலை, சேகர் ரெட்டி கூறினார். இந்தத் தகவல், அவரின், ௧௨௪ பக்க வாக்குமூலத்திலும் இடம் பெற்றுள்ளது.

அப்போதிருந்தே விஜயபாஸ்கரை கண்காணித்து வருகிறோம். தேர்தல் பணம் பட்டுவாடாவுக்காக மட்டும், இந்த சோதனை நடைபெறவில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மணல் சாம்ராஜ்ஜியம்!அமைச்சர் விஜயபாஸ்கர், எஸ்.ஏ.சுப்பையா என்பவரின் பெயரில், இலுப்பூரில் மணல் குவாரி நடத்தி வருகிறார். இங்கு, ஜல்லி, கிராவல் மண் ஆகியவை எடுக்கப்படுகின்றன. 

இந்த குவாரி வளாகத்தில், 'கான்கிரீட் மிக்சிங்' நிறுவனத்தை, மனைவி ரம்யா பெயரில், விஜயபாஸ்கர் நடத்தி வருகிறார்.இந்த நிறுவனங்களுக்கு, விஜயபாஸ்கரின் குடும்பத்தார் பெயரிலும், அவரின் பினாமிகள் பெயரிலும், நுாற்றுக்கணக்கான டிப்பர் லாரிகள் இயக்கப்படுகின்றன. 

இங்கு, 100 ஏக்கர் பரப்பில், மலை போல் குவிக்கப்பட்டுள்ள மணல் மற்றும் ஜல்லிகளை பார்த்தால், 10 ஆண்டுக ளுக்கு சப்ளை செய்ய முடியும் .
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை, சசிகலா அணியினர், கூவத்துாரில் அடைத்து வைத்திருந்த போது, அமைச்சர் விஜயபாஸ்கர் தான் அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து செயல்பட்டார். அப்போது, விஜயபாஸ்கருக்கு எதிராக, அவரது சொத்து குவிப்பு பட்டியலை, பன்னீர் அணியினர் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தினர்.

தற்போது, ஆர்.கே.நகரில் போட்டியிடும், தினகரனின் வலது கரமாக, விஜயபாஸ்கர் செயல்பட்டு வருகிறார். அங்கு நடந்த தாராள பணம் பட்டுவாடாவை பார்த்து, தேர்தல் ஆணையம் அதிர்ந்து போய், சிறப்பு தேர்தல் அதிகாரியை நியமித்துள்ளது.அதைத் தொடர்ந்து, தினகரனுக்கு பக்கபலமாக செயல்படும் விஜயபாஸ்கரின், சென்னை, கிரீன்வேஸ் சாலை இல்லம் உட்பட, அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில், வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று காலை, 6:00 மணியளவில், அதிரடி சோதனையை துவக்கினர்.

வழக்கத்துக்கு மாறாக, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை, பாதுகாப்புக்கு அழைத்துச் சென்றனர். அவர்களின் உதவிக்கு, தமிழக போலீசாரும் வந்திருந்தனர்.சென்னை - பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே, கெங்கு ரெட்டி தெருவில் உள்ள, விஜயபாஸ்கரின் சகோதரி வீடு, திருவொற்றியூரில் உள்ள மற்றொரு சகோதரி வீடு, சேப்பாக்கம் எம்.எல்.ஏ.,க்கள் குடியிருப்பில் உள்ள, ஐந்து அறைகளிலும் சோதனை நடந்தது. இதில், விஜயபாஸ்கர் அறையில் இருந்து, 1.8 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரின் கணக்கு வழக்குகளை கவனிக்கும் சீனிவாசன் என்பவரின், வளசரவாக்கம் வீட்டில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான, 89 கோடி ரூபாய்க்கான ஆதாரங்கள் சிக்கின.

இதற்கிடையில், அமைச்சர் வீட்டில் இருந்த சில ஆவணங்களை, ஒரு கும்பல், புதுக்கோட்டை நிர்வாகிகள் தங்கியிருந்த, எழும்பூர், கென்னட் லேன், லட்சுமி லாட்ஜிக்கு கடத்தியது. அந்த தகவல் தெரிந்ததும், அந்த லாட்ஜிலும், அதிகாரிகள் புகுந்தனர். அங்கு, ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆதரவு வாக்காளர்கள் பட்டியலும், அவர்களுக்கு பணம் தந்ததற்கான ஆவணங்களும் சிக்கின.

இது தவிர, திருவல்லிக்கேணியில் வசிக்கும், அமைச்சருக்கு நெருக்கமான நயினார் முகமது வீட்டில், மூன்று கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மேலும், அமைச்சருக்கு நெருக்கமான தரகர்,கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த கல்பேஷ் ஷா என்பவரின் வீட்டில், 1.1 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட நேரத்தில், விருகம்பாக்கம் - ஆற்காடு சாலையில் உள்ள, தமிழக மருத்துவ பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி வீடு, முன்னாள் அ.தி.மு.க., - எம்.பி., ராஜேந்திரன் வீடு உட்பட,சென்னையில், 26 இடங்களில் சோதனை நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர், சவுராஷ்டிரா தெருவில் உள்ள, அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான, இரண்டு வீடுகள்; திருவேங்கைவாசல் பகுதியில், பினாமி நிறுவனமான, 'ராசி புளூ மெட்டல்ஸ் குவாரி' ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது.
ஏழுகோடி ரூபாய்
மேலும், நச்சாந்துப்பட்டியில் உள்ள, அமைச்சரின் டிரைவர் அப்துல்லா வீட்டிலும், விஜயபாஸ்கருக்கு சொந்தமான அன்னை தெரசா கல்வி நிறுவனங்களிலும், இலுப்பூர் ராசி லாட்ஜிலும் சோதனை நடந்தது.

மேலும், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், மணப்பாறையிலும், நாமக்கல்லில் உள்ள அமைச்சரின் உறவினரான, கான்ட்ராக்டர் சுப்பிரமணியன் வீட்டிலும் என, மாநிலம் முழுவதும், 38 இடங்களில் சோதனை நடந்தது.
இதில், 89 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டுவாடா ஆவணங்கள் மற்றும், 4.2 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இச்சோதனையில், சென்னை, திருச்சி, கோவை, சேலத்தைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 30 க்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து செயல்பட்டனர்.

நடிகர் சரத்குமாரை,தினகரனுக்கு ஆதரவாக இழுக்க, விஜயபாஸ்கர் கடுமையாக முயன்றுள்ளார். 
இதில், ஏழுகோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாக தெரிகிறது.சரத்குமாரை, தினகரனிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் தான் அழைத்து வந்துள்ளார். 

அதனால், சரத்குமாருக்கு தரப்பட்டதாக கருதப்படும் ரொக்கப் பணத்தை, அவரது வங்கி லாக்கர்களில் சோதனை செய்தார்கள்.

தமிழகத்தில் பான், குட்கா போதை பொருட்கள் விற்பனைக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தடை விதித்திருந்தார். ஆனால், மாநிலம் முழுவதும், அவை தங்கு தடையின்றி விற்பனையாகின. அந்த ஆலை அதிபர்கள் கோடிக்கணக்கில் பணம் குவித்தனர்.

அதனால், நாங்கள், 2016 ஜூலை மாதத்தில், சென்னை, திருச்சி மற்றும் ஆந்திராவில் உள்ள, குட்கா ஆலைகளில் அதிரடி சோதனை நடத்தினோம். அதில், அண்ணா நகரைச் சேர்ந்த ஆலை அதிபர் மற்றும் கூட்டாளிகளிடம், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போது பறிமுதல் செய்யப்பட்ட, 'டைரி' மூலம், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பணம் கொடுத்தது தெரிய வந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் என்ற முறையில், தடை விதிக்காமல் இருப்பதற்கு, மாமூல் தரப்பட்டிருக்கலாம்.

தமிழக அரசின் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி, மருத்துவக் கல்வி இயக்குனர் மற்றும் அரசு பொது மருத்துவமனை டீன் போன்ற பதவிகளை வகித்தவர்.சில பணி நியமனங்கள் மற்றும் மருந்து கொள்முதல்களுக்கு, விஜயபாஸ்கருக்கு தரகர் போல் செயல்பட்டதால், அவர் வீட்டில் சோதனை நடத்தபட்டுள்ளது.

வருமான வரி அதிகாரிகள், நேற்று காலை, 6:00 மணிக்கு, வீட்டுக்கு வந்ததும், அமைச்சர் திடுக்கிட்டார். 

அப்போது வருமான வரி அதிகாரிகள் குழந்தையை பள்ளிக்கு அனுப்புவது, சமைப்பது போன்றவழக்கமான  பணிகள் தொடரட்டும் என, அதிகாரிகள் கூறினர்.

.ஆனால் அமைச்ச தன் மகளை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை என,  பேட்டி கொடுத்ததால், வருமான வரித்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
======================================================================================
ன்று,

ஏப்ரல்-08.

  • முதலாவது உலக கண்காட்சி பாரிஸ் நகரில் ஆர்மபமானது(1867)

  • லியாகத்-நேரு ஒப்பந்ததத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் கையெழுத்திட்டன(1950)

  • எகிப்தில் சூயஸ் கால்வாய், மீளத்திறக்கப்பட்டது(1957)
=======================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?