மோடியா லேடியா:இறுதிக்கட்டம்.





 இரவல் ஆளுநர் வித்யாசாகர் ராவ், மும்பையில் தன்னுடைய நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு அவசரமாக தமிழகத்திற்கு வருகிறார் என்ற செய்தி வந்தவுடனேயே ஏதோ பெரிதாக நடக்கப் போகிறது என்றுதான் மக்கள் நினைத்தார்கள்.

அன்றைக்கு சசிகலா பதவியேற்பதற்காக வருந்தி வருந்தி அழைத்த போதும் வராத ராவ், இப்போது தில்லி மேலிடம் சொன்னதால் தலை, மீசைக்கெல்லாம் டை அடித்தபடி கம்பீரமாக வந்திறங்கி ஓ.பன்னீர்செல்வத்தை துணை முதல்வராகவும், மாஃபா.பாண்டியராஜனை அமைச்சராகவும் பதவியேற்க வைத்து அழகு பார்த்திருக்கிறார்.

முன்னதாக, ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆகிய இரு அணிகளும் சேர்ந்து அம்மா நினைவிடத்தை மீண்டும் ஒருமுறை வலம் வந்தார்கள்.

கடைசி நேரம் வரை, இழுபறி, பேரம் படியவில்லை என்றெல்லாம் சொல்லப்பட்ட நிலையில், எப்படியோ, இரு அணிகளும் சேர்ந்துவிட்டன. சில நாட்களுக்கு முன்பு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இபிஎஸ் - ஓபிஎஸ் வரப் போவதாக சொல்லப்பட்ட நிலையில், யாரும் வரவில்லை. அன்றைக்கு பூ புஷ்பம் வாங்கியது யார் கணக்கில் எழுதப்பட்டது என்று தெரியவில்லை. 


ஜெயலலிதா சமாதிக்கு போனவர்கள், போனால் போகிறது என்று பக்கத்திலிருந்த எம்ஜிஆர், அண்ணா சமாதிக்கும் விஜயம் செய்த கையோடு ஆளுநர் மாளிகைக்கு பறந்தார்கள்.

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட காலம் முழுவதும், அம்மா நன்றாக இருக்கிறார்; இட்லி சாப்பிட்டார் என அருள் வாக்கு சொல்லிக்கொண்டே இருந்த பொன்னையன், தற்போது விசாரணை கமிஷன் அமைப்பதாக அறிவிக்கப்பட்டது தர்மயுத்தத்திற்கு கிடைத்த வெற்றி என்று ஒரு போடு போட்டார்.

சசிகலாவின் கையை பிடித்துக் கொண்டு, சின்ன அம்மா நீங்கள்தான் எப்படியாவது கட்சியை காப்பாற்ற வேண்டும் என்று கதறி அழுத மூத்த தலைவர் மதுசூதனனையும் இந்தக் கூட்டத்தில் பார்க்க முடிந்தது.காட்சி ஊடக நிருபர்கள் இதயத்தை பிடித்தபடி, அணிகள் இணைந்தன; பிணிகள் தொலைந்தன என்று கதறிக் கொண்டிருந்த நேரத்தில் ஜெயா தொலைக்காட்சியில் ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது எதேச்சையாக நடந்ததா என்று தெரியவில்லை. 

அடுத்தடுத்து அடிமைப்பெண், அலிபாபாவும் 40 திருடர்களும் போன்ற படங்களும் ஒளிபரப்பப்படலாம்.ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்று இபிஎஸ் அறிவித்தவுடன் தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் வகையறா பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடினர்.

கே.பி.முனுசாமி மட்டும் இதுபோதாது, சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தார். அனேகமாக தில்லியிலிருந்து போன் வந்திருக்கும் போலிருக்கிறது. அப்படியே அடங்கிவிட்டார். விசாரணைக் கமிஷன் அறிவிப்பு வந்தவுடன், எச்.ராஜா, இரண்டு அணிகளும் விரைவில் இணையும் என்று உத்தரவிட்டார். 

அதற்கு முதல்நாள் தான் பொன்னார் எந்தக் கட்சிக்கும் வளர்ப்பு தந்தையாக இருக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று கூறியிருந்தார். 

மொத்தமாக வாங்கப்பட்ட அடிமைகளுக்கு தந்தை தேவையில்லை, சாட்டைக் குச்சி போதும்.இணைப்பு குறித்து கேட்டால், ஒன்றரை கோடி தொண்டர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்று ஆளாளுக்கு அள்ளி விடுகிறார்கள்.
தமிழ் நாடு?
எப்போது இவர்கள் ஒன்றரை கோடி தொண்டர்களை சந்தித்து, கருத்துக் கேட்டார்கள் என்று தெரியவில்லை.

மொத்தத்தில் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாஜகவினரால் விரிக்கப்பட்ட வலையில் அதிமுக முழுமையாக விழுந்துவிட்டது. ஆனால் எம்ஜிஆராலும், ஜெயலலிதாவாலும் வழிநடத்தப்பட்ட தொண்டர்கள் இந்த இணைப்பை ஏற்பார்களா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.மறுபுறத்தில், தினகரன் அணி, பதினாறு எம்எல்ஏக்களுடன் தனித்து நிற்கிறது. 
பதினாறும் பெற்று பெருவாழ்வு காணும் அந்த அணியும் இந்த நாடகத்தின் சூத்திரத்தாரியாக உள்ள பிரதமர் மோடி - அமித்ஷா வகையறாவைக் கண்டு பம்முகிறது. பதுங்குகிறது. முன்பு பாஜகவுக்கு எதிராக நமது எம்ஜிஆரில் கவிதை வந்தபோது, நமது எம்ஜிஆருக்கும், அதிமுகவுக்கும் சம்பந்தமில்லை என்றார் ஜெயக்குமார்.

மோடி சொன்னால் எம்ஜிஆருக்கும், அதிமுகவுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லக் கூட தயார்தான். அடுத்து, மோடி குறித்தே ஒரு காட்டமான கவிதை நமது எம்ஜிஆரில் வந்தவுடன் அந்த ஏட்டின் ஆசிரியர் மருது அழகுராஜ் அந்தப் பொறுப்பிலிருந்தே தூக்கியடிக்கப்பட்டார். 

மொத்தத்தில் மூன்று அணிகளுமே மோடியிடம் சரணாகதி அடைய தயார் நிலையில் இருந்தாலும், இரு அணிகளை மட்டும் இணைத்து அப்படியே சாப்பிட முடிவு செய்துள்ளனர்.
மிழகத்தின் நலன்களை மோடி அரசு பந்தாடிக் கொண்டிருக்கிறது. 
அது குறித்து, எந்த அணிக்கும் கவலையில்லை. எல்லோர் முதுகிலும் பெரிய பெரிய மூட்டை இருக்கிறது. அதைக் காட்டி மோடி வகையறா ஒரு நாடகத்தை நடத்தி முடித்திருக்கிறது. அதிமுக அணிகளை வேண்டுமானால் பணிய வைத்திருக்கலாம். 
ஒருபோதும் தமிழகத்தை மிரட்டி பணிய வைக்க முடியாது என்பதை காலம் கட்டாயம் உணர்த்தும்.

ஓ. பன்னீர்செல்வம், ‘மாஃபா’ பாண்டியராஜன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுள்ள நிலையில், ஏற்கெனவே இருக்கும் அமைச்சர்கள் சிலரின் துறைகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன.டி. ஜெயக்குமார் வசமிருந்த நிதித்துறை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதால், ஜெயக்குமார் இனி மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையை மட்டும் கவனிப்பார்.

உடுமலை ராதாகிருஷ்ணன் வசமிருந்த வீட்டுவசதித்துறை, துணைமுதல்வர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு தரப்பட்டு, அமைச் சர் பி. பாலகிருஷ்ணரெட்டி வசமிருந்த கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கவனித்து வந்த இளைஞர்விவகாரங்கள் துறை, பி. பாலகிருஷ்ண ரெட்டிக்கு வழங்கப்பட்டுள் ளது. செங்கோட்டையன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருப்பார்.சேவூர் எஸ். இராமச்சந்தி ரன் வசமிருந்த தமிழ் ஆட்சி மொழித்துறை ‘மாஃபா’ பாண்டியராஜனுக்கு வழங்கப்பட்டு உள்ள தால், எஸ். இராமச்சந்திரன் இனி இந்து சமயம் அறநிலையங்கள்துறை அமைச்சராக மட்டும் இருப்பார்.

இதேபோல, எம்.பி. சம்பத் வகித்து வந்த சுரங்கம் மற்றும் கனிம வளத் துறைகளின் பொறுப்பு,அமைச்சர் சி.வி. சண்முகத்திடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளன. 
இதனால் சி.வி. சண்முகம், சட்டம்,நீதிமன்றங்கள், சிறைச்சாலைத் துறைஆகிய துறைகளுடன் கனிமவளத் துறையையும் கூடுதலாக கவனிப் பார். சம்பத் தொழில்துறை அமைச்சராக மட்டும் இருப்பார்.
மோடியா இந்த லேடியா மோதலில் முதலில் லேடி போல இருந்தாலும் இறுதியில் மோடிதான்.இந்த இறுதிக்கட்டம் என்பது ஆட்சியில் அதிமுக என்பதுதான்.
பண்ணீரை பொறுத்தவரை இந்த பதவிக்காக நடத்திய போராட்டம்தான் தர்மயுத்தம்.
இதைத்தான் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் "மக்களுக்காக, கட்சி தொண்டர்களுக்காக தர்மயுத்தம் நடத்துவதாக சொல்லிக்கொண்டு பதவி, அதிகாரம், பணபேரம் அடிப்படையிலேயே இரு அணிகளும் இணைந்துள்ளன." என்றது முற்றிலும் சரியானதுதான்.
                                                                                                                                        -மதுக்கூர் இராமலிங்கம்

=====================================================================================

ன்று,
ஆகஸ்ட்-22.
  • ரஷ்ய கொடி நாள்
  • சென்னை நகரம் உருவாக்கப்பட்ட தினம்(1639)
  • 12 நாடுகள் இணைந்து ஜெனீவாவில் செஞ்சிலுவை சங்கத்தை ஆரம்பித்தன(1864)
  • தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது(1926)
  • நெப்டியூனின் முதல் கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்டது(1989)
======================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?