ஏழைகள் இல்லாத இந்தியா.

முதலில் என்ன சொ ன்னார்கள்? 
போலிக் குடும்ப அட்டைகளை ஒழிக்க ஆதாரை அத்தோடு இணைக்க வேண்டும் என்றார்கள். ஆகா நல்ல திட்டமாயிற்றே, இதனால் யாருக்கு என்ன பாதிப்புவரப்போகிறது என்று மக்களை நினைக்க வைத்தார்கள். 
பின்னர், லட்சக் கணக்கான போலி அட்டைகள் ஒழிக்கப் பட்டன என்றார்கள். வங்கிகள், ஆதார்அட்டை, பாஸ்போர்ட் என எந்தத் துறையிலும் ரேசன் அட்டையை ஒரு ஆதார மாக எடுத்துக்கொள்வ தில்லை என படிப்படியாக அறிவித்தனர்.
இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம் எனச் சொல்லும் அரசே, இப்போது அதைமீறிவிடும் போலிருக்கிறது. ஆம். அடுத்ததாய்ஒரு இந்தியா பிறக்கப்போகிறது. 
வறுமைக்கோடு இல்லாத அந்த இந்தியாவில் ஏழைகள் இருப்பார்களா என யாரேனும் தேசவிரோதி கேட்கலாம் அல்லவா? 
எனவே, இந்தப் புதிய இந்தியாவின் பிறப்பு கொஞ்சம் தள்ளிப்போடப்பட்டுள்ளது.
அதாவது, ஏழைகளேஇல்லாதவாறு முதலில் டிஜிட்டலில் ஏற்பாடு செய்துவிட்டு, அதன் பின்னர் புதிய இந்தியா குறித்து அறிவிப்பார்கள். 
நான்கு அல்லது மூன்று அல்லது இரு சக்கரவாகனம், வைத்திருப்போர், அனைத்து வழிகளிலும் சேர்ந்து ஒரு குடும்பத்தின் மாத வருமானம் ரூ.8333 என உள்ளோர், 3 அறையுள்ள கான்கிரீட் வீடு வைத்திருப்போர், டிராக்டர் வைத்திருப்போர், 300 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோர், வணிகம் செய்வோர், ஏசி பயன்படுத்துவோர், வருமான வரி கட்டுவோருக்கெல்லாம் இனி ரேசன் பொருள் கிடையாது என அரசு அறிவித்துள்ளது. 

இதுதான் அந்த புதிய இந்தியாவிற்கான துவக்கமாகும்.
இந்த அறிவிப்புகளின் மூலம், அதில் கூறப்பட்டுள்ளோர்களின் ஆதார், பான், வங்கிக்கணக்கு என விபரங்களை டிஜிட்டல் வழியே எடுத்து, அவர்களையெல்லாம் டிஜிட்டல் வழியாகவே, வறுமைக்கோட்டிற்கு மேல் உயர்த்தியாயிற்று. ஆக, அனைவரையும் விரைவில் அந்தப் பட்டியலுக்குள் கொண்டுவந்து, டிஜிட்டல் வழியாக ஏழைகளை ஒழித்து, இந்தியா வறுமைக்கோட்டிற்கு மேல் சென்றுவிடும் அல்லவா.அப்போது இன்னுமொரு புதிய இந்தியா பிறந்துவிடும். 
ஆனால் பாருங்கள், எப்போதோ பிறந்திருக்க வேண்டிய இந்த இந்தியா இன்னும் தள்ளிப் போடப்படுகிறது என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயமாகும். இதற்கு யார் காரணம் தெரியுமா? 
தமிழகமும், கேரளாவும் தான் காரணம். 
‘‘இரண்டு மாநிலங்களும் ஏன் இதைஅமல்படுத்த மறுக்கிறார்கள் என்று புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவர்கள் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தியே தீரவேண்டும்.
இல்லையெனில் மத்திய அரசு சார்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுப்போம். இரண்டு வாய்ப்புகள் எங்கள் முன்னே உள்ளன. ஒன்று வறுமைக்கோட்டிற்கு மேலுள்ளவர்களுக்கான தானியங்களை அதிக விலைக்கு மாநிலங்களிடம் விற்பது அல்லது அனைத்து ஒதுக்கீட்டையும் மொத்தமாய் நிறுத்துவது’’ என 2016 செப்டம்பரில் பொதுவிநியோகத்திட்டங்களில் உள்ள சீர்திருத்தங்கள் குறித்த கருத்தரங்கில் மிரட்டல் விடுத்துப் பேசிய உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சரான ராம்விலாஸ் பஸ்வான், பாஜக அரசின் சாதனையாய் கூறுவது என்ன தெரியுமா? 
காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இந்தச்சட்டம் பாஜக ஆட்சிக்கு வரும்போது 11 மாநிலங்களில் தான் அமலில் இருந்ததாம். பாஜக ஆட்சியின் கடும் முயற்சியால் அனைத்து மாநிலங்களிலும் அமலுக்கு வந்துள்ளதாம். 
2016 டிசம்பரிலேயே பஸ்வான் இப்படி மகிழ்ந்துவிட்ட பின்னும், இத்தனைத்தாமதம் ஆனதற்கு அதன் பின்னர் நிச்சயம் வருத்தப்பட்டிருப்பார்.
ஆனால் பாருங்கள், காங்கிரஸ் கொண்டு வந்தசட்டத்தை அமல்படுத்த காங்கிரசைவிடவும் மெனக்கெடுவதாக பாஜக அரசு ஏன் பெருமை பேசிக்கொள்ள வேண்டும்? 
தங்கள் சோற்றில் மண் அள்ளிப்போட்டதற்காக நிச்சயமாக மக்கள் பாராட்டப்போவது இல்லை. அப்படியெனில், யாருடைய பாராட்டுக்காக பஸ்வான் இப்படி விண்ணப்பிக்கிறார் ?
ஒருவேளை இரண்டு கட்சிகளுக்கும் உணவுப்பாதுகாப்பு சட்டத்தைப்பொறுத்தவரை ஒரே கொள்கையாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா!
மோடியின் வார்த்தைகளைக் கவனியுங்கள்!
‘இதுவரை வந்த சட்டங்களிலேயே, பயனாளிகளின் எண்ணிக்கையை தேசிய அளவில் தீர்மானித்துவிட்டு அதற்கேற்ப பயனாளிகளை வரையறைசெய்யுங்கள் என மாநில அரசுக்கு வலியுறுத்தும் சட்டம் இதுதான். 
வறுமைக்கோட்டிற்குக் கீழான குடும்பங்கள், மாதம் 35 கிலோ உணவு தானியங்களைப் பெறும்உரிமையை 25 கிலோவாக குறைத்துப் பறிப்பதை இந்தச்சட்டம் முன்மொழிகிறது. உணவு பெறும் அடிப்படை உரிமையைப் பறிக்கும் இச்செயலை உணவுப்பாதுகாப்புக்கான ஒரு சட்டத்தின் நோக்கமாக நிச்சயம் சொல்லமுடியாது. 
இவ்வாறு பத்துகிலோ அரிசி குறைவதால் அதைப் பெற ஒவ்வொருகுடும்பமும் கூடுதலாக ரூபாய் 85 வரை செலவழிக்கவேண்டியது வரும்.
ஒரு நாளைக்கு இருவேளை உணவு என்பதைக்கூட இச்சட்டம் பறிக்கிறது. தனி நபரின் உணவு உரிமையை இச்சட்டம் எவ்வாறு பாதுகாக்கும் என்று எனக்குப் புரியவேயில்லை. 
‘உழைப்பவருக்கு ஒரு நாளைக்கு 2500 கலோரி வேண்டும். தோராயமாக, 100 கிராம் தானியத்தில் இருந்து 350 கலோரி மட்டுமே கிடைக்கிறது. இந்தக் கணக்கீட்டின்படி, ஒரு நபருக்கு சராசரியாக 21 கிலோ தானியம் வழங்க வேண்டும். ஆனால், நீங்களோ அதற்கெதிராக 7 கிலோ மட்டுமே வழங்குகிறீர்கள்.’
’ உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்து,இவ்வளவு ஆழ்ந்த அக்கறையோடும், ஆதாரங்களோடும், ஆரோக்கிய, அறிவியல்பூர்வ பார்வையோடும் இந்திய மக்களுக்காகக் கரிசனத்தோடு பேசியவர் யார் தெரியுமா? 
வேறு யாருமல்ல.

நமது பிரதமர் நரேந்திரமோடிதான். அதாவது, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, பிரதமர் வேட்பாளராக இருந்த மோடி அவர்களால், 2013 ஆகஸ்ட் 7 அன்று எழுதப்பட்ட கடிதத்தில் உள்ள வார்த்தைகளாகும் இவையாவும். இவர் மட்டுமல்ல, சுஷ்மா சுவராஜ், முரளி மனோகர்ஜோஷி, அருண்ஜெட்லி, பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் கூட நாடாளுமன்ற விவாதங்களின் போதும், பேட்டிகளின் போதும் உணவுப்பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராகப் பிளந்து கட்டியவர்கள்தான். 
இதுதான் பாஜகவின் அன்றைய நிலைபாடாகும். ஆனால், இன்று..? 
இந்தியாவிலேயே மோசமான சட்டம், உணவு உரிமையைப் பறிக்கும் சட்டம்என்று எதைச்சொன்னாரே, இப்போது அதே சட்டத்தை எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியேஅமல்படுத்திக்கொண்டிருக்கிறார். அதுவும் சட்டமியற்றிய காங்கிரசைவிடவும், அதை அமல்படுத்த வேகமாகச் செயல்படுவது மோடிஅரசுதான்.
ரேசன் ஒழிப்பின் அடிப்படை நோக்கம் என்ன தெரியுமா? 
உணவு உற்பத்தி, கொள்முதல், விலை நிர்ணயம் மற்றும் உணவுப் பொருள் விற்பனை என மொத்த உணவுத்துறையையும் ஏகபோகமாய் மாற்றி, சில பன்னாட்டு மற்றும் இந்தியப்பெரு முதலாளிகளின் கைகளில் அளிப்பதேயாகும். இன்னும் சொல்லவேண்டுமெனில், இந்த நோக்கத்தை தீர்மானித்துக்கொண்டது கூட பாஜகவோ அல்லது காங்கிரசோ அல்ல. 
உலகவர்த்தக நிறுவனம் இந்திய அரசுக்குப் போட்டுள்ளன அளித்த உத்தரவாகும் இது. அதை அமல்படுத்துவது மட்டுமே இங்கு உள்ள அரசின் கடமையாகும். யார் வந்தாலும் சரி, ஆளப்படும் கொள்கை ஒன்றுதான். ஏனெனில், அந்தக்கொள்கையை முடிவு செய்வோர் ஆட்சியாளர்கள் அல்ல. ஆளும் வர்க்கமே!
ரேசன் ஒழிப்பை முதலில் எப்படித் துவங்கினார்கள்?
இந்தியாவில் நிறைய போலிக் குடும்ப அட்டைகள் இருக்கின்றன என்றார்கள் காங்கிரஸ் ஆட்சியாளர்கள். ஆனால், அதை எப்படி ஒழிப்பது எனத்திட்டம் போடவில்லை. மாறாக, உணவுப்பொருள் விநியோகத்தில் நிறையக் குளறுபடிகள் இருக்கின்றன எனத் தொடர்ந்து பலவிதச் செய்திகளைப் பரப்பினார்கள்.
அடுத்த கட்டமாக, போலி ரேசன் கார்டுகளால் அரசின் நிதி விரயமாகிறது என்பதால் அதை ஒழித்து வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு உணவுப் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் சட்டம் இயற்றவேண்டும் என்றார்கள். இறுதியில், வறுமைக்கோட்டிற்கு மேல், கீழ் என்ற பாகுபாட்டை உடைத்து, அனைவருக்கும் ஒரே மாதிரி பொதுவிநியோகம் என்றும் வார்த்தைகளை அள்ளிவிட்டார்கள் பாருங்கள், அதன் பெயர்தான் உணவுப்பாதுகாப்புச் சட்டமாகும். 
அதாவது, மோடிசொன்னது போன்று, உணவுப் பாதுகாப்பு என்றுசட்டத்திற்கு பெயர் வைத்துவிட்டு, ஏழைகளின் உணவுப் பாதுகாப்பான ரேசனையே ஒழித்துவிட்டார்கள். இதுதான் ‘‘அரசு’’ எனும் நிறுவனத்தின் குணமாகும். ஆனால், காங்கிரஸ் அரசு அன்று சொல்லத் துவங்கியதை இப்போது பாஜக அரசு கனகச்சிதமாக முடித்திருக்கிறது. 
சரி, இதனால் நடுத்தர மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் ரேசன் பொருள் கிடைக்காது என்பது உண்மைதான்.
ஆனால், இச்சட்டத்தால் இந்திய முதலாளிகளுக்கு என்ன லாபம் எனச் சிலர் கேட்கலாம். அதுதான்இந்தியச் சட்டங்களில், அதன் விதிகளில் ஒளிந்திருக்கும் அரசியல் ஆகும். 
முதலில் என்ன சொன்னார்கள்? 
போலிக் குடும்ப அட்டைகளை ஒழிக்க ஆதாரை அத்தோடு இணைக்கவேண்டும் என்றார்கள். ஆகா நல்ல திட்டமாயிற்றே, இதனால் யாருக்கு என்ன பாதிப்புவரப்போகிறது என்று மக்களை நினைக்க வைத்தார்கள். 
பின்னர், லட்சக்கணக்கான போலி அட்டைகள் ஒழிக்கப்பட்டன என்றார்கள். வங்கிகள், ஆதார்அட்டை, பாஸ்போர்ட் என எந்தத் துறையிலும் ரேசன் அட்டையை ஒரு ஆதாரமாக எடுத்துக்கொள்வதில்லை என படிப்படியாக அறிவித்தார்கள். 
ஆக, இப்போது என்ன நிலைமை? 
உங்கள் குடும்பஅட்டை ஆதாருடன் இணைக்கப்பட்டு, அத்தோடு தொலைபேசி எண்ணும் இணைக்கப்பட்டு, ஸ்மார்ட்டாக ஒரு அட்டையும் கொடுத்துவிட்டார்கள். 
இப்போது, ஆதாரை பான் எண்ணோடு இணைக்கவேண்டும் என்று வருமான வரித்துறை சொல்லியிருக்கிறது.

ஏற்கெனவே, பண மதிப்பு நீக்கத்தின்போது வங்கிக்கணக்கும், ஆதாரும் இணைக்கப்பட்டாயிற்று. போதாக்குறைக்கு, ஜிஎஸ்டி வந்து, சிறு வியாபாரிகளைக் கூட வருமான வரி கட்டவைத்துவிட்டது. ஆக, மொத்தத்தில் ஒரு குடும்பத்தில் யாருக்கு என்ன வருமானம் என்பது முதல் வங்கியில் என்ன இருப்பு என்பது வரை மொத்தடேட்டாவும் ரேசன் அட்டையோடு இணைந்துவிட்டது. 
அதாவது, மொத்தத்தில் இப்போது பெரும்பாலான மக்களை வறுமைக்கோட்டிற்கு மேல் உயர்ந்துவிட்டதாக டிஜிட்டல் ஆவணங்களைத் தயார் செய்துவிட்டார்கள். 
இதெல்லாம் எதேச்சையானதா என்ன? 
அரசின் அத்தனைத் துறைகளும், வெவ்வேறு காரணங்களைச் சொல்லி மக்களைக் குழப்பினாலும் நோக்கம் ஒன்றே.
ஆனால், அந்த நோக்கம் எந்த நேரத்திலும் வெளிப்படையாய் சொல்லப்படவே இல்லை, எனில், இந்த அரசின் செயல்களை உங்களால் நம்ப முடிகிறதா? 
ஆக, ரேசன் விநியோக விஷயத்தில் மட்டும், உங்களைச் சுற்றி கடந்த ஏழு வருடமாக, என்னவெல்லாம் நடந்திருக்கிறது, எப்படியெல்லாம் செய்திகளை உருவாக்கியிருக்கிறார்கள், 
காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிக்காரர்கள் எனப் பெரும்பான்மை மக்களை இந்தக் கொள்கையை ஏற்கும் விதத்தில்எப்படியெல்லாம் மாற்றியிருக்கிறார்கள், இதில் என்னென்ன அரசுத்துறைகள் எல்லாம் ஒன்றிணைந்து வேலை செய்திருக்கின்றன என்று ஒன்றொடுஒன்றை தொடர்புபடுத்தியிருக்கிறார்கள். பாருங்கள், சதியும் புரியும், அரசு என்றால் என்ன என்றும் புரியும்.
நாம் தான் எதற்கும் பயன்படாத ஸ்மார்ட்டாக மாறி,அதற்கு அத்தாட்சியாய் ஒரு அரசு அட்டையையும் வாங்கி வைத்திருக்கிறோமே. 
எனவே, அரசே உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி, நீங்கள் வளர்ந்த இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டபடியால், செல்வந்தராக நீங்கள் மாறிவிட்டபடியால் உங்களை வறுமைக்கோட்டின் பிடியில்இருந்து விலக்கிவிட்டோம் என்று சொல்லிவிடுவார்கள். 
எனவே,‘‘கிவ் இட் அப் ரேசன்’’என ஒரு திட்டத்தைமோடி அறிவிப்பார் என்றோ, நாமாக முன்வந்துரேசன் பொருள்களை விட்டுக்கொடுத்து விடலாம்என்றோ யாரும் காத்திருக்கவேண்டாம். ஏனென்றால்,இத்திட்டத்தின் பெயர் ‘‘கிக் தி புவர்’’ அதாவது ஏழைகளை எட்டி உதை என்பதாகும்.
இப்போது நாட்டின் பெரும்பகுதி மக்களை ரேசனில்இருந்து விலக்கி வைத்தாயிற்று. ஏழைகளுக்குஅரிசி மட்டும்தானே அரசு தரப்போகிறது. எனவே,அடுத்ததாய், அரிசிக்குப் பதில் வங்கியில் பணம் என்பார்கள். ஓசிக்குக் கிடைக்கும் அரிசிக்குப் பதில் மாதம் 500ரூபாய் வரை வங்கியில் பணம் என்பது கவர்ச்சியானஅறிவிப்பு இல்லையா. குடிமகன்கள் போற்றுவார்கள் அல்லவா? 
ஆக, ஒரு வழியாய் ரேசன் கடையை முதலில் மூடுவார்கள். 
அப்புறம் மெதுவாய், சமையல் கேசுக்கு 2018க்குள் மானியத்தை முழுவதும் ரத்து செய்துவிடுவோம் என்று இப்போது அறிவித்ததைப்போன்று, 2020 முதல் அரிசிக்குப் பணம் கிடையாது என அறிவித்தால் என்னாகும் எனச் சொல்லவேண்டுமா என்ன?
அதே போன்று, இன்னும் ஒரு சில ஆண்டுகள் கழித்து, வங்கிக்கணக்கில் ரூபாய் ஐந்தாயிரம் இருப்புவைத்திருப்போருக்கெல்லாம் எந்த மானியமும் கிடையாது என ஒரு அறிவிப்பு வெளியிட்டால் என்னாகும்? மொத்த இந்தியருக்கும் ரேசனே கிடைக்காது போய்விடும். 
ஒரு டிஜிட்டல் கணக்கெடுப்பு மூலம்கோடிக்கணக்கான மக்களை எப்படி ரேசனில் இருந்து விரட்டினார்களோ, அதைப்போன்று இன்னொருடிஜிட்டல் மோசடி மூலம் மொத்தப்பேரையும் விரட்டிவிடுவார்கள். 
இதைத்தான் டிஜிட்டல் ஜிமிக்கி வேலைஎனவும், டிஜிட்டல் மூலம் கோடிக்கணக்கான மக்களை பொது விநியோகத்தில் இருந்து விலக்கிவைக்கும் சதிஎன்றும் துவக்கத்திலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்தது.
ரேசன் ஒழிப்பின் அரசியல்
உணவு உற்பத்தியில் இனி அரசு கவனம் செலுத்தாது என்பதுதான் ரேசன் ஒழிப்பின் உள்குத்துஅரசியலாகும். அதாவது, இந்திய உணவுக்கழகம் என்றொருஅரசு அமைப்பு உள்ளது. இதன் பணி என்னவெனில், உணவுப்பொருள்களை குறைந்தபட்ச ஆதாரவிலை கொடுத்து விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதும், அதைப் பராமரித்து பொதுவிநியோகத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்ய முனைவதும் ஆகும். 
இனிமேல்தான், ரேசன்கடைகளே இருக்கப்போவதில்லையே. எனவே, இனிஉணவுப்பொருள்களை கொள்முதல் செய்யவேண்டிய பொறுப்பு அரசுக்குத் தேவையில்லை என்றாகி விடுகிறது.
அப்படியானால், உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருள்களை இனி யார் கொள்முதல் செய்வார்கள்? வேறு யார் செய்வார்கள்? இந்தியாவின் பெரும் பருப்பு வியாபாரியான அதானியும்,ரிலையன்ஸ் சூப்பர் வியாபாரியான அம்பானியும்தான் கொள்முதல் செய்வார்கள். 
ஆக, இனி அவர்கள்தீர்மானிக்கும் விலைதான் விவசாயிக்கும் நமக்கும்.உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சரான ராம்விலாஸ் பஸ்வான் என்ன சொல்கிறார் எனப் படித்துப் பாருங்கள். 
உண்மை புரியும்: நாட்டில் உணவு தானியங்கள், பொருட்களைச் சேமிப்பதற்காக தனியார் தொழில்முனைவோர் உத்தரவாதத் திட்டம் 2008-09இல் உருவாக்கப்பட்டு கிட்டங்கி கட்டுமானங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, 2018 வரை மானிய விலை அரிசி கிலோ ரூபாய் மூன்று, கோதுமை கிலோரூபாய் இரண்டு என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை,அதன் பின்னர் விலை மாறும் என்கிறார் அமைச்சர். இதன் அர்த்தம் என்னவெனில், தனியார் தொழில் முனைவோர்கள்தான் இனி உணவுப்பொருட்களைச் சேமிக்கப்போகிறார்கள் என்பதாகும். 
யாரிந்த தனியார் தொழில்முனைவோர்? 
நூற்றுக்கணக்கான கோடிகளைக் கொட்ட வேண்டிய இத்தொழிலில் அதானியையும், அம்பானியையும் தவிர வேறு யார்? 
ஆக, உணவுப்பொருள் கொள்முதல் மற்றும் விற்பனையில் சிலரின் ஏகபோகமே உருவாகப்போகிறது என்பதே அர்த்தமாகும். 
உணவுப்பொருள் விற்பனை மற்றும் விலை நிர்ணயம் ஆகிய இரண்டும் பெருமுதலாளிகளின் கைகளுக்குப் போய்விடும்.எனவே, மிச்சம் இருப்பதுஉணவுப்பொருள் உற்பத்திதான். அதாவது, விவசாயம்தான். 

அப்புறம் என்ன? 
நாமெல்லாம் விரும்பும் ஹைஜீனிக்கான உணவுப்பொருள் உற்பத்தியை, அதிகக் கலோரியுள்ள பருப்புகளை அதானியே உற்பத்தி செய்யக் கிளம்பிவிடுவார். அதிக அறுவடை,குறைவான விலை என்ற வாசகத்தை உச்சரித்துப்பாருங்கள்.
விலை குறைவதற்குக் குறுக்கே நிற்கும்விவசாயிகளுக்கு எதிராய் சிந்திக்கத்தோன்றுகிறதல்லவா? ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கிக்குவித்து, விவசாயிகளே இல்லாத விவசாயமாக, அதாவது எந்திரங்களாலும், அதை இயக்குபவர்களாலும், கூலிகளாலும் மட்டுமே ஆன விவசாயத்தொழிற்சாலைகளை உருவாக்குவார்கள். 
அதுமட்டுமல்ல, உற்பத்தி செய்யப்பட்ட எந்த உணவுப்பொருளாய் இருந்தாலும், ஆன் லைன் டிரேடிங்கில் அனுமதிக்கப்பட்டு, பன்னாட்டுச் சந்தையில் விலை தீர்மானிக்கப்பட்டுத்தான் நமது கைகளுக்கு வந்து சேரும். 
எனவே, செயற்கையான பருப்புத் தட்டுப்பாடும், தக்காளி தட்டுப்பாடும் இனி அடிக்கடி வரும்.
அப்போதெல்லாம் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி, ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி என்று சொல்லிவிட்டு அதானியின் கிடங்குகளில் இருந்துதான் வெளிவிடப்போகிறார்கள்.அதிக விளைச்சலுக்காக மரபணு மாற்றப்பட்ட உணவும் உற்பத்தி செய்வார்கள். 
இயற்கை உணவுவேண்டுமென்றால் அதையும் தருகிறேன் என்பார்கள். மொத்தத்தில், விவசாயிகளே நிலத்தைவிட்டு வெளியேறுங்கள் என மன்மோகன் சொன்னதும்நடக்கப்போகிறது. 
விவசாயத்தில் மத்திய அரசு தலையிடாது என மோடி சொன்னதும் ஒரே நேரத்தில் நடைமுறைக்கு வரப்போகிறது. 
அதாவது, வருமானமே இல்லாத மாநில அரசின்கையில் விவசாயம் இருப்பதால், இனி பொதுத்துறைவங்கிகளும் படிப்படியாய் கடனை நிறுத்திவிட்டால் விவசாயிகள் என்ன செய்வார்கள்?
நிலங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு குத்தகைக்கு விட்டுவிட்டு, அதில் வேலை செய்யும் கூலிகளாய் மாறவேண்டியதுதான். 
இதுதான் தனியார் பங்கெடுப்புடன் கூடிய இந்திய விவசாயக்கொள்கையாம்.ஆக, மானியம் என்ற பெயரில் ஒரு பைசா கூடசெலவழிக்காதே என்ற உலக வர்த்தக நிறுவனத்தின் உத்தரவை தலைமேல் சுமந்து 2017 டிசம்பர் அர்ஜெண்டினாவில் நடக்கப்போகும் உலக வர்த்தக நிறுவனத்தின்மாநாட்டிற்காகத்தான் அரசு இவ்வளவு வேகமாய் செயல்படுகிறது. 
இறுதியில் உணவுப்பொருள் உற்பத்தி, கொள்முதல், விலை நிர்ணயம், விற்பனை எனஎல்லாமே சிலரின் கைகளில் மட்டும்தான் ஏகபோகமாக மாறப்போகிறது என்பதே ரேசன் ஒழிப்பின் அரசியல் ஆகும்.
                                                                                                               ----இல.சண்முகசுந்தரம்
நன்றி:தீக்கதிர்

=========================================================================================

ன்று,
ஆகஸ்ட்-12.
  • உலக  இளைஞர்கள் தினம்
  • சிகாகோ நகரம் அமைக்கப்பட்டது(1833)
  • ஐசக் சிங்கர் தனது தையல் இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்(1851)
  • நியூசிலாந்து சுயாட்சி பெற்றது(1853)
  • எக்கோ 1 என்ற முதலாவது தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது(1960)
=========================================================================================

நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்




நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை.

நீரிழிவு நோய்:

நீரிழிவு நோயால் பலரும் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள். இதை கட்டுப்படுத்த நாவல் பழத்தின் விதைகள் சிறந்த மருந்து. இதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும். ஒரு கிராம் அளவு தூளை, காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் போதும். படிப்படியாக நீரிழிவு நோய் கட்டுப்படும்.

ரத்தப்போக்கு:

பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் குணமும் நாவலுக்கு உண்டு. இதற்காக, 10 சென்டி மீட்டர் நீளமும், 5 சென்டி மீட்டர் அகலமும் கொண்ட முற்றிய நாவல் மரத்தின் பட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பட்டையை நன்கு நசுக்கி, 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வெண்டும். அந்த தண்ணீரை ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி, பின் ஆற வைத்து குடிக்க வேண்டும். தினமும் இரண்டு வேளை வீதம் 10 நாட்கள் இவ்வாறு குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தலாம்.
சிறுநீர் எரிச்சல்:

சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். இன்னும் சிலர் சிறுநீர்க்கட்டால் அவதிப்படுவார்கள். இப்படிப்பட்டவர்கள், நாவல் பழங்களை பிழிந்து வடிகட்டிய சாற்றை 3 தேக்கரண்டி அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன், ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும். தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகள் வீதம் 2 நாட்களுக்கு சாப்பிட்டாலே போதும். சிறுநீர் எரிச்சல் தீர்ந்து விடும். நீர்க்கட்டும் பறந்தே போய்விடும்.

பேதி:

நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். காலை, மாலை என இரு வேளை 3 நாட்களுக்கு தொடர்ந்து இவ்வாறு சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம்.


தொண்டைப் புண், தொண்டை அழற்சி:

10 சென்டிமீட்டர் நீளமும், 5 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட முற்றிய நாவல் மரத்தின் பட்டையை சேகரித்துக் கொள்ள வேண்டும். இதை 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வெண்டும். கொதிக்கும் நீரை 1/4 லிட்டராக சுண்டக்காய்ச்சிய பின்னர், பொறுத்துக் கொள்ளும் சூட்டில் வாய் கொப்பளித்து வர வேண்டும். தொடர்ந்து ஓரிரு நாட்கள் இவ்வாறு செய்தால் தொண்டைப் புண், தொண்டை அழற்சி குணமாகும்.

பிற பயன்கள்:

* நாவல் பழத்திற்கு சிறுநீர் பெருக்கம், பசியை தூண்டும் தன்மை உண்டு. மேலும், நாக்கு மற்றும் பல் ஈறுகளை சுத்தம் செய்யும் தன்மையும் இதற்கு உண்டு.

* தொடர்ந்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் குடல், இரைப்பை இதயத்தின் தசைகள் வலுவாகும்.

* நாவல் பழச்சாற்றுக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் குணம் உண்டு.

* நாவல் மரத்தின் பட்டைக்கு நரம்பை பலப்படுத்தும் சக்தியும், மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணமாக்கும் சக்தியும் உண்டு.

* இரத்தம் சுத்தப்படுத்துதலிலும் நாவல் முக்கிய இடம் பெறுகிறது.


OPS,EPS அணி சமரச முயற்சி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?